06/04/2019

தோற்றவர் வென்றார்!

தேர்தலில் தோல்வியடைந்தவராக அறிவிக்கப்பட்டவர் மறுநாளே வெற்றியாளராக மாறிய ஒரு விநோதத் தேர்தலையும் தமிழகம் சந்தித்திருக்கிறது. 1989-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத்   தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. திருநெல்வேலியில் உள்ள ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் எம்.பி.முருகையா, காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.ராமசுப்பு, அதிமுக (ஜா) அணி சார்பில் ஆலடி அருணா, அதிமுக (ஜெ) அணி சார்பில் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு திமுக வேட்பாளர் முருகையா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளரின் வெற்றிபெற்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் அடுத்த நாள் காலையில் வெளிவந்தன. ஆனால், அதற்கு முன்பே ஒரு வாக்குப் பெட்டியிலில் இருந்த வாக்குகள் எண்ணப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அந்தத் தொகுதியின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்பு 31,314 வாக்குகளைப் பெற்றார். முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்

எம்.பி.முருகையா 30,832 வாக்குகளை மட்டுமே பெற்றார். 482 வாக்குகள் வித்தியாசத்தில் முருகையா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்ற செய்தி அன்றைய மாலை செய்தித்தாள்களில் வெளிவந்தது. முதல்நாள் தோல்வியடைந்தவர், மறுநாள் வெற்றியாளராக மாறியது தமிழகத் தேர்தல் வரலாற்றில் அதுதான் முதல் தடவை.

-
இந்து தமிழ், 04/04/2019

No comments:

Post a Comment