23/08/2011

சான்ஸ் பிடிக்க பில்லி சூனியத்தை நாடும் நடிகைகள்!

இரண்டு பாடகிகள் தொழில் போட்டியில் மாறி மாறி மாந்திரீக ஏவல் செய்துகொண்டது சில ஆண்டுகளுக்குமுன் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம். ‘எனக்கு வரும் வாய்ப்புகளை அவர் தட்டிப் பறிக்கிறார்’ என்று கொதித்து இப்படி மாந்திரீகத்தின் துணையை நாடியவர்கள் ‘தங்கமயமான’ ஒரு பாடகியும், ‘ஜொலிக்கும் பூச்சி’யின் பெயர் கொண்ட ஒரு பாடகியும். ஒருவர் அகால மரணமடைந்துவிட, இன்னொருவருக்கு வாய்ப்புகளே இல்லை. இதற்குக் காரணங்கள் வேறாக இருந்தாலும், கனவுத் தொழிற்சாலைக்காரர்களை மாந்திரீகம் விட்டு வைக்கவில்லை!

எதிரிகளை துவம்சம் செய்வது, கண்ணசைவில் காதலியை கரம் பிடிப்பது, நினைத்ததை வசப்படுத்துவது எல்லாம் சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டுமே சாத்தியம். நிஜவாழ்க்கையில்..? இதுபோன்ற காரியங்களை சாதிக்க சில நட்சத்திரங்கள் நாடுவது மாந்திரீகவாதிகளையே! பெரும் முயற்சிக்குப் பிறகு இவர்களில் ஒருவரைப் பிடித்து வாயைத் திறக்க வைத்தோம். ‘‘நடிகர், நடிகைகள் நினைக்கும் விஷயங்களை செய்துகொடுக்க வெளியூரிலிருந்து மாந்திரீகக்காரர்கள் சென்னைக்கு வந்து வசிக்கிறார்கள். இதுபோன்ற பில்லி, சூனிய ஏவல் வேலைகளுக்கு சில வரையறைகள் உண்டு. எல்லாமே பலித்துவிடாது. ஆனால், காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. எனவே மாந்திரீகவாதிகளை தேடிவரவும், தாராளமாகப் பணம் செலவழிக்கவும் பலரும் தயங்குவதில்லை. இதை சாதகமாக்கி சிலர் பணம் பறிக்கவும் செய்கிறார்கள்’’ என்று நம்மிடம் சொன்ன அவர், சாம்பிளுக்கு அடுக்கிய விஷயங்கள் கீழே... 

« கோடம்பாக்கத்தில் குதிரை நடிகை என பெயரெடுத்த ‘மங்களகரமான’ உயர நடிகை அவர். பெரிதாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், அவரை வசதியாக வாழவைத்தது மாந்திரீகம்தான். குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் செய்து, சர்வ லட்சணங்களோடும் இருக்கும் இவருடன் நெருக்கமாக இருந்தால், பணமும் வெற்றியும் நிச்சயம் என ஒரு மாந்திரீகவாதி கணிப்பு சொன்னார். இதைக் கேள்விப்பட்டு அந்த நடிகையை ‘நெருங்க’ பல நடிகர்களும் தவமாய் தவமிருந்திருக்கிறார்கள். கில்லியாய் வெற்றிகளைக் குவித்த ‘மைதான கேப்டனு’க்குக்கூட அந்த வகையில்தான் இந்தக் குதிரை நடிகையோடு அறிமுகமாம்! இப்போது குதிரை நடிகை இடத்தை ‘காலேஜ்’ நடிகைக்கு கொடுத்திருக்கிறார்கள் மாந்திரீகவாதிகள். தமிழில் வாய்ப்புகள் மங்கிப் போனாலும், இந்தக் காரணத்துக்காக ‘காலேஜ்’ நடிகையை நெருங்க சில மலையாள முக்கிய ஸ்டார்களும், தமிழ் புள்ளிகளும் பரபரக்கிறார்கள்.

« வரும் வாய்ப்புகளை வசியப்படுத்தியாவது பெற்று விட வேண்டும் என்று துடிப்பது, ‘சித்திரமாகப் பேசிய’ நடிகையின் பாலிஸி. பில்லி, சூனிய பார்ட்டிகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார் இவர். தயாரிப்பாளரோ, டைரக்டரோ படத்தில் புக் செய்ய வந்தால், வீட்டில் அவர்களுக்கு தடபுடலாக விருந்தோம்பல் நடக்கும். அதில் கண்டிப்பாக முட்டை ஆம்லெட்டும் இடம் பிடிக்கும். இந்த ஆம்லெட்டில்தான் ‘மேட்டர்’ இருக்கிறது. பில்லி, சூனியக்காரர்கள் மயிலிறகில் செய்த வசிய மருந்தைக் கொடுப்பார்கள். இந்த மருந்தை எந்த உணவுடன் சேர்த்துக் கொடுத்தாலும், அந்த டேஸ்டுக்கு அது மாறிவிடும். அந்த நடிகை இந்த வசிய மருந்தை ஆம்லெட்டில் கலந்து தருகிறார். இதைச் சாப்பிட்டால்..? அந்த வாய்ப்பு கண்டிப்பாக நடிகைக்கே கிடைக்கும்.

இன்னும் சில நடிகைகள் இதில் வேறொரு மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். பிசுபிசுப்பில்லாத எண்ணெய் போல இருக்கும் இந்த மருந்தை தங்கள் செல்போனில் தடவுகிறார்கள். டைரக்டரையோ, தயாரிப்பாளரையோ ஏதாவது சினிமா விழாக்களில், பார்ட்டிகளில் சந்திக்க நேரும்போது இப்படி வசிய மருந்து தடவிய செல்போனோடுதான் போகிறார்கள். பேசும்போது கேஷுவலாக தங்கள் செல்போனை நீட்டி, ‘‘லேட்டஸ்ட் மாடல்... எல்லா வசதிகளும் இருக்கு’’ என்று சொல்கிறார்கள். ஆர்வத்தோடு வாங்கிப் பார்க்கும் நபரின் உள்ளங்கையில் வசிய மருந்து பட்டதுமே வேலை செய்யத் தொடங்கிவிடுமாம். அப்புறம் சான்ஸ்கள் வந்து குவியுமாம்!

