‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் இயக்குநர் ராஜேஸுடம் உதவி இயக்குநராக இருந்த ஜெகதீஸ், தன்னுடைய குரு இயக்கிய படத்தை டிங்கரிங் பார்த்து, கொஞ்சம் பாலீஸ் செய்து கொடுத்திருக்கும் முதல் படம்தான் நண்பேண்டா. தொடரும் ‘நண்பேண்டா’க்களின் கூட்டணி இந்தப் படத்தில் ஜெயித்ததா, இல்லையா?
வேலைவெட்டி எதுவும் இல்லாமல் தஞ்சாவூரில் ஊர் சுற்றுகிறார் உதயநிதி. திருச்சியில் இரண்டரை ஸ்டார் ஓட்டலில் வேலைப் பார்க்கும் தனது நண்பன் சந்தானத்தைப் பார்க்க அவர் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவைப் பார்த்தவுடனேயே பற்றிக் கொள்கிறது காதல். சிறுவயதில் உதயநிதி, சந்தானத்துடன் சண்டை போட்டு பிரிந்த கருணாகரன், போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக திருச்சிக்கு வந்து இருவரையும் பழிவாங்கத் துடிக்கிறார். உதயநிதி- நயன்தாரா நட்பில் ஒரு பிரச்சினை. நயன்தாரா உதயநிதியிடம் தன் காதலைச் சொல்வதற்கு முன்பு, கடந்த காலப் பிரச்சினை ஒன்றைச் சொல்லி மனம் வருந்துகிறார். உதயநிதி அதைக் காமெடி ஆக்கிவிட, காதலைச் சொல்வதற்கு முன்பே பிரிவு.
இடையில் வங்கிக் கடன் பிரச்சினையில், தாதாவாக இருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், வங்கியில் பணியாற்றும் நயன்தாராவுக்கும் விரோதம் ஏற்படுகிறது. அவர் நயன்தாராவைக் கொல்ல திட்டம் போடுகிறார். இடையில் நான் கடவுள் ராஜேந்திரன் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கேஸில் நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். பிரிந்தவர்கள் கூடினார்களா? பழிவாங்கத் துடிக்கும் போலீஸ், வலுவான சாட்சியங்கள் ஆகியவை இருந்தும் நண்பர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள்? இதுதான் மீதிக் கதை.
படம் முழுவதையும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோரே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இவர்களைச் சுற்றியே கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். நயன்தாராவைப் பார்த்தது முதலே அவரைக் கவருவதற்காக உதயநிதி மெனக்கெடுகிறார். அவையெல்லாம் நயன்தாராவை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் கவர தவறுகின்றன. நயன்தாராவின் நடிப்பிலும் தோற்றத்திலும் மெருகு ஏறியிருக்கிறது. உதயநிதியின் நடிப்பைவிட நடனத்தில் முன்னேற்றம் அதிகம்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு நயன்தாரா வந்ததற்கு பெரிய பின்னணி இருப்பது போலக் காட்டுவது, சரக்கு வாங்கித்தரும்படி உதயநிதியிடம் நயன்தாரா கேட்பது, வில்லனை ஸ்கார்பியோ அடைமொழியுடன் கூப்பிடுவது என சிலப் பின்னணி இருப்பது போலக் காட்டுகிறார் இயக்குநர்.. ஆனால், கடைசியில் அவற்றைக் காமெடியாகக் காட்டி சிரிக்க வைக்க இயக்குநர் ஜெகதீஸ் முயற்சி செய்ததில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார்.
படத்தில் பல திருப்பங்கள். எல்லாமே ஒன்றாகத் தோற்றம் காட்டி வேறொன்றாகக் காட்டி கண்ணாமூச்சி காட்டுகிறார் இயக்குநர். இதைபடம் முழுவதும் காட்டியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். அதேசமயம் அவை எல்லாமே பிள்ளையார் பிடிக்க போய் குரங்கைப் பிடித்த கதையாகவே இருக்கின்றன. குறிப்பாகக் கொலைக்கேஸ் விவகாரத்தை ட்விஸ்ட் வைப்பதாக நினைத்துக் கொண்டு, காதில் பூ சுற்றி ஏமாற்றுகிறார் இயக்குநர்.
இப்போதெல்லாம் எங்கு குற்றம் நடந்தாலும், போலீஸார் முதலில் தேடுவது அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களைத்தான். மொட்டை ராஜேந்திரன் கொலை செய்யப்படும் பூங்காவில் சிசிடிவி இருப்பதை போலீசுக்கே நயன்தாராதான் சொல்கிறார். அதன் பிறகு கொலையாளி யார் என்பதை போலீஸார் கண்டுபிடிப்பதை நிஜ போலீஸ் பார்த்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள்.
நாயகன் உதயநிதிக்கு இணையான வேடம் சந்தானத்துக்கு. சந்தானத்தின் முத்திரை பஞ்ச் இதில் இல்லை. உதயநிதியும் சந்தானத்தை இதில் கலாய்க்கிறார். விலைமாதுவை கண்டுபிடிக்க சந்தானம் செய்யும் பரிசோதனையில் தொடங்கி எதுவுமே காமெடியுடன் ஒட்டவில்லை. சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதை சந்தானம் தவிர்ப்பது தெரிகிறது. ஆனால், வழக்கமான ஒருவரி காமெடி பாணியை விட்டு சந்தானம் வெளியே வர வேண்டும்.
பெயருக்கு வில்லன்களாக நான் கடவுள் ராஜேந்திரனும், நரசிம்மனும் வந்து செல்கிறார்கள். படத்தில் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து நடிகை ஷெரீன் திரையில் முகம் காட்டியிருக்கிறார். ஹாரிஸின் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன. ஆனால் ட்யூன்கள் பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பின்னணி இசையும் ஒகேதான். பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதில் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன.
படத்தின் உயிர்நாடியே நகைச்சுவை என்பதை முடிவு செய்துவிட்ட இயக்குனர் ஜெகதீஷ், அதற்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘நண்பேண்டா’ ரசிகர்களுடன் ஒட்டியிருப்பார்கள்.
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment