29/11/2015

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமண கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வரிக்கு (ஊர்வசி) தனியாத ஆசை.  ஆனால், அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் தெறித்து ஓடுகிறார்கள்.  இதேபோல பெண் பார்க்க வரும் அபியும்(ஆர்யா) அனுஷ்காவும் பரஸ்பரம் பேசி திருமண பேச்சுவார்த்தையை முறித்துகொண்டாலும் நட்புடன் பழகுகிறார்கள்.

அனுஷ்காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவது தெரிகிறது. அதற்கு தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா உடல் எடையைக் குறைக்க ஜீரோ சைஷ் என்ற  உடனடி உடல் குறைப்பு ஜிம்முக்குப் போகிறார். அங்கு தவறான வழியில் உடல் எடைக் குறைக்கப்படுவது தெரிந்ததும் போராட்டத்தில் குதிக்கிறார் அனுஷ்கா. அதற்கு ஆர்யாவும் உதவுகிறார். அந்தப் போராட்டத்தில் அனுஷ்கா வெற்றி பெற்றாரா இல்லையா? அனுஷ்காவுக்கு திருமணம் ஆனதா இல்லையா?  என்பதுதான் மீதிக்கதை.

உடல் பருமன் பிரச்சினை இன்று சமூக பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், திருமண ஆசைகளோடு இருக்கும் உடல் பருமனான ஒரு பெண்ணை இந்தச் சமூகம் குறையோடு பார்ப்பதை காட்சிகள் மூலம் மிகைப்படுத்தாமல் அழகாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக இயக்குநர் பிரகாஷ் கோவலமுடியைப் பாராட்டலாம்.  அதேசமயம் உடல் பருமன் ஒரு குறையில்லை. தவறான வழியில் உடல் எடையைக் குறைத்து உடலுக்குத் தீங்கைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்ற விழிப்புணர்வு மெசேஜையும் படத்தில் பிரதானப்படுத்தி கொஞ்சம் ஸ்கோர் செய்து விடுகிறது படம்.

உடல் எடையைக் குறைப்பதும் கூட்டுவதும் நடிகர்களால் மட்டுமே சாத்தியம் என்பதை தூள்தூளாக்கியிருக்கிறார் அனுஷ்கா. குண்டானப் பாத்திரத்துக்காக சினிமா தொழில்நுட்ப வித்தையை நம்பாமல் உண்மையில் உடல் எடையைக் கூட்டி அனுஷ்கா மாயாஜாலம் காட்டியிருக்கிறார். உண்மையில், ஒல்லியாக இருக்கும் எந்த நடிகைக்கும் வராத துணிச்சல் இது. அவரது உடல் எடையை போலவே படம் முழுவதையும் தன் தோளால் தாங்கிப் பிடித்திருக்கிறார். எடை மெஷினில் வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுக்காக மெஷினோடும் ஆழ்ந்த பாசத்தைக் காட்டுவது, துயரம், அன்பு, மன உளைச்சல், அழுகை, பொறாமை, விரக்தி என அத்தனை நிலைகளையும் தன் அசாத்திய நடிப்பால் கில்லியாடி விடுகிறார்.

படம் முழுவதும் அனுஷ்காவைச் சுற்றியே நடப்பதால் ஆர்யாவும் அனுஷ்காவுக்கு துணையாகவே வந்துப்போகிறார். பெண் பார்க்க வருவதில் தொடங்கி, உடல் ஃபிட்னஸ்காக ஆர்யா டிப்ஸ் கொடுப்பதும், போவதும், ஓடுவதுமாகவே இருக்கிறார். உடல் எடையைக் குறைக்கும் ஜிம் நடத்துபவராக பிரகாஷ் ராஜ் சிரிக்கவும் வைக்கிறார். கொஞ்சம் வில்லனாக மாறவும் செய்கிறார்.

வழக்கமாக உடல் சார்ந்த குறையுள்ள படம் என்றால் நாயகனோ, நாயகியோ அதில் மீண்டு வந்து வெற்றிக்கொடி கட்டுவது போலவே காட்சிகள் இருக்கும். ஆனால், அதுபோன்ற காட்சியமைப்பை இயக்குநர் தவிர்த்திருப்பதைப் பாராட்டலாம். அதேசமயம்  தவறான வழியில் உடல் எடையைக் குறைப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் காட்டப்படும் உடற்பயிற்சி காட்சிகள் சோர்வடைய செய்கின்றன.

அதற்கு சினிமா நடிகர்கள் குரல் கொடுப்பது போன்ற காட்சிகள் இன்னும் செயற்கைத்தனமாகிவிடுன்றன. உடல் பருமன் பிரச்சினையிலிருந்து உடல் குறைப்பு மையத்துக்கு எதிரான போராட்டமாக கதை நகரும்போது திரைக்கதை ஓட்டத்தில் கொஞ்சம் குழப்பமும் வந்துவிடுகிறது. ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் வேறு நபர்களுடன் காதல் வருவதும், கிளைமாக்ஸில் அந்தக் காதலை தொபக்கடீர் என தூக்கிப் போட்டுவிட்டு, இவர்கள் ஜோடி சேர்வதும் காதலுக்கு மரியாதையாகத் தெரியவில்லை.

ஊர்வசி, பிரம்மானந்தம், சோனல் சவுகான், மாஸ்டர் பரத் என தேவையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்துக்கு மரகதமணி இசை. சைஸ் செக்ஸி என்ற பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. ஆனால், ஒளிப்பதிவுக்குரிய வேலை அதிகம் இல்லை.

அனுஷ்காவுக்காக மட்டும் இஞ்சி இடுப்பழகியை ரசிக்கலாம்.

மதிப்பெண்: 2.5 / 5

23/10/2015

நானும் ரவுடிதான் விமர்சனம்


காவல் அதிகாரியான மீனாகுமாரிக்கு (ராதிகா) மகன் பாண்டியை (விஜய் சேதுபதி) காக்கிச் சட்டையில் பார்க்க ஆசை. மகனுக்கோ ரவுடியாக வேண்டும் என்பது உயர்ந்த லட்சியம். செவித் திறன் குறைபாடுடைய காதம்பரியை ( நயன்தாரா) பார்த்ததும் பாண்டிக்கு காதல். அந்தக் காதலை ஏற்க அவர் ஒரு நிபந்தனை போடுகிறார். தாதா கிள்ளிவளவனை (பார்த்திபன்) கொல்ல வேண்டும் என்பதுதான் அது. ரவுடிக்கான எந்தக் குணாதிசயமும், தன்மையும் இல்லாத விஜய் சேதுபதி ரவுடி ஆனாரா இல்லையா, நயன்தாரவின் நிபந்தனையை ஏற்று வெற்றிக்கொடி நாட்டினாரா இல்லையா என்பதுதான் ‘ நானும் ரவுடிதான்’ படத்தின் கதைக் கரு.

நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளின் கோர்வைதான் இந்தப் படம்.  நயன்தாராவின் சோகம், உணர்வுபூர்வமான கோபத்தைத் தவிர்த்து படத்தில் நகைச்சுவை ஆக்கிரமித்திருக்கிறது.  அதற்கு தகுந்தார்போல் தொய்வின்றி, கணிக்க முடியாத திரைக்கதையால் படம் ரசிக்க வைக்கிறது.  ‘போடா போடி’ படத்தில் சொதப்பிய இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறிது இடைவெளி விட்டு இப்படத்தை எடுத்திருந்தாலும் பாஸாகிவிடுகிறார்.

விஜய் சேதுபதி துறுதுறுவென இருக்கிறார்.  இதுவரை கிராமத்து இளைஞனாக, லோக்கல் பையனாக வந்தவருக்கு மாடர்ன் இளைஞன் வேடம். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார். வசன உச்சரிப்பிலும் தேறியிருக்கிறார். ரவுடியாக இல்லாவிட்டாலும் ரவுடி போல பில்டப் கொடுப்பது, ரவுடியாக  ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் பயிற்சி எடுப்பது, தனது நண்பர்களைச் சேர்ந்துகொண்டு தாதா அளவுக்கு திட்டம் போடுவது, காதலி நயன்தாராவுக்காக உருகி மருகுவது என அசத்தியிருக்கிறார். 

 வயதாக வயதாக நயன்தாராவுக்கு அழகுக் கூடிக் கொண்டே போகிறது. செவித்திறன் குறைபாடுள்ள அந்தப் பாத்திரத்தில் அப்படியே ஒன்றிவிடுகிறார்.   முதன் முறையாகச் சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார் இந்தப் படத்தில். இவரது குரலும் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்குள் சுலபமாக ஊடுருவிடுகிறார். அப்பா அழகம் பெருமாள் உயிரோடு இருக்கிறார் என்று நினைக்கும் வேளையில்,  இறந்தபோன விஷயம் தெரிய வருகிறது. காவல் நிலையத்தில் அடக்க முடியாத அழுகையையும், நம்பிக்கை பொய்த்துபோன விரக்தியையும் ஒரு சேர வெளிப்படுத்தும்போது நயன்தாரா சிக்ஸர் விளாசி விடுகிறார்.

இந்தப் படத்தில் பார்த்திபன் முழு நீள வில்லனாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். வில்லனாக வந்தாலும் அவருக்கே உரிய ஸ்டைலில் கலக்குகிறார். பார்த்திபனை கொல்ல நயன்தாரா  நிராயுதபாணியாக வருகிறார். கையில் எந்த ஆயுதமோ, முன் தயாரிப்போ இல்லாமல், அவரிடமே வந்து  ‘உன்னை கொல்லப் போகிறேன்’ என்று சொல்வது லாஜிக் ஓட்டை. அதுவும்  அந்த வசனத்தை ‘உன்னை போடப் போறேன்’ என்று நயன்தாரா சொல்வதும், அதை பார்த்திபன் இரட்டை அர்த்தமாகக் கொள்வதும் காமெடி என்ற பெயரில் அருவருக்க வைக்கிறது. பார்த்திபனை நயன்தாராவும் அவரது அப்பாவும் கொல்லத் துடிக்கும் அளவுக்கு  என்ன பகை என்பதை சொல்லாமல் விட்டது படத்தில் பெரிய மைனஸ்.

படத்தில் ராதிகா, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி என  ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘கண்ணான கண்ணே’ ,’வரவா வரவா’ பாடல்கள் கேட்கும்படியாக உள்ளன.  நயன் தாராவை மட்டுமல்லாமல், புதுச்சேரியையும், வடசென்னை கடலோர பகுதியையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.

 ‘நானும் ரவுடிதான்’ -  ரசிகர்களை வெறுப்பேற்றாத ரவுடி.

மதிப்பெண்: 2.5 / 5

14/08/2015

வாலு விமர்சனம்


 நேசமான குடும்பம்; பாசமான நண்பர்கள்; வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் நாயகன் சிம்பு,  நாயகி ஹன்சிகாவைப் பார்த்த உடனேயே காதலில் விழுகிறார். காதலை ஹன்சிகாவிடம் சிம்பு சொல்லும்போது ஏற்கெனவே முறைமாமனுக்கு நிச்சயக்கப்பட்ட பெண் என்பது தெரிய வருகிறது. முறைமாமனோ ரவுடிகளை வைத்துக்கொண்டு  கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூலிப்பது என எதிலும் கரார் காட்டும் அடாவடி பார்டி. இருந்தாலும் பத்து நாட்களுக்குள் நாயகியை காதலில் விழ வைக்கிறேன் என்று சபதம் செய்து சிம்பு செய்யும் ரவுசுகள்தான்  ‘வாலு’ கதை.

 கதை என்னனோ புளித்தப் போன பழைய கதைதான். அதில் கொஞ்சம் ஜனரஞ்சகத்தைப் புகுத்தி கலகலப்பாக வார்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விஜய சந்தர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு நடித்திருக்கும் படம். சிம்பு ஃப்ரெஷாக இருந்தாலும் கொஞ்சம் பூசியது போல காணப்படுகிறார். படம் முழுவதும் தத்துவத்தை காமெடியாக பேசுகிறார் சிம்பு. சண்டைக்காட்சியில் மாஸ் ஹீரோக்களை விஞ்சும் அளவுக்கு பலம் காட்டியிருக்கிறார் சிம்பு. ஒரே அடியில் எல்லாருமே தாறுமாறாகக் காணாமல் போகிறார்.

அழகுபதுமையாக படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் ஹன்சிகா. சிம்புவுக்கு போட்டி போடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்னசின்ன முகபாவனைகளில் கூட ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதி சிம்புவும், சந்தானமும் செய்யும் காமெடிகள் சிரிப்பு வெடிகளாக வருகின்றன. ஆனால், ஏற்கெனவே பல படங்களில் சந்தானம் ஹீரோக்களோடு சேர்ந்து செய்த டைமிங் காமெடி என்பதால் சலிப்பும் வருகிறது.

முறைமாமனாக வரும் ஆதித்யாவுக்கு முரட்டுக் குணம், பிடிவாதம், அடிதடி ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது. ஆனால், படத்தில் அந்த பில்டப்புக்கு ஏற்ற தீனி இல்லவே இல்லை.  ஆதித்யா கல்யாணம் செய்ய வேண்டிய ஹன்சிகாவை, சிம்பு தன் வலையில் விழ வைத்ததும் படம் சூடுபிடிக்கும் என்று பார்த்தால், பொசுக்கென்று சிம்புவிடம் உன்னை எனக்கே பிடிக்கிறது; என் முறைப்பெண்ணுக்கு ஏன் பிடிக்காது என்று சொல்லிவிட்டு காமெடியனாக மாறிவிடுகிறார்.

 நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் நடிகை மந்த்ரா. ஆனால், படத்தோடு சம்பந்தமே இல்லாமல் ஒரு விலைமாதுவை போல பேசிவிட்டு செல்லும் மந்த்ரா அந்தப் பாத்திரத்துக்கு தேவையே இல்லை. விடிவி கணேஷ், சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

தமன் இசையில் ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசை சில நேரங்களில் இரைச்சலை தந்தாலும்  சிம்புவுக்கு மாஸ் காட்ட உதவியிருக்கிறது. ஷக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ப்ரெஷ்ஷாக உள்ளன. முதல் பாதி மட்டும் சற்று மெதுவாக செல்வதுபோல் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது.

மொத்தத்தில் ‘வாலு’ செய்யும் சேட்டைகள் சோடை போகவில்லை.

மதிப்பெண்: 2.5 / 5

07/08/2015

உலகைக் காக்கும் எறும்பு



ஸ்பைடர்மேன் , எக்ஸ்-மேன், அயன் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட்டில் கில்லியாடிய மார்வெல் ஸ்டூடியோ, அடுத்ததாக கையில் எடுத்திருக்கும் படம் ஆண்ட்-மேன். எறும்பு மனிதனாக மாறி அரிதாரம் பூசி தீயவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. ஹாலிவுட் படங்களில் சாகசத்துக்கும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆண்ட்-மேனில் கிராபிக்ஸ் காட்சி அமைப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

உலகை அழிக்க வரும் வில்லன்களை துவம்சம் செய்ய எறும்பு அவதாரம் எடுத்து உலகைக் காக்கிறார் நாயகன் பெளல் ரூட். அவரது நல விரும்பி மைக்கேல் டக்ளஸ் கொடுக்கும் எறும்பு உடையை அணிந்ததும் எறும்பு போலவே மாறி விடுகிறார் ஹூரோ ரூட். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக திரையில் விரிகிறது. நிஜ எறும்பு போலவே மாறி யானை சைஸ் வில்லன்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சாய்க்கிறார் எறும்பு ஹீரோ.  எறும்பு புற்றில் குதித்து ஆயிரக்கணக்கான எறும்புகளுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்து எறும்பு மனிதன் ஓடும் காட்சியில் கிராபிக்ஸ் மிரட்டல் ரகம்.

எறும்பு மனிதனை அழிக்க, அதே சைஸில் இன்னொரு எறும்பை வில்லனாக களமிறக்கி சண்டைப் போட வைத்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். இதுவரை ஹாலிவுட் படங்களில் உலகை அழிக்க வரும் வில்லன்களை அழிக்க விதவிதமான உருவத்தில் வந்து வெற்றிக் கொள்ளும் சூப்பர் ஹீரோ கதைகள் வரிசையில் ஆண்ட் மேன் வித்தியாசமாக உருவாக்கப்பட்டதில் படத்தின் இயக்குநர் பீட்டன் ரீட்டின் உழைப்பு தெரிகிறது.

‘நான் ஈ’  படம் பார்த்த வியந்த தமிழ் ரசிகர்களுக்கு ஆண்ட்-மேன் இன்னொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். குறிப்பாகக் குழந்தைகளை இந்தப் படம் மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


12/06/2015

இனிமே இப்படித்தான் விமர்சனம்


முழு கதாநாயகனாக வல்லுவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்துக்கு அடுத்து  நடிகர் சந்தானம் நடித்திருக்கும் அடுத்த படம் இனிமே இப்படித்தான். காமெடியன் முகமூடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு,  நாயகனாக சந்தானம் தொடர்ந்து அரிதாரம் பூச இந்தப் படம் உதவுமா?

பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணம் வேண்டாம், காதல் திருமணமே நல்லது என்பது நாயகன் சந்தானத்தின் நம்பிக்கை. ஆனால் காதல் அமைய வேண்டுமே? ஏகப்பட்ட ‘பல்புகள்’ வாங்கிய பிறகு மஹா என்னும் பெண்ணை (அஷ்னா சாவேரி) நெருங்கினால் அவளும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறாள். கஜினி முகம்மது தோற்கும் அளவுக்கு முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி காணாத சந்தானம் பெற்றோர் கைகாட்டும் பெண்ணை (அகிலா கிஷோர்) மணக்கச் சம்மதிக்கிறார். அந்த நேரத்தில் பார்த்துத்தானா அஷ்னாவுக்குத் தன் மீது காதல் இருப்பது தெரிய வேண்டும்? காதலிக்கும் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் சந்தானம் அதிலிருந்து மீண்டாரா என்பதே ‘இனிமே இப்படித்தான்’ கதை.

 சந்தானம் படத்தில் என்னென்ன இருக்குமோ அவையெல்லாம் படத்தில் இருக்கிறது. சந்தானத்துக்கு ஏற்ற முழு நீள காமெடி கதைதான்.   சந்தானத்தின் பலமே காமெடிதான். அதற்கு சேதாரம் ஏற்படாமல் அவரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்கள் முருகானந்த் (முருகன் + ஆனந்த்).  நாயகனாக இருந்தாலும் நக்கலையும், நய்யாண்டியையும் கைவிடாமல் கலகலப்பாக்குகிறார் சந்தானம்.  அவருடைய வழக்கமான டைமிங் காமெடி  அவருக்கு பெரிதும் உதவி இருக்கிறது. எல்லாம் சரி, ஆனால் காதல் காட்சிகளிலும் அது தொடரும்போது பொருந்தாமல் போகிறது. கொஞ்சம் டான்ஸ் ஆடியும், வித்தியாசமாக ஹைஹீல்ஸ் செருப்பைப் போட்டுக்கொண்டும் ஃபைட் செய்து முன்னேறியிருக்கிறார் சந்தானம்.

படத்தில் இரண்டு நாயகிகள் என்றாலும், அகிலாவைவிட ஆஸ்னாவுக்கு அதிக முக்கியத்துவம். அகிலா கிஷோருக்குச் சிறிய வேடம்தான். நிறைவாகச் செய்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளரைப் பாராட்டியாக வேண்டும். சந்தானம், அஷ்னாவின் உடைகளின் தேர்வில் நல்ல ரசனை.
காதலுக்காக ஒரு பெண்ணைத் துரத்துவதெல்லாம் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். சந்தானம் தன் ஸ்டைலில் செய்கிறார். சந்தானம் தன் காதலைப் பற்றிப் பெண் வீட்டில் சொல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் வேடிக்கையாக இருக்குமளவுக்கு வலுவாக இல்லை. விடிவி கணேஷ் போன்ற ‘நண்பர்கள்’ குடித்தபடியும் குடிக்காமலும் பேசும் எந்தப் பேச்சும் கவரவில்லை.

மாமாவாக வரும் தம்பி ராமய்யாவின் சொதப்பல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பூட்டுகின்றன. ஆனால், கோவிலில் அவர் திட்டம் பலிக்காமல் போகும் காட்சி எடுபடுகிறது.   சந்தானம் காதலிக்கும் ஆஸ்னாவும், அவருக்கு நிச்சயக்கப்பட்ட அகிலாவும் எந்த வகையில் நண்பர்கள் என்பதை இயக்குநர் சொல்லாதது ஏமாற்றம்.

குட்டு உடைபட்ட பிறகு படம் சூடு பிடிக்கிறது. ஆனால் நாயகன் சந்தானம் என்பதாலோ என்னமோ இயக்குநர் முருகானந்த் இதிலும் வேடிக்கையைப் புகுத்துகிறார். கிளைமாக்ஸ் திருப்பமும் சந்தானத்தின் இமேஜை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. நாயகனாகிவிட்ட பிறகும் ஏன் இப்படி என்பதுதான் புரியவில்லை.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் கேட்கும்போது கேட்ட பாடல்கள் போலவே இருக்கின்றன. பிறகு யோசித்துப் பார்த்தால் மெட்டுக்கள் நினைவுக்கு வர மறுக்கின்றன. ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன் காட்சிகளில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறார். நாயகிகளை அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.

 காதலுக்கும் வீட்டில் செய்யும்ம் திருமண ஏற்பாட்டுக்கும் இடையேயான முரண்பாட்டை வேடிக்கையான சம்பவங்கள் மூலம் சொல்லும் முயற்சியில் இயக்குநர் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

மதிப்பெண்: 2 / 5

03/04/2015

நண்பேண்டா விமர்சனம்


 ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் இயக்குநர் ராஜேஸுடம் உதவி இயக்குநராக இருந்த ஜெகதீஸ்,  தன்னுடைய குரு இயக்கிய படத்தை டிங்கரிங் பார்த்து, கொஞ்சம் பாலீஸ் செய்து கொடுத்திருக்கும் முதல் படம்தான் நண்பேண்டா.  தொடரும்  ‘நண்பேண்டா’க்களின்   கூட்டணி இந்தப் படத்தில் ஜெயித்ததா, இல்லையா?

வேலைவெட்டி எதுவும் இல்லாமல் தஞ்சாவூரில் ஊர் சுற்றுகிறார் உதயநிதி. திருச்சியில் இரண்டரை ஸ்டார் ஓட்டலில் வேலைப் பார்க்கும் தனது நண்பன் சந்தானத்தைப் பார்க்க அவர் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவைப் பார்த்தவுடனேயே பற்றிக் கொள்கிறது காதல். சிறுவயதில் உதயநிதி, சந்தானத்துடன் சண்டை போட்டு பிரிந்த கருணாகரன், போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக திருச்சிக்கு வந்து இருவரையும் பழிவாங்கத் துடிக்கிறார். உதயநிதி- நயன்தாரா  நட்பில் ஒரு பிரச்சினை. நயன்தாரா உதயநிதியிடம் தன் காதலைச் சொல்வதற்கு முன்பு, கடந்த காலப் பிரச்சினை ஒன்றைச் சொல்லி மனம் வருந்துகிறார். உதயநிதி அதைக் காமெடி ஆக்கிவிட, காதலைச் சொல்வதற்கு முன்பே பிரிவு.

இடையில் வங்கிக் கடன் பிரச்சினையில், தாதாவாக இருக்கும்  நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், வங்கியில் பணியாற்றும் நயன்தாராவுக்கும்  விரோதம் ஏற்படுகிறது. அவர் நயன்தாராவைக் கொல்ல திட்டம் போடுகிறார். இடையில்  நான் கடவுள் ராஜேந்திரன் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கேஸில் நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். பிரிந்தவர்கள் கூடினார்களா? பழிவாங்கத் துடிக்கும் போலீஸ், வலுவான சாட்சியங்கள் ஆகியவை இருந்தும் நண்பர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள்? இதுதான் மீதிக் கதை.

 படம் முழுவதையும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோரே ஆக்கிரமித்திருக்கிறார்கள்.   இவர்களைச் சுற்றியே கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். நயன்தாராவைப் பார்த்தது முதலே அவரைக் கவருவதற்காக உதயநிதி மெனக்கெடுகிறார்.  அவையெல்லாம் நயன்தாராவை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் கவர தவறுகின்றன.  நயன்தாராவின் நடிப்பிலும் தோற்றத்திலும் மெருகு ஏறியிருக்கிறது. உதயநிதியின் நடிப்பைவிட நடனத்தில் முன்னேற்றம் அதிகம்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு  நயன்தாரா வந்ததற்கு பெரிய பின்னணி இருப்பது போலக் காட்டுவது, சரக்கு வாங்கித்தரும்படி உதயநிதியிடம் நயன்தாரா கேட்பது, வில்லனை ஸ்கார்பியோ அடைமொழியுடன்  கூப்பிடுவது என சிலப் பின்னணி இருப்பது போலக் காட்டுகிறார் இயக்குநர்.. ஆனால், கடைசியில் அவற்றைக்  காமெடியாகக் காட்டி சிரிக்க வைக்க இயக்குநர் ஜெகதீஸ் முயற்சி செய்ததில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார்.

படத்தில் பல திருப்பங்கள். எல்லாமே ஒன்றாகத் தோற்றம் காட்டி வேறொன்றாகக் காட்டி  கண்ணாமூச்சி காட்டுகிறார்  இயக்குநர். இதைபடம் முழுவதும் காட்டியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். அதேசமயம் அவை எல்லாமே பிள்ளையார் பிடிக்க போய் குரங்கைப் பிடித்த கதையாகவே இருக்கின்றன. குறிப்பாகக் கொலைக்கேஸ் விவகாரத்தை ட்விஸ்ட் வைப்பதாக நினைத்துக் கொண்டு, காதில் பூ சுற்றி ஏமாற்றுகிறார்  இயக்குநர்.
இப்போதெல்லாம் எங்கு குற்றம் நடந்தாலும், போலீஸார் முதலில் தேடுவது அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களைத்தான். மொட்டை ராஜேந்திரன் கொலை செய்யப்படும் பூங்காவில் சிசிடிவி இருப்பதை போலீசுக்கே நயன்தாராதான் சொல்கிறார். அதன் பிறகு கொலையாளி யார் என்பதை போலீஸார் கண்டுபிடிப்பதை நிஜ போலீஸ் பார்த்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள்.

 நாயகன் உதயநிதிக்கு இணையான வேடம் சந்தானத்துக்கு. சந்தானத்தின் முத்திரை பஞ்ச் இதில் இல்லை.  உதயநிதியும் சந்தானத்தை இதில் கலாய்க்கிறார். விலைமாதுவை கண்டுபிடிக்க சந்தானம் செய்யும் பரிசோதனையில் தொடங்கி எதுவுமே காமெடியுடன் ஒட்டவில்லை. சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதை சந்தானம் தவிர்ப்பது தெரிகிறது. ஆனால், வழக்கமான ஒருவரி காமெடி பாணியை விட்டு சந்தானம் வெளியே வர வேண்டும்.

 பெயருக்கு வில்லன்களாக நான் கடவுள் ராஜேந்திரனும், நரசிம்மனும் வந்து செல்கிறார்கள். படத்தில் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து நடிகை ஷெரீன் திரையில் முகம் காட்டியிருக்கிறார். ஹாரிஸின் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன. ஆனால் ட்யூன்கள்  பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பின்னணி இசையும் ஒகேதான். பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதில் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன.

படத்தின் உயிர்நாடியே நகைச்சுவை என்பதை முடிவு செய்துவிட்ட இயக்குனர் ஜெகதீஷ், அதற்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்  ‘நண்பேண்டா’ ரசிகர்களுடன் ஒட்டியிருப்பார்கள்.

மதிப்பெண்: 2 / 5

18/02/2015

ஒரு மனிதன், ஒரு தேசம், ஒரு கனவு!



முதன் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடப் போகிறார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள். ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற கென்யா போன்ற அணிகள் கூட இப்போது நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதிப் பெற முடியவில்லை. ஆனால், தாலிபன்களுக்கும் அமெரிக்காவும் இடையே சிக்கி  கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று உலகக் கோப்பைக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றிருக்கிறது.  இது எப்படி சாத்தியமானது?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றி பேசினால் தாஜ் மாலிக் ஆலம் என்ற மனிதரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 1987-ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர் இந்த தாஜ் மாலிக் ஆலம். அகதிகள் முகாமில்  கிரிக்கெட்டை கற்றுக் கொண்ட அவர், விளையாட்டுக்களுக்குக்கூட தடை விதித்திருந்த தாலிபன்கள் ஆட்சியின்போதே ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை  நிர்மானிக்க முயற்சிகளை முன்னெடுத்தவர். ஆப்கான் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.

தாலிபன்கள் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமின்றி, அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வீரர், அணி நிர்வாகி, அணித் தேர்வாளர் என ஆப்கன் கிரிக்கெட்டில் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவருடைய கடும் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஆப்கன் அணி, இன்று  உலகக் கோப்பையில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

ஏற்கெனவே இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிதான் அணி விளையாடி இருந்தாலும், தாஜ் மாலிக்கின் பெருங்கனவு ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆப்கன் அணி விளையாட வேண்டும் என்பதுதான். அந்தக் கனவும் பிப்ரவரி 18-ம் தேதி நனவாகப் போகிறது. அன்றுதான் வங்கதேசத்துக்கு எதிராக உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

கலைகளுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆன்மாக்களை இணைக்கும் சங்கிலிகள் அவற்றுக்கு உண்டு என்பதுதான் அது. யுத்த பூமியான ஆப்கனின் வரலாற்றில் கிரிக்கெட் நல்ல மாறுதலைக் கொண்டுவரட்டும்!

தி இந்து, 18/02/2015

14/02/2015

அதிகாரம் இல்லாத அரசுகள்!


டெல்லியில்  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு  அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று  கோரிக்கையையும் வைத்தார். டெல்லியில் மட்டுமல்ல,  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்கூட அந்தக் கோரிக்கை அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. யூனியன் பிரதேசங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன? ஏன் தனி மாநில அந்தஸ்து இங்கே எழுப்பப்படுகிறது?
யூனியன் பிரதேசங்களின் கதை
முதலில் இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் எப்படி வந்தன என்பதைத் தெரிந்து கொண்டால்தான் இதற்கான முழு விடையும் கிடைக்கும். ஆங்கிலேயர்களிடம் இருந்து  நாடு சுதந்திரம் அடைந்தபோது 563 சமஸ்தானங்கள் இங்கே இருந்தன. இந்தச் சமஸ்தானங்களை  இந்தியா என்ற ஒரே நாடாக இணைக்கப்பட்டன. ஆனால், இந்தியாவுக்குள் இருந்தாலும் சிலப் பகுதிகள் வெவ்வேறு  நாடுகளின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. புதுச்சேரி, மாஹி, ஏனம், காரைக்கால் ஆகிய பகுதிகள்  பிரெஞ்சு காலணியிலும், கோவா, டையூ, டாமன், தாத்ரா- நாகர்ஹவேலி ஆகிய பகுதிகள் போர்ச்சுகீசியர் காலணி ஆதிக்கத்திலும் இருந்தன.
 ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது அந்தமான் நிக்கோபார் தீவுகள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது  ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆங்கிலோ பர்மியர்கள் அந்தமானை தனி நாடாக அமைத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கினார்கள். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் அந்தமான் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இதேபோல லட்சத்தீவுகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தபோது  சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட மலபார் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படி ஏதோ ஒரு வகையில் வெவ்வேறு ஆளுகைகளின் கீழும், நிர்வாக ரீதியாக சிக்கல்களும் உள்ள பகுதிகள்தான் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களாக (ஒன்றியப் பகுதி) அறிவிக்கப்பட்டன.
 இவைத்தவிர திட்டமிட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. பஞ்சாப்பில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டபோது இரு மாநிலங்களும் சண்டிகரை கேட்டன. எனவே இரு மாநிலங்களுக்கும் பொதுவானப் பகுதியாக 1966-ல் யூனியன் பிரதேசமாக சண்டிகர் அறிவிக்கப்பட்டது. (அண்மையில்கூட ஆந்திராவையும் தெலங்கானாவையும் பிரித்தபோது ஐதராபாத்தை இரண்டு மாநிலங்களும் கோரின. அப்போது இரு மாநிலங்களுக்கும் பொதுவான யூனியன் பிரதேசமாக ஐதராபாத்தை அறிவிக்கலாம் என்ற யோசனை வைக்கப்பட்டது போல). டெல்லி என்பது  நாட்டின் தலைநகரப் பகுதியாக இருந்ததால் யூனியன் பிரதேசமாக இருந்தது. இப்படி யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கிறது. இவற்றில்  கோவா 1987-ம் ஆண்டில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. கோவாவுடன் இணைந்திருந்த டையூ, டாமன் இப்போது யூனியன் பிரதேசமாகவே தொடர்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, தேசிய தலை நகரப் பகுதியாக அறிவிக்கட்டு, வரையறுக்கப்பட்ட அதிகாரத்துடன்கூடிய சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டது.
ஆட்சித் தலைவர்கள்
இந்த யூனியன் பிரதேசங்கள் எல்லாம் குடியரசுத் தலைவரின் (மத்திய அரசு)  நேரடிக் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். இங்கெல்லாம் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் எனப் பதவிகள் உண்டு. குடியரசு தலைவர் மூலம் நியமிக்கப்படும் இவர்கள்தான் இந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைவர்கள். இதில் டாமன், டையூ, அந்தமான், லட்சத்தீவுகள், நாகர்-ஹவேலி, சண்டிகர் ஆகியப் பகுதிகளை   நிர்வாக அதிகாரிகள் நிர்வகித்து வருகிறார்கள்.  புதுச்சேரி, டெல்லியில் துணை நிலை ஆளுநர்கள் இருக்கிறார்கள். இந்த இரு பகுதிகளிலும் மட்டும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுகள் அமைப்படுகின்றன. அதற்கான சிறப்பு அதிகாரம் இந்த இரு பகுதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைக்கப்படுவடுவதால், மற்ற மாநிலங்களில் உள்ள அதிகாரங்களை புதுச்சேரியிலும் டெல்லியிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
அதிகாரங்கள் என்ன?
சரி, யூனியன் பிரதேசங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன?  மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி இந்திய அரசியலமைச் சட்டத்தில் பட்டியலிடப்படுள்ளன. இதில் மத்திய அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள், மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகள் என்பதால் பெரிய அளவில் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஒரு மாநிலத்துக்கு உள்ள அதிகாரங்களில் பாதி அளவுக்குக்குகூட அதிகாரங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இல்லை. முதலில் எந்தத் திட்டத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தால் செய்துவிட முடியாது. எல்லாத் திட்டத்துக்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
கடிவாளம் மத்திய அரசிடம்...
 மாநிலங்களில் அரசு அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றை சுலமபாக அந்த மாநில அரசே மேற்கொள்வதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? யூனியன் பிரதேசத்திலோ அது முடியாது. எந்த அரசு அதிகாரிக்கும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும். டெல்லி தலைநகரப் பகுதியாக இருப்பதால் காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் செயல்படும். புதுச்சேரியில்  காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உயரதிகாரிகள் பணியிட மாற்றம், நியமனம் ஆகியவற்றை மத்திய அரசே மேற்கொள்ள முடியும். இப்படி காவல்துறைகூட யூனியன் பிரதேச அரசின் கைகளில் இல்லை. இப்படி எதற்கும் அதிகாரம் இல்லாததால் எல்லாவற்றுக்கும்  மத்திய அரசையே யூனியன் பிரதேசங்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிறப்பு சட்டங்கள் மூலம் சட்டசபை, முதல்வர், அமைச்சர்கள் என சில யூனியன் பிரதேசங்களில் இருந்தாலும், எல்லா அதிகாரங்களும், உரிமைகளும் மத்திய அரசிடமே இருப்பதால்தான் டெல்லியிலும், புதுச்சேரியிலும்  மா நில அந்தஸ்து கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
உரிமைகள் என்ன?

 யூனியன் பிரதேசங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
* சட்டம், நீதித் துறைச் சார்ந்த நியமங்களை யூனியன் பிரதேச அரசால் செய்ய முடியாது.
*  யூனியன் பிரதேசங்களுக்கு என பள்ளி பாடத்திட்டம் எதுவும் கிடையாது. (உதாரணமாக புதுச்சேரியில் தமிழக பாடத் திட்டங்களைத்தான் பின்பற்றுகிறார்கள்.)
* வேலைவாய்ப்புத் திட்டங்கள் எதுவும் கிடையாது. நியமங்கள் அனைத்தும் யு.பி.எஸ்.சி. மூலம் நடைபெறுவதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது அரிது.
* யூனியன் பிரதேசங்களில் ஈட்டப்படும் வருவாய் மத்திய அரசுக்கே செல்லும். யூனியன் பிரதேசம் அவற்றை கையாள முடியாது.
*  திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை, நிதித் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
* நிதிக் குழுவில் யூனியன் பிரதேசங்களுக்கு நிரந்தர இடம் கிடையாது.
* மாநிலங்களில் இருப்பது போல உயர் நீதிமன்றம் கிடையாது. அருகில் உள்ள உயர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டதாக யூனியன் பிரதேசம் இருக்கும்.
பொறுப்புகள் யார் வசம்?
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள், செயல்பாடுகள் பற்றி அரசியல் சட்டத்தில் ஏழாவது பட்டியலில் குறிப்பிடப்படுள்ளது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பட்டியல்: இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்திய அரசின் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு. பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமானம், கப்பல், ரயில் போக்குவரத்துகள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு உள்ளிட்டவை முக்கியமானவை.
மாநில அரசின் பட்டியல் : இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் 66 துறைகள் இருந்தன. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. வேளாண்மை வருமான வரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணம், கேளிக்கை வரி  உள்ளிட்டவை இதில் முக்கியமானவை.
பொதுப்பட்டியல்: இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றியது. பொதுப் பட்டியலில் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது 49 துறைகள் உள்ளன. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு இவற்றில் முக்கியமானவை. 
- தி இந்து, 14/2/2015

07/02/2015

2007 - இந்தியாவை வெளியேற்றிய பங்களாதேஷ்!

2007ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு வெஸ்ட்இண்டீஸ் தீவுகளுக்கு வழங்கப்பட்டது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதன்முறையாக ‘சூப்பர் 8’ சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்படி விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணி களோடு பெர்முடா, கனடா, கென்யா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளும் களமிறங்கின. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பெர்முடா அணிகளும், ‘சி’ பிரிவில் நியூசிலாந்து, இங் கிலாந்து, கென்யா, கனடா அணிகளும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றன.

லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இந்திய அணி, கத்துக்குட்டி அணியான பங்களாதேஷ் அணியிடமும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடமும் பரிதாபமாக தோற்றன.

இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறின. மற்ற பிரிவுகளில் எதிர்பார்த்த அணிகளே தகுதி பெற்றன. சூப்பர் 8 சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் இலங்கை & நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக் காவும் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரே லியா இறுதிக்கு முன்னேறியது.

பார்படாஸில் ஏப்ரல் 28ல் நடந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 282 ரன் என்ற வெற்றி இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது. இடையில் சிறிது நேரம் மழை பெய்ய டக்வொர்த்&லூயிஸ் விதிப்பபடி 36 ஓவரில் 269 என இலங்கைக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியோ 215 ரன் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

2007 ரீவைண்ட்

லீக் சுற்றில் அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் ‘டை‘யில் முடிந்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடப்பது மூன்றாவது முறை.

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், டான் வேன் புங்கே வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். ஒருநாள் ஆட்டத்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார் கிப்ஸ்.

லீக் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தது பாகிஸ்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் போட்டி முடிந்த அடுத்த நாளே, அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இலங்கை வீரர் மலிங்கா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனைப் படைத்தார்.


- முத்தாரம், 2011

03/02/2015

2003 - பாய்ச்சல் ஆஸ்திரேலியா பரிதாப இந்தியா

2003-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகளோடு நெதர்லாந்து, நமீபியா, கனடா அணிகளும் இத்தொடரில் களமிறங்கின. அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’க்கு தகுதி பெற்றன. பிப்ரவரி 9 முதல் மார்ச் 24 வரை நடந்த இத்தொடரில், இந்திய அணி இறுதியாட்டத்திற்கு தகுதிப் பெற்றது மறக்க முடியாத ஹைலைட்!

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங் கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நமீபியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், கனடா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ‘பி’ பிரிவில் போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் சிக்ஸ்க்குக்கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறின.

ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடிய சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சுலபமாக அரையிறுதிக்கு தகுதிப்
பெற்றன. 3 மற்றும் 4-வது இடங்களை முறையே இலங்கையும், கத்துக்குட்டி அணியான கென்யாவும் தட்டுதடுமாறி பிடித்தன.

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மல்லுக்கட்டின. 212 ரன் என ஆஸ்திரேலியா நிர்ணயித்த எளிய இலக்கை விரட்டிய இலங்கை, 123 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகிட, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்னொரு அரையிறுதியில் இந்தியாவும் கென்யாவும் மோதின. இந்தியா நிர்ணயித்த 270 ரன் என்ற இலக்கை விரட்டிய கென்யா, 179 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 1983-க்கு பிறகு இரண்டாவது முறையாக சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்று அசத்தியது.

மார்ச் 24 அன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த இறுதியாட் டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, அதிரடியாக விளையாடி 359 ரன்களைக் குவித்தது. இலக்கை விரட்டிய இந்திய அணி, பதிலடி கொடுக்க முடியாமல் 234 ரன்னுக்கெல்லாம் ஆல்அவுட் ஆகி 2வது முறையாக கோப்பை வெல்லும் என்ற கனவை கலைத்தது. 1987, 1999-க்கு பிறகு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது ஆஸ்திரேலியா.

2003  ரீவைண்ட்

அரசியல் பிரச்னை காரணமாக இங்கிலாந்து அணி, ஜிம்பாப்வே சென்று விளையாட மறுத்தது. இதனால், ஜிம்பாப்வே அணி விளையாடமலேயே புள்ளிகள் பெற்றது. இதற்கான பலனை இங்கிலாந்து நன்றாகவே அனுபவித்தது. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஜிம்பாப்வே தகுதிப் பெற, இங்கிலாந்து மூட்டை கட்டியது.

இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் குவித்து புதிய சாதனைப் படைத்தார். தொடர் நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.

தென்ஆப்பிரிக்கா - இலங்கை லீக் சுற்று போட்டியில் 269 என்ற இலக்கை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணிக்கு சோதனையாக மழை வந்து வெற்றியைப் பறித்தது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 45 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என இலக்க மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக
தென்ஆப்பிரிக்கா 229 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்த போட்டி ‘டை’யில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இத்தொடரில் சவுரவ் கங்குலி 3 சதங்கள் விளாசி சாதனைப் படைத்தார்.

- முத்தாரம், 2011 பிப்ரவரி

30/01/2015

1992- வண்ணமயமான உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்ற தொடர் என்றால்,  1992-ம் ஆண்டில்  நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடர் ரசிகர்களுக்கு புதிய விருந்து படைத்தது என்றுகூடச் சொல்லலாம். வெள்ளை உடையில் ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்கள் கலர்ஃபுல் உடைகளுக்கு மாறினார்கள். அழகான மைதானங்கள், வெள்ளைப் பந்து, பகல்-இரவு ஆட்டங்கள்,  கறுப்பு ஸ்கிரீன்கள், ரீப்ளே ஸ்கிரீன்கள், ஸ்டெம்ப் விஷன், புதிய கிரிக்கெட் விதிமுறை எனப் புதிய பரிணாமம் பெற்றிருந்தது இந்தத் தொடர்.

ஒன்பது அணிகள்

 1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாக தென் ஆப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறி கொள்கைக் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.  இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. புதிதாக தென் ஆப்பிரிக்கா அணி வந்ததால், 9 அணிகளை இரண்டாக பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியுடனும் மோதுவது போல அட்டவணையை மாற்றியமைத்தார்கள். ( 1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).

சச்சின் அறிமுகம்

இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சியளித்தது. இதற்கு முந்தைய 1987-ம் ஆண்டு
உலககோப்பையில் விளையாடிய வீரர்களில் கபில்தேவ், அசாருதீன், ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, ரவிசாஸ்திரி ஆகியோர் மட்டுமே 1992 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உலகக் கோப்பை தொடர்தான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதல் தொடர்.

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையையும், 1987-ம் ஆண்டு அரையிறுதி வரையும் அணியை வழிநடத்தி அழைத்துச் சென்ற கபில்தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். இந்தத் தொடரில் இடம் பெற்ற  ஸ்ரீகாந்த்,  தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் இரண்டு ஆண்டுகள் கழித்து  அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


அறிமுகங்கள்

சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளியாக உருவான இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.


இப்போது  ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா? அதுபோலவே 1992-லும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அங்குள்ள சூழ்நிலையை நன்றாக பழகியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை.

அதிர்ச்சி தொடக்கம்

இந்த உலகக்கோப்பையில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை.  அது உண்மை என்பது பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்று கோப்பையைக் கைப்பற்றியபோது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது.  ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அணித் தலைவர் மார்டின் குரோவ் 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.

