ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் வழக்கமானது; சூடானில் நடந்த இந்தத் தேர்தல் வேறு ரகம். நாடு ஒன்றாகவே இருப்பதா அல்லது இரண்டாகப் பிரிப்பதா என்பதைத் தீர்மானிக்க தேர்தல் நடந்தது. தென் சூடான் புதிய நாடாக உருவெடுக்க பலமாக ஓட்டு விழுந்திருக்கிறது.
தென் சூடானை அடக்கி ஆண்ட வட சூடான் நிகழ்த்திய 40 ஆண்டுகால அத்துமீறல்களுக்கு பரிகாரமாக பாகப்பிரிவினைதான் தீர்வு என உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் மக்கள். பிரிவு உறுதியாகிவிட்ட நிலையில் உற்சாகக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன தென் சூடானில். ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை என்றாலே சொத்துகள், பொருட்களை மட்டுமல்ல, கடன்களைக்கூட பாதியாக பங்கிட்டுப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ஒரு நாடு பாகப்பிரிவினை கண்டால்..? இதுதான் இப்போது ஒருங்கிணைந்த சூடான் முன் நிற்கும் ஒரே கேள்வி!
ஆப்ரிக்க கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு சூடான். தென் சூடானில் ஆப்ரிக்க பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் அதிகம். வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்கள், நுபியான் இன மக்களின் ஆதிக்கம் அதிகம். தென் சூடான் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இதுதான் 1970ல் இரு பகுதிகளுக்கும் இடையே உள்நாட்டுக் கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போரால் 25 லட்சம் பேர் மடிந்ததுதான் மிச்சம். கலவரம் உச்சகட்டத்தை அடைந்தவேளையில் 2005ல் அமெரிக்கா உள்பட மேலைநாடுகள் தலையிட்டன. அப்போது போட்ட உடன்படிக்கையின்படிதான் இப்போது வாக்கெடுப்பு நடந்தது.
தென் சூடான் எண்ணெய் வளமும் தங்கச் சுரங்கங்களும் நிறைந்த வளமான பகுதி. மக்கள்தான் வறுமையில் இருக்கின்றனர். பக்காவான கட்டிடங்கள் கொண்ட ஒரு சுமாரான நகரம்கூட இல்லாத பகுதி அது. தெற்கின் வளங்களைச் சுரண்டி வடக்கு வளர்ந்துவிட்டது. எந்த வளங்களும் இல்லாத வட சூடான், இந்த வருமானத்தை வைத்தே செழிப்பாகிவிட்டது. இப்போதைய நிலையில் தென் சூடான் பொருளாதார ரீதியாக வட சூடானையே நம்பியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வட சூடான் வழியாகத்தான் கடலுக்குள் செல்கின்றன. இதில் பிரச்னை ஏற்பட்டால், சோமாலியா போல பசி, பட்டினியால் தென் சூடான் மக்கள் சாக நேரிடும்.
வட மற்றும் தென் சூடானுக்கு நடுவில் அபெய் என்ற பெரிய மாகாணம் உள்ளது. இதை யாருடன் இணைக்கலாம் என தனியாக வாக்குப்பதிவு விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது. இந்த மாகாணத்திலும் எண்ணெய் வளம் அதிகமுள்ளது என்பதால், இரு பிரதேசங்களும் இப்போதே மோதத் தொடங்கியுள்ளன. இதனால், கலவரங்கள் மீண்டும் எழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமனது கடன். ஒன்றுபட்ட சூடான் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் தொகை 3.6270 லட்சம் கோடி டாலர். இந்த கடனுக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
குங்குமம், 24-01-2011
No comments:
Post a Comment