« படங்களுக்கு ஜெயிக்கும்விதமாக பெயர் வைப்பதற்காகவே கோடம்பாக்கத்தில் பில்லி, சூனிய, மாந்திரீக பார்ட்டிகள் சிலர் இருக்கிறார்கள்.
எத்தனை எழுத்தில் எப்படித் தலைப்பு வைத்தால் படம் ஓடும் என்பதை இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதற்காகவே சிறப்பு பூஜைகள் நடத்தி சில தலைப்புகளை டைரக்டர்களிடம் கொடுக்கிறார்கள். அதிலிருந்து அவர் சாய்ஸில் எடுத்துக் கொள்ளலாம். ‘லக லக லக’விலிருந்து ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக சக்கைப் போடு போடும் டான்ஸர் நடிகரின் ‘பயமுறுத்தும்’ படம் வரை இவர்கள் தீர்மானித்த தலைப்புகளுக்கு ஒரு பட்டியலே கொடுக்கலாம் என்கிறார்கள். இந்த டிரெண்டைப் பார்த்துவிட்டு, ஆவிகளோடு பேசி பெயர் வைக்கும் கோஷ்டியும் புதிதாகப் புறப்பட்டிருக்கிறது.

« பனியன் நகரின் பெரும் கோடீஸ்வரர் அவர். கண்ணுக்கு லட்சணமான மனைவியும் உண்டு அவருக்கு. ஆனாலும், ‘பார்ட்டி’ நடிகையோடு ‘டேட்டிங்’ செல்ல வேண்டும் என்று நீ...ண்ட நாள் ஆசை. ஒருவழியாக அந்த ஆசை ஒருநாள் நிறைவேறியது. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு அந்த நடிகையுடன் 3 நாட்களுக்கு வெளிநாடு செல்ல ‘டேட்டிங்’ கிடைத்தது. நாள் ஒன்றுக்கு 10 லகரம் என அதற்கு ஊதியமும் பேசப்பட்டது. வெளிநாடு கிளம்பும்போதே மாந்திரீகத்தை மீட் பண்ணிவிட்டு வந்த நடிகை, கையோடு ஒரு ஆயிலையும் கொண்டு வந்திருக்கிறார். நாடு திரும்பியதும் பணத்தைத் தரும் நேரத்தில் மாந்திரீகர் கொடுத்த ஆயிலை தொழில் அதிபருக்குத் தெரியாமல் அவர் மீது தடவியிருக்கிறார் நடிகை. அந்த நிமிடமே தொழிலதிபர் ஃபிளாட். முப்பது லட்சம் தர வேண்டிய இடத்தில் இரண்டு கோடி ரூபாயை ஏன் கொடுத்தோம் என்பது இன்றுவரை அவருக்குப் புரியவில்லையாம். அதன்பின் இந்த விவரங்கள் எல்லாம் ஆடிட்டரான அவரது மனைவிக்குத் தெரிந்து, இப்போது தொழிலதிபர் தனிமரமானது தனிக்கதை.

« பிரபல வாரிசு நடிகர் அவர். கொஞ்சம் சபல பேர்வழி. நடிக்க வந்ததிலிருந்தே நடிகைகளோடு சேர்ந்து கிசுகிசுக்கப்படுவதுதான் அவரது அடையாளம். திருத்துவதற்கு அவரது குடும்பம் எவ்வளவோ முயன்றும், தோல்வியே கிட்டியது. கோயில் கோயிலாகச் சுற்றியதில், பரிகாரங்கள் சொல்லும் ஒரு பார்ட்டியின் நட்பு அந்தக் குடும்பத்திற்கு கிடைத்தது. ‘அவர் திருந்த வேண்டும் என்றால், வீட்டில் ஒரு சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்று யோசனை கூறினார் அந்த பார்ட்டி. அதன்படி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜையும் சிறப்பாக நடந்தது. ‘எதற்காக பூஜை நடைபெறுகிறது’ என்பது தெரியாமலேயே பல நடிகர் நடிகைகளும் அந்த பூஜையில் கலந்து கொண்டது உச்சகட்ட காமெடி.

« தங்களுக்கு வாய்ப்புகள் வேண்டும் என வசியம் செய்வதுபோலவே, அடுத்தவர்களுக்கு போகும் வாய்ப்புகளைக் கெடுக்கவும் சில மாந்திரீகத்தை நாடுகிறார்கள். பொள்ளாச்சி அருகே காட்டுக்குள் சக்திவாய்ந்த அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கே சென்று ஒரு விசேஷ பூஜை செய்து, அந்த அம்மன் சிலைமீது மிளகாய் அரைத்துப் பூசிவிட்டு வருகிறார்கள். மிளகாயின் கடுப்பில் கோபம் கொள்ளும் அம்மன், அந்த எதிரியை தொழிலில் ஜெயிக்க விடாமல் செய்துவிடுமாம்!

« இப்படி பூஜை செய்யும் கோஷ்டிகள் பெருகிவிட, ‘‘உங்களுக்கு எதிராக யாரோ பொறாமையில் ஏவல் செய்திருக்காங்க. அதிலிருந்து உங்களைக் காப்பாத்திக்கறதுக்கு நான் வழி சொல்றேன்’’ என முன்னணி நட்சத்திரங்களிடம் இன்னொரு கோஷ்டியினர் போகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டில் விசேஷ பூஜை செய்து, யாரோ ஏவல் செய்திருப்பதை ‘கண்டுபிடிக்கிறார்கள்’ இவர்கள். அதைத் தொடர்ந்து பரிகார பூஜையும் நடத்துகிறார்கள். பெயர், ராசி எல்லாம் பார்த்து... இடது காலிலோ அல்லது வலது காலிலோ சிவப்பு அல்லது கறுப்புக் கயிறு கட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். ‘கடைவீதி’ நடிகையும் ‘பெல்’ நடிகையும் இப்படி கயிறு கட்டிக்கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

இப்படி கோடம்பாக்கத்தில் கடை விரித்திருக்கும் பல மாந்திரீகர்கள், கேரளாவின் வடகரா அருகே இருக்கும் கல்லேரி குட்டிச்சாத்தான் கோயிலில் விசேஷ பூஜை செய்து எடுத்து வந்ததாகச் சொல்லி மருந்துகளை சப்ளை செய்கிறார்கள். சென்டிமென்ட்டுக்கு தலைவணங்கும் தமிழ் சினிமாக்காரர்கள் பலர் இதையும் நம்புவதுதான் விநோதம்!

- குங்குமம்,  22-08-2011

22/08/2011

வெளிநாடுகளில் வலம் வருது நம்மூர் ஜிக்குபுக்கு!


‘பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்... பேரீச்சம்பழம்...’ ‘கரகாட்டக்காரன்’ ஸ்டைலில் இந்த டயலாக்கை திருச்சி பொன் மலையில் யாராவது சொன்னால், ரயில்வே பணிமனை ஊழியர்கள் அடிக்க வந்துவிடுவார்கள். இந்தியாவில் இயக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் மறு அவதாரம் எடுப்பது இங்குதான். அப்படி புத்துயிர் பெற்ற எஞ்சின்கள் ‘ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு’ என வெளிநாடுகளில் வலம் வருகின்றன. இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் எஞ்சின்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போயிருக்கின்றன!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீராவி எஞ்சின்கள் தயாரிப்பதற்காக 1897ல் நாகப்பட்டினத்தில் ரயில்வே பணிமனை தொடங்கினார்கள். போக்குவரத்து வசதி சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, 1926-ல் திருச்சி பொன்மலைக்கு பணிமனை இடம் பெயர்ந்தது. அந்தக் காலகட்டத்தில மீட்டர்கேஜ் எஞ்சின்கள் தயாரிப்பே இங்கு பிரதானம்.

1962-ம் ஆண்டுக்குப் பிறகு டீசல் ரயில் எஞ்சின்கள் தயாரிக்கும் பணி களைகட்ட ஆரம்பித்தது. 1993-ம் ஆண்டுவரை இதுவே தொடர்ந்தது. அதன்பிறகு படிப்படியாக அகலப்பாதைக்கு மாறியதால் மீட்டர்கேஜ் டீசல் எஞ்சின்களுக்கு வேலையே இல்லாமல் போனது. அவை எதற்குமே உபயோகப்படாது என்று நினைத்த வேளையிலதான் ‘ரீமாடலிங் கான்செப்ட்’ அறிமுகமானது. அதாவது, இந்த ரயில் எஞ்சின்களில் சில மாறுதல்கள் செய்து அகலப்பாதையில் ஓடுவது போல மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கியது.

உலகளவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் இருப்பது இந்தியாவில்தான். நமக்குத் தேவையானதை நாமே தயார் செய்துகொள்கிறோம். ஆனால், ஏழை நாடுகளோ வெளிநாடுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். குறிப்பா ஆப்ரிக்க நாடுகள் பலவும் நம்பியிருப்பது இந்தியாவைத்தான். இது ஒருவகையில் அந்த நாடுகள் ரயில்வே துறையில் வளர நாம் செய்யும் உதவி. இதற்காகவே இரு அமைப்புகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்த அமைப்புகள் மூலமாகத்தான் மீட்டர்கேஜ் எஞ்சின்களை அந்தந்த நாட்டு வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரியும், அகலப்பாதையில ஓடுவது போலவும் ரீமாடலிங் செய்து அனுப்புகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்ப வேலையை இந்தியாவிலேயே பொன்மலை ரயில்வே பணிமனை மட்டும்தான் செய்கிறது. முதன் முதலாக 1993-ல் இந்தப் பணி தொடங்கியது. மலேசியாவுக்கு இங்கிருந்து முதல் ரீமாடலிங் எஞ்சின் பயணமானது. 2010-ம் ஆண்டு வரை அதிகபட்சமாக மலேசியாவுக்கு 48 எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. தான்சானியாவுக்கு 14, மியான்மருக்கு 16, சூடானுக்கு 10, மொசாம்பிக்குக்கு 26 ரயில் எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. சூடானில் தயாரிக்கப்பட்ட ஹிடாச்சி ரக 4 மீட்டர்கேஜ் எஞ்சின்களை அகலப்பாதைக்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கொடுத்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 129 மீட்டர்கேஜ் எஞ்சின்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

பொதுவாக பழைய பொருட்களை என்னதான் ரீமாடலிங் செய்து பயன்படுத்தினாலும் உடனுக்குடன் பழுதாவது இயல்பு. ஆனால், பொன்மலை பணிமனையிலிருந்து இத்தனை ஆண்டுகளில் இங்கிருந்துபோன எந்த ரயில் எஞ்சினும் ரிப்பேர் ஆகி திரும்ப வரவே இல்ல. சாதாரணமாக பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து ஒரு எஞ்சின் வெளியே சென்றால், 8 ஆண்டுகள் கழித்துத்தான் மீண்டும் பராமரிப்புக்கே வரும். அந்தளவுக்கு பக்காவா இங்கே அனுப்புகிறார்கள். எஞ்ஜின் அனுப்புவதற்கு முன்பே அந்தந்த நாட்டுப் பொறியாளர்கள் இங்கு வந்து பயிற்சி எடுத்துட்டு சென்றுவிடுகிறார்கள். ஏதாவது சிறு பிரச்சினை வந்தால், அதை அவர்களே சமாளிக்க இந்தப் பயிற்சி உதவுகிறது.

இப்படி ரீமாடலிங் செய்யப்பட்ட மீட்டர்கேஜ் எஞ்சின்களை ஏழை நாடுகளுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நம்மூரில் ரயில்வே பிளாட்பாரங்களில் ஷன்டிங் அடிக்கவும் ரீமாடலிங் எஞ்சின்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

துரும்பைக்கூட இரும்பாக்குறாங்க நம்ம ஆளுங்க!

 குங்குமம், 22/8/2011

21/03/2011

சுனாமி ராட்சசன்!



இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்படியொரு அழிவை ஜப்பான் சந்தித்ததில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2011, மார்ச் 11 அன்று ஜப்பானில் பூமாதேவி ரிக்டர் அளவில் 8.9 புள்ளி ஆட்டம் போட்டுவிட்டுப் போக, வழக்கமான பூகம்பம்தானே என்று ஜப்பான்வாசிகள் நினைத்தனர். ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் கடலுக்கடியில் இருந்து சுனாமி ராட்சதனும் கரையைக் கடந்து பேயாட்டம் ஆட, சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது ஒட்டுமொத்த ஜப்பான் தேசமும்! உலகையே அதிரச் செய்யும் பூகம்பமும், சுனாமியும் எப்படி நிகழ்கின்றன?  சுனாமி வருவதை முன்கூட்டியே அறிய முடியாதா? இவற்றைத் தெரிந்து கொள்ள பூமிப்பந்தைக் கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.
மூன்று அடுக்குகளைக் கொண் டது பூமி. இதன் உட்புறக்கருவிலும், அதை ஒட்டிய நடுப்பகுதியிலும் 5000 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் கொதிக்கும் குழம்பு போன்று இருக்கிறது. இதன் மேற்புறம் இருக்கும் தட்டில்தான் நாம் இருக்கிறோம். இந்த தட்டு கடலின் ஆழப்பகுதியில் 4 முதல் 10 கிலோமீட்டர் தடிமனும், நிலப்பகுதியில் 32 முதல் 71 கி.மீ. தடிமனும் கொண்டது. இந்த தட்டு ஒன்றாக இல்லை. கால்பந்தின் மேலே இருக்கும் கட்டங்கள் போல 12 தனித்தனி தட்டுகளாகவே உள்ளன. இந்த 12 தட்டுகளின் மேல்தான் எல்லா கண்டங்களும், கடல்களும் இருக்கின்றன.
பூமிப்பந்தின் உட்புறக் குழம்பில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளால் இந்த 12 தட்டுகளும் மெல்ல நகர்கின்றன. இந்த நகர்வு கிட்டத்தட்ட நமக்கு நகம் வளர்கிற அதே வேகத்தில்தான் நிகழ்கிறது. இவ்வளவு மெதுவாக நகர்ந்தாலும் அதன் விளைவுகள் மிக பயங்கரமானவை. இந்த தட்டுகள் ஒன்றோடொன்று மோதுகிற நேரத்தில் பூகம்பம் ஏற்படுகிறது. ஓராண்டில் உலகம் முழுக்க நடக்கிற பூகம்பங்களின் மொத்த சக்தி, ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டுகளைப் போல ஒரு லட்சம் அணுகுண்டுகளுக்கு ஈடானது!
கடலுக்கடியில் ஒரு பூகம்பமோ, எரிமலைச்சீற்றமோ ஏற்படும்போது அதன் வீரியத்தைப் பொறுத்தே சுனாமி ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றத்தால் உருவாகும் பெரிய, வேகமாகச் செல்லக்கூடிய அலைகள்தான் சுனாமி. இவை சாதாரண கடலலைகள் போல வரிசையாக அடுத்தடுத்து வராது. ஒரு அலைக்கும் அடுத்த அலைக்கும் இடையே சமயத்தில் நூறு கி.மீ. இடைவெளி கூட இருக்கும். ஒரு சுனாமி கரையைத் தாக்கிய பிறகு ஒருமணி நேரம் கழித்துக்கூட அடுத்த சுனாமி தாக்கும்.
சுனாமி வருவது கடலின் மேல்மட்டத்திலிருந்து பார்த்தால் தெரியவே தெரியாது. அது கடலின் ஆழமான பகுதியிலேயே மிகவேகமாகப் பயணிக்கும். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். சமயங்களில் 800 கி.மீ. வேகத்தில்கூட அது கரையை நோக்கி வரும். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சுனாமி ஏற்படுகிறது என்றால் அந்த நொடியே நீங்கள் ஒரு ஜெட் விமானத்தில் சீறிப்பறந்தால்கூட நீங்கள் டோக்கியோ போய்ச் சேருவதற்குள் அது சேர்ந்து தாக்கிவிடும். அவ்வளவு வேகம்!
ஆழ்கடலில் வேகமாக வரும் அது, கரையை நெருங்கும்போது கடலின் ஆழம் குறைவதால் வேகம் குறையும். அப்படி வேகம் குறையும்போது அது தனது உயரத்தை நீட்டிக்கொள்ளும். சமயங்களில் 30 மீட்டர் உயரம் வரைகூட எழும்பும். ஜப்பானில் 33 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழுந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு உயரத்தில் அலைகள் எழுந்து வந்தால், அது கடற்கரை நகரங்களை மூழ்கடித்து விடும்தானே? எல்லாவற்றையும் அபகரித்து விடும்தானே? அதுதான் ஜப் பானில் நடந்தேறியிருக்கிறது.
புயல் போன்ற சீற்றங்களின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். கரையைத் தாண்டி கடல் யாரையும் எதுவும் செய்யாது. கடலுக்குப் போன மீனவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். சுனாமி அப்படியே உல்டா... கடலுக்குள் இருக்கும் சின்ன கட்டுமரத்தைக்கூட இது ஒன்றுமே செய்யாது. அதுமட்டுமல்ல, அதில் இருப்பவர்களால் ‘தங்களைத் தாண்டி படுபயங்கரமான சுனாமி ஒன்று போகிறது’ என்பதைக்கூட உணரமுடியாது.

கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படும்போது அங்கிருக்கும் தண்ணீர் பெருமளவு இடம்பெயர்கிறது. புவிஈர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் தனது இடத்துக்கே வர ஆசைப்படுகிறது. இப்படி அது ததும்பும்போது பேரலையாக உருவெடுக்கிறது. அந்த அலையின் கனமும் வேகமும் பூகம்பத்தால் எந்த அளவுக்கு பூமிக்கடியில் உருமாற்றங்கள் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்தது. ஒரு சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அடுத்தடுத்து 10 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேர இடைவெளிவரை அடுத்தடுத்த அலைகள் தாக்கும். இந்தத் தாக்குதலின் வீரியம் கரையைப் பொறுத்து மாறுபடும். குறுகிய வளைகுடா போன்ற பகுதிகளில் இது நுழையும்போது பெரியஅலை குறுக்கப்படுவதால் சீற்றம் கொடுமையாக இருக்கும். கரைப்பகுதியில் மாங்குரோவ் காடுகள், பவழப்பாறைகள் இருந்தால் அவை அலையைத் தடுப்பதால் சேதம் குறைவாக இருக்கும்.
பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியாது. அது எந்த அபாய அறிகுறிகளையும் கொடுத்துவிட்டு வருவதில்லை. ஆனால், அதன் விளைவாக வரும் சுனாமியைக் கண்டுபிடிப்பது சாத்தியமே. இப்படி ஒரு கண்டுபிடிப்பு சிஸ்டத்தை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது. 1946 ஏப்ரல் முதல் தேதி அன்று அலாஸ்கா அருகே ஒரு பூகம்பம் தாக்கி ஹவாய் தீவில் சுனாமி உருவாகி, 159 பேரை சுருட்டிக் கொண்டுபோனது.
அமெரிக்கவை பதைபதைக்க வைத்த இந்தக் கொடூரத்துக்குப் பிறகு ‘பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு’ என்ற அலுவலகம் உருவாக்கப்பட்டது. சுனாமி பாதிப்புக்கு ஆளாகும் பல நாடுகள் இதில் உறுப்பினர்கள் ஆயின. ரிக்டர் அளவில் 7.5-க்கு மேல் ஏற்படும் பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்பது பொதுவான கருத்து. இப்படி ஒரு பூகம்பம் ஏற்பட்டதும் அந்தக் கடலுக்கு அருகே சுனாமி தாக்கக்கூடிய இடத்தில் இருக்கும் கரையோர மக்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர்கள் மூட்டைமுடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு தயாராகிவிடுவார்கள். இப்படி சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் இருந்தும், ஜப்பானை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது சுனாமி.
இயற்கையை யாரால் வெல்ல முடியும்?
- முத்தாரம், 21-3-2011

14/03/2011

1987- சாதித்த ஆஸ்திரேலியா கோட்டைவிட்ட இந்தியா!


இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதல் உலகக் கோப்பை.   முதல்முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து  நடத்திய தொடர்.  60 ஓவரிலிருந்து 50 ஓவர் போட்டியாக நடந்த முதல் உலகக்தொடரும் இதுதான். 1983-ல் விளையாடிய அதே 8 அணிகள், அதே லீக் சுற்று முறை இப்போதும் பின்பற்றப்பட்டது.  இந்த உலகக்கோப்பையை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ததால், ‘ரிலையன்ஸ் உலகக்கோப்பை’ என அழைக்கப்பட்டது.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. அக்டோபர்  9 முதல் நவம்பர் 8 வரை போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணி இரண்டாவது முறையாக கபில்தேவ் தலைமையில் களமிறங்கியது.

‘ஏ’ பிரிவில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தின. இரு அணிகளும் 6 லீக் ஆட்டங்களில் தலா 5 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சுலபமாக தகுதிபெற்றன. ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மல்லுக்கட்டின. இறுதியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் 3 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற வெஸ்ட்இண்டீஸ், முதன்முறையாக லீக் சுற்றோடு மூட்டை கட்டியது பரிதாபம்!

இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்தே ஆட்டத்தின் போக்கை வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு! பம்பாயில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவையும், லாகூரில் நடந்த இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி நடந்த ஈடன்கார்டன் மைதானம் 95 ஆயிரம் ரசிகர்களுடன் நிரம்பி வழிந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டி இது. இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்ததால், ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தில் 253 ரன் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இங்கிலாந்து 246 ரன் மட்டுமே எடுத்து 7 ரன்னில் கோப்பையைக் கோட்டைவிட்டது. முதன்முறையாக ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்றது.  குறைந்த ரன்னில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது அப்போது.


ஹைலைட்ஸ்

இந்த உலகக்கோப்பையில் மறக்க முடியாத  நிகழ்வுகள் சில இருக்கின்றன. லாகூரில் பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீசும் மோதிய லீக் ஆட்டம் என்றும் மனதில் நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 216 ரன்களை பாகிஸ்தான் துரத்தியது. 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை. அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கர்ட்னி வால்ஷிடம் கேப்டன் ரிச்சர்ட்ஸ் பந்தைக் கொடுத்தார். பந்துகளை எதிர்கொண்ட அப்துல் காதர் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி கடைசி பந்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதை கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் படுத்து கண்ணீர் விட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இந்தத் தோல்விதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் பறித்தது. முதல் முறையாக அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் மூட்டைக் கட்டியது.

முதல் செஞ்சுரியும், ஹாட்ரிக் விக்கெட்டும்

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இத்தொடருடன் ஓய்வு பெற போவதாக இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார்.  டெஸ்ட் போட்டியில் 34 சதங்களை விளாசியிருந்த கவாஸ்கர், ஒரு நாள் போட்டியில் ஒரு சதம்கூட அடித்ததில்லை. கடைசியாக உலகக் கோப்பையிலாவது சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஒவ்வொரு லீக் போட்டியாக முடிந்தது. கடைசி லீக் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மட்டுமின்றி கவாஸ்கரின் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது.  நியூசிலாந்த் எடுத்த 221 ரன்களைத் துரத்திய இந்தியா, 33வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கவாஸ்கர் இந்தப் போட்டியில் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதுதான் கவாஸ்கர் முதாலவதாகவும் கடைசியாகவும் எடுத்த ஒரு நாள் போட்டியின் சர்வதேச சதம்.

இதேபோட்டியில் இந்திய பந்துவீச்சாளர் உலகக் கோப்பையில் புதிய சாதனையைப் படைத்தார். அது, சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ரூதர்போர்ட், ஸ்மித், சேட்ஃபீல்டு ஆகிய மூன்று பேரையுமே பவுல்டு மூலம் சேட்டன் சர்மா வெளியேற்றினார். உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் விக்கெட் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய நவ்ஜோத் சித்து சிங் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரர் என்ற பெருமையோடு,  ‘சிக்ஸர் சித்து’ என்ற பெயரையும் பெற்றார்.

இந்த உலகக்கோப்பையிலும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. இறுதியாட்டத்தில் 75 ரன் குவித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- முத்தாரம், 2011 ஜனவரி

07/02/2011

1983 - வெஸ்ட் இண்டீஸை ஓரங்கட்டிய கபில் ‘டெவில்’ஸ்!



வாழ்க்கையில் ஆச்சிரியமும் சந்தோஷமும் ஒருசேர கூடி வரும் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு அப்படிப்பட்ட ஒரு  மகத்தான ஆண்டுதான் 1983. கிரிக்கெட் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற ஆண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத  ‘பொன்’ நாள் அது.

மூன்றாவது உலகக்கோப்பை போட்டியை வழக்கம்போல மீண்டும் இங்கிலாந்திலேயே நடத்த முடிவு செய்தது ஐ.சி.சி. 1983 ஜூன் 9 முதல் 25 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 6 அணிகள் உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. இந்த முறை இலங்கையும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதால், அதுவும் நேரடியாகவே தகுதி பெற்றது. தகுதிச்சுற்றின் அடிப்படையில் 8வது அணியாக முதன்முறையாக களமிறங்கியது ஜிம் பாப்வே. இதற்கு முன்பு நடந்த இரு உலகக்கோப்பை போட்டிகளில் ஒவ் வொரு அணியும் தன் பிரிவில் இடம் பெற்ற   அணிகளு டன் ஒருமுறை மோதியது. இந்த முறை ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் 2 லீக் ஆட்டங்கள் என 6 போட்டிகள் விளையாட விதி மாற்றியமைக்கப்பட்டது.

‘ஏ‘ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகளும், ‘பி‘ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. இந்தமுறை 23 வயது நிரம்பிய கபில்தேவ் தலைமையில் இந்தியா களமிறங்கியது. இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் பலமிக்க வெஸ்ட்இண்டீஸ் அணியை ஓல்டு டிராஃபோர்டு நகரில் சந்தித் தது. இதில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன் வித்தியாசத் தில் இந்தியா தோற் கடித்ததுதான் உலகக் கோப் பையை வெல்ல பிள்ளையார் சுழியாக அமைந்தது.

அடுத்தடுத்த இரு வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டிய லில் வேகமாக முன் னேறிய இந்தியா, இரண்டாவது சுற்று லீக் போட்டியில் தடுமாறியது. அரையிறுதிக்கு தகுதிபெறுமா என்ற சந்தேகம் வேறு. முக்கிய ஆட்டத்தில் ஜூன் 18ல் ராயல் டன்பிரிட்ஜில் ஜிம்பாப்வேயைச் சந்தித்தது இந்தியா. 17 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து  தத்தளித்தது   இந்தியா.

உலகக் கோப்பைக் கனவு அம்பேல்தான் என இந்திய ரசிகர்கள் தலையில் கைவைக்க, பதட்டமே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிய கபில், முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 175 ரன் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கபில்தேவின் இந்த அதிரடி ஆட்டம்தான் இந்தியாவை அரையிறுதிக்கு தகுதி பெற வைத்தது.

இந்தியா தவிர வெஸ்ட் இண்டீஸ், இங் கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் அரை யிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந் தும் ஜூன் 22ல் மோதின. இந்தியாவை சுலபமாக வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற கனவில் இருந்தது இங்கிலாந்து. ஆனால், நடந்தது வேறு. இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இன்னொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது முறையாக வெஸ்ட்இண்டீஸ் இறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்த உலகக்கோப்பையில் கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லாத ஓர் அணியாகத்தன் சென்றது இந்தியா. ஆனால், யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விளையாடி, இறுதிப்போட்டி வரைக்கும் வந்தது. இறுதிப் போட்டியில  ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் கோப்பையை ஏந்தியதை எந்த ஒரு ரசிகரும் என்றுமே மறக்க முடியாது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் காலத்தால் என்றுமே மறக்கடிக்க முடியாது.

பரபரப்பான இறுதி ஆட்டம் ஜூன் 25ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத்தான் என  நிறைய பேர் அடித்து சத்தியம் செய்தார்கள். லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணியை ஒருமுறை தோற்கடித்ததால், நம்பிக்கையுடன் களமிறங்கியது இந்தியா. ஆனால், இந்தியாவைச் சுருட்டி உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக தக்க வைக்கலாம் என்ற மிதப்போடு இருந்தது வெஸ்ட்இண்டீஸ்.  அதற்கு ஏற்றார்போல முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குமேகூட நம்பிக்கை  நிச்சயம் இருந்திருக்காது. ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி வரை வந்ததே பெரிய விஷயம் என்று கேப்டன் கபில் நினைக்கவில்லை.

இந்த சொற்ப ரன்னை வைத்துக் கொண்டு நிச்சயம் வெல்ல முடியும் என்று வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார் கபில்.  கபில்தேவின் விடா முயற்சியும், அணிக்கு கொடுத்த உத்வேகமும், சிறப்பாக அணியை அவர் வழி நடத்தி சென்ற விதமும் லார்ட்ஸில் இந்தியா மாயாஜாலம் நிகழ்த்த காரணமாக இருந்தது.  குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை,  20 அடி தூரம் பந்து சென்ற திசையிலேயே ஓடி கபில் பந்தை பிடித்தது கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.

சுலபமான இலக்கு என்பதால், வெற்றி உறுதி என வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே முடிவு செய்துவிட்டனர். நமது வீரர்களுக்கும் நம்பிக்கையில்லை. ‘நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். பவுலர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி தரவேண்டும்‘ என ஊக்கப்படுத்தினார் அணித் தலைவர் கபில்தேவ். அவர் சொன்னது போலவே பவுலர்கள் மிகத்துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 76 ரன்களுக்குள் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய இந்தியா, இறுதியில் 140 ரன்களுக்கெல்லாம் வெஸ்ட் இண்டீஸை  சுருட்டியது.

 கடைசி  விக்கெட்டாக ஹோல்டிங் வீழ இந்திய வீரர்கள் வெற்றி முழக்கமிட்டனர். ஸ்டம்புகளை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓட்டம் பிடிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நமது தேசியக்கொடி உயரப் பறந்தது. முதன்முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
முதல் இரு உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு லாயிட் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு கபில்தேவ் கிடைத்தார். மொஹிந்தர் அமர்நாத் இந்த தொடர் முழுவதும் நல்ல மட்டையாளராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் பரிமளித்தது இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமும்கூட.


ஹைலைட்ஸ்



முதல்முறையாக 1983 உலகக்கோப்பையில்தான் ஃபீல்டிங் சர்க்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு 66 க்கு 1 என்ற விகிதத்தில்தான் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய இந்தியா, 6 வெற்றிகளை பதிவு செய்தது. இந்தமுறையும் தொடர்நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை.

இறுதியாட்டத்தில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவரே அரையிறுதி ஆட்டத்திலும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இறுதியாட்டத்தில் இந்தியாவை மிரட்டி உறுமிக் கொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை, 18 மீட்டர் தூரம் பந்து சென்ற திசையிலேயே ஓடி அருமையாக கபில்தேவ் கேட்ச் பிடித்ததே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

1983 உலகக்கோப்பைக்குப் பிறகு கிளைவ் லாயிட், பாப் வில்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்ஸன், ரோட்னி மார்ஸ், கிளன் டர்னர் என புகழ்பெற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

- முத்தாரம், 2011 ஜனவரி






30/01/2011

1979 - மீண்டும் விஸ்வரூபம் காட்டிய வெஸ்ட்இண்டீஸ்


இரண்டாவது முறையும் இங்கிலாந்திலேயே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 4 ஆண்டுகள் கழித்து 1979ல் இரண்டாவது உலகக்கோப்பை ஜூன் 9 முதல் 21 வரை நடைபெற்றது. இத்தொடரையும் புரூடன்ஷியல் நிறுவனமே ஸ்பான்சர் செய்தது. முதல் உலகக்கோப்பை போலவே இத்தொடரிலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு பதிலாக கனடா களமிறங்கியது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், கனடா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. இதிலும் 15 போட்டிகளே நடை பெற்றன. வெங்கட்ராகவன் தலை மையில் இரண்டாவது முறையாக இத்தொடரில் களமிறங்கியது இந்தியா.

அரையிறுதிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து  வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்சின் சதம் மறக்க முடியாத ஒன்று. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பி தனது கிளாசிக் இன்னிங்ஸை ரிச்சர்ட்ஸ் வெளிப்படுத்தியது என்றும் நீங்காது நினைவாக இருக்கும். முதல் உலகக் கோப்பைப் போட்டியைப் போலவே இரண்டாவது தொடரிலும் வெஸ்ட்இண்டீஸ் கோப்பையை வெல்ல ரிச்சர்ட்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். எத்தனையோ மட்டையாளர்கள் வந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு வித்தியாசமான ஆளுமையாக இந்த உலகக்கோப்பையில்  மிளிர்ந்தார். இப்போட்டியில் 92 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி மீண்டும் உலகக்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.


டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் தவிர மற்ற இரு அணிகளைத் தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இலங்கையும், கனடாவும் தகுதி பெற்றன. இரண்டாவது உலகக் கோப்பையில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதிற்கில்லை. அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையிடம்கூட இந்தியா வெற்றிபெறவில்லை. இத்தொடரில் இந்தியா 3 லீக் ஆட்டங்கள் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை.   இந்தியா போல் இல்லாமல் பாகிஸ்தான் பலம் பொருந்திய அணியாக உருவெடுத்தது. அரையிறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்தது. இத்தொடரிலும் தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. இறுதியாட்டத்தில் 138 ரன் குவித்த விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


- முத்தாரம், 30/01/2011

24/01/2011

உதயமாகுது புதிய தேசம்!

   

ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் வழக்கமானது; சூடானில் நடந்த இந்தத் தேர்தல் வேறு ரகம். நாடு ஒன்றாகவே இருப்பதா அல்லது இரண்டாகப் பிரிப்பதா என்பதைத் தீர்மானிக்க தேர்தல் நடந்தது. தென் சூடான் புதிய நாடாக உருவெடுக்க பலமாக ஓட்டு விழுந்திருக்கிறது.

தென் சூடானை அடக்கி ஆண்ட வட சூடான் நிகழ்த்திய 40 ஆண்டுகால அத்துமீறல்களுக்கு பரிகாரமாக பாகப்பிரிவினைதான் தீர்வு என உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் மக்கள். பிரிவு உறுதியாகிவிட்ட நிலையில் உற்சாகக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன தென் சூடானில். ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை என்றாலே சொத்துகள், பொருட்களை மட்டுமல்ல, கடன்களைக்கூட பாதியாக பங்கிட்டுப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ஒரு நாடு பாகப்பிரிவினை கண்டால்..? இதுதான் இப்போது ஒருங்கிணைந்த சூடான் முன் நிற்கும் ஒரே கேள்வி!

ஆப்ரிக்க கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு சூடான். தென் சூடானில் ஆப்ரிக்க பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் அதிகம். வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்கள், நுபியான் இன மக்களின் ஆதிக்கம் அதிகம். தென் சூடான் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இதுதான் 1970ல் இரு பகுதிகளுக்கும் இடையே உள்நாட்டுக் கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போரால் 25 லட்சம் பேர் மடிந்ததுதான் மிச்சம். கலவரம் உச்சகட்டத்தை அடைந்தவேளையில் 2005ல் அமெரிக்கா உள்பட மேலைநாடுகள் தலையிட்டன. அப்போது போட்ட உடன்படிக்கையின்படிதான் இப்போது வாக்கெடுப்பு நடந்தது.

தென் சூடான் எண்ணெய் வளமும் தங்கச் சுரங்கங்களும் நிறைந்த வளமான பகுதி. மக்கள்தான் வறுமையில் இருக்கின்றனர். பக்காவான கட்டிடங்கள் கொண்ட ஒரு சுமாரான நகரம்கூட இல்லாத பகுதி அது. தெற்கின் வளங்களைச் சுரண்டி வடக்கு வளர்ந்துவிட்டது. எந்த வளங்களும் இல்லாத வட சூடான், இந்த வருமானத்தை வைத்தே செழிப்பாகிவிட்டது. இப்போதைய நிலையில் தென் சூடான் பொருளாதார ரீதியாக வட சூடானையே நம்பியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வட சூடான் வழியாகத்தான் கடலுக்குள் செல்கின்றன. இதில் பிரச்னை ஏற்பட்டால், சோமாலியா போல பசி, பட்டினியால் தென் சூடான் மக்கள் சாக நேரிடும்.

வட மற்றும் தென் சூடானுக்கு நடுவில் அபெய் என்ற பெரிய மாகாணம் உள்ளது. இதை யாருடன் இணைக்கலாம் என தனியாக வாக்குப்பதிவு விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது. இந்த மாகாணத்திலும் எண்ணெய் வளம் அதிகமுள்ளது என்பதால், இரு பிரதேசங்களும் இப்போதே மோதத் தொடங்கியுள்ளன. இதனால், கலவரங்கள் மீண்டும் எழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமனது கடன். ஒன்றுபட்ட சூடான் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் தொகை 3.6270 லட்சம் கோடி டாலர். இந்த கடனுக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

குங்குமம், 24-01-2011


17/01/2011

1975 - கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ்!

முதல் உலகக் கோப்பைத் தொடரை 1975-ல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்தது ஐ.சி.சி. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தொடரில் பங்கேற்பது  உறுதியானது.

 7-வது அணியாக டெஸ்ட் அங்கீகாரம் பெறாத இலங்கை தேர்வு செய்யப்பட்டது. 1964-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாகவே இருந்தது. நிறவெறிக் கொள்கை அந்நாட்டில் பின்பற்றப்பட்டதால், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த அணியால் முதல் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியவில்லை. ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு அணி பங்கேற்க வேண்டும் என்பதற்காக கென்யா, தான்சானியா, உகாண்டா, நைஜீரியா ஆகிய நாட்டு வீரர்களைக் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்கா 8-வது அணியாகத் தேர்வானது.

இத்தொடரை புரூடன்ஷியல் நிறுவனம் ஸ்பான்சர் செய்ததால், அந்தப் பெயரிலேயே கோப்பை அழைக்கப்பட்டது. ஒவ்வோர் அணிக்கும் 60 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. வண்ண உடைகள் இல்லை. ஆர்ப்பாட்டம், அமர்க்களம் இல்லாமல் 1975 ஜூன் 7-ல் தொடங்கியது முதல் உலகக் கோப்பை போட்டி. மொத்தம் 15 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 லீக் ஆட்டங்கள், இரு அரையிறுதி, ஓர் இறுதி ஆட்டம் என 15 ஆட்டங்கள் நடைபெற்றன.

‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் களமிறங்கின. தமிழக வீரர் வெங்கட் ராகவன் தலைமையில் முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியது இந்தியா.
‘ஏ’ பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஜூன் 21-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரே லியா & வெஸ்ட்இண்டீஸ்  அணிகள் மோதின.

இந்தத் தொடரில் சிறந்த ஆட்டம் என்றால் அது இறுதிபோட்டிதான். வரலாற்றில் சிறப்பான கேப்டன்கள் வாய்ப்பது அணிகளுக்கு  அபூர்வம். இறுதியாட்டத்தில் மல்லுக்கட்டிய இரு அணி கேப்டன்களும் அப்படி அரிதானவர்கள்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிளைவ் லாயிடும், ஆஸ்திரேலிய அணிக்கு இயான் சேப்பலும் கேப்டன்களாக இருந்தார்கள். ஆஸ்திரேலியாவே முதல் உலகக் கோப்பையை வெல்லும் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். சாப்பல் மிக பிரமாதமாக ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தினார். ஆனாலும், வெஸ்ட்இண்டீஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்த பறிகொடுத்தபோது கிளைவ் லாயிட் களமிறங்கி 102 ரன்களை புயலாக விளாசினார். அந்த ரன்னும், விவியன் ரிச்சர்ட்சின் அருமையான பீல்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வசப்படுத்த காரணமானது.

இந்தியா என்ன செய்தது?

முதல் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு மொத்தமே 18 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டிருந்தன. உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை 85 பந்துகளில் 102 ரன் குவித்த கிளைவ் லாயிட் பெற்றார். அப்போது தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. முதல் உலகக்கோப்பையில் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே தோற்கடித்தது.

ஆமை வேக கவாஸ்கர்

ஆமை வேக கவாஸ்கர்
எந்த அளவுக்கு இறுதி ஆட்டம் மனதில் நிற்குமோ அதே அளவு நம் காவஸ்கரின் ஆமை வேக ஆட்டமும்  உலகக் கோப்பைப் போட்டிகள் உள்ள வரை நினைவில் இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் அந்த அணி எடுத்த 330 ரன்களை  இந்திய அணி தொடக்கூட முடியாது என்று எல்லாருக்குமே தெரிந்திருந்ததுதான். ஆனாலும், ஓரளவுக்கு கவுரவமாக ஸ்கோரை இந்தியா எடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இந்திய அணியோ 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய காவஸ்கர் டெஸ்ட் ஆட்டம் போல டொக்..டொக்.. என டொக்கடித்து மிகமிக மந்தமாக விளையாடினார்.  60 ஓவர் முழுவதும் விளையாடிய அவர், கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் எடுத்த ரன்கள் வெறும் 36.  அவர் எதிர்கொண்ட பந்துகள் எத்தனை தெரியுமா? 160 பந்துகள்!  கவாஸ்கரின் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் கரும் புள்ளியாக அமைந்தது. 

- முத்தாரம், 17/01/2011