மும்பையில் போதைப் பொருள் கடத்தும் தாதாக்களைக் களையெடுக்க டெல்லி தலைமை ரஜினிக்குக் கட்டளையிடுகிறது. முக்கியமான மூன்று நிபந்தனைகளுடன் மும்பைபோலீஸ் கமிஷனராகப் பணியில் சேருகிறார் ரஜினி. போதைப் பொருள் கடத்தல், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் விடும் மாபியா தலைவன் அஜய் மல்ஹோத்ராவைக் கைது செய்கிறார் ரஜினி. மகனை ஜாமீனில் விடுவிக்க தொழிலதிபர் வினோத் மல்ஹோத்ரா முயல்கிறார். அஜய் மல்ஹோத்ராவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. சிறையில் இருக்கும் அஜய் மல்ஹோத்ராவை வேறு ஒரு விசாரணைக்காகப் பார்க்க வருகிறார் ரஜினி. ஆனால், அஜய் மல்ஹோத்ரா பெயரில் வேறு ஒரு இளைஞர் இருக்கிறார்.
அஜய் மல்ஜோத்ராவின் பின்னணி என்ன, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய அஜய் மல்ஹோத்ராவைக் கண்டுபிடிக்க முடிந்ததா, ரஜினியால் மும்பையைச் சுத்தப்படுத்த முடிந்ததா, இல்லையா என்பதுதான் ‘தர்பார்’ படத்தின் திரைக்கதை.
‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை கதைக் களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். மும்பையில் நடக்கும் சட்ட விரோத காரியங்களைக் கதைகளமாக்கி, அவற்றை துடைத்தெறியும் வீரதீர போலீஸை கதாநாயகனாக்கி ரஜினி ரசிகர்களைத் திருப்திபடுத்த இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். தன்னுடைய இயக்க பாணியிலிருந்து விலகி, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் விரும்பும் ஒரு படமாகவே ‘தர்பா’ரை இயக்கியிருக்கிறார் முருகதாஸ். ரஜினியை எப்படி காட்டினால், அவருடைய ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதையெல்லாம் யோசித்து காட்டியிருக்கிறார்.

முதல் பாதி வேகமான திரைக்கதையால் தடதடவென நகர்ந்து செல்கிறது. அதற்கு ரஜினியின் கலகலப்பும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. சிறையில் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாடு செல்லும் வில்லனை ரஜினி ஹாண்டில் செய்யும் காட்சிகளில் இயக்குநர் முருகதாஸ் பளிச்சென தெரிகிறார். ரஜினியை அழகாகக் காட்டுவதில் படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. ரஜினியும் வயது பார்க்காமல்
தன்னுடைய வழக்கமான துரித சாகசத்தைக் காட்டியிருக்கிறார். ‘நம்புறவனுக்கு வயசுங்கறது ஒரு நம்பர்’ என்ற வசனம் அதற்காகவும் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமே இயக்குநர் வைத்திருக்கிறார்.
ரஜினி படத்தில் யதார்த்துக்கும் லாஜிக்கிற்கும் இடமில்லை என்றாலும், ‘ஒரு நியாயம் வேணாமா’ என்ற கணக்காக காட்சிகள் வந்து நம்மை சோதிக்கின்றன. மும்பை போலீஸ் கமிஷனராக வரும் ரஜினி, கான்ஸ்டபிள் செய்யும் வேலையிலிருந்து டிஜிபி செய்யும் எல்லா வேலை வரை எல்லாவற்றையும் செய்கிறார். முதல் பாதியின் முடிவில் எழும் திருப்பம், இரண்டாம் பாதியில் சுவாரசியமாகப் படத்தைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், பின் பாதி திரைக்கதை இழுவையாக மாறி சோதித்துவிடுகிறது. முக்கிய வில்லன் இரண்டாம் பாதியில் அறிமுகமாவதும், அவருக்குக் கொடுக்கும் பில்டப் புஷ் ஆகிப்போவதும் திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வயதான ரஜினியைத் திருமணம் செய்ய நயன்தாரா விரும்புகிறார் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இடையே காட்சியை இயக்குநர் வைக்க மறந்துவிடுகிறார். என்றாலும், நயன்தாரா விருப்பத்தை ரஜினியிடம் சொல்லி, அதை சூசகமாக மறுக்கும் ஸ்ரீமன் சம்பந்தப்பட்ட ஒரே யதார்த்த காட்சியை இந்தப் படத்தில் வைத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். கமிஷனரை இடமாற்றம் செய்யும் டெல்லி உள்துறை அதிகாரிக்கே சவால் விடுவது, மனித உரிமை ஆணைய அதிகாரியை மிரட்டுவது, இண்டர்போல் செய்யும் வேலையை மும்பையிலிருந்து ரஜினியே செய்வது என டஜன் கணக்கில் படமெங்கும் பூச்சுற்றல்கள் வருகின்றன.
படத்தின் இரண்டாம் பாகம் எப்படி போகும் என்பதை முதல் பாகத்திலேயே சில காட்சிகளின் மூலம் இயக்குநர் ஊகிக்க வைத்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்களே ஊகிக்க முடிவது திரைக்கதையின் பெரும் ஓட்டை.

லில்லி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் படத்தில் அவ்வப்போது வந்து செல்கிறார். ஒரு வரி ஜோக்கில் அவ்வப்போது சிக்ஸர் விளாசி யோகிபாபு ரசிக்க வைக்கிறார். சுனில் ஷெட்டியை வில்லனாக பெரிய பில்டப் கொடுத்து கடைசியில் அவரை
காமெடியன் ரேஞ்சிக்கு ஆக்கிவிடுகிறார்கள். அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்களும் கும்மாளம் போட வைக்கின்றன. அனிருத்தின் பின்னணி இசையில் காது சவ்வுகள் கிழிந்துவிடுகின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் குறையில்லை.
ரஜினியை மாஸாகவும் அழகாகவும் காட்ட இயக்குநர் மெனக்கெட்டதை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் ‘தர்பார்’ இன்னும் ‘ஜோர்’ராக இருந்திருக்கும்.
மதிப்பெண்: 2.5 / 5
No comments:
Post a Comment