அண்ணன் - தம்பி சொத்து தகராறில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்தினத்துக்கு (விக்ராந்துக்கு) அவனுடைய பாகம் கிடைக்கிறது. அதில் விவசாயம் செய்ய பணத்துக்காக ரத்தினம் அலைகிறான். அந்த முயற்சியில் பணத்தோடு சேர்ந்து ஓர் ஒட்டகமும் அவனுக்குக் கிடைக்கிறது. அந்த ஒட்டகத்தின் மீது அவனும் அவனுடைய குடும்பமும் அன்பு காட்டுகிறது. ஒட்டகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது அதைப் பூர்வீக இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிய மனம் இல்லாமல் அதைப் பூர்வீக இடத்துக்குக் கொண்டு செல்ல ரத்தினம் முடிவு செய்கிறான். அந்த ஒட்டகம் பூர்வீக இடத்துக்கு சென்றதா, இல்லையா என்பதை உணர்வுபூர்வமாகவும் பயண கதையாகவும் சொல்கிறது ‘பக்ரீத்’.
ஒட்டகம் பிறந்து வளர்ந்த ஊரான ராஜஸ்தானில் கொண்டு போய்விட ரத்தினம் முடிவு செய்யும் கணத்திலிருந்து அதுவே படத்தின் பிராதனமாகிவிடுகிறது. அதற்கு முன்புவரை விவாசயம் செய்ய முடியாமல் நாயகன் தவிப்பது கிளை கதையாகிவிடுகிறது. பயணக் கதை என்றாலே எதிர்பார்ப்புகளும் திருப்பங்களும் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கப்படும். ஆனால், எந்தத் திருப்பமும் இன்றி சுவாரசியமும் இன்றி ஒட்டகத்துடன் நாயகன் பயணமாகிறான். இடையே லாரி ஓட்டிச் செல்லும் இந்திக்காரர்களின் காமெடியும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகவே செல்கின்றன. பசு காவலர்கள் ஒட்டகத்தை ஏன் சிறைபிடிக்கிறார்கள் என்பதற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.
ஒட்டகம் காணாமல் போவது, நாயகனுக்கு அமெரிக்கரின் உதவி, என எதுவுமே மனதில் ஒட்டமலேயே செல்கிறது. ஒட்டகத்தால் ராணுவ வீரர்கள் தப்பித்தார்கள் என்ற காட்சியில் தெளிவு இல்லை. மகாராஷ்டிராவிலிருந்து ராஜஸ்தானுக்கு ஒட்டகத்துடன் நடந்தே சென்றுவிடுவதாக ஒரு காட்சியில் சொல்லிவிட்டு காதில் பூ சுற்ற வைத்துவிடுகிறார்கள். அதற்கு முன்பு வரையிலான காட்சிகள் அனைத்தும் கண்ணாமூச்சிகளாக நகர்ந்துவிடுகின்றன. ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டுவந்துவிட்டாலும் அது இறைச்சியாகிவிடும் என்று கிளாமாக்ஸில் நாயகன் உணரும் தருணம் பார்வையாளர்களை மகிழ செய்வதற்கு மாறாக, ஏமாற்றியதுபோன்ற உணர்வை தருகிறது.
அசல் கிராமத்தானாக ரத்தினம் கதாபாத்திரத்துக்கு பொருந்திவிடுகிறார் விக்ராந்த். விவசாயம் செய்ய பணத்துக்காக் அலைவது, எளிய குடும்பத் தலைவனாக, ஒட்டகத்தின் மீது அளவில்லா அன்பு காட்டுபவனாக அழகாக நடித்திருக்கிறார். அசல் கிராமத்து குடும்பத்து தலைவியாக ஸ்கோர் செய்திருக்கிறார் வசுந்தரா. அவருடைய கிராமத்து ஒப்பனை கண் முன்னே அசல் கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்துகிறது. குழந்தையாக ஷ்ருத்திகா மழலை மொழியில் பேசி ரசிக்க வைக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், விக்ராந்தின் நண்பனாக வரும் சுந்தரம், இரும்புக்கடை பாய், லாரி டிரைவர்கள் ஆகியோரும் கதையோட்டத்தோடப் பயணித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை இமான். ‘ஆலங்குருவிகளா’, ‘கரடு முரட்டு பூவே’ ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குநர் ஜெகதீசன் சுபுவே கவனித்திருக்கிறார். திருவள்ளூரின் கிராமத்தையும், மகாராஷ்டிராம், ராஜஸ்தானையும் அழகாக கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு விலங்கு மீது மனிதன் வைக்கும் விலங்குநேயத்தை உணர்வுபூர்வமாக அணுகியதில் குறையில்லை. அலுப்பூட்டும் பயண திரைக்கதையில் இயக்குநர் கவனம் செலுத்தியிருந்தால் ‘பக்ரீத்’த்தை எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள்.
மதிப்பெண் 2.5 / 5
No comments:
Post a Comment