புதுமை உத்தி

முதல் முறையாக இந்தத் தொடரில் நியூசிலாந்து கேப்டன்  மார்டின் குரோவ் தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வீச செய்தார்.  நியூசிலாந்தின் தீபக் பட்டேல் முதல் ஓவரை வீசி எதிரணிகளை ரன் எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தினார்.  இது அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய   நியூசிலாந்தின்


ஒரு வீரர்; இரு அணி

மார்க் கிரேட்பாட்ச்  முதலில் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடக்க வீரரான ஜான் ரைட்டுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக மார்க் கிரேட்பாட்ச் அணியில் இடம்
பெற்றார். தொடக்க வீரராக  களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி ருத்ரதாண்டவமாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இதன்பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்.




 தி இந்து, 30/01/2015

 


14/01/2015

ஐ விமர்சனம்


வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார்.

சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறார். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ.

லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி கதை.

வழக்கமாக சமூகம் சார்ந்த ஒரு மெசேஜோடு கதைச் சொல்லும் இயக்குநர் ஷங்கர் இந்த முறை பழிவாங்கும் கதையை கையில் எடுத்திருக்கிறார். அதையும்கூட வழக்கமான பாணியில் இல்லாமல் பேண்டசியாகவும் வித்தியாசமாகவும் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர்
ஷங்கர். அவருக்கு சற்றும் குறைவில்லாமல், உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில்  நிச்சயம் பேசப்படும்.

 ஜிம்மில் பாடி பில்டர்களை தொங்கவிட்டு அடிப்பது, சீனாவில் சைக்கிளில் பறந்து பறந்து போடும் சண்டை, ரயிலில் சீறிப் பாய்ந்து போடும் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார் விக்ரம். பாடி பில்டராக, மாடலிங் மேனாக, அகோரமான கூனனாக நடித்து எல்லாரையும் மெர்சல் ஆக்கி மலைக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கூனன் பாத்திரம் பேசப்படும்.   சீரியஸான காட்சிகளுக்கு இடையேயும் சிரிக்க வைக்கிறார் சந்தானம்.

இருந்தாலும் உருவத்தை வைத்து கிண்டல் செய்வதை இன்னும் எத்தனை காலத்துக்கு சந்தானம் செய்யப்போகிறாரோ தெரியவில்லை.  எமி ஜாக்ஸன் அழகிலும் நடிப்பிலும் இன்னும் மெருகேறியிருக்கிறார். முதல் பாதியில் அரைகுறை ஆடையுடனும், இரண்டாம் பாதியில் குத்துவிளக்காகவும் மாறி விடுகிறார்.  ஒரு பிரபல பிசினஸ்மேனை நினைவுப்படுத்தும் பாத்திரத்தில்  நடிகர் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில இடங்களில் சிவாஜியை ஞாபகபடுத்துகின்றன.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் காட்சிக்குக் காட்சி தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். ஷங்கர் படங்களில் வசனங்கள் மிகக்கூர்மையாக இருக்கும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். எளிமையான கதைக்கு சரியான விகிதத்தில் திரைக்கதை என்ற முலாமை ஷங்கர் பூசியிருந்தாலும் படம் தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் கதையையும், கதாபாத்திரங்களையும் ஊகிக்க முடிவது மைனஸ்.  முதல் பாதி மிகவும் மெதுவாக நகருகிறது. சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் பத்து  நிமிடங்கள் வரை நீள்வது போரடிக்க வைக்கிறது.

 சக மாடலிங் பாலியல் தொந்தரவு தருகிறார் என்பதற்காக, வேறு ஒருவருடன் இணைந்து நாயகி  சேர்ந்து மாடலிங் செய்கிறார். அதற்கு மாடலிங் உலகில் வேறு ஆண்களே கிடையாதா? தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத பாடி பில்டரை நாயகி மாடலிங் ஆக்குவது யதார்த்தமாக இல்லை.  சர்வதேச அளவில் தொழில் செய்யும் ஒரு பிசினஸ் மேன் (ராம்குமார்) ஒரு சாதரண மாடலிங்கை காலி செய்வதற்காக லோக்கல் அளவுக்கு இறங்கி திட்டம் தீட்டுவது நம்பும்படியாக இல்லை.

மதிப்பெண்: 2.5 / 5

04/01/2015

1992- சொதப்பிய இந்தியா

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் திருப்புமுனை ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா பிரிஸ்பேனில் விளையாடிய போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. கடைசி பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை எடுத்தது. பின்னர் இந்திய அணி 238 ரன் என்ற இலக்கைத் துரத்தியபோது 17வது ஓவரில் சிறிது நேரம் மழை பெய்தது. எனவே ஓவர் 47 ஓவராக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்த தருணம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. 1987-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையிலும் சென்னையில் நடந்த போட்டியில் இதே ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒரு ரன்னில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு இந்த உலகக் கோப்பையில் முதல் மூன்று போட்டிகளும் துரதிர்ஷ்டமாகவே அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 9 ரன்னில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வியைத் தொடர்ந்து மூன்றாவதாக இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் எஞ்சியப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

 மிகவும் சிக்கலான சூழ்நிலையில்தான் பாகிஸ்தானை மார்ச் 4 அன்று சிட்னியில் இந்திய அணி சந்தித்தது. இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் சந்தித்துக் கொள்ளும் முதல் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடிச் சேர்த்த 54 ரன்கள், ஜடேஜாவின் 46 ரன்கள், கபில்தேவின் 35 ரன்கள் இந்தியா 216 ரன்களை எடுக்க உதவியது.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் அமீர் சோகைல் மட்டுமே சிறப்பாக விளையாடி 62 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்களில் ஜாவித் மியாண்தத் தவிர மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றே சொல்லலாம். இந்தப் போட்டியில் இந்தியாவின் பவுலிங், பீல்டிங் மிகவும் துடிப்பாக இருந்தது.  இதனால் ரன் சேகரிக்கத் திணறிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.  இந்தப் போட்டியைத் தவிர இந்திய அணி ஹாமில்டனில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி வெற்றது. இந்தப் போட்டியில் மழை தொடர்ந்து குறுக்கிட்ட போதும் டக்வோர்த்-லீவிஸ் விதிபடி வெற்றி வெற்றது. மற்ற போட்டிகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு மழை பெரும்  இடைஞ்சலாக இருந்தது. இதுபோலவே இந்தியாவுக்கு  தொடக்க ஆட்டக்காரர்களும் பெரும் பிரச்சினையாக தொடர் முழுவதும் நீடித்து கொண்டே இருந்தது. போட்டிக்கு போட்டி தொடக்க ஆட்டக்காரர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இலங்கை, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிகளில்  ஸ்ரீகாந்தும் கபில்தேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் மஞ்ச்ரேக்கரும்  தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக ஸ்ரீகாந்தும் ஜடேஜாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் ரவிசாஸ்திரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இப்படி தொடக்க ஜோடி மாறிக் கொண்டே இருந்தது.

இந்தத் தொடரில் மொத்தம் இரு வெற்றிகளை மட்டுமே பெற்ற  இந்தியா புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 8 மற்றும் 9வது இடங்களை முறையே அப்போதைய கத்துக்குட்டி அணிகளான இலங்கையும் ஜிம்பாப்வேவும் பிடித்தன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 4
வெற்றிகளுடன் மூட்டையைக் கட்டியது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் விஸ்வரூபம் காட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.  இந்தத் தொடரில்  நியூசிலாந்தின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் விளையாடி ஆச்சர்யப்பட வைத்தது. கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மட்டுமே அது தோல்வியடைந்தது.

அதிகம் எதிர்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளுடன் முதல் உலகக் கோப்பையிலேயே அரையிறுதியில் காலடி எடுத்து வைத்து முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த அணிகள் தவிர  இங்கிலாந்தும் அரையிறுதிக்குச் சென்றது.

புலி பாய்ச்சல்

லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனில் விளையாடின. மேக்மிலன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயற்சி செய்வார். பந்து பேடில் பட்டு அருகேயே விழும். அதற்குள் ஒரு ரன் எடுக்க இன்சமாம் பிட்சில் கால்வாசி தூரத்தைக் கடந்து வருவார். எதிர்முனையில் இம்ரான்கான் ரன் வேண்டாம் என்று கூற, திரும்பவும் கிரிஸ்க்குள் வர இன்சமாம் முயற்சிப்பார். ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜாண்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை கையில் எடுப்பார். ஸ்டெம்ப்புக்கு சில அடி தூரம் வந்ததும் அப்படியே வேங்கைப் புலி மாதிரி பாய்ந்து அப்படியே ஸ்டெம்புகளை தகர்த்து இன்சமாமை ரன் அவுட் செய்தார். உலகக் கோப்பையில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது என புகழப்படுகிறது.

 ‘குரங்கு’ தவ்வல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடினார் ஜாவித்
மியாண்தத். 110 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் பந்து பேடில் படும்போதேல்லாம் விக்கெட் காப்பாளராக இருந்த கிரண் மோரே குதித்து குதித்து அம்பயரிடம் அடிக்கடி அவுட் கேட்டுக் கொண்டே இருந்தார்.  இதற்காக ஒரு கட்டத்தில் கிரண் மோரேயிடம் வாக்குவாதமும் செய்தார் மியாண்தத். அதன் தொடர்ச்சியாக  பேட்டை கையில் தூக்கிக் கொண்டு   ‘குரங்கு’ தாவுவது போல குதித்து கிரண் மோரேவைக் கிண்டல் செய்தார் அவர். இந்தச் சம்வபம் இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

- தி இந்து, 2015, ஜனவரி

03/01/2015

1992 - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மழை!

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் சுலபமாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு கடைசி போட்டி வரை சிக்கல் நீடித்துக் கொண்டிருந்தது.   பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் கிறைட்சர்ச்சில் மோதியது. இந்தப் போட்டியில் லீக் சுற்றில் எந்த அணியுடனும் தோற்காத நியூசிலாந்து தோல்வியைச் சந்தித்தது. பாகிஸ்தான் கடைசி சுற்றில் வெற்றி பெற்றும் உடனே அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் புள்ளி 9 ஆக மட்டுமே இருந்தது.

இந்தப் போட்டி நடைபெற்ற அதே நாளில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதின. வெஸ்ட்இண்டீஸ் அணி 8 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டம் வெஸ்ட்இண்டீஸ் அணி பக்கமே இருந்தது. அதிர்ஷ்டம் பாகிஸ்தான் அணிக்கு அடித்தது. போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியைத் தழுவியது. எனவே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முதல் அரையிறுதி

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் தொடங்கின. முதல் அரையிறுதியில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் ஆக்லாந்தில் மார்ச் 21 அன்று மோதின. முதலில்  நியூசிலாந்து பேட்டிங் செய்தது.    மத்திய வரிசையில் மார்டின் குரோவ் எடுத்த 91 ரன்கள், ரூதர்போர்ட் எடுத்த 50 ரன்கள் நியூசிலாந்து 262 ரன்கள் எடுக்க உதவியது. பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 140 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் நெருக்கடியைச்  சந்தித்தது. நியுசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போதுதான் இன்சமாம் உல்-ஹக் களத்தில்

இறங்கினார்.
சந்தித்த முதல் பந்தில் இருந்தே வெளுத்து வாங்கத் தொடங்கினார் இன்சமாம். எந்த பந்தையும் மிச்சம் வைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசினார். எதிர்முனையில் அனுபவ வீரர் ஜாவித் மியாண்தத் அவரை சிறப்பாக வழி நடத்தி ரன் குவிக்க உதவினார். இன்றைய இருபது ஓவர் ஆட்டத்தை அன்றே இன்சமாம் விளையாடினார். 37 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 60 ரன்களை குவித்து பாகிஸ்தானை வெற்றிப் பக்கம் அழைத்து வந்தார். இந்தப் போட்டியில் இன்சமாமின் அதிரடிதான் பாகிஸ்தானை இறுதிபோட்டிக்கு அழைத்துச் சென்றது. தொடரில் சிறப்பாக விளையாடிய  நியூசிலாந்து பரிதாபமாக  வெளியேறியது.

இரண்டாவது அரையிறுதி

பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப் போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாது அரையிறுதிப் போட்டி மார்ச் 22 அன்று சிட்னியில் நடைபெற்றது. அதிகம் எதிர்ப்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்காவும் பலமிக்க இங்கிலாந்தும் மோதின. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கெப்ளர் வெசல்ஸ் இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய சொன்னார்.
மழை காரணமாக ஓவர்கள் 45 ஆக குறைக்கப்பட்டன. கிரஹாம் ஹிக் சேர்த்த 82 ரன் உதவியுடன் அந்த அணி 252 ரன்களை எடுத்தது. இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் வீழ்ச்சியும் சராசரி ரன் விகிதமும் சரி சமமாக ஏறிக் கொண்டே இருந்தது.

போட்டி பரபரப்பு கட்டத்துக்கு வந்து கொண்டிருந்தது. 13 பந்துகள் மீதமிருக்கையில் தென் ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரையன் மேக்மிலனும், டேவ் ரிச்சர்ட்சனும் களத்தில் இருந்தார்கள். இருவருமே பேட்ஸ்மேன்கள். எனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வருணபகவான் மழையை பொழிய 12  நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது எல்லோருக்குமே பேரதிர்ச்சி. புதிய விதிப்படி 1 பந்தில் 21 ரன் என்ற இலக்கு பெரிய ஸ்கிரீனில் பளிச்சிட்டது. அவ்ளோதான் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மழை விதி கடும் விவாதத்தைக் கிளப்பியது. மழை புண்ணியத்தால் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி

 
மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருக்க இறுதிப்போட்டி இங்கிலாந்தும் பாகிஸ்தானும் கோப்பைக்காக மல்லுகட்டின. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற இம்ரான்கான், மியாண்தத், இன்சமாம், வாசிம் அக்ரமின் கடைசி நேர அதிரடி காரணமாக 249 ரன்களைக் குவித்தது. முன்கள வீரர்கள் அடுத்தடுத்த சொதப்ப ஃபேர்பிரதரும் லாம்ப்பும் இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசிம் அக்ரம் சிறப்பாக வீசிய இரண்டு பந்துகள்தான் அந்த அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. லாம்ப்பும், லூயிசும் வாசிமின் அற்புதமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஸ்டெம்புகளை சிதறவிட இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடித் தர 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோற்கடித்தது.

தொடக்கத்தில் சறுக்கிய பாகிஸ்தான் அணி பின்னர் சுதாரித்து ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை பெற்ற தந்த கையோடு இம்ரான்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

முதல் விருது

முதல் நான்கு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்  நாயகன் விருது அறிமுகப்படுத்தப்படவில்லை. 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைத்
தொடரில்தான்  இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முதல் விருதை நியூசிலாந்து அணித் தலைவர் மார்டின் குரோவ் பெற்றார். 9 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை அவர் குவித்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் சோகம்

மூன்று முறை உலகக் கோப்பைத் தொடரில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்துக்கு துரதிர்ஷ்டம் துரத்தியது. 1979-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், 1987-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இறுதி ஆட்டத்தில் தோற்ற இந்த அணி, இந்த முறை பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல, அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது இதுதான் கடைசி முறையும்கூட. இதன்பிறகு இதுவரை நடைபெற்று
முடிந்துள்ள உலகக் கோப்பைத் தொடரில்  இங்கிலாந்தால் அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியவில்லை.


- தி இந்து, ஜனவரி 2015