30/01/2011

1979 - மீண்டும் விஸ்வரூபம் காட்டிய வெஸ்ட்இண்டீஸ்


இரண்டாவது முறையும் இங்கிலாந்திலேயே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 4 ஆண்டுகள் கழித்து 1979ல் இரண்டாவது உலகக்கோப்பை ஜூன் 9 முதல் 21 வரை நடைபெற்றது. இத்தொடரையும் புரூடன்ஷியல் நிறுவனமே ஸ்பான்சர் செய்தது. முதல் உலகக்கோப்பை போலவே இத்தொடரிலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு பதிலாக கனடா களமிறங்கியது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், கனடா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. இதிலும் 15 போட்டிகளே நடை பெற்றன. வெங்கட்ராகவன் தலை மையில் இரண்டாவது முறையாக இத்தொடரில் களமிறங்கியது இந்தியா.

அரையிறுதிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து  வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்சின் சதம் மறக்க முடியாத ஒன்று. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பி தனது கிளாசிக் இன்னிங்ஸை ரிச்சர்ட்ஸ் வெளிப்படுத்தியது என்றும் நீங்காது நினைவாக இருக்கும். முதல் உலகக் கோப்பைப் போட்டியைப் போலவே இரண்டாவது தொடரிலும் வெஸ்ட்இண்டீஸ் கோப்பையை வெல்ல ரிச்சர்ட்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். எத்தனையோ மட்டையாளர்கள் வந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு வித்தியாசமான ஆளுமையாக இந்த உலகக்கோப்பையில்  மிளிர்ந்தார். இப்போட்டியில் 92 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி மீண்டும் உலகக்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.


டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் தவிர மற்ற இரு அணிகளைத் தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இலங்கையும், கனடாவும் தகுதி பெற்றன. இரண்டாவது உலகக் கோப்பையில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதிற்கில்லை. அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையிடம்கூட இந்தியா வெற்றிபெறவில்லை. இத்தொடரில் இந்தியா 3 லீக் ஆட்டங்கள் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை.   இந்தியா போல் இல்லாமல் பாகிஸ்தான் பலம் பொருந்திய அணியாக உருவெடுத்தது. அரையிறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்தது. இத்தொடரிலும் தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. இறுதியாட்டத்தில் 138 ரன் குவித்த விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


- முத்தாரம், 30/01/2011

No comments:

Post a Comment