கோவையில் வசிக்கும் பார்வையற்ற செல்வந்தரான கெளதம் (உதயநிதி), வானொலி அறிவிப்பாளர் தாஹினியை (அதிதீ ராவ்) ஒருதலையாகக் காதலிக்கிறார். தாஹினியின் கவனத்தைப் பெற அவரைச் சுற்றிச் சுற்றிவருகிறார். அதேநேரம், நகரில் அடுத்தடுத்து இளம் பெண்களைக் கடத்திக் கொடூரமான விதத்தில் கொல்லும் சைக்கோ கொலைகாரனை (ராஜ்குமார் ) பற்றி எந்தத் துப்பும் கிடைக்காமல் அல்லாடுகிறது காவல்துறை. அப்படிப்பட்ட கொலைகாரனிடம் சிக்கிக்கொள்கிறார் தாஹினி. காவல்துறையால் கண்டுபிடிக்கமுடியாத அவனைக் கண்டுபிடித்து தனது காதலியைக் காப்பாற்றத் துடிக்கிறார் கௌதம். அதற்காக அவர் யாருடைய உதவியை நாடினார், அந்த சைக்கோ கொலைகாரன் யார், அவனது மனப்பிறழ்வுக்கு என்ன காரணம், பார்வையற்ற நாயகனால், நாயகியைக் காப்பற்ற முடிந்ததா, இல்லையா என்பதுதான் ‘சைக்கோ’வின் கதை.
அடுத்தடுத்து நடக்கும் இளம் பெண்களின் சீரியல் கொலைகள், தலையை மட்டும் துண்டிக்கும் சைக்கோ, அவரைப் பிடிக்க துப்பு இல்லாமல் அல்லாடும் போலீஸ் என முதல் பாகம் எந்தக் குறையும் இல்லாமல் த்ரில்லிங் படத்துக்குரிய இலக்கணத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மிஸ்கின். பார்வையற்ற நாயகன் மூலம் துப்பறியும் கதைக் களம் கொஞ்சம் சவாலானதுதான். வாசனையை வைத்து நாயகன் துப்பறியும் விதமும் படத்தின் கதையோட்டத்தைத் தாங்கி செல்கிறது.
சைக்கோ கொலையாளி யார் என்பதைப் படத் தொடக்கத்திலேயெ காட்டி, பார்வையற்ற நாயனுடன் சைக்கோ ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தையும் ரசனையாகவே படமாக்கியிருக்கிறார் மிஸ்கின். மாற்றுத்திறனாளிகளை வைத்து புலனாய்வு செய்யும் காட்சிகள் நம்பிக்கையூட்டும் வகையில் இயக்குநர் படமாக்கியிருப்பதைப் பாராட்டலாம்.
ஆனால், உளவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால், அதற்கேற்ப ஸ்பீடு பிரேக் இல்லாத திரைக்கதைதான் படத்துக்கு பலம் சேர்க்கும். அந்த வகையில் உளவியல், த்ரில்லர் என இரண்டும் இருந்தும் இப்படம் சறுக்கிவிடுகிறது. த்ரில்லர் படங்களுக்கே உரிய ட்விஸ்டுகள் இல்லாமல் படம் பயணிப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சைக்கோ கொலையாளி இளம் பெண்களை ஏன் கொலை செய்கிறான் என்பதுதான் படம் தொடங்கி எழும் பிரதான கேள்வி. ஆர்வமான அந்தக் கேள்விக்கு உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லி, படத்தின் மீதான மொத்த நம்பகத்தன்மையையும் குலைத்துவிடுகிறார் இயக்குநர்.
சைக்கோவை கவித்துவமானவனாக காட்டும் குறியீடு காட்சிகளும்
திரைக்கதை ஓட்டத்தை கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. 10 கொலைகள் நடந்த பிறகும் துப்பு கிடைக்காமல் போலீஸார் வருவதும் போவதுமாக இருப்பதைப் பார்க்கும்போது கண்கள் குளமாகிவிடுகின்றன. ஆனால், பார்வையற்ற நாயகன் துப்பறிந்து முன்னேறி செல்வதும், ஒரு கட்டத்தில் போலீஸே நாயகனை ஃபாலோவ் செய்வது எனப் படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் ராம் பாடும் காட்சிகள் அவருடைய மன இறுக்கத்தைக் குறைத்து, நம் இறுக்கத்தை கூட்டிவிடுகிறது.
இந்த சிசிடிவி யுகத்தில் அதைப் பற்றிய பேச்சே இல்லாமல் விசாரணை காட்சிகள் நகர்கின்றன. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கதை நடப்பது போலாவது காட்டி பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கலாம். முதல் கொலையின் பறவைக் காட்சி கோணமே படத்தின் மீதான மொத்த பயத்தையும் துடைத்தெறிந்துவிடுகிறது.
படத்தின் நாயகன் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வருகிறார். கதைகேற்ப நடிப்பை வழங்கியிருக்கிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உடல்மொழியையும் நன்றாகவே உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் அதிதீ ராவ் ஒரே மாதிரியான முக பாவனைகளுடன் நடித்திருப்பது சலிப்பூட்டுகிறது. மாற்றுத்திறனாளியாக வரும் நித்யாமேனன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவருடைய டப்பிங் வாய்ஸ் படத்தில் துருத்தி நிற்கிறது. சைக்கோவாக வரும் ராஜ்குமாரின் நடிப்பும் உடல்மொழியும் செயற்கையாகவே இருக்கிறது.
உதயநிதியின் நண்பராக வரும் சிங்கம்புலி இயல்பாக நடித்து கவர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் ராம், அந்த வேடத்தில் ஏன் நடித்தார் என்றே தெரியவில்லை. போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் வருவதும் போவதுமாக இருக்கிறார். படத்துக்கு இசை இளையராஜா. படத்தின் ஒரே ஆசுவாசம் இளையராஜாவின் இசை மட்டுமே. ‘உன்னை நினைச்சு நினைச்சு...’ பாடலில் உருக வைத்துவிடுகிறார் மனிதர். த்ரில்லர் படத்துக்குரிய தேர்ந்த பின்னணி இசையையும் இளையராஜா வழங்கியிருக்கிறார். இரவுக் காட்சிகளை பி.சி. ஸ்ரீராமின் கேமரா கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது. அருண்குமாரின் படத்தொகுப்பில் குறையில்லை.
சவாலான கதைக் களத்துக்கு இலுவையான திரைக்கதை 'சைக்கோ'வை விழி பிதுங்க வைக்கிறது.
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment