05/08/2019

தொரட்டி விமர்சனம்

விவசாய நிலங்களில் ஆடு கிடை போடும் தொழில் (கீதாரிகள்) செய்துவருகிறார் அழகு. ராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க தேவக்கோட்டைக்குக் குடும்பத்தோடு வருகிறார். ஒரு தலையாரியின் நிலத்தில் ஆடு கிடை போட்ட பிறகு, அவர் பணம் தர மறுக்கிறார். அந்த ஆத்திரத்தில் அவருடைய நிலத்தை மலடாக்க ஒரு சடங்கு செய்கிறார் அழகு. இது தெரிந்ததும் அந்த  தலையாரி அழகையும் அவருடைய மகன் மாயனையும் (மித்ரு) அடித்து மாட்டு கொட்டகையில் கட்டிவைக்கிறார். அந்த வீட்டுக்கு திருட வரும் 3 திருடர்கள், இருவரையும் தப்பிக்க வைக்கிறார்கள். இதனால், அந்தத் திருடர்களோடு மித்ருவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. 

கெட்ட சகவாசத்தால்  குடிக்கு ஆளாகி, தன் திருட்டு நண்பர்களுக்காக வீட்டில் உள்ள ஆடுகளை வெட்டி அடிக்கடி கறி விருந்து வைக்கிறார். இதற்கிடையே ஒரு பெரிய திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் 3 திருடர்களையும் செம்பொண்ணு (சத்யகலா) காட்டிகொடுக்கிறார். இதனால், மூவரும் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. சிறைக்கு செல்ல காரணமான சத்யகலாவைக் கொல்ல மூவரும் சிறையில் முடிவு செய்கிறார்கள். சிறையிலிருந்து அவர்கள் வரும்போது சத்யகலா தன் நண்பன் மித்ருவின் மனைவியாக இருக்கிறார். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தொரட்டி’யின் கதை.
  
1980-களில் நடக்கும் ஒரு கதையைக் கிராமிய அழகியலோடும், விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்விலோடும் வலுவான காட்சி அமைப்புகளோடு தந்திருக்கும் இயக்குநர் மாரிமுத்துவுக்கு பூங்கொத்து. இந்தத் தலைமுறையினர் கொஞ்சமும் அறிந்திராத கீதாரிகளின் வாழ்க்கையைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். எளிமையான கதையும் அழுத்தமான திரைக்கதையும் இயல்பான கிராமிய உணர்வை பிரதிபலித்த புதுமுகங்களின்  நடிப்பும் நம்மை பாரதிராஜா காலத்துக்கே கூட்டிச் செல்கிறது. தவறான சேர்க்கை ஒரு மனிதனை என்னவாக்குகிறது என்பதையும் பாடமாகச் சொல்கிறது படம். தென் மாவட்டத்தின் வட்டார வழக்கையும் அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியிருப்பது படத்துக்கு பலம்.

முதல் பாகத்தில் ஒரு கீதாரி குடும்பத்தின் சூழல், உழைப்பு,  நட்பு, காதல் என அனைத்தும் கலகலப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் திருமணம், துரோகம், வஞ்சகம் எனக் காட்சிகள் இறுக்கமாகிவிடுகின்றன. இரண்டுக்கும் இடையே சலிப்பு வராமல் மண் சார்ந்த காட்சிகள் பார்த்துக்கொள்கின்றன. என்றாலும், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இல்லாததால், சற்று அயர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்பதை படத்தின் பாதியிலேயே ஊகிக்க முடிவதால் வஞ்சகமா, நட்பா என்ற பெரும் கேள்வி இல்லாமலேயே படம் முடிவது மைனஸ். யதார்த்தமாக இருந்திருக்க வேண்டிய கிளைமாக்ஸும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளால் தள்ளாடிவிடுகிறது.

படத்தின் நாயகன் ஷமன் மித்ருதான் படத்தின் தயாரிப்பாளரும். மாயன் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பாசக்கார பிள்ளையாக, களவாணிகளின் நண்பனாக, மனைவியைச் சுற்றிவரும் இனிய காதலனாக, ஆக்ரோஷம் காட்டும் கணவனாக கவர்கிறார். உடல்மொழியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் மிளிரலாம். படத்தின் பலமே கதாநாயகி சத்யகலாதான். தமிழில் இப்படி ஒரு நடிகையா என வியக்க வைத்திருக்கிறார். அசல் கிராமத்து பெண்ணாக அவருடைய துடுக்குத்தனம் ரசிக்க வைக்கிறது. காதல், ஊடல், கூடல், மோதல் என ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் சத்யகலா.  நீண்ட காலமாக சினிமாவில் இருக்கும் அழகுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல். பாசம் காட்டும் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். 3 திருடர்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக வாய்ப் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முக்கிய வில்லன், உடல் மொழியாலேயே மிரட்டியிருக்கிறார்.
  
வேத் ஷங்கரின் இசையில் ‘சவுக்காரம்’, ‘குள்ள நரிக்கூட்டம்’ ஆகிய பாடல்கள் வருடுகின்றன. தேவக்கோட்டையின் பொட்டல் கிராமத்தையும் உயிர்ப்போடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் குமார். 

கூடா நட்பு என்ன செய்யும் என்பதை மண் மணக்கும் கிராமிய களத்தோடும் எளிய மனிதர்களின் வாழ்வியோடு பேசும் ‘தொரட்டி’  நேர்த்தி.

மதிப்பெண்- 3 / 5

2 comments: