விவசாயியாக மக்களோடு மக்களாகக் கலந்திருக்கிறார் ராணுவ உளவு அதிகாரியான கதிர் (சூர்யா). பிரதமரான சந்திரகாந்த் வர்மாவை (மோகன்லால்) கொல்லத் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது வில்லன் கூட்டம். பிரதமரைக் கா(ப்பான்)க்கும் பணியில் சூர்யா வந்துசேருகிறார். பிரதமரை சூர்யா காப்பாறினாரா, அந்த வில்லன் கூட்டம் யார், எதற்காக பிரதமரைக் கொல்ல திட்டமிடுகிறது போன்ற கேள்விகளுக்கு கமர்ஷியலாக விடை சொல்கிறான் ‘காப்பான்’.
‘அயன்’, ‘மாற்றான்’ பட வரிசையில் இணைந்திருக்கிறது கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி. விறுவிறுப்பாக கதை சொல்லும் கே.வி. ஆனந்த், இந்தப் படத்திலும் அதை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இரண்டே முக்கால் நேர படத்தை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்தியிருக்கிறார். தீவிரவாதம், பாகிஸ்தான் சதி, விவசாயம், கார்ப்பரேட், அரசியல், எஸ்பிஜி, ராணுவ புலனாய்வு எனப் பல விஷயங்களையும் துணைக்குச் சேர்த்து கூட்டாச்சோறு படைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பிரதானமாகத் தொற்றி நிற்கும் பிரதமரின் உயிருக்கு உலை வைக்கும் கூட்டத்தின் சதியைத் துப்பறியும் கதையா, சமகால விவசாய பிரச்னையைத் தீர்க்கும் கதையா என்று சொல்ல முடியாமல் சங்கிலி தொடர்பு இல்லாமல் அறுந்துவிழுகிறது திரைக்கதை. இது படத்துக்கு பெரும் பலவீனமாக அமைந்துவிடுகிறது.
விவசாயம், விவசாய விளை நிலங்களை வளைக்க நினைக்கும் கார்ப்பரேட் மூளையைப் பற்றி படம் பேசியிக்கிறது. ஆனால், தீவிரமாகப் பேசக்கூடிய இந்த விஷயங்களை திரைக்கதை நகர்வுக்காக மேம்போக்காக இயக்குநர் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நெகட்டிவ் தோற்றத்தில் காட்டி அதைப் பாசிட்டிவாக காட்டும் உத்தியைப் படம் முழுவதுமே இயக்குநர் நிரவிவிட்டிருக்கிறார். கதையின் ட்விஸ்டுகளாக இருந்திருக்க வேண்டிய இந்த உத்தியில் புதுமையும் இல்லை சுவாரசியமும் இல்லை.
விளைந்த பயிர்களை உண்ணும் சிலிபெரா பூச்சிகள் பகீர் ரகங்கள்.
இந்தியாவின் சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவரை ஒரு கார்ப்பரேட் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதெல்லாம் அதீத கற்பனை. பிரதமரின் அறையிலேயே ஒட்டுக் கேட்பு சாதனங்கள் இருப்பது, பிரதமரைச் சுற்றி இருப்பவர்களே கருப்பு ஆடுகளாக இருப்பது என மிகை கற்பனைகளுக்கும் படத்தில் பஞ்சமில்லை. பிரதமரைக் காக்கும் எஸ்பிஜி படையை இவ்வளவு பலவீனமாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. தற்போதைய பிரதமர் தோற்றத்தில்வரும் மோகன்லால் முந்தைய ஆட்சியைப் பற்றி குறைகூறி பேசுகிறார்; பாகிஸ்தான் மக்கள் மீதும் கருணை காட்டி பேசுகிறார். இதில் ஏதேனும் அரசியல் குறியீடு இருக்கிறதா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
மலிவான இரட்டை அர்த்த வசனங்களை முன்னணி நாயகனான சூர்யா பேசியிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. வில்லனாக வரும் பொம்மன் இரானியின் தகிடுதத்தங்கள் எல்லாம் அறிந்தும் அவரை பிரதமர் ஏன் விட்டுவைத்தார் என்ற கேள்விக்கும் படத்தில் விடை இல்லை. யார் உடம்பில் வேண்டுமானாலும் குண்டு வெடிப்பதைப் பார்க்கும்போது நகைச்சுவை இல்லாத குறையைப் படம் போக்கிவிடுகிறது. பிரதமர் இறந்தவுடன் அவருடைய வாரிசு பிரதமராக ஆவதைக் காட்டி வாரிசு அரசியலையும் படத்தில் காட்டியிருப்பது நல்ல உத்தி.
புலனாய்வு அதிகாரி, பிரதமரைக் காக்கும் முதன்மை அதிகாரி, விவசாயி என வெவேறு கெட்டப்புகளில் வருகிறார் சூர்யா. ஆனால், விரைப்பான மிடுக்கான அதிகாரி வேடம் அவருக்குக் கச்சிதம். ‘துப்பாக்கிச் சத்தம் கேட்டா பதுங்குறவங்களுக்கு மத்தியில், நெஞ்சைக் காண்பித்து துப்பாக்கிக் குண்டை வாங்குறவங்க நாங்க’ என சில இடங்களில் வசனம் பேசி சூர்யா ஈர்த்திருக்கிறார். பிரதமராக மோகன்லால் பொறுமையாக நடித்திருக்கிறார். அவருடைய மலையாள தமிழும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்திவிடுகிறது.
மோகன்லாலின் மகனாகவும் பிறகு பிரதமராகவும் வரும் ஆர்யாவுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. என்றாலும், வழக்கமாக துடுக்குத்தனத்தோடு நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் சாயிஷா, சூர்யாவைச் சுற்றிசுற்றி வருகிறார். கார்ப்பரேட் வில்லனாக வரும் பொம்மன் இராணியின் உடல்மொழியும், கொலைகளை செய்யும் சிராக் ஜானியின் நடிப்பும் கச்சிதம். சமுத்திரகனி, தலைவாசல் விஜய், பிரேம், பூர்ணா, நாகி நீடு, உமா பத்மநாபன் எனப் படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. படத்துக்கு இசை ஹாரீஷ் ஜெயராஜ். குழந்தைகள் பாடும் பாடலை தவிர எதுவும் மனதில் ஒட்டவில்லை.
எதையோ சொல்ல வந்து குறி தப்பி நிற்கிறான் ‘காப்பான்’.
மதிப்பெண்: 2 / 5
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment