26/04/2019

நான் ஒரு மண்ணு சார்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘கில்லி’ படத்தில் நாயகனோடு கபடி விளையாடும் நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் முருகதாஸ். இன்றோ ‘ஆடுகளம்’ முருகதாஸ் என்று சொன்னால், எல்லோரும் அறியும் அளவுக்கு சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அற்புதக் கலைஞர். நாடகத் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்து வெற்றி பெற்ற யதார்த்தக் கலைஞர் இவர்.

புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம்தான் முருகதாஸின் சொந்த ஊர். இவருடைய தாத்தா ஒரு தெருகூத்துக் கலைஞர். அவருடைய அப்பா விபத்தில் கையை இழந்தவர். பெரிய வசதிகள் எதுவும் இல்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். நாடகங்களில் நடித்தால் காசு கிடைக்கும் என்பதற்காகச் சிறு வயதிலேயே ஆழி என்ற என்ற குழந்தைகள் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். நடிப்பை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள விரும்பிய முருகதாஸ், 2003-ம் ஆண்டில் சென்னையில் ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து நாடகங்களில் நடித்துவந்த முருகதாஷூக்கு, அவரே எதிர்பார்க்காத சமயத்தில் சினிமா வாய்ப்பு தேடிவந்தது.

 “சென்னை காந்தி மண்டபத்துல இருக்குற பூங்காவுல ‘படுகளம்’ங்கிற பேர்ல ஒரு நாடகத்தை முத்துசாமி ஐயா போட்டாரு. அங்கே நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தாங்க. இயக்குநர் தரணியும் அப்போ வந்திருந்தார். அவரோட கண்ணில் நான் பட்டது என்னோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன். என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு அவருதான் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசிங்கிற கதாபாத்திரத்தைக் கொடுத்தாரு. அதன்பிறகுதான் ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ன்னு நல்லப் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன” என தன்னுடைய சினிமாவுக்கு காலடி எடுத்த வைத்த கதையைச் சொல்கிறார் முருகதாஸ்.

2004-ம் ஆண்டுக்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த
முருகாஷூக்கு 2011-ல் ‘மெளனகுரு’ படம்  நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. முருகதாஸ் ஒரு திறமையான நடிகர் என்ற அடையாளம் காட்டிய படம் மெளனகுருதான். “எனக்கு அந்தப் படத்துல் வாய்ப்புக் கொடுத்ததற்காக இயக்குநர் சாந்தகுமாருக்கு காலம் பூரா நன்றி சொல்வேன்.” என்று முருகதாஸ் சொல்லும்போதே அந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த வீச்சை அறிய முடிகிறது.

சினிமாவில் நடித்துகொண்டிந்த காலகட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறனை தொடர்ந்து ஃபாலோ செய்துவந்திருக்கிறார் முருகதாஸ். அவருடைய அலுவலகத்தையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ‘ஆடுகளம்’ படத்தில் நடிக்க முருகதாஷுக்கு வாய்ப்பு கொடுத்தார் வெற்றிமாறன். ‘மெளனகுரு’ படத்துக்குப் பிறகு ‘ஆடுகளம்’ படம் முருகதாஸூக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது. அப்போது முதலே ‘ஆடுகளம்’ முருகதாஸ் என்ற பட்டப் பெயரும் அவரோடு ஒட்டிக்கொண்டது.  “சினிமா உலகில் என்னை அடையாளப்படுத்தியது இயக்குநர் வெற்றிமாறன்தான்” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் முருகதாஸ்.

 மிகை நடிப்பு என்பது நாகடங்களில் தூக்கலாக இருக்கும். சினிமாவிலோ நடிப்பில் யதார்த்தம் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள்.  நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த உங்களால் எப்படி அதை தகவமைத்துக்கொள்ள முடிந்தது?

 “உண்மைதான். நாடகத்தில் எல்லாவற்றையும் பெரிதாக செய்யணும். அதற்காக நிறைய மெனக்கெடணும். ஆனா, சினிமாவுல எல்லாவற்றையும் சின்ன சின்னதாத்தான் நடிக்க வேண்டியிருக்கும். தொடக்கத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்துச்சு. இயக்குநர் வெற்றிமாறன்தான் யதார்த்த  நடிப்பை கற்றுகொடுத்தார். கொஞ்சம் மிகையா தெரிஞ்சாகூட, ஓவர் ஆக்டிங் கொடுக்காத என்று சொல்லிவிடுவார். கொஞ்சம்கொஞ்சமாக கற்றுக்கொண்டு நடிக்க ஆரம்ச்சபிறகுதான் என்னிடமிருந்த நாடக்கத்தன்மை குறைஞ்சது. வெற்றிமாறன் போலவே உடல்மொழியால் எப்படி நடிக்கணும் என்பதை ‘மெளனகுரு’ படத்தை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார்தான் கற்றுக்கொடுத்தார்” என்று தன்னடக்கம் குறையாமல் பேசுகிறார் முருகதாஸ்.

வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்தில் காவல் நிலையத்தில் அடிவாங்கி தவிக்கும் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார் முருகதாஸ். அந்த பட வாய்ப்பு பற்றி பெரிய கதையையே சொல்கிறார்.  “‘விசாரணை’ படத்துக்கு முன்னாடி ‘வட சென்னை’ படத்தை எடுக்க வெற்றி மாறன் நினைத்திருந்தார். எனக்கு
அந்தப் படத்துல எந்த ரோலும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனா, நான் அவரை விடல. எனக்கு ஏதாவது ஒரு ரோல் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் அடம் பிடித்தேன். அந்த நேரத்துல ‘வட சென்னை’ படம் தள்ளிப்போனது. ‘விசாரணை’ படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.

‘வட சென்னை’யில் ரோல் இல்லாததால், ‘விசாரணை’ படத்துல நடிக்க வெற்றிமாறன் வாய்ப்புக்கொடுத்தார். என்னை செதுக்கியதை வெற்றிமாறன்தான்” என்கிறார் முருகதாஸ். இந்தப் படங்களுக்குப் பிறகு ‘தகராறு’, ‘தடையற தகர்க்க’, ‘குட்டிப்புலி’ என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் முருகதாஸ், கடைசியாக வெளிவந்த ‘96’ படத்திலும் தன் நடிப்பின் மூலம் முத்திரைப் பதித்திருந்தார்.  “தொடர்ந்து வெற்றி படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைச்சதுக்கு கலைத் தாய்க்குதான் நன்றி சொல்லணும்.” என்று உருகுகிறார் முருகதாஸ்.

தொடக்கத்தில் சிறு வேடங்களில் நடித்துவந்த முருகதாஸ், இன்று காமெடி, குணச்சித்திரம் என இரட்டைச் சவாரி செய்துவருகிறார். மாறுப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்த வேண்டிய இந்தக் கதாபாத்திரங்களில் எப்படி ஜொலிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டால், வெடித்து சிரிக்கிறார். “நான் ஒரு நடிகன். களிமண்ணு போலத்தான் நானும். அதுல இயக்குநருக்கு என்ன பொம்மை தேவையோ அதைப் பிடிச்சு வைக்குறாங்க.” என்று யதார்த்தம் குறையாமல் பேசும், முருகதாஸ், ஹென்றி இயக்கும் ’ராஜா மகள்’ என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 8 வயது குழந்தைக்கு அப்பாவாக முக்கியமான ரோலில் நடிக்கும் அந்தப் படத்துக்காகக் காத்திருக்கிறார் முருகதாஸ்.


பட எண்ணிக்கை?

குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறேன்.

இலக்கு?

சீசனில் வருகிற பறவை போல அல்லாமல் காலம்பூரா நடித்துக்கொண்டே

இருக்க வேண்டும்.
புதுப்படம்?

‘கன்னிமாடம்’ என்ற படத்தில் முழு காமெடி ரோலில் நடித்துவருகிறேன்.

எதிர்பாராத வாய்ப்பு?

‘விசாரணை’, ‘மெளனகுரு’ படங்களைப் பார்த்துவிட்டு மலையாளப் படத்தில் நடிக்க அழைத்தது.

நடிக்க விரும்பும் பாத்திரம்?

எனக்கு நல்ல காமெடி சென்ஸ் உண்டு. காமெடி ரோலில் நடிக்க ஆசை.

இந்து தமிழ், 26/04/2019

No comments:

Post a Comment