சாலை விதிகளை அலட்டிக்கொள்ளாத ஒரு பைக்ரேஸர் (ஜி.வி.பிரகாஷ்). அவருக்கு ஓர் அக்கா (லிஜோமோல் ஜோஸ்). பாசமலர் வாழ்க்கை வாழ்கிறார்கள். அக்காவின் வாழ்க்கையில் நுழைகிறார் ஒரு போக்குவரத்து சார்ஜன்ட் (சித்தார்த்). பைக்ரேஸருக்கும் போக்குவரத்து சார்ஜன்டுக்கும் ஏற்கெனவே முன்விரோதம். மூவரையும் முக்கோணப் புள்ளியில் இணைக்கிறது வாழ்க்கைச் சக்கரம். அதில் வெளிப்படும் பாசம், நேசம், பரிவு, பிரிவு, சோகம், கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளின் சங்கமம்தான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.
சாலை விதிகளைக் கொஞ்சமும் மதிக்காத ஒரு பைக் ரேஸரையும் போக்குவரத்து காவல் பணியை ஆத்மார்த்தமாகச் செய்யும் போக்குவரத்துக் காவலருக்குமான வாழ்க்கையை முடிச்சுப்போட்டு படம் எடுத்திருக்கும் இயக்குநர் சசியைப் பாராட்டலாம். பைக் ரேஸ், டிராஃபிக் விதிமுறை என்று படத்தைக் கடத்தி செல்லாமல், அதில் மனித உணர்வுகளை சம விகிதத்தில் கலந்திருப்பது திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.
சென்னையில் ஆபத்தாக விளையாடும் பைக்ரேஸ்களின் பின்னணியில் நடக்கும் விபரீதமான பந்தயத்தையும், அற்ப பந்தயத்துக்காக உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் பைக்ரேஸர்களின் துடுக்குத்தனமான வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். சென்னையின் பரபரப்பான சாலையில் நடக்கும் படபடக்க வைக்கும் பைக் ரேஸ் காட்சி, பைக் ரேஸர்கள் எமனோடு விளையாடுவதை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. போக்குவரத்துக் காவலர்களுக்கும் பைக்ரேஸர்களுக்குமான சடுகுடு ஆட்டத்தையும் உள்வாங்கி படமாக்கியிருக்கிறார்கள்.
ஆபத்தான பைக்ரேஸ் விட்டதால் ஜி.வி. பிரகாஷை அசிங்கப்படுத்தி கைது செய்கிறார் போக்குவரத்து காவலர் சித்தார்த். இது தெரியாமல் தம்பிக்கும் தன்னை விரும்புபவருக்கும் இடையே இருதலைக் கொல்லி எறும்பாகத் தவிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்திய விதம் பாராட்டும்படியாக உள்ளது. பைக் ரேஸ் - போக்குவரத்துக் காவலர் மோதல் என்பது மாமா - மச்சான் மோதலாக மாறும்போதும் அதே டெம்போவில் படம் பயணிப்பது ரசிக்க வைத்துவிடுகிறது. சித்தார்த் - ஜிவிபி இருவருக்குமான மோதலாக மட்டுமே படத்தை முழுமையாக நகர்த்தாமல், அதே அளவுக்கு அக்கா - தம்பி பாசப் பிணைப்பையும் காட்சிப்படுத்தியதில் இயக்குநர் ஸ்கோர் செய்துவிடுகிறார். பெண் உடைகளை ஆண்கள் அணுகும்விதத்தைப் பற்றி பேசியிருப்பதும் திரைக்கதையோட்டத்துக்கு வலு சேர்க்கிறது. படத்தில் ஆங்காங்கே எமோஷனல் ‘டச்’களை அள்ளித் தெளித்திருப்பது ரசிக்க வைக்கின்றன.
தொடக்கம் முதல் உணர்வுகளின் சங்கமமாக செல்லும்
திரைக்கதையில் முரட்டு வில்லன், வில்லனுடன் சித்தார்த் மோதல் எனக் காட்சி அமைப்புகள் வழக்கமான சினிமா மசாலாவுக்குள் சென்றுவிடுவது பெரும் குறை. மாமாவையும் மாச்சானையும் இணைப்பதற்காகவே ஒரு வில்லன் தேவைப்பட்டிருக்கிறார் என்ற அளவில்தான் அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதுவும் அந்தக் கால் மணி நேர கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த படத்துக்கு பெரிய ஸ்பீடு பிரேக்காக விழுகிறது. கடைசியில் போக்குவரத்து காவலரே பைக் ரேஸ் செல்வது எதைக்கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்பதை இயக்குநர் மறந்துபோனது பெரும் பலவீனம்.
திரைக்கதையில் முரட்டு வில்லன், வில்லனுடன் சித்தார்த் மோதல் எனக் காட்சி அமைப்புகள் வழக்கமான சினிமா மசாலாவுக்குள் சென்றுவிடுவது பெரும் குறை. மாமாவையும் மாச்சானையும் இணைப்பதற்காகவே ஒரு வில்லன் தேவைப்பட்டிருக்கிறார் என்ற அளவில்தான் அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதுவும் அந்தக் கால் மணி நேர கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த படத்துக்கு பெரிய ஸ்பீடு பிரேக்காக விழுகிறது. கடைசியில் போக்குவரத்து காவலரே பைக் ரேஸ் செல்வது எதைக்கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்பதை இயக்குநர் மறந்துபோனது பெரும் பலவீனம்.
படத்தின் நாயகன்களாக சித்தார்த் - ஜிவி பிரகாஷ் இருவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மிடுக்கான தோற்றத்திலும், லிஜோமோலை உருகி காதலிப்பதிலும், ஜிவிபியுடன், ‘ நான் உன் மாமாடா’ என்று கெத்து காட்டுவதிலும் இயல்பாக நடித்திருக்கிறார் சித்தார்த். பைக்ரேஸ் செல்லும் இளைஞனாக ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார். பைக் ரேஸில் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைப்பது, அக்காவுக்கு தந்தையாக இருப்பது, சித்தார்த்தை வெறுப்பு பார்வையால் பார்ப்பது என ஜிவிபிக்கு நடிக்க வாய்ப்புகள் அதிகம்.
மலையாள தேசத்திலிருந்து வந்திருக்கும் லிஜோமோல் ஜிவிபியின் அக்காவாகவும் சித்தார்த்தின் மனைவியாகவும் உருகியிருக்கிறார். ஜிவிபியின் ஜோடியாக வரும் காஷ்மிராவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். முரட்டுவில்லனாக மதுசூதன், ஜிவிபியின் அத்தை கதாபாத்திரம், பிரேம் குமார், தீபா ராமானுஜம் ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். படத்துக்கு இசை சித்துகுமார். ‘மயிலாஞ்சி..’ பாடல் ரசிக்க வைக்கிறது. பிரசன்னகுமாரின் கேரமா, சென்னையில் நடக்கும் பைக் ரேஸை பீதியூட்டும் வகையில் படம் பிடித்திருக்கிறது. ஷான் லோகேஷின் படத்தொகுப்பு படத்துக்கு பக்கபலம்.
விறுவிறுப்பான பைக் ரேஸ் கதையைப் பாசபிணைப்போடும் ஆத்மார்த்தமாகவும் சொன்ன விதத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’க்கு கிரீன் சிக்னல் கொடுக்கலாம்.
மதிப்பெண்: 3 / 5
மதிப்பெண்: 3 / 5
No comments:
Post a Comment