13/03/2019

பூமராங் விமர்சனம்

வனப் பகுதியில் மலையேற்றம் செல்லும் சிவா என்ற இளைஞன் காட்டுத் தீயில் சிக்குகிறான். உயிர் பிழைத்தாலும், அந்த விபத்தில் அவருடைய முகம் உருக்குலைந்துவிடுகிறது. அதே வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்தி (அதர்வா) மூளைச்சாவு அடைகிறான். அவருடைய முகத்தை எடுத்து முக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிவாவுக்குப் பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவுடன் சிவாவை அடுத்தடுத்து கொலைசெய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதனால் குழம்பும் சிவா, தனக்கு ஒட்டப்பட்ட முகத்துக்கு காரணமான சக்தியின் பின்னணியைத் தேடிச் செல்கிறார். தன் முகத்துக்கு சொந்தக்காரர் யார், அவரை கொலை செய்ய ஏன் முயற்சிக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘பூமராங்’.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முக மாற்று படங்கள் தமிழில் வந்துள்ள நிலையில், படத்துக்கு அந்தத் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்த இயக்குநர் கண்ணனைப் பாராட்டலாம்.  நதிநீர் இணைப்பு, தண்ணீரின்றி பாழ்படும் விவசாயம் போன்ற சமூகக் கருத்துகளைப் படத்தில் சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பக்கபலமாகச் சமகால கார்ப்பரேட் மூளைகள் செய்யும் தில்லாலங்கடிகளையும் துணைக்கு சேர்த்திருக்கிறார். சமகால அரசியலை கிண்டலடிக்கும் நையாண்டி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. முகம் மாற்றிக்கொண்ட சிவாவை கொல்ல நடக்கும் முயற்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை முதல் பாகத்தில் கூட்டிவிடுகிறது.

ஆனால், இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு படத்தை வேறொரு தளத்துக்கு அழைத்து சென்றுவிடுகிறது. ஒரு புறம் காய்ந்த பூமி, இன்னொரு புறம் வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீர், அதைக் கிராமத்துக்கு திருப்பும் இளைஞரின் போராட்டம், அதை முறியடிக்க கார்ப்பரேட் கிரிமினலின் சதி எனத் திரைக்கதை நகர்கிறது. விவசாயம், நதிநீர் இணைப்பு போன்ற தீவிரமாகப் பேசக்கூடிய விஷயங்களை திரைக்கதை நகர்வுக்காக மேம்போக்காக இயக்குநர் காட்டுகிறார்.

இதற்கான காட்சி அமைப்புகளும் ஏற்கனவே பார்த்த ‘கத்தி’ போன்ற படங்களை நினைவுக்கு கொண்டுவந்துவிடுகிறது. இது முக மாற்று கதையா, விவசாய படமா, கார்ப்பரேட் தகிடுதத்தங்களைச் சொல்லும் கதையா எனக் குழப்பங்கள் வந்துவிடுகின்றன. முதல் பாதிக்கு மாறாக திரைக்கதை மெதுவாக நகர்வதால் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கால்வாய் வெட்ட முயற்சிப்பதாக காட்டும் காட்சியில் எந்த லாஜிக்குமே இல்லை. சட்ட விஷயங்களைப் பேசும் சுஹாசினி, முன்பின் தெரியாத இளைஞனின் முகத்தை இன்னொருவருக்கு தானமாக வழங்க கையெழுத்திட சொல்லும் காரணங்களும் நம்பும்படியாக இல்லை.

இந்தப் படத்தின் பலம் அதர்வா. முன் பாதியில் சிவா, பின்பாதியில் சக்தி என விறுவிறுப்பாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் கைதட்டலை அள்ளுகிறார். படத்தில் நாயகி இருக்க வேண்டும் என்பதற்காக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். டெம்பளேட் காதல் காட்சிகளில் வந்துபோகிறார். இவரைவிட இந்துஜா சற்று அழுத்தமான கதாபாத்திரத்தில் வருகிறார். முதல் பாகத்தில் சதிஷ் காமெடியில் சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாகத்தில் தனது வழக்கமான பாணியில் சமகால அரசியலை கிண்டலடிக்கிறார் ஆர்.ஜெ. பாலாஜி.

படத்துக்கு இசை ரதன். பாடல்கள் தாளம் போட்டு ரசிக்க வைக்க மறுக்கிறது. வறட்சியான கிராமத்தை அழகாகப் படம் பிடித்து கவர்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார்.

கவர்ந்திழுக்கக்கூடிய விவசாயம், நதிநீர் இணைப்பு கதையைக் கொஞ்சம் (பூம)‘ராங்’காகப் பேசியிருக்கிறது இப்படம்.

மதிப்பெண் 2.5 / 5


No comments:

Post a Comment