22/08/2011

வெளிநாடுகளில் வலம் வருது நம்மூர் ஜிக்குபுக்கு!


‘பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்... பேரீச்சம்பழம்...’ ‘கரகாட்டக்காரன்’ ஸ்டைலில் இந்த டயலாக்கை திருச்சி பொன் மலையில் யாராவது சொன்னால், ரயில்வே பணிமனை ஊழியர்கள் அடிக்க வந்துவிடுவார்கள். இந்தியாவில் இயக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் மறு அவதாரம் எடுப்பது இங்குதான். அப்படி புத்துயிர் பெற்ற எஞ்சின்கள் ‘ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு’ என வெளிநாடுகளில் வலம் வருகின்றன. இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் எஞ்சின்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போயிருக்கின்றன!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீராவி எஞ்சின்கள் தயாரிப்பதற்காக 1897ல் நாகப்பட்டினத்தில் ரயில்வே பணிமனை தொடங்கினார்கள். போக்குவரத்து வசதி சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, 1926-ல் திருச்சி பொன்மலைக்கு பணிமனை இடம் பெயர்ந்தது. அந்தக் காலகட்டத்தில மீட்டர்கேஜ் எஞ்சின்கள் தயாரிப்பே இங்கு பிரதானம்.

1962-ம் ஆண்டுக்குப் பிறகு டீசல் ரயில் எஞ்சின்கள் தயாரிக்கும் பணி களைகட்ட ஆரம்பித்தது. 1993-ம் ஆண்டுவரை இதுவே தொடர்ந்தது. அதன்பிறகு படிப்படியாக அகலப்பாதைக்கு மாறியதால் மீட்டர்கேஜ் டீசல் எஞ்சின்களுக்கு வேலையே இல்லாமல் போனது. அவை எதற்குமே உபயோகப்படாது என்று நினைத்த வேளையிலதான் ‘ரீமாடலிங் கான்செப்ட்’ அறிமுகமானது. அதாவது, இந்த ரயில் எஞ்சின்களில் சில மாறுதல்கள் செய்து அகலப்பாதையில் ஓடுவது போல மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கியது.

உலகளவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் இருப்பது இந்தியாவில்தான். நமக்குத் தேவையானதை நாமே தயார் செய்துகொள்கிறோம். ஆனால், ஏழை நாடுகளோ வெளிநாடுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். குறிப்பா ஆப்ரிக்க நாடுகள் பலவும் நம்பியிருப்பது இந்தியாவைத்தான். இது ஒருவகையில் அந்த நாடுகள் ரயில்வே துறையில் வளர நாம் செய்யும் உதவி. இதற்காகவே இரு அமைப்புகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்த அமைப்புகள் மூலமாகத்தான் மீட்டர்கேஜ் எஞ்சின்களை அந்தந்த நாட்டு வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரியும், அகலப்பாதையில ஓடுவது போலவும் ரீமாடலிங் செய்து அனுப்புகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்ப வேலையை இந்தியாவிலேயே பொன்மலை ரயில்வே பணிமனை மட்டும்தான் செய்கிறது. முதன் முதலாக 1993-ல் இந்தப் பணி தொடங்கியது. மலேசியாவுக்கு இங்கிருந்து முதல் ரீமாடலிங் எஞ்சின் பயணமானது. 2010-ம் ஆண்டு வரை அதிகபட்சமாக மலேசியாவுக்கு 48 எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. தான்சானியாவுக்கு 14, மியான்மருக்கு 16, சூடானுக்கு 10, மொசாம்பிக்குக்கு 26 ரயில் எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. சூடானில் தயாரிக்கப்பட்ட ஹிடாச்சி ரக 4 மீட்டர்கேஜ் எஞ்சின்களை அகலப்பாதைக்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கொடுத்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 129 மீட்டர்கேஜ் எஞ்சின்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

பொதுவாக பழைய பொருட்களை என்னதான் ரீமாடலிங் செய்து பயன்படுத்தினாலும் உடனுக்குடன் பழுதாவது இயல்பு. ஆனால், பொன்மலை பணிமனையிலிருந்து இத்தனை ஆண்டுகளில் இங்கிருந்துபோன எந்த ரயில் எஞ்சினும் ரிப்பேர் ஆகி திரும்ப வரவே இல்ல. சாதாரணமாக பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து ஒரு எஞ்சின் வெளியே சென்றால், 8 ஆண்டுகள் கழித்துத்தான் மீண்டும் பராமரிப்புக்கே வரும். அந்தளவுக்கு பக்காவா இங்கே அனுப்புகிறார்கள். எஞ்ஜின் அனுப்புவதற்கு முன்பே அந்தந்த நாட்டுப் பொறியாளர்கள் இங்கு வந்து பயிற்சி எடுத்துட்டு சென்றுவிடுகிறார்கள். ஏதாவது சிறு பிரச்சினை வந்தால், அதை அவர்களே சமாளிக்க இந்தப் பயிற்சி உதவுகிறது.

இப்படி ரீமாடலிங் செய்யப்பட்ட மீட்டர்கேஜ் எஞ்சின்களை ஏழை நாடுகளுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நம்மூரில் ரயில்வே பிளாட்பாரங்களில் ஷன்டிங் அடிக்கவும் ரீமாடலிங் எஞ்சின்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

துரும்பைக்கூட இரும்பாக்குறாங்க நம்ம ஆளுங்க!

 குங்குமம், 22/8/2011

No comments:

Post a Comment