07/02/2011

1983 - வெஸ்ட் இண்டீஸை ஓரங்கட்டிய கபில் ‘டெவில்’ஸ்!



வாழ்க்கையில் ஆச்சிரியமும் சந்தோஷமும் ஒருசேர கூடி வரும் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு அப்படிப்பட்ட ஒரு  மகத்தான ஆண்டுதான் 1983. கிரிக்கெட் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற ஆண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத  ‘பொன்’ நாள் அது.

மூன்றாவது உலகக்கோப்பை போட்டியை வழக்கம்போல மீண்டும் இங்கிலாந்திலேயே நடத்த முடிவு செய்தது ஐ.சி.சி. 1983 ஜூன் 9 முதல் 25 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 6 அணிகள் உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. இந்த முறை இலங்கையும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதால், அதுவும் நேரடியாகவே தகுதி பெற்றது. தகுதிச்சுற்றின் அடிப்படையில் 8வது அணியாக முதன்முறையாக களமிறங்கியது ஜிம் பாப்வே. இதற்கு முன்பு நடந்த இரு உலகக்கோப்பை போட்டிகளில் ஒவ் வொரு அணியும் தன் பிரிவில் இடம் பெற்ற   அணிகளு டன் ஒருமுறை மோதியது. இந்த முறை ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் 2 லீக் ஆட்டங்கள் என 6 போட்டிகள் விளையாட விதி மாற்றியமைக்கப்பட்டது.

‘ஏ‘ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகளும், ‘பி‘ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. இந்தமுறை 23 வயது நிரம்பிய கபில்தேவ் தலைமையில் இந்தியா களமிறங்கியது. இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் பலமிக்க வெஸ்ட்இண்டீஸ் அணியை ஓல்டு டிராஃபோர்டு நகரில் சந்தித் தது. இதில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன் வித்தியாசத் தில் இந்தியா தோற் கடித்ததுதான் உலகக் கோப் பையை வெல்ல பிள்ளையார் சுழியாக அமைந்தது.

அடுத்தடுத்த இரு வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டிய லில் வேகமாக முன் னேறிய இந்தியா, இரண்டாவது சுற்று லீக் போட்டியில் தடுமாறியது. அரையிறுதிக்கு தகுதிபெறுமா என்ற சந்தேகம் வேறு. முக்கிய ஆட்டத்தில் ஜூன் 18ல் ராயல் டன்பிரிட்ஜில் ஜிம்பாப்வேயைச் சந்தித்தது இந்தியா. 17 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து  தத்தளித்தது   இந்தியா.

உலகக் கோப்பைக் கனவு அம்பேல்தான் என இந்திய ரசிகர்கள் தலையில் கைவைக்க, பதட்டமே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிய கபில், முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 175 ரன் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கபில்தேவின் இந்த அதிரடி ஆட்டம்தான் இந்தியாவை அரையிறுதிக்கு தகுதி பெற வைத்தது.

இந்தியா தவிர வெஸ்ட் இண்டீஸ், இங் கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் அரை யிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந் தும் ஜூன் 22ல் மோதின. இந்தியாவை சுலபமாக வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற கனவில் இருந்தது இங்கிலாந்து. ஆனால், நடந்தது வேறு. இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இன்னொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது முறையாக வெஸ்ட்இண்டீஸ் இறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்த உலகக்கோப்பையில் கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லாத ஓர் அணியாகத்தன் சென்றது இந்தியா. ஆனால், யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விளையாடி, இறுதிப்போட்டி வரைக்கும் வந்தது. இறுதிப் போட்டியில  ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் கோப்பையை ஏந்தியதை எந்த ஒரு ரசிகரும் என்றுமே மறக்க முடியாது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் காலத்தால் என்றுமே மறக்கடிக்க முடியாது.

பரபரப்பான இறுதி ஆட்டம் ஜூன் 25ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத்தான் என  நிறைய பேர் அடித்து சத்தியம் செய்தார்கள். லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணியை ஒருமுறை தோற்கடித்ததால், நம்பிக்கையுடன் களமிறங்கியது இந்தியா. ஆனால், இந்தியாவைச் சுருட்டி உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக தக்க வைக்கலாம் என்ற மிதப்போடு இருந்தது வெஸ்ட்இண்டீஸ்.  அதற்கு ஏற்றார்போல முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குமேகூட நம்பிக்கை  நிச்சயம் இருந்திருக்காது. ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி வரை வந்ததே பெரிய விஷயம் என்று கேப்டன் கபில் நினைக்கவில்லை.

இந்த சொற்ப ரன்னை வைத்துக் கொண்டு நிச்சயம் வெல்ல முடியும் என்று வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார் கபில்.  கபில்தேவின் விடா முயற்சியும், அணிக்கு கொடுத்த உத்வேகமும், சிறப்பாக அணியை அவர் வழி நடத்தி சென்ற விதமும் லார்ட்ஸில் இந்தியா மாயாஜாலம் நிகழ்த்த காரணமாக இருந்தது.  குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை,  20 அடி தூரம் பந்து சென்ற திசையிலேயே ஓடி கபில் பந்தை பிடித்தது கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.

சுலபமான இலக்கு என்பதால், வெற்றி உறுதி என வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே முடிவு செய்துவிட்டனர். நமது வீரர்களுக்கும் நம்பிக்கையில்லை. ‘நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். பவுலர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி தரவேண்டும்‘ என ஊக்கப்படுத்தினார் அணித் தலைவர் கபில்தேவ். அவர் சொன்னது போலவே பவுலர்கள் மிகத்துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 76 ரன்களுக்குள் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய இந்தியா, இறுதியில் 140 ரன்களுக்கெல்லாம் வெஸ்ட் இண்டீஸை  சுருட்டியது.

 கடைசி  விக்கெட்டாக ஹோல்டிங் வீழ இந்திய வீரர்கள் வெற்றி முழக்கமிட்டனர். ஸ்டம்புகளை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓட்டம் பிடிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நமது தேசியக்கொடி உயரப் பறந்தது. முதன்முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
முதல் இரு உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு லாயிட் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு கபில்தேவ் கிடைத்தார். மொஹிந்தர் அமர்நாத் இந்த தொடர் முழுவதும் நல்ல மட்டையாளராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் பரிமளித்தது இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமும்கூட.


ஹைலைட்ஸ்



முதல்முறையாக 1983 உலகக்கோப்பையில்தான் ஃபீல்டிங் சர்க்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு 66 க்கு 1 என்ற விகிதத்தில்தான் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய இந்தியா, 6 வெற்றிகளை பதிவு செய்தது. இந்தமுறையும் தொடர்நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை.

இறுதியாட்டத்தில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவரே அரையிறுதி ஆட்டத்திலும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இறுதியாட்டத்தில் இந்தியாவை மிரட்டி உறுமிக் கொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை, 18 மீட்டர் தூரம் பந்து சென்ற திசையிலேயே ஓடி அருமையாக கபில்தேவ் கேட்ச் பிடித்ததே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

1983 உலகக்கோப்பைக்குப் பிறகு கிளைவ் லாயிட், பாப் வில்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்ஸன், ரோட்னி மார்ஸ், கிளன் டர்னர் என புகழ்பெற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

- முத்தாரம், 2011 ஜனவரி






No comments:

Post a Comment