29/09/2019

நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்

அப்பா (சமுத்திரகனி) இல்லாத அரும்பொன் (சிவகார்த்திகேயன்) உடன் பிறக்காத துளசியுடன் (ஐஸ்வர்யா ராஜேஷ்) ‘பாசமலர்’ வாழ்க்கை வாழ்கிறார். இரு பெரியப்பாக்கள் (சுப்பு பஞ்சு, வேல ராமமூர்த்தி) இருந்தும், அவர்களுடைய உதவி இல்லாமல் தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் தடைபடுகிறது. வேறு வழியில்லாமல் சிவகார்த்திக்குப் பிடிக்காத அய்யனாரை (நட்டி) ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்கிறார். ஒரு கொலையும் அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளும் உறவுகளை ஒன்றிணைத்ததா இல்லையா என்பதுதான் ‘ நம்ம வீட்டு பிள்ளை’யின் கதை.

 ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற ஒரு குடும்பக் கதையைச் சொன்ன பாண்டிராஜ், இந்த முறை அதை விஸ்தரித்து பெரிய குடும்பக் கதையாகக் கொடுத்து கூட்டாஞ்சோறு ஆக்க முயற்சி செய்திருக்கிறார். குடும்பக் கதைகளை வைத்து படம் எடுக்கும் போக்கு அருகி வரும் காலத்தில், உறவுகளை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். அண்ணன் - தங்கை பாசக் கதைகள் தமிழுக்குப் புதிதில்லை என்றாலும், தன்னுடன் பிறக்காத தங்கைக்காக அண்ணன் உருகி மருகும் ‘பாசமலர்’ கதைக்கு அட போட வைக்கிறது. தம்பி உயிருடன் இல்லாத குடும்பத்துடன் ஒட்டாத பங்காளிகள், பாசம் காட்டாத தாய்மாமன்கள், அவர்களுக்காக உருகும் தாத்தா என ஒரு கிராமத்து பெரிய குடும்பத்தின் கதையைக் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அண்ணன் - தங்கை பாசக் கதை என்றால், தங்கைக்கு வரும் கணவன் வில்லனாகவும், அண்ணனுக்கு பிடிக்காதவனாகவும் இருக்க வேண்டும் என்ற தமிழ்ப் படத்தின் இலக்கணத்துக்கு இந்தப் படமும் தப்பவில்லை. ஆனால், சிவகார்த்திக்கும் நட்டிக்கும் முன்பகை இல்லாத வேளையில் இருவரும் முறுக்கிக்கொள்வது ஏன் என்பதற்கும் படத்தில் தெளிவாக விடையும் காட்சிகளும் இல்லை. ஒரு பெரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவம் யார், யார் யாருக்கு உறவு என்பதைப் புரிந்துகொள்ளவே அரை மணி நேரத்தை படம் விழுங்கிவிடுகிறது. புரியும்படியான பாத்திர வார்ப்பில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

படத்தின் அடிநாதமாக இருந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யா, சிவகார்த்திக்கு உடன் பிறக்காத தங்கை என்ற காட்சி,  போகிற போக்கில் காட்டி முடித்துவிடுகிறார்கள். சமுத்திரகனியின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் நீட்டி முழக்காமல் கொடுத்ததற்கு இயக்குநரைப் பாராட்டலாம் என்றாலும், அவர் மின்சாரம் பாய்ந்து சாகும் காட்சியை அபத்தமாகக் காட்டி விழி பிதுங்க வைக்கிறார்.

 படம் தொடங்கியது முதல் முடியும் வரை சடங்கு, சம்பிரதாயம், குடும்ப விழா என இழுவையாக இழுக்கும் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருந்தால், சுவாரசியம் கொஞ்சம் கூடியிருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக  பாசம், வேஷம், காதல், மோதல் எனக் காட்டிவிட்டு, கிளைமாக்ஸ் காட்சிக்காகவே புகுத்தப்படும் கொலையும், அதையொற்றி வரும் காட்சிகளும் படத்தின் முழு கட்டமைப்பையும் காலி செய்துவிடுகிறது. அறிமுகக் காட்சியில் கபடி வீரனாக சிவகார்த்தியைக் காட்டுவது ஏன் என்ற கேள்வி படம் முடிந்த பிறகும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அரும்பொன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்தி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கிராமத்து இளைஞன், அண்ணன், மகன், நண்பன், காதலன் என படத்தில் ஜமாய்த்திருக்கிறார் சிவகார்த்தி. வழக்கம்போல அவருடைய டைமிங் காமெடியும் வசனத்துக்கு பலம் சேர்க்கிறது. சிவகார்த்தியின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிராமத்தில் எளிய வீட்டில் வாழும் பெண்ணாகவும் பாசம் காட்டும் தங்கையாகவும், கொடுமை செய்யும் கணவனின் மனைவியாக ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனு இம்மானுவேல் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.

காமெடியனாக வரும் சூரி வழக்கம்போல் நையாண்டி செய்திருக்கிறார். சிவகார்த்தி - சூரி காம்பினேஷன் மீண்டும் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. தாத்தாவாக படம் முழுவதும் வரும் பாரதிராஜா, வசனங்களில் வார்த்தை விளையாட்டு விளையாடிவிடுகிறார். சூரியின் மகனாக வரும் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்பு, குறும்பு வசனங்களால் சிரிக்க வைக்கிறான். வில்லன் இல்லாத குறையைப் போக்கியிருக்கிறார் நட்டி. முன்னணி காமெடியனாக உயர்ந்துவரும் யோகிபாபு, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஏன் நடித்தார் என்றே புரியவில்லை. அர்ச்சனா, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, கராத்தே வெங்கடேஷன், ஆதிரா என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் வந்து செல்கின்றன.

படத்துக்கு இசை டி. இமான். காந்த கண்ணழகி, ஜிகிரி தோஷ்த், மயிலாஞ்சி போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.  நிரவ் ஷாவின் படமாக்கம் கச்சிதம். குடும்ப கதையைத் திரைக்கதையாக்கியதில் குறையில்லை என்றாலும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற ஹைதர்காலத்து  பாத்திர வார்ப்புகளால் மெகா சீரியலைப் பார்த்த உணர்வை ‘நம்ம வீட்டு பிள்ளை’ தருகிறான்.

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment