14/03/2011

1987- சாதித்த ஆஸ்திரேலியா கோட்டைவிட்ட இந்தியா!


இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதல் உலகக் கோப்பை.   முதல்முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து  நடத்திய தொடர்.  60 ஓவரிலிருந்து 50 ஓவர் போட்டியாக நடந்த முதல் உலகக்தொடரும் இதுதான். 1983-ல் விளையாடிய அதே 8 அணிகள், அதே லீக் சுற்று முறை இப்போதும் பின்பற்றப்பட்டது.  இந்த உலகக்கோப்பையை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ததால், ‘ரிலையன்ஸ் உலகக்கோப்பை’ என அழைக்கப்பட்டது.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. அக்டோபர்  9 முதல் நவம்பர் 8 வரை போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணி இரண்டாவது முறையாக கபில்தேவ் தலைமையில் களமிறங்கியது.

‘ஏ’ பிரிவில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தின. இரு அணிகளும் 6 லீக் ஆட்டங்களில் தலா 5 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சுலபமாக தகுதிபெற்றன. ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மல்லுக்கட்டின. இறுதியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் 3 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற வெஸ்ட்இண்டீஸ், முதன்முறையாக லீக் சுற்றோடு மூட்டை கட்டியது பரிதாபம்!

இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்தே ஆட்டத்தின் போக்கை வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு! பம்பாயில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவையும், லாகூரில் நடந்த இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி நடந்த ஈடன்கார்டன் மைதானம் 95 ஆயிரம் ரசிகர்களுடன் நிரம்பி வழிந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டி இது. இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்ததால், ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தில் 253 ரன் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இங்கிலாந்து 246 ரன் மட்டுமே எடுத்து 7 ரன்னில் கோப்பையைக் கோட்டைவிட்டது. முதன்முறையாக ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்றது.  குறைந்த ரன்னில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது அப்போது.


ஹைலைட்ஸ்

இந்த உலகக்கோப்பையில் மறக்க முடியாத  நிகழ்வுகள் சில இருக்கின்றன. லாகூரில் பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீசும் மோதிய லீக் ஆட்டம் என்றும் மனதில் நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 216 ரன்களை பாகிஸ்தான் துரத்தியது. 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை. அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கர்ட்னி வால்ஷிடம் கேப்டன் ரிச்சர்ட்ஸ் பந்தைக் கொடுத்தார். பந்துகளை எதிர்கொண்ட அப்துல் காதர் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி கடைசி பந்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதை கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் படுத்து கண்ணீர் விட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இந்தத் தோல்விதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் பறித்தது. முதல் முறையாக அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் மூட்டைக் கட்டியது.

முதல் செஞ்சுரியும், ஹாட்ரிக் விக்கெட்டும்

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இத்தொடருடன் ஓய்வு பெற போவதாக இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார்.  டெஸ்ட் போட்டியில் 34 சதங்களை விளாசியிருந்த கவாஸ்கர், ஒரு நாள் போட்டியில் ஒரு சதம்கூட அடித்ததில்லை. கடைசியாக உலகக் கோப்பையிலாவது சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஒவ்வொரு லீக் போட்டியாக முடிந்தது. கடைசி லீக் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மட்டுமின்றி கவாஸ்கரின் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது.  நியூசிலாந்த் எடுத்த 221 ரன்களைத் துரத்திய இந்தியா, 33வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கவாஸ்கர் இந்தப் போட்டியில் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதுதான் கவாஸ்கர் முதாலவதாகவும் கடைசியாகவும் எடுத்த ஒரு நாள் போட்டியின் சர்வதேச சதம்.

இதேபோட்டியில் இந்திய பந்துவீச்சாளர் உலகக் கோப்பையில் புதிய சாதனையைப் படைத்தார். அது, சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ரூதர்போர்ட், ஸ்மித், சேட்ஃபீல்டு ஆகிய மூன்று பேரையுமே பவுல்டு மூலம் சேட்டன் சர்மா வெளியேற்றினார். உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் விக்கெட் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய நவ்ஜோத் சித்து சிங் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரர் என்ற பெருமையோடு,  ‘சிக்ஸர் சித்து’ என்ற பெயரையும் பெற்றார்.

இந்த உலகக்கோப்பையிலும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. இறுதியாட்டத்தில் 75 ரன் குவித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- முத்தாரம், 2011 ஜனவரி

No comments:

Post a Comment