05/11/2016

தேவாங்குகள்: பேரன்பின் ஆயுதம்!

தேவாங்கு...
தமிழகத்தில் இந்த வார்த்தையை இப்போது கேட்டால் ஒரு சம்பவம் சட்டென எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வந்து செல்லும். 
‘அவலட்சணத்துக்கு’ எடுத்துக்காட்டாகிவிட்ட  இந்த வார்த்தை ஓர் அப்பிராணி விலங்கின் பெயர் இது என்பது இந்தக் காலத்து தலைமுறையினருக்குத் தெரியாமல் போயிருப்பது சோகம்தான். அதைவிட பெரும் சோகம், வேகமாக அழிந்து வரும் இந்த விலங்குகள் பற்றிய விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத, அதேசமயம் மனிதர்களின் நண்பனாக விளங்கி வரும் தேவாங்குகள் அழிந்தால், உணவுச் சங்கிலி அறுந்துபோகும் என்ற எச்சரிக்கையை எல்லோரும் உணரும் காலம் இது!
மாறி வரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் கரியமில வாயு என உலகெங்கும் சுற்றுச்சூழலுக்குச் சவால்கள் பெருகிவிட்டன. இதுபோன்ற காரணங்களால் சீர்கெட்டு வரும் சுற்றுப்புற சூழ்நிலையால் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும்கூட சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. அப்படி சிக்கிக்கொண்ட ஒரு விலங்குதான் இந்தத் தேவாங்கு. இந்தியாவில்  இந்தியாவிலும் (தமிழகம், கர்நாடகா, கேரளா) இலங்கையிலும் மட்டுமே உள்ள ஓர் அரிய வகை விலங்கு, தன் இறுதி நாட்களை இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறது.

கோமாளி

சிறிய முகத்தில் கூர்மையான மூக்கின் மேல் மத்தியில் பெரிய உருட்டு கண்களுடன் பார்ப்பதற்கு பரிதாபமான கோமாளி போலவே இருக்கும் விலங்குதான் இந்தத் தேவாங்கு. இதன் அறிவியல் பெயர் ‘ஸ்லெண்டர் லோரிஸ்’. ’லோரிஸ்’ என்பது டச்சு வார்த்தை. இதன் அர்த்தம் கோமாளி. இதை டச்சு மாலுமிகள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றதாகவும்கூட தகவல் உண்டு. ‘ஸ்லெண்டர் லோரிஸ்’ என்றழைக்கப்படும் இந்த விலங்கை தமிழில்  ‘குட்டித் தேவாங்கு’ என்றழைக்கிறார்கள். சர்வதேச இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளம் ஒன்றியத்தால் அருகி வரும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது தேவாங்கு. இப்படி அரிய வகை, சிவப்பு பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் இந்த விலங்கின் முக்கியத்துவம் இன்னும் பரவலாகவில்லை. இருக்கும் கொஞ்சம்நஞ்ச தேவாங்குகளும் சகட்டுமேனிக்கு அழிந்து வருகின்றன.

தமிழகத்தில் தேவாங்கு

பெயரளவில் மட்டுமே இந்தக் கால தலைமுறையினர் அறிந்திருக்கும் இந்த விலங்கு, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப் பகுதிகளில் ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. இன்றோ அவற்றின் எண்ணிக்கை அதன் உருவத்தைப் போலவே பரிதாபமாக உள்ளது. மழைக் காடுகளில் மட்டுமே காணப்படும் தேவாங்குகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலை அய்யலூர் (குட்டிக் கொடைக்கானல் என்றழைக்கிறார்கள்) பகுதிகளில் நிலவுவது இவை இங்கே பெருக காரணமாக இருந்தது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கலிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து 76 கிலோ மீட்டர் அமைந்துள்ளது தேவாங்குகள் தரிசனம் காட்டும் இந்த அய்யலூர். இந்தப் பகுதி சிறு காடுகளாலும், குன்றுகளாலும், அடர் மரங்களாலும் சூழப்பட்ட இயற்கைக்கு வாக்கப்பட்ட பூமி. இந்தச் சூழல் காரணமாகவே தேவாங்குகள் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன.

குணங்கள்

அய்யலூர் பகுதியில் காணப்படும் தேவாங்குகள் சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. பொதுவாகப் பகல் நேரங்களில் தேவாங்கைப் பார்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் இரையைத் தேடி வெளியே வரும். மெதுவாகவே நடக்கும். இங்குள்ள தேவாங்குகள் 5 மீட்டர் முதல் 8 மீட்டர் வரையிலான அடர்ந்த மரக்கூட்டங்களை தேர்வு செய்து அவற்றில் வாழ்கின்றன. வனப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளே தேவாங்குகளின் முக்கிய உணவு. வெட்டுக்கிளி, கம்பிளிப்பூச்சி போன்ற பூச்சியினங்களைப் பார்த்தால் அப்படியே சாப்பிட்டுவிடும். சில நேரங்களில் கிளாக்காய், காரக்காய் போன்ற பழங்களையும் சாப்பிடுகின்றன. பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி இனங்களை உணவாக உட்கொள்வதால் விவசாயிகளின் உற்ற நண்பனாக தேவாங்கைப் பார்க்கிறார்கள்.

அழிவின் விளிம்பில்...

உலகெங்கும் மாறி வரும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் அழிப்பு காரணமாக விலங்குகள் திண்டாடி வருவது போலவே, அய்யலூரிலும் தேவாங்குகள் திண்டாடி வருகின்றன. இந்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் தேவாங்கைச் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் என்ன பயன்? தேவாங்குகளின் நிலை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிக்கொண்ட இருக்கிறது. வனப்பகுதிகளில் குறைந்து வரும் மரங்களின் அடர்த்தி, சரிவர பெய்யாத பருவ மழை, தேவாங்குகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வின்மை, வேட்டை மற்றும் கடத்தப்படும் தேவாங்குகள் போன்ற பிரச்சினைகள் தேவாங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அய்யலூரில் மாறி வருகின்றன.
புதியதாகக் கட்டமைக்கப்பட்ட திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்காக அய்யலூர் வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெரிய மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இந்தப் பகுதி, மர அழிப்புக்குப் பிறகு உஷ்ணமான பகுதியாக மாறிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, இந்த வனப் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களிடமும் தேவாங்குகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. மாந்திரீகம் போன்றவற்றுக்காக தேவாங்குகள் பிடித்து செல்லப்படுவதும் உண்டு. இதை சிறுவர்கள் விளையாட்டு பொருளாக நினைத்து சீண்டுவதாலும் கொல்லப்படுகின்றன. மிக முக்கியமாக இன்னொரு பிரச்சினை இன்றைய நவீன் வேளாண்மை முறையும் ஒரு காரணம்.  பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளினாலும் தேவாங்குகள் மடிவதை தடுக்க முடியவில்லை.

வெளிநாடுகளுக்கு விற்பனை

தேவாங்குகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழக பேராசிரியர் ராமசுப்புவிடம் இதுபற்றி பேசினோம். “வெளிநாடுகளில் தேவாங்குகளை வீட்டு விலங்காக வளர்க்கிறார்கள். இதற்காக இங்கிருந்து தேவாங்குகள் பிடிக்கப்பட்டு வெறும் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கே பிடிக்கப்படும் தேவாங்குகள் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்திய வன விலங்கு பட்டியல் 2-ல் தேவாங்குகள் இருப்பதால், இப்படி கொண்டு செல்லப்படும் தேவாங்குகளை விட்டுவிடுகிறார்கள்.

அண்மையில் அய்யலூர் பகுதியில் உள்ள தேவாங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சதுர கிலோ மீட்டரில்  நான்காக இருந்த 4 தேவாங்குகள், இப்போது இரண்டாக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. அதாவது 50 சதவீத தேவாங்குகள் அழிந்துவிட்டன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதல்படி அருகி வரும் விலங்குகள் அபாயகரமான பட்டியலில் இடம் பிடிக்கும். ஆனால், தேவாங்குகள் பற்றி முறையான அறிக்கை இல்லாததால்   ‘கவலைகொள்ளத் தேவையில்லை’ என்று அறிவித்துவிட்டது. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.” என்று அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் ராமசுப்பு.

சரணாலய கோரிக்கை 

அய்யலூர் வனப்பகுதியில் தேவாங்கைப் பாதுகாக்க வனத்துறை சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. அய்யலூர் வனப் பகுதியில் தேவாங்குகள்  அழிந்து வரும் நிலையில், தற்போது அது பற்றிய அருமை பெருமைகள் பல இளைஞர்களை ஒன்று சேர்த்துள்ளது. அய்யலூர் வனப் பகுதியில் உள்ள இந்த விலங்கினத்தை காப்பாற்ற முதலாவதாக இந்த வனப் பகுதியை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை இளைஞர்களாலும், இயற்கை ஆர்வலர்களாலும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் படித்து உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து  முக நூலில் ‘தேவாங்குகள் சரணாலயம்’ எனும் பக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம்  தேவாங்குகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காகப் பெரும் முயற்சியில் இந்த இளைஞர்கள் குழு செயல்பட்டு வருகிறது.

காப்பாற்றும் இறுதி முயற்சி 

 சென்னையில் வசித்து வரும் அய்யலூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பாலமுருகனிடம் பேசியபோது இன்னும் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  “தேவாங்குகள் அழிந்துவிட்டால் உணவுச் சங்கிலியும் அறுந்துபோகும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைத்தான் தேவாங்குகள் அதிகம் சாப்பிடுகின்றன. ஒரு தேவாங்கு ஒரு நாளில் 150 கிராம் வரையிலான பூச்சிகளைச் சாப்பிடுகிறது. இயற்கையாகவே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் சூழல் தத்துவப்படி மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்லும் தேவாங்குகளைப் பாதுகாப்பது எல்லோருக்குமான கடமை என்பதை உணர வேண்டும்.

தமிழகத்தின் மிக முக்கிய வனப் பகுதியான  அய்யலூரில் தேவாங்கை சிறு வயது முதலே மிகவும் கவனித்து வருகிறேன். தற்போது முற்றிலும் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன. உணவுக்காக சாலையைக் கடந்து வரும்போது பல விலங்குகள் அடிப்பட்டு இறந்துபோகின்றன. இவற்றைப் பாதுகாக்க வனப்பகுதியைச் சுற்றிலும் பூச்சிகளைக் கவரக்கூடிய சீகை மரங்களை நடவு செய்து மரங்களின் அடர்த்தியைக் கூட்ட வேண்டும்.  இதன்மூலம் தேவாங்குகள் உணவுக்காக வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படும். முதல் விதையாக விரைவிலேயே மரக் கன்றுகளை நடவு செய்யும் பணி இளைஞர்களால் பூர்வீகமாகத் தொடங்க உள்ளது. எங்கள் குழந்தைகளைப் போல தேவாங்கையும் காப்பது எங்களின் கடமை” என்றார் பாலமுருகன்.
உலகில் இந்தியாவைத் தவிர எங்குமே காணக்கிடைக்காத  தேவாங்குகளை இந்தப் பூமி பந்து கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டால், பாடப் புத்தகத்திலே அலங்கார பொம்மையாக மட்டுமே காட்சியளிக்கும் நிலை தேவாங்குகளுக்கு வந்துவிடலாம். இயற்கையின் பேரன்பின் ஆயுதமாக இருக்கும் மரங்களைக் காத்தால் அய்யலூரில் விவசாயிகளைக் காக்கும் ஆயுதமாக தேவாங்குகள் நிச்சயமாக என்றும்  நிலைத்திருக்கும்!
(தி இந்து 2016 தீபாவளி மலர்)


2 comments: