29/03/2019

ஒரு நடிகன் என்று மாறியாச்சு!

சினிமா ஒரு மாய உலகம். அதில் ஒருவர் எந்தத் துறையை ஆர்வமாகத் தேடி வருகிறாரோ, அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் துறை, வீடு தேடிவந்து இழுத்துச் செல்லும். இன்றைய தமிழ்க் கலைஞர்களில் அதற்குச் சரியான உதாரணம் நடிகர் இளவரசு. இயக்குநகராக வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் இருந்தவரால் ஒளிப்பதிவாளராகத்தான் முடிந்தது. அதுவும் அவருக்கு எட்டாத கனியாக மாற, அரிதாரம் பூசி முழு நேர நடிகராக மாறியவர்.

1980-களில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு பாராதிராஜா சினிமா யூனிட்டில் அடைக்கலம் கிடைத்தது. 1980 மற்றும் 90-களில் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணன். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் இளவரசு. எந்த சினிமா யூனிட்டிலும் இல்லாத ஒரு விஷேசம் பாரதிராஜா யூனிட்டில் நடக்கும். அவருடைய யூனிட்டில் பணியாற்றும் பெரும்பாலோனர் ஒரு காட்சியாலவது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். கேமரா மேன் உதவியாளராக இருந்தபோது சினிமாவில் தலைகாட்டினார் இளவரசு.

1987-ம் ஆண்டில் வெளியான ‘வேதம் புதிது’ படத்தில் பாலு தேவர் கதாபாத்திரத்தை சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லும் வேடம் ஒன்று இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் வராமல் போகவே, அந்த வாய்ப்பு இளவரசுக்கு கிடைத்தது. இரண்டு வசனம் பேசி இளவரசு நடித்தார். பின்பு அந்தக் கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் உயிர்கொடுத்தார் பாரதிராஜா. ஆனால், சென்சாரில் திரைக்கதை மாறியபோது இளவரசு நடித்த காட்சியமைப்புகள் மாறின. ஆனால், கேமரா மேன் உதவியாளராக இருந்த இளவரசு, கேமரா முன் நடித்த முதல் படம் ‘வேதம்புதிது’தான்.

அந்தப் படத்துக்கு பிறகு இடையே ‘என்னுயிர் தோழன்’, ‘கருத்தம்மா’ தவிர்த்து பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ தொடங்கி‘தமிழ்ச் செல்வன் ஐ.ஏ.எஸ்.’ படம்வரை ஏராளமான படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன் என்பதைப் பெருமையாகச் சொல்கிறார் இளவரசு. கேமரா மேன் உதவியாளராக வந்த பிறகு அவருடைய லட்சியம் முழுவதுமே ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதில் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால்,  நடிகராக அவ்வப்போது தலைகாட்டிகொண்டிருந்ததால், அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் தேடி வந்திருக்கின்றன. ஆனால், அப்படி தேடிவந்த வாய்ப்புகளை வேண்டாம் என மறுத்ததாகச் சொல்கிறார் இளவரசு.

“1997-ம் ஆண்டில் ‘பொற்காலம்’ படம் வந்தது. அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு   ‘வெற்றிகொடிக்கட்டு’, ‘பரிவட்டம்’ என்று அவ்வப்போது படங்களில் நடித்தேன். தொடர்ச்சியாக படவாய்ப்புகள் வந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் நான் ஒளிப்பதிவாளராக மாறியிருந்தேன். அதனால், அப்போது நான் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.  பலரும் என்னை நடிக்க அழைக்கும்போது,  ‘தேவையில்லாமல் நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள்’ என்று மறுத்திருக்கிறேன்” என்கிறார் இளவரசு.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே, 1990-களின் பிற்பகுதியில் இளவரசு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 1996-ம் ஆண்டு தொடங்கி 2000-ம் ஆண்டு வரை ஒளிப்பதிவளராக 13 படங்களில் இளவரசு பணியாற்றியிருக்கிறார். அதில் 11 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில், விஜய் நடித்த ‘ நினைத்தேன் வந்தாய்’ படமும் ஒன்று. அதன் பிறகு ஏன் ஒளிப்பதிவு வாய்ப்பு உங்களுக்கு வரவில்லை என்றால், ‘எவனும் கூப்பிடல..’ என வெடித்து சிரிக்கிறார்.

“என்னோட இயக்குனர்கள் சீமான், செல்வபாரதி, சிவச்சந்திரன் போன்றோர் கமர்ஷியலாக ஜெயிக்கவில்லை. வணிக வெற்றி இயக்குநர்களுக்கு மிகவும் முக்கியம். இயக்குநர்களை வைத்துதான் ஒளிப்பதிவாளர்கள் வர முடியும். நான் ஒளிப்பதிவாளராக இருந்தபோது உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களாக மாறியவர்கள், நமக்கு இவர் சரிப்பட்டு வருவாரா என்று யோசித்து கூப்பிடவில்லை. ஒளிப்பதிவாளராகக் கூப்பிடுவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. அந்தக் கட்டத்தில் ஆவணப் படங்களை எடுத்தேன். சினிமாவில் இயங்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன்” என்கிறார் இளவரசு.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே இயக்குநர்களாக இருந்தவர்கள் உண்டு. ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தவர்களும் உண்டு. ஆனால், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இளவரசு, ஒளிப்பதிவாளர் வாய்ப்பு குறைந்தபோது, அரிதாரம் பூசிக்கொள்ளத் தொடங்கினார். நடிப்புதான் இனி என முடிவெடுத்தார். ஏன் இயக்குநராக முயற்சிக்கவில்லை என்று கேட்டதற்கு இப்படி பதில் சொல்கிறார் இளவரசு.

“ஒளிப்பதிவாளர் வாய்ப்பு குறைந்தாலும், வயிறுன்னு ஒன்னு இருக்கே. அதுமட்டுமில்ல, சினிமாவை தவிர எனக்கு எதுவும் தெரியாது. அதனால் ஒளிப்பதிவில் இருந்து எனக்கு ஏற்கனவே பரிட்சயமாகியிருந்த நடிப்புக்கு வந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டு இயக்குநராக மாற வேண்டும் என்றால், அதற்கு முதலில் தயாரிப்பாளர் வேண்டும். பிறகு கதாநாயகன் வேண்டும். நான் ஒளிப்பதிவாளர் என்று சொன்னால் நம்புவார்கள். இயக்குநர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதையெல்லாம் ஒவ்வொரிடமும் சொல்லி, நொந்து கேவலப்பட வேண்டுமா என்று யோசித்தேன். அதனால், இயக்குநர் ஆவதைப் பற்றி  நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என யதார்த்தமாகப் பேசுகிறார் இளவரசு.

புத்தாயிரத்துக்குப் பிறகு நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்ட ஆரம்பித்த இளவரசு, வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என ஏற்காத வேடங்களே இல்லை. எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மையான நையாண்டிதனமான பேச்சுகள் மூலம் ரசிகர்களைக் கவர்வது இளவரசுக்கு கைவந்த கலை. அது எப்படி சாத்தியமானது?

“சினிமாவில் உள்ளதை உள்ளப்படி செய்தால் ஒரு கட்டத்தில் திகட்டிவிடும். தியேட்டரில் உட்கார்ந்துள்ளவர்களை கட்டிப்போட வேண்டும் என்றால்,  நல்ல எண்டர்டெயின்மென்ட் தேவை.  அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நமக்கு தோதான விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம். கதைக்கோ, கதாபாத்திரங்களுக்கோ தொந்தரவு இல்லாமல் நகைச்சுவையைச் சேர்த்துக்கலாம். அதை இயக்குநர்களும் அனுமதிப்பார்கள். குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தபோதும் என்னுடைய நகைச்சுவைத்தனம் வெளிப்பட்டிருக்கிறது என்றால், தொந்தரவு செய்யாமல் அந்தக் காட்சி வந்திருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் இளவரசு.

இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இளவரசு, இன்று மலையாளப் படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திவருகிறார். 2017-ம் ஆண்டில் வெளியான ‘மாயநதி’ என்ற மலையாளப் படத்துக்குப் பிறகு 8 படங்களில் நடித்து முடித்துவிட்டார். மலையாளம் இல்லாமல் ஒரிய மொழியிலும் 3 படங்களில் இளவரசு நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என மூன்று தளங்களிலும் நடித்த ஜாம்பவான்கள் ஏராளம். புத்தாயிரத்துக்குப் பிறகு அந்த மூன்று தளங்களிலும்  நடிக்கும் திறமையான நடிகர்களில் ஒருவராகப் பரிணமித்திருக்கிறார் இளவரசு. ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்த இளவரசு, இன்று அந்தத் துறையே மறக்கும் அளவுக்கு முழு நேர நடிகராக மாறிவிட்டார். வாய்ப்புள்ள போதே தூற்றிக்கொள் என்ற சினிமா தத்துவத்துக்கு ஏற்ப யதார்த்தத்தை உணர்ந்த கலைஞர் அவர்!


கேள்வி - பதில்


ஒளிப்பதிவாளராக அறிமுகமான படம்?

1996-ல் சீமான் இயக்கத்தில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’.

சேரன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது எப்படி?

ரெண்டு பேரும் பக்கத்து ஊர். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். இது போதாதா?

நடிக்க முடியாமல் போனதே என்று வருந்திய படங்கள்?

‘குருதிப்புனல்’, ‘விருமாண்டி’. ஆனால், விட்டதை ‘பாபநாசம்’  மூலம் பிடித்தேன்.

மறக்க முடியாத பாராட்டு?

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் மங்குனிப்பாண்டியனாக நடித்து சிரிக்க வைத்ததை  நாகேஷ் பாராட்டியது.

மீண்டும் ஒளிப்பாளராகும் எண்ணம் உண்டா?

 நிச்சயம் கிடையாது. இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான்.

எதிர்கால லட்சியம்?
ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும்.



- இந்து தமிழ், 28/03/2019

No comments:

Post a Comment