சீறி பாயும் வேகத்தில் பைக்கிலோ காரிலோ செல்வது
ஆண்களுக்கான சாகசம் மட்டுமல்ல. அவர்களுக்கு சரி சமமாக பெண்களாலும் சவால் விட முடியும் என்பதற்கு சரியான உதாரணம் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பைக் ரேஸர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இந்தச் சென்னைப் பெண். பெண் பைக் ரேஸில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கெல்லாம் இவர்தான் ஆதர்ஷனம்!
பைக்கில் பறக்க ஆசை
அலிஷாவின் அப்பா ஆர்.ஏ. அப்துல்லா ஒரு பைக் ரேஸ் வீரர். பைக் ரேஸில் ஏழுமுறை தேசிய சாம்பியன். அப்துல்லா பைக் ரேஸ் பயிற்சிக்கு போகும்போதெல்லாம் சிறுமியாக இருந்த அலிஷாவும் உடன் செல்வது வழக்கம். சீறும் பைக்கில் அமர்ந்து அவர் செய்யும் ரேஸ் சாகசங்களைக் கண்டு அதில் லயித்துபோவார் அலிஷா. தன் அப்பாவைபோல தானும் பந்தய தடத்தில் பறக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே அவருக்கு றெக்கை முளைத்து பறந்தது ஆசை.
அலிஷாவுக்கு 9 வயது இருக்கும்போது ‘கோ கார்ட்டிங்’ எனப்படும் 4 டயர்கள் கொண்ட சிறிய பந்தயக் கார்களை ஓட்டி பயிற்சி பெறத் தொடங்கினார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தன்னை மெருகேற்றிக்கொண்டார். 11 வயதில் போட்டிகளில் பங்கேற்று வெல்லவும் தொடங்கிவிட்டார் அலிஷா. அவருக்கு 13 வயதானபோது எம்.ஆர்.எஃப். நேஷனல் கோ கார்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைவிட வயதில் மூத்தவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று ஆச்சரியமூட்டினார் அலிஷா.
கார் டூ பைக்
அலிஷாவின் கோ கார்டிங் பயணத்தில் 2004-ம் ஆண்டு மைல்கல்லாக அமைந்தது. ஜே.கே. டயர் தேசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் பங்கேற்ற போட்டியில் அலிஷா பங்கேற்றார். இந்தப் போட்டியில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் ஆண்களோடு போட்டிப்போட்டு அவர் பந்தயத்தில் பங்கேற்றது அவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. கார் பந்தயத்தில் கொஞ்சம்கொஞ்சமாக அலிஷா முன்னேறிவந்த வேளையில் அதிலிருந்து விலகும் சூழலும் வந்தது.
மற்ற விளையாட்டுகளைப் போல அல்லாமல், கார் பந்தயம் ரொம்பவே காஸ்ட்லி. எனவே அலிஷாவின் அப்பா தன் மகளின் கவனத்தை பைக் ரேஸ் பக்கம் திருப்ப முடிவு செய்தார். மேலும் அவருடைய அப்பா அப்துல்லா பைக் ரேஸ் வீரர் என்பதால், அந்தப் பந்தயத்தின் நுணுக்கங்களைச் சுலபமாக தன் மகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்று நம்பினார். இதுபோன்ற காரணங்களால் பைக் பந்தயத்தில் கவனம் செலுத்தும்படி அலிஷாவிடம் அப்துல்லா கூறினார். ஆனால், கார் பந்தயங்களில் பங்கேற்றுக்கொண்டிருந்த அலிஷா, பைக் பந்தயங்களுக்கு மாறுவது கடினமாக இருந்தது.
பைக்கில் வந்த பெருமை
பைக் பந்தயத்தில் தன்னால் ஜொலிக்க முடியுமா என்று அலிஷாவுக்குப் பயமும் இருந்தது. ஆனால், அவருடைய அப்பா அதை மிக எளிதாக்கினார். இயல்பாகவே அலிஷாவின் அப்பா கண்டிப்பானவர். அந்தக் கண்டிப்பும் வழிகாட்டலும் அலிஷாவை பைக் பந்தயங்களுக்கு தயார்ப்படுத்தியது. தொடக்கத்தில் குறைந்த திறன் கொண்ட பைக்குகளை ஓட்டி அலிஷா பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகே பந்தயங்களுக்கு ஏற்ற சூப்பர் ரக பைக்குகளை ஓட்டி, பைக் பந்தயங்களுக்கும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார் அலிஷா.
பைக் பந்தயத்துக்கு தயாரான பிறகு 2009-ல் தேசிய பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் அலிஷா பங்கேற்றார். இதில் 600 சிசி திறன் கொண்ட பைக்கை அலிஷா ஓட்டினார், இந்தப் போட்டியில் 15 ஆண்கள் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரே பெண் அலிஷா மட்டுமே. 15 ஆண்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு அலிஷா பைக்கில் சீறிப் பாய்ந்தார். 302 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த இந்தப் போட்டியில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கைச் செலுத்தி, அலிஷா மூன்றாமிடத்தைப் பிடித்தார். 12 ஆண்களை முந்திக்கொண்டு, அவர் மூன்றாமிடத்தைப் பிடித்தது சாதாரண விஷயமல்ல. இதன்மூலம் இந்தியாவின் முதல் பைக் ரேஸர் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருமைக்கும் சொந்தக்காரரானார்.
மீண்டும் கார் ஆசை
பைக் பந்தயங்களில் அலிஷா பங்கேற்றாலும், கார் பந்தயங்கள் மீதான ஆசை அவருக்கு விடவே இல்லை. மீண்டும் அந்த ஆசை அவருக்குத் துளிர்த்தது. கொஞ்சமும் யோசிக்காமல் மீண்டும் கார் பந்தயங்களுக்குத் திரும்பினார். அதற்கு சென்னை இருங்காட்டுக்கோட்டை தடத்தில் அவர் சந்தித்த விபத்தும் ஒரு காரணம். பைக் பந்தயங்களிலிருந்து விலகி, கார் பந்தயத்தில் அவர் மீண்டும் கால் பதித்த பிறகு, அதிலும் சீரான முன்னேற்றத்தைக்
காண ஆரம்பித்தார்.
2010-ம் ஆண்டில் வோக்ஸ்வேகன் போலோ கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று 10-வது இடத்தைப் பிடித்தார் அலிஷா. அதற்கு அடுத்த ஆண்டு அதே போட்டியில் ஏழாவது இடத்துக்கு முன்னேறினார். கோவையில் நடந்த கார் பந்தயம் ஒன்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து முதன் முறையாக வெற்றி மேடையில் ஏறினார் அலிஷா. அந்த வகையில் மேடை ஏறிய முதல் வீராங்கனையும் அலிஷாதான். அந்தப் போட்டியில் அவர்தான் முதலிடம் வந்திருக்க வேண்டும். அதிக நேரம் முன்னணியில் இருந்த அலிஷா, கடைசியில் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
உடல் தகுதி வேண்டும்
கார் மற்றும் பைக் பந்தயங்கள் ஆண்களின் விளையாட்டாகவே அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அந்த விளையாட்டில் பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் அலிஷா அப்துல்லா. இந்த விளையாட்டுகளில் அவர் பதித்த அழுத்தமான தடம், பல இளம் பெண்களை இந்த விளையாட்டுக்குள் இழுத்துவந்திருக்கிறது. தற்போது 30 வயதாகிவிட்ட அலிஷா, தன்னைப் போல இளம் பெண்களை பைக் பந்தயக்காரர்களாக மாற்றவும் ஆர்வம் காட்டிவருகிறார். இதற்காகப் போட்டிகள் கூட வைத்து
பெண்களுக்கு தைரியமூட்டிவருகிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு வாழும் உதாரணமாகியிருக்கிறார் அலிஷா. இளம் பெண்களால் இந்தப் பந்தயங்களில் நிச்சயம் சாதிக்க முடியும் என்று உற்சாகமூட்டுகிறார் அலிஷா. “பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு உடல் தகுதியும், தாக்குப் பிடிக்கும் திறனுமே முக்கியம். ஆனால், பெண்களைப் பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லி அவர்களை அப்படியே ஆக்கிவிட்டோம். உடல் தகுதியோடு உள்ள எந்தப் பெண்ணும் இந்தப் பந்தயங்களில் ஈடுபட முடியும்” என்கிறார் அலிஷா.
- இந்து தமிழ், 31/03/2019

No comments:
Post a Comment