ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூறாவளி, இருந்த தடம் தெரியாமல் ஒரு ஊரையே உருக்குலைய செய்யும் என்பதை அந்தத் தீவு மக்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு டிசம்பர் மாத பின்னிரவில் அந்தத் தீவைக் கடந்து சென்ற சூறாவளியால் அது நடந்தேறியது. அந்தச் சூறாவளிக்குப் பிறகு ஊரே இருந்ததற்கான அடையாளம் தெரியாமல், மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அந்த ஊர் மாறிபோனது. ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு வாழ்ந்த அந்த ஊரை, பேய்கள் வாழும் இடம் என்று மனிதர்கள் ஒதுக்கிவைத்து, அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.
இன்றோ வானில் தோன்றும் ஒரு நம்பிக்கை கீற்றாய் அந்த ஊருக்குள் வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக அந்த ஊருக்குள் இன்று மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஊருக்குள் வரும் மனிதர்களை நம்பி அங்கேயே காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்கள், இருண்ட வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்ததைப்போல மகிழ்கிறார்கள். தமிழகத்தில் இன்று புதிய சுற்றுலாதளமாக உருவெடுத்திருக்கும் அந்த ஊர், தென் கோடியில் ஒரு காலத்தில் செழிந்து வளர்ந்து, காணாமல்போய், இன்று உயிர்த்தெழ காத்திருக்கும் தனுஷ்கோடி.
ரயில் ஓடிய காலம்
ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியை மிகப் பெரிய வணிக நகரமாகவே வரலாறு பதிவு செய்திருக்கிறது. தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குக்கும் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கும் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடிக்கட்டி பறந்த வணிகத்தை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சென்னையிலிருந்து இலங்கை செல்ல
விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு வர வேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கைக்கு செல்ல முடியும். அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து இலங்கையின் தலை மன்னார், மதவாச்சி வழியாக கொழும்புவரை ரயில் பயணம் நீண்டதெல்லாம் பழங்கதைகள்.
1964-ம் ஆண்டு டிசம்பரில் ராமேஷ்வரத்தைப் புரட்டிப் போட்ட புயல், தனுஷ்கோடியைத் துண்டு துண்டாகச் சிதைத்து விட்டுச் சென்றது. புயலுக்குப் பிறகு தனுஷ்கோடியின் எச்சங்களாக பாழடைந்த கட்டிடங்கள் மட்டுமே அந்த ஊரின் சோகமயமான பக்கத்தை இன்று உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் அன்று மூழ்கடிக்கப்பட்டது. அங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், அரசு அலுவலகங்கள், வீடுகள் என எல்லாமே மண்ணில் புதைந்தும், பாழடைந்தும் காட்சியளிக்கின்றன.
வசதிகளற்ற ஊர்
தனுஷ்கோடியைப் புயல் அழித்துவிட்டு போனாலும், இருக்கவே லாயக்கியற்ற ஊர் என்ற தகுதியை ஊர் இழந்தாலும், வாழ்ந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல பூர்வக்குடிகள் விரும்புவார்களா? அப்படி விரும்பாத பூர்வக்குடிகள் சிலர் குடும்பம் குடும்பமாக தனுஷ்கோடியில் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள். மீன் பிடித் தொழில் மட்டுமே அவர்களுடைய பிரதான தொழில். இலங்கை கடற்படையால் அச்சுறுத்தல் இருந்தாலும், தங்கள் வாழ்வாரத்துக்காகக் கடலில் தினந்தோறும் சாகசப் பயணம் செய்துவருகிறார்கள். இருக்க இடம் கிடையாது; குடிக்க நீர் கிடையாது; மாலை 5 மணியைத் தாண்டி விட்டால் கும்மிருட்டு; எந்தப் பாதுகாப்புக்கும் உறுதி கிடையாது என அடிப்படை
கட்டமைப்புகள் எதுவும் இல்லாததுதான் புயல் தீண்டிய தனுஷ்கோடியின் இன்றைய அடையாளங்கள்.
ஆனால், அரை நூற்றாண்டுகள் கழித்து ராமேஸ்வரத்திலிருந்து அரிச்சல்முனை வரை போடப்பட்டிருக்கும் சாலை, அந்த ஊருக்கான புதிய வாசலை திறந்துவிட்டிருக்கிறது. 1964-ம் ஆண்டு புயலில் மிச்சமாக இருந்த முகுந்தராயர் சத்திரம் பகுதியில் தொடங்கி, இந்திய நிலப்பரப்பின் எல்லையான அரிச்சல் முனை வரை சாலை போடப்பட்டிருக்கிறது. இது தவிர ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு உதவுவதற்காக துறைமுகம் ஒன்றும் முகுந்தராயர்சத்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய சோகப் பின்னணியைக் கொண்ட தனுஷ்கோடிக்கு ஒரு நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு கார்க் காலத்தில் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.
அழகான அரிச்சல் முனை
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆரவாரமற்ற சாலையில் பயணிக்கும்போதே தனுஷ்கோடியைப் பற்றி மனதில் ஊடுவிய சோகங்கள் உள்ளத்தை அமைதியாக்கிவிடுகிறது. மணல் குன்றுகளும் புதர்களும் ஒரு சேர காட்சியளிக்கும் சாலையைக் கடந்துபோகும்போது, காதுகளின் செவிப்பறைகளைக் கிழிக்கும் அளவுக்கு காற்று தீண்டுகிறது. முகுந்தராயர் சத்திரத்தைத் நோக்கி செல்லும்போதே சற்று தொலைவில் கடல் தெரிய ஆரம்பித்து விடுகிறது. ஒரு பிரம்மாண்ட ஏரிபோல பரந்துவிரிந்திருக்கும் கடல், மஞ்சள் வெயிலில் தகதகவென மின்னுகிறது. அதன் எதிரொலி
குவிந்துக்கிடக்கும் மணல் திட்டுகளைப் பொன்னிறமாக்கி ஜொலிக்க செய்கின்றன. அந்த ரம்மியமான காட்சிகளுக்கு மத்தியில் வடுக்களாக மாறிபோன தனுஷ்கோடியின் பாழடைந்த கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தபடி எட்டி பார்க்கின்றன.
தனுஷ்கோடியை நெருங்க நெருங்க இருபுறமும் சாலையை நெருங்கி வரும் கடல், இறுதியில் ஒரு முனையை அடைகிறது. அந்த முனையை அடையும்போது நம் கண்முன்னே பெரும் நீர்ப் பரப்பாய் விரிகிறது கடல். அந்த முனைக்கு அரிச்சல் முனை என்று பெயர். கடல் நீரால் அரிக்கப்பட்ட முனை என்பதால் அதை அரித்த முனை, அரிச்ச முனை, அரிச்சல் முனை எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். நம் நாட்டின் எல்லை இந்த முனை என்பதால் இங்கே இந்திய தேசிய சின்னம் ஏந்திய தூணை நிறுவியிருக்கிறார்கள். இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வெறும் 15 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.
அரிச்சல் முனையைப் பார்க்கிறபோது மனதுக்குள் மகிழ்ச்சி துள்ளிக்கொண்டு குதிக்கிறது. அரிச்சல் முனையிலிருந்து இடதுபுறம் அமைதியாக ஓர் ஏரியைப்போல் காட்சியளிக்கிறது வங்கக்கடலின் பாக் ஜலசந்தி. வலதுபுறம் ஆர்ப்பரிக்கும் இந்திய பெருங்கடலின் மன்னார் வளைகுடா என பிரிந்து வைத்திருக்கிறது. இரு புறங்களிலும் விதவிதமான பறவைகள் கரையோரத்தில் அமர்ந்தபடி இரைகளுக்காகக் காத்திருக்கின்றன. அதன் முனையிலிருந்து அந்த கடல் அழகையும் பறவைகளையும் காண கோடிக் கண்கள் வேண்டும்.
படையெடுக்கும் கூட்டம்
அரிச்சல் முனை வரை போடப்பட்டிருக்கும் சாலைதான் இன்று தனுஷ்கோடிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பெல்லாம் தனுஷ்கோடி வரவே அச்சப்படுவார்கள். முகுந்தராயர் சத்திரத்தைத் தாண்டி அப்போது தனுஷ்கோடி செல்ல சாலை வசதி எதுவும் இல்லை. வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததால், சேரும் சகதியுமாக
உள்ள கடல் மணல் பரப்பில் ஃபோர் வீல் ட்ரைவ் கொண்ட ஜீப்புகளைக் கொண்டு தனுஷ்கோடிக்கு வருவார்கள். சாதாரண வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கிக் கொள்ளும்.
சாகசப் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடிக்கு வரும்போது உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றோ நிலைமை தலைகீழ். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டிருப்பதால் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா வேன்களில் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சாகசப் பயணங்களை மேற்கொண்டு இங்கே வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தனுஷ்கோடிக்கும் அரிச்சல் முனைக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இதனால், விடுமுறை நாட்களில் தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல்முனைவரை சுற்றுலா பயணிகளாலும் வாகனங்களாலும் அந்தச் சாலை நிறைந்துகிடக்கிறது.
பெருகும் கடைகள்
அரிச்சல் முனையின் இறுதியில் இந்திய அரசின் நினைவு தூணை நிறுவியிருப்பதுபோல, சாலையைச் சுற்றி உட்காரவும் வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள். புதிதாகப் போடப்பட்டுள்ள சாலையை கடல் அலை அரித்துவிடக் கூடாது என்பதற்காக சாலையின் இருபுறமும் பாறைகளைக் கயிற்றி கட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல சாலையின் இரு மருங்கே பல இடங்களில் பவளப் பாறைத் துண்டுகள் கிடப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. சில இடங்களில் தொட்டியில் தண்ணீரை வைத்து அதில் இந்தக் கற்களை மிதக்க வைத்திருக்கிறார்கள். இதைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.
தனுஷ்கோடிக்கும் அரிச்சல்முனைக்கும் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளால் இரு இடங்களுமே இன்று களைகட்டியிருக்கின்றன. ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாமல் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனையிலும் இறந்த முன்னோர்களுக்காக திதி கொடுப்பது, சடங்கு செய்வது போன்ற வழிபாடுகளில் பலரும்
ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. அரிச்சல்முனைக்கு வருவோரின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இங்கே வசதியும் இல்லைல். குறிப்பாக கழிப்பறை வசதி, உணவக வசதி என எதுவுமே இல்லை. மாறாக, சிறுசிறு கடைகள் அதிகமாக முளைத்திருக்கின்றன.
ஊர் மீது நம்பிக்கை
இந்தக் கடைகளைப் பெரும்பாலும் பெண்கள்தான் நடத்துகிறார்கள். ஆண்கள் கஷ்டப்பட்டு மீன் பிடிக்கக் கடலுக்கு செல்ல, அவர்களுக்கு உதவியாக ஏராளமான பெண்கள் இங்கே பழக்கடை, ஐஸ் கடை, தண்ணீர் விற்பனை என பல கடைகளை விரித்து வியாபாரம் செய்கிறார்கள். அரிச்சல்முனையில் பழக்கடை வைத்திருக்கும் நாகம்மா என்ற மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன். அரிச்சல்முனைக்கும் தனுஷ்கோடிக்கும் பயணிகள் வருவதால் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி நிறைய பேசினார்.
“என்னோட ஊர் ராமநாதபுரம். தனுஷ்கோடியிலதான் என்னை கட்டிக் கொடுத்தாங்க. புயலுக்கு பிறகு ஊரைவிட்டு போக வேண்டியிருந்துச்சு. ஆனா, கொஞ்ச வருஷத்துல திரும்பவும் இங்கேயே வந்துட்டோம். வீட்டுல ஆம்பளைங்க மீன் பிடிக்க கடலுக்கு போயிடுவாங்க. ஆம்பளைங்க கடலுக்குள்ள போனால், உசுரோட திரும்ப வருவாங்களான்னு மனசு திக்திக்குன்னு அடிச்சு கெடக்கும். இலங்கை கடற்படை எப்ப ஏது செய்யுமோன்னு பயப்பட வேண்டிகிடக்கு.
இப்போ அரிச்சல்முனை வரை ரோடு போட்ட பிறகு விடுமுறை நாட்கள் கூட்டம் அதிகமா வருது. இவுங்கள நம்பிதான் ஒரு வருஷமா கடை போட்டுக்கிட்டு இருக்கிறேன். விடுமுறை தினங்களில் முதலுக்கு போக 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கிடைக்கும். ஒரு மாசத்துல 1500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எங்களுக்கு இந்தத் தொழில் ஒரு மாற்றுத் தொழிலாக இருக்குப்பா. ஏதோ குடும்பத்தை ஓட்ட இது உதவியா இருக்கு. சாலை அமைத்த பிறகு தனுஷ்கோடிக்கும் அரிச்சல்முனைக்கும் கூட்டம் வர்ரதைப் பார்த்து,
இப்போ எங்களுக்கே இந்த ஊர் மீது நம்பிக்கை வந்திருக்கு” என்று சொல்கிறார் நாகம்மா.
மீண்டு வருமா?
தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல்முனை வரையிலான சாலை வசதி அந்த ஊரை புதிய சுற்றுலாதளமாக மாற்றியிருக்கிறது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே இல்லாமல் போன ரயில் போக்குவரத்தையும் தொடங்க தற்போது மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல்போன தனுஷ்கோடி ரயில் நிலையம், மீண்டும் அமைக்கப்பட்டால், தனுஷ்கோடி மீண்டும் உயிர்ப்பெற்று இயங்க வாய்ப்புள்ளது. ஆன்மிக நகரமான ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடியும் அரிச்சல் முனையும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றன.
இந்து தமிழ், தமிழ்ப் புத்தாண்டு மலர், 2019 (07-08-19)