27/10/2019

கைதி விமர்சனம்


பத்தாண்டு கழித்து சிறையில் இருந்துவரும் டில்லி (கார்த்தி) தன் குழந்தையைப் பார்ப்பதற்காக ஓர் இரவில் காத்திருக்கிறார். அதே இரவில் இன்ஸ்பெக்டர் பிஜோ (நரேன்) கைப்பற்றிய கோடிக்கணக்கான போதைப் பொருளை காவல் ஆணையர் அலுவலத்தில் மறைத்து வைக்கிறார். போதை பொருளை கைப்பற்றிய போலீஸாரை கொலை செய்து போதைப் பொருளை மீட்க இரவோடு இரவாகக் குதிக்கிறது தாதா கூட்டம். அந்த இரவில் நடக்கும் பயணத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் நரேனுடன் பயணிக்க வேண்டிய நெருக்கடி கார்த்திக்கு ஏற்படுகிறது. போலீஸ் உயரதிகாரிகளுக்கே தெரியாமல் நடக்கும் இந்த சடுகுடு ஆட்டத்தில் போலீஸ்களை கார்த்தி காப்பாற்றினாரா? போதை பொருட்கள் என்ன ஆனது, கார்த்தி தன் குழந்தையைப் பார்த்தாரா என பயணக் கதையைப் போல பயணிக்க வைத்திருக்கிறது ‘கைதி’ படம்.

ஓர் இரவில் நடக்கும் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால், போலீஸூக்கே தெரியாமல் போலீஸைக் காப்பாற்ற ஓர் இரவில் முன்னாள் கைதி நடத்தும் ரோலர் கோஸ்டர் ஆட்டத்தை வேகமான திரைக்கதையால் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படம் தொடங்கியது முதலே பரபரப்பு பார்வையாளர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. அதை கடைசி வரை அப்படியே கடத்தியதில் இயக்குநரின் கைவண்ணம் தெரிகிறது.  ஆக்‌ஷனுடன் கூடிய படங்களிலும் எட்டிப் பார்த்துவிடும் காதல், காதலி, பாடல்கள் என அரத பழசான கமர்ஷியல் மசாலாக்களுக்குள் நுழையாமல் கதையையும் திரைக்கதையையும் மட்டும் நம்பி படம் எடுத்த இயக்குநருக்கு சலாம் போடலாம்.

துரத்தலும் பயணமுமாக அமையும் கதையை லாரிக்குள்ளேயே வைத்து வேகத்தடை இல்லாமல் நேர்த்தியான திரைக்கதையால் நகர்த்தியிருக்கும் விதமும் அருமை. கார்த்தி ஏன் போலீஸுக்கு உதவ வேண்டும் என்று கேள்வி எழமால் இருக்க குழந்தை சென்டிமென்டை இயக்குநர் கையில் எடுத்திருக்கிறார். கதையோட்டத்துடன் பயணிக்குபோது அந்தக் காரணமும் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது.  சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் காவல் துறை உயரதிகாரி போர்வையில் கருப்பு ஆடு எப்படி வேலை செய்கிறது என்பதை ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்கம் உயிரையும் துச்சமாக மதிக்கும் போலீஸ் காவலரையும் கதையோட்டத்தில் தராசு போல காட்டியிருப்பது படத்தை தூக்கி நிறுத்துகிறது.

போலீஸுக்கே தெரியாமல் போலீஸாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கதை
கொஞ்சம் சவாலானதுதான். அதற்காகக் கூறப்படும் லாஜிக்கையும்  ஏற்கும் வகையிலேயே இயக்குநர் அமைத்திருக்கிறார். கார்த்தியின் ஃபிளாஸ்பேக் எனக் கதையை நகர்த்தாமல், அவருடைய பின்னணியையும் கதையோட்டத்துடன் பயணிக்க வைத்திருப்பதும் ரசிக்க வைக்கிறது. காவல் நிலையத்தை ஒற்றை ஆளாக காக்கும் காட்சிகளில் புதுமை இல்லை என்றாலும், அந்தக் காட்சிகளும் விறுவிறுப்பை கூட்ட  தவறவில்லை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அதீத ஆக்‌ஷன் காட்சிகள் படத்துக்கு ஓவர் டோஸ். ஒவ்வொரு முறையும் கும்பல் கும்பலாக ஆயுதங்களுடன் வரும் அடியாட்களை நாயகன் அடித்து துவைப்பது ஒரு கட்டத்தில் அலுப்படைய வைத்துவிடுகிறது. குறிப்பாக அத்தனை முறை கத்தியால் குத்துப்பட்டும் தலையில் கல்லால் அடிபட்டும் நாயகன் மீண்டும் எழுந்துவந்து வில்லன் கும்பலை துவம்சம் செய்வது படத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சற்று ஆட்டம் காண செய்துவிடுகிறது. காவல் நிலையத்தைத் தாக்க வரும் தாதா கும்பலை குடிபோதையில் வண்டி ஓட்டி பிடிப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்து தடுக்கும் காட்சிகள் இயக்குநரின் மிதமிஞ்சிய கற்பனை.

டில்லி என்ற கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார் நடிகர் கார்த்தி.  படம் முழுவதும் ஒரே வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டையுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார் கார்த்தி.  நரேன் உதவி கேட்கும்போது மறுப்பது, மயக்கமடைந்துகிடக்கும் போலீஸைக் காப்பாற்ற நரேன் துடிக்கும்போது ஆசுவாசமாக பிரியாணி சாப்பிடுவது, குழந்தைக்காக ஆற்றாமையால் உருகுவது, ஆக்‌ஷனில் பின்னி எடுப்பது என படம் முழுவதும் கார்த்தி வியாபித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நீண்ட நாள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் நரேன். கதைக்கு ஏற்ற அவருடைய படபடப்பும் துடிப்பும் கச்சிதம். கார்த்தியுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் இளைஞனாக தீனா கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ஒற்றை ஆளாக காவல் நிலையதைக் காக்கப் போராடும் ஜார்ஜ் மரியன் மனதில் நிற்கிறார். போதை கும்பலில் ஒருவராக ரமணா வந்துபோகிறார்.

சாமின் பின்னணி இசை படத்துக்கு பலம். இயக்குநருக்கு இணையாக பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். சவால் மிகுந்த சேஸிங் இரவுக் காட்சிகளை அழகாக கேமராவுக்குள் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பிலோமின் ராஜின் படத் தொகுப்பும் பக்கப் பலம். சில குறைகள் படத்தில் இருந்தாலும், சவால்கள் நிறைந்த பயணக் கதையும் அதை முறியடிக்கும் ‘கைதி’யின் ஆக்‌ஷன் காட்சிகளும்   நல்லதொரு பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருகின்றன.

மதிப்பெண்: 3.5 / 5

No comments:

Post a Comment