அதே நேரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி கைதாகிறார் கவின். அச்சு பிசகாமல் ஒரே உருவத்தில் இருக்கும் இருவரில், யார் கொலையாளி எனத் தெரியாமல் திணறுகிறது போலீஸ். கிடைக்கும் தடயங்களும் கைகொடுக்காமல் போகிறது. இறுதியில் கொலையாளி யார், ஏன் கொலை செய்தார் எனக் குழப்பங்களுடன் எழும் புதிர்களுக்குள் ஒளிந்துள்ள சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கிறது ‘தடம்’.
சுமார் இரண்டே கால் மணி நேரம் நீளம் கொண்ட படத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பையும் த்ரில்லிங்கையும் கடைசிவரை அப்படியே கொண்டு சென்றிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு ஒரு பூங்கொத்து. ‘சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளே’ என்று படத்தின் ஆரம்பத்திலேயே கார்டு போட்டுவிடுகிறார்கள். அது படம் முழுவதுமே எதிரொலிக்கிறது. வழக்கமான இரட்டையர் படமாக அல்லாமல், ஒத்த இரட்டையர்கள் (Identical twins) குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்போது மருத்துவ ரீதியாக கிடைக்கும் சாதகங்களைக் கதைக்கு ஆதார பலமாகப் பயன்படுத்தியிருப்பது திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.
த்ரில்லர் படங்களுக்கே உரிய திருப்பங்களும் கதையோட்டத்துடன் பயணிப்பதில் இயக்குநர் தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றிநிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் கச்சிதம். இடையிடையே சில கேள்விகள் மனதில் எழுந்தாலும், அதற்கான விடை மிஸ்ஸிங் ஆகாமல் படத்தை நிறைவு செய்ததில் இயக்குநரின் உழைப்பு அபாரம்.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஒரே உருவத்தில் குழப்பும் இருவரும் தங்களைப் பற்றி முழுமையாக அவர்களே சொல்லாதவரை, போலீஸார் அதைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது விநோதம். சீரியஸான வழக்கை விசாரிக்கும் சூழலில் உடன் வரும் போலீஸார் சிரிப்பு போலீஸாக வருவது காட்சியின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. குறிப்பாக தடயங்கள் எதுவும் கைகொடுக்காமல் போலீஸார் திணரும்போது, கிடைக்கும் முக்கியமான தடயம் போலீஸின் சபலத்தால் அழிவதாகக் காட்டும் காட்சி படத்தில் மிகப் பெரிய ஓட்டை. இதுபோன்ற காட்சிகளில் இயக்குநர் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம்.
ஃபிளாஷ்பேக்கில் கவினின் அம்மாவாக வரும் சோனியாவை சூதாடியாகக் காட்டியிருப்பது இயக்குநரின் ரசனை வறட்சி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் வேகத்துக்கு ஸ்பீடு பிரேக்காக விழுகிறது. திரைக்கதைக்குக் கொஞ்சமும் உதவாமல் முதல் பாகத்தில் வரும் தேவையில்லாத பாடல், யோகி பாபு தொடர்பான காட்சிகளில் கொஞ்சம் சுவாரசியசித்தைக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எழிலுடன் பெப்சி விஜயனுக்கு முன்விரோதம், எழிலை வழக்கில் சிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் எனத் தமிழ்ப் படங்களுக்கே உரிய சில மசாலாத்தனங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், வேகமான திரைக்கதை காட்சிகள் அதை நேர் செய்துவிடுகின்றன.
அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். இரட்டையர் பாத்திரத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். கதைக்கேற்ப நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகியாக வரும் தன்யா ஹோப், கொஞ்ச நேரமே வந்தாலும், கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். கவினை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வந்துபோகிறார் ஸ்மிருதி வெங்கட்.
முரட்டு இன்ஸ்பெக்டராக வரும் பெப்சி விஜயன் விரைப்பாகவே இருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக வரும் வித்யா பிரதீப், நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகிகளைக்காட்டிலும் படம் முழுவதும் அவர் வருகிறார். முன்னணி காமெடியனாக உயர்ந்துவிட்ட யோகிபாபுவை இந்தப் பாத்திரத்தில் ஏன் நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை.
அருண் ராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால், படத்தின் பின்பாதியில் அவருடைய பின்னணி இசை அருமை. கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் என்றால், குழப்பம் இல்லாமல் தொகுத்ததில் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்துக்குப் பக்கப்பலம்.
இரட்டையர் படத்தை புதுமையாகவும் விறுவிறுப்பான த்ரில்லிங்குடன் கலந்து கொடுத்ததில் ‘தடம்’ அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.
மதிப்பெண் 3.5 / 5
No comments:
Post a Comment