16/12/2016

புதையலைத் தேடி...


த்ரில்லிங், காமெடி, ஆக்‌ஷன் ஆகியவற்றை சரிவிகித கலவையோடு கலந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது ஜாக்கிசானின் ‘குங்ஃபூ யோகா’ படம். இந்தியா - சீன கூட்டுத் தயாரிப்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் டிரையிலரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சியாளர் ஜாக்கி சான். இந்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியை அமைரா. இவர்களது டீம் பழங்கால மகத நாட்டு புதையலைத் தேடிச் செல்கிறது.  அப்படி போகும்போது அந்தப் புதையல் திபெத்தில் இருப்பது தெரிய வருகிறது. அந்தப் புதையலைக் கண்டுபிடித்து, வசமாக்க ஜாக்கி சான் செய்யும் தந்திரங்கள், காமெடிகள், ஆக்‌ஷன்களின் கோர்வைதான் ‘குங்ஃபூ யோகா’வின் கதை.

இந்தப் படம் சீனாவிலும் இந்தியாவிலும் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் ஜாக்கிசான்  செய்யும் காமெடி கலந்த சேட்டைகள் டிரையிலரிலேயே தெறிக்க வைக்கிறது. அதுவும் பெரிய சிங்கம் ஜாக்கி சானோடு காரில் வரும் காட்சியும், அதோடு ஜாக்கி சான் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை நிச்சயம் விலா நோக சிரிக்க வைக்கும். இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பு என்பதால் படத்தில் இந்திய கலைஞர்களுக்கும் இடம் கிடைத்திருக்கிறது.

‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ‘சந்திரமுகி’, ‘கத்தி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த சோனு சோட், இந்தப் படத்தில் ஜாக்கி சான் புதையலைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல திசரா பாட்னி, ஜெயின் குமார் போன்ற இந்திய நட்சத்திரங்களும் ‘குங்ஃபூ யோகா’வில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை ஸ்டேன்லி டோங் இயக்கியுள்ளார். மாண்டரின், இந்தி, ஆங்கிலம் என
மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.


04/12/2016

சைத்தான் விமர்சனம்

புத்திசாலி இளைஞனுக்கு ஏற்படும் முன்ஜென்ம ஞாபகத்தால்  நடக்கும் த்ரிலிங்கான சம்பவங்களின் கோர்வைதான் ‘சைத்தான்’.

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார் புத்திசாலி இளைஞன் தினேஷ் (விஜய் ஆண்டனி). அவருக்கு ஐஸ்வர்யாவுடன் (அருந்ததி நாயர்) திருமணம் ஆன சில நாட்களில், மண்டைக்குள் விநோதமான ஒலி கேட்கிறது. அந்த ஒலி சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி. இது விபரீதங்களில் போய் முடிகிறது. விஜய் ஆண்டனியின் குடும்பத்தினரும், கம்பெனி முதலாளியும் மனநல மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள். இடையிடையே துரத்தும் அந்தக் குரலின் பேச்சைக் கேட்டு, ஜெயலட்சுமியைத் தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த ஜெயலட்சுமி? விஜய் ஆண்டனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, என்பதுதான் சைத்தான்  சொல்லும் கதை.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்ற நாவலின் சில பகுதிகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறிமுகப் படத்தையே சைக்கலாஜிக்கல் திகில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
இடைவேளை வரை  அடுத்தடுத்து நடக்கும் திகில் மற்றும் சுவாரஸியமான சம்பவங்களால் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. ஆனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இரண்டாம் பாகம் புஸ்வானமாக்கிவிடுகிறது. திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல திரைக்கதை பயணிக்கிறது. கோர்வை இல்லாத காட்சிகள், தெளிவில்லாத நாயகியின் பாத்திரப் படைப்பு, படத்தின் இறுதியில் வில்லனின் அறிமுகம், முன்ஜென்ம ஞாபகத்துக்கு விஜய் ஆண்டனி மீது செலுத்தப்படும் மருந்து பரிசோதனை காரணம் போன்ற காட்சிகள் படத்தின் கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்காக மாறிவிடுகிறது.

 முன்ஜென்மத்தில்  தமிழாசிரியராக வரும் விஜய் ஆண்டனிக்கு சர்மா என்ற பெயர்; ஜெயலட்சுமியைத் தேடி தஞ்சாவூர் செல்லும் விஜய் ஆண்டனி, திடீரென மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது, சம்பந்தமே இல்லாமல் உதவும் ஆட்டோ ஓட்டுநர்,  மருந்து மாபியா கும்பலால் விஜய் ஆண்டனியைத் திருமணம் செய்ய அனுப்பி வைக்கப்படும் நாயகியின் பின்னணி என பல காட்சி அமைப்புகளுக்கு தெளிவான விடைவில்லை. முன்ஜென்மம் பற்றி எந்த நினைப்பும் வராத விஜய் ஆண்டனியை, முன் ஜென்மத்துக்கு மனநல மருத்துவரே அழைத்து செல்வதெல்லாம் லாஜிக்கை மீறிய ஓட்டைகள். கொடூர வில்லனை கடைசியில் காமெடியன் போலக் காட்டுவது உச்சபச்ச அபத்தம்.

 சாப்ட்வேர் பொறியாளராகவும், முன்ஜென்மத்தில் தமிழாசிரியராகவும் வரும் விஜய் ஆண்டனி, இறுதியில் ஆக்‌ஷன் அவதாரமும் எடுத்து ஸ்கோர் அள்ளிவிடுகிறார். விநோதமான ஒலி கேட்கும்போது மிரள்வது, அதிலிருந்து விடுபட போராடுவது என நடிப்பும் அவருக்குக் கைக்கொடுத்திருக்கிறது.  நாயகியாக வரும் அருந்ததி நாயருக்கு பொருத்தமான வேடம் என்றாலும், ஒரே மாதிரியான முக பாவனையும், உடல் மொழியும் அலுப்பூட்டுகின்றன. ஒய்.ஜி. மகேந்திரன், மீரா கிருஷ்ணா, சாருஹாசன், முருகதாஸ் போன்றவர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசையையும் விஜய் ஆண்டனியே கவனித்திருக்கிறார். இரண்டு பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘ஜெயலட்சுமிஈஈ...’ என படம் முழுவதும் படரவிடப்படும் இசை செவிகளை ஈர்க்கிறது. படத்துக்கு ஒளிப்பதிவு பிரதீப் காளிபுரயாத். எடிட்டிங் வீரா செந்தில்ராஜ். த்ரில்லிங் படங்களுக்கே உரிய எடிட்டிங் படத்தில் மிஸ்ஸிங்.

சவாலானக்கு கதைகளத்துக்கு இலுவையான திரைக்கதை 'சைத்தா'னை விழி பிதுங்க நிற்க வைக்கிறது.

மதிப்பெண்: 2 / 5

02/12/2016

2016 - வெற்றிகொடி கட்டிய நாயகன் யார்?


தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கோடு இருந்தாலும், திரையில் ஜொலிக்கும் நாயகர்கள்தான் அந்தந்தப் படங்களின் ஒட்டுமொத்த அடையாளங்கள்.  நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டிகள் எப்போதும் இருந்தாலும், ஓர் ஆண்டில் நாயகர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை, படங்களின் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நாயகர்களின் உச்சத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்?

முன்னணி நாயகர்களான கமல்ஹாசன், அஜித்குமார் நடித்த படங்களைத் தவிர பிற முன்னணி நாயகர்களின் எல்லா படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன. ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பல படங்கள் வரிசை கட்டி  ரசிகர்களை மகிழ்வித்தன. ஏற்கெனவே வெற்றிக்கொடிகளை பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டு பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று மட்டும் பார்ப்போம்.

விஜய்

ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும்
விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’.  பாசமுள்ள சாதுவான அப்பா, ஃபிளாஷ்பேக்கில் ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களைக் காட்டி அவரது ரசிகர்களைத் தெறிக்கவிட்டார் விஜய். அந்தக் காலத்து சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தைப் பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்பியது. ஏற்ற இறக்கங்களாக விஜய்க்கு இருந்து வரும் வெற்றி - தோல்வி படங்களின் வரிசையில் ‘தெறி’ ஓரளவு வெற்றி படம்தான்.

விக்ரம்


கமலஹாசனுக்கு அடுத்து உடலை வருத்தி, மெனக்கெட்டு நடிக்கும் நடிகர் விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்து இந்த ஆண்டு தலைகாட்டிய படம் ‘இருமுகன்’.   நாயகனாக ‘அகிலன்’, வில்லனாக ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் காட்டி விக்ரம் நடித்த படம். வில்லனைப் பிடிக்க அகிலன் காட்டும் தீவிரம், அதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ‘லவ்’வின் வில்லத்தனம் இரண்டும் ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால், காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ‘இருமுகன்’ பெறவில்லை.

சூர்யா

முன்னணி நாயகர்கள் எல்லோரும் ஒரு படத்தில் தலைகாட்டினால் போதும்
என்ற இலக்கணத்துக்கு இந்த ஆண்டு சூர்யாவும் தப்பவில்லை.  ‘24’ என்ற த்ரில்லர் பாணி படமொன்றில் மட்டுமே சூர்யா நடித்தார். மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்ததில் ரசிகர்களை சீட்டில் நிமிர உட்கார வைத்தார் சூர்யா. ஆனால், சூர்யாவின் வழக்கமான முக பாவனைகளும், காட்சி அமைப்புகளும் ஏற்படுத்தும் சலிப்புகள் படத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்கவும் செய்தது.

சிம்பு

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படம் வெளியாவதற்கே நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்புவுக்கு, இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாயின. அதுவும் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தள்ளிப்போய்க்கொண்டிருந்த ‘இது நம்ம ஆளு’, மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என இரு படங்கள் வெளியாயின. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சாக்லெட் பையனாகவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தாடி வைத்து சிம்பு நடித்ததும்தான் வித்தியாசங்கள்.  சிம்புவுக்கு நயன்தாரா ஜோடி என்று ஏற்படுத்திய பரப்பரப்பு  அளவுக்கு ‘இது நம்ம் ஆளுவில்’ எந்தப் பரபரப்பையும் விறுவிறுப்பையும் பார்க்க முடியவில்லை.  ‘அச்சம் என்பது மடமையடா’ அவ்வப்போது ‘விடிவி’ பார்த்த பாதிப்பை ஏற்படுத்துவதால், பெரிய ஆரவாரமில்லாமல் இருபடங்களும் நகர்ந்தன.

தனுஷ்

கடந்த ஆண்டு நான்கு படங்களில் நடித்த சிம்புவின் சகப் போட்டியாளரான தனுஷ், இந்த ஆண்டு ‘தொடரி’, ‘கொடி’ என இரண்டு படங்களோடு திருப்தியாகிவிட்டார். இதில் ‘கொடி’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் தலை காட்டினார். கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில்
நடக்கும் ஒரு காதல் பயணம்  என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு சறுக்கியதால் ‘தொடரி’ ரசிகர்களின் தொடர் ஆதரவைப் பெற முடியாமல் போனது. ஆனால், அதிகமான சவால்கள் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்தது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.

அதேசமயம், தீபாவளி அன்று வெளிவந்த ‘கொடி’ படம் ஓரளவு உயர பறந்தது. இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் சேர்த்திருந்தார். வழக்கமான திரைக்கதை பாணி, அரசியலில் லாஜிக்கே இல்லாமல் சுலபமாக வெற்றி பெறுவது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் ‘கொடி’ உயர பறக்க தடையாக இருந்தன. இருந்தாலும் இரண்டு படங்களில் ஒன்று ஓரளவு சோடைபோகமல் போன வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சி கொடுத்திருக்கும்.

ஜீவா


முன்னணி நாயகர்களின் பட்டியலில் இருந்தாலும், இன்னும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் திணறும் ஜீவாவுக்கு இந்த ஆண்டு ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ என மூன்று படங்கள் வெளியாயின. ‘போக்கிரி ராஜா’ படம் நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி கதை. ‘திருநாள்’ படத்தில் ரவுடி, ‘கவலை வேண்டாம்’ படத்தில் காதல், திருமணம் என தடுமாறும் இளைஞர் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், மூன்றுமே ஜீவாவுக்கு கைகொடுக்காமல் போனது. பழைய பாணி கதைகள், சலிப்பேற்றும் திரைக்கதை மற்றும் பாத்திர அமைப்புகள் என மூன்று படங்களும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றன. சிறப்பான நடிப்பை உடல்மொழியிலும் பேச்சிலும்  ஜீவா வெளிப்படுத்துவதில் சோடைபோகாவிட்டாலும், அதையும் தாண்டி அவருக்கு அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.

விஷால்

பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுக்கப் போராடிக் கொண்டிருக்கும்
விஷாலுக்கு இந்த ஆண்டு ‘கதகளி’, ‘மருது’ என இரண்டு படங்கள் வெளியாகின. ‘கதகளி’ ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம் என்றால், ‘மருது’வோ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. கதையைப் போலவே பாத்திர படைப்பிலும் புதுமை இல்லை. ஆக்‌ஷன் மற்றும் கூலித் தொழிலாளிக்கு ஏற்ற உடற்கட்டும் உயரமும் கைக்கொடுக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு கைக்கொடுக்கவில்லை. அதற்கு விஷாலைக் குறைகூற முடியாது. அதற்கு இயக்குநர்களின் கற்பனை பற்றாக்குறையே காரணம். இதுபோன்ற் காரணங்களால் வெற்றிப் படத்துக்காக விஷால் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மூன்று பேர்

முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் மூன்று நடிகர்களின் கேரியர் கிராஃப் மட்டும் பரமபத ஏணியில் ஏறுவதைப் போல ஏறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.

கார்த்தி

கார்த்தி நடித்த ‘தோழா’’, ‘காஷ்மோரா’ இரண்டும் வசூலிலும், ரசிர்கர்களைக் கவர்ந்ததிலும் குறைவைக்கவில்லை. கழுத்துக்குக் கீழே செயலிழந்துபோன உடலுடன் வலம் வரும் நாகர்ஜூனாவின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் பாத்திர வார்ப்பில் கொஞ்சமும் பிசகாமல் நடித்து ‘தோழா’வில் கவர்ந்தார் கார்த்தி. இன்னொரு புறம் ‘காஷ்மோரா’வில் இரண்டு வேடங்கள்; மூன்று பரிமாணங்களில் வந்து ஈர்த்தார். அதுவும் ‘காஷ்மோரா’ பாத்திரத்தில் கலகல கார்த்தியாக ரசிர்களின் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டார். இரண்டு படங்களுமே வெவ்வேறான கதையமைப்புகள், திரைக்கதையமைப்புகள், பாத்திர உருவாக்கங்கள், என அமைந்தத்தில் கார்த்திக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டுதான்.

சிவகார்த்திகேயன்

 ஒரே பாணியிலான நடிப்பு, கதைத் தேர்வு, கலகலப்பான நகைச்சுவை பிளஸ் காதல் என கலந்து கொடுத்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வியாபார ரீதியில் உச்சம் பெற்று வரும் இவர்,
தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக இந்த ஆண்டு மாறியிருக்கிறார். ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ என இரண்டு படங்களுமே இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்கள். ‘ரஜினி முருகன்’ படத்தில் அவரது நடனம், நக்கலான முகப் பாவனை, காமெடி சென்ஸ் மூலம் படத்தை ஹிட் அடிக்க வைத்தவர், ‘ரெமோ’வில் காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்தார். இதில் பெண் வேட நடிப்பில் தனி முத்திரையும்  பதித்தார்.  துரத்தி காதலிக்கும் கதையம்சம் கொண்ட ‘ரெமோ’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களை ஈர்க்கவே செய்தது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிகொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டும் ஏறுமுகம்தான்.

விஜய் சேதுபதி

மசாலா படமா, முறுக்கு மீசை போலீஸ் படமா, கிராமத்துப் படமா, பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாத ஆணின் படமா, குடும்ப சூழ்நிலையில்
தடுமாறும் இளைஞனின் படமா, சிரிப்பு ரவுடி பாத்திரமா- இவை எல்லாவற்றுக்கும் ஒரேசாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையை இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் பார்த்தது. ஒரே ஆண்டில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்களில் நடித்து இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையையும், பாத்திரப் படைப்புகளையும் கொண்ட படங்கள்தான். இதில் எல்லாவற்றிலும் பொருந்திக்கொண்டது விஜய் சேதுபதிக்கே உரிய தனிச்சிறப்பு. 6 படங்களில் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, சேதுபதி, இறைவி ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆரவாரம் இல்லாத இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற பேச்சும், உடல்மொழி மாற்றமும் விஜய் சேதுபதிக்கு கைக்கொடுக்கிறது. தொடர்ந்து மாறுப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கையிலும், வெற்றிகளின் எண்ணிக்கையிலும், வணிக ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு கவனம் ஈர்த்த நாயகர்களில் விஜய் சேதுபதியே முன்னணியில் உள்ளார்.

- தி இந்து, 02-12-2016

05/11/2016

தேவாங்குகள்: பேரன்பின் ஆயுதம்!

தேவாங்கு...
தமிழகத்தில் இந்த வார்த்தையை இப்போது கேட்டால் ஒரு சம்பவம் சட்டென எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வந்து செல்லும். 
‘அவலட்சணத்துக்கு’ எடுத்துக்காட்டாகிவிட்ட  இந்த வார்த்தை ஓர் அப்பிராணி விலங்கின் பெயர் இது என்பது இந்தக் காலத்து தலைமுறையினருக்குத் தெரியாமல் போயிருப்பது சோகம்தான். அதைவிட பெரும் சோகம், வேகமாக அழிந்து வரும் இந்த விலங்குகள் பற்றிய விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத, அதேசமயம் மனிதர்களின் நண்பனாக விளங்கி வரும் தேவாங்குகள் அழிந்தால், உணவுச் சங்கிலி அறுந்துபோகும் என்ற எச்சரிக்கையை எல்லோரும் உணரும் காலம் இது!
மாறி வரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் கரியமில வாயு என உலகெங்கும் சுற்றுச்சூழலுக்குச் சவால்கள் பெருகிவிட்டன. இதுபோன்ற காரணங்களால் சீர்கெட்டு வரும் சுற்றுப்புற சூழ்நிலையால் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும்கூட சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. அப்படி சிக்கிக்கொண்ட ஒரு விலங்குதான் இந்தத் தேவாங்கு. இந்தியாவில்  இந்தியாவிலும் (தமிழகம், கர்நாடகா, கேரளா) இலங்கையிலும் மட்டுமே உள்ள ஓர் அரிய வகை விலங்கு, தன் இறுதி நாட்களை இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறது.

கோமாளி

சிறிய முகத்தில் கூர்மையான மூக்கின் மேல் மத்தியில் பெரிய உருட்டு கண்களுடன் பார்ப்பதற்கு பரிதாபமான கோமாளி போலவே இருக்கும் விலங்குதான் இந்தத் தேவாங்கு. இதன் அறிவியல் பெயர் ‘ஸ்லெண்டர் லோரிஸ்’. ’லோரிஸ்’ என்பது டச்சு வார்த்தை. இதன் அர்த்தம் கோமாளி. இதை டச்சு மாலுமிகள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றதாகவும்கூட தகவல் உண்டு. ‘ஸ்லெண்டர் லோரிஸ்’ என்றழைக்கப்படும் இந்த விலங்கை தமிழில்  ‘குட்டித் தேவாங்கு’ என்றழைக்கிறார்கள். சர்வதேச இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளம் ஒன்றியத்தால் அருகி வரும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது தேவாங்கு. இப்படி அரிய வகை, சிவப்பு பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் இந்த விலங்கின் முக்கியத்துவம் இன்னும் பரவலாகவில்லை. இருக்கும் கொஞ்சம்நஞ்ச தேவாங்குகளும் சகட்டுமேனிக்கு அழிந்து வருகின்றன.

தமிழகத்தில் தேவாங்கு

பெயரளவில் மட்டுமே இந்தக் கால தலைமுறையினர் அறிந்திருக்கும் இந்த விலங்கு, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப் பகுதிகளில் ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. இன்றோ அவற்றின் எண்ணிக்கை அதன் உருவத்தைப் போலவே பரிதாபமாக உள்ளது. மழைக் காடுகளில் மட்டுமே காணப்படும் தேவாங்குகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலை அய்யலூர் (குட்டிக் கொடைக்கானல் என்றழைக்கிறார்கள்) பகுதிகளில் நிலவுவது இவை இங்கே பெருக காரணமாக இருந்தது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கலிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து 76 கிலோ மீட்டர் அமைந்துள்ளது தேவாங்குகள் தரிசனம் காட்டும் இந்த அய்யலூர். இந்தப் பகுதி சிறு காடுகளாலும், குன்றுகளாலும், அடர் மரங்களாலும் சூழப்பட்ட இயற்கைக்கு வாக்கப்பட்ட பூமி. இந்தச் சூழல் காரணமாகவே தேவாங்குகள் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன.

குணங்கள்

அய்யலூர் பகுதியில் காணப்படும் தேவாங்குகள் சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. பொதுவாகப் பகல் நேரங்களில் தேவாங்கைப் பார்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் இரையைத் தேடி வெளியே வரும். மெதுவாகவே நடக்கும். இங்குள்ள தேவாங்குகள் 5 மீட்டர் முதல் 8 மீட்டர் வரையிலான அடர்ந்த மரக்கூட்டங்களை தேர்வு செய்து அவற்றில் வாழ்கின்றன. வனப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளே தேவாங்குகளின் முக்கிய உணவு. வெட்டுக்கிளி, கம்பிளிப்பூச்சி போன்ற பூச்சியினங்களைப் பார்த்தால் அப்படியே சாப்பிட்டுவிடும். சில நேரங்களில் கிளாக்காய், காரக்காய் போன்ற பழங்களையும் சாப்பிடுகின்றன. பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி இனங்களை உணவாக உட்கொள்வதால் விவசாயிகளின் உற்ற நண்பனாக தேவாங்கைப் பார்க்கிறார்கள்.

அழிவின் விளிம்பில்...

உலகெங்கும் மாறி வரும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் அழிப்பு காரணமாக விலங்குகள் திண்டாடி வருவது போலவே, அய்யலூரிலும் தேவாங்குகள் திண்டாடி வருகின்றன. இந்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் தேவாங்கைச் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் என்ன பயன்? தேவாங்குகளின் நிலை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறிக்கொண்ட இருக்கிறது. வனப்பகுதிகளில் குறைந்து வரும் மரங்களின் அடர்த்தி, சரிவர பெய்யாத பருவ மழை, தேவாங்குகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வின்மை, வேட்டை மற்றும் கடத்தப்படும் தேவாங்குகள் போன்ற பிரச்சினைகள் தேவாங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அய்யலூரில் மாறி வருகின்றன.
புதியதாகக் கட்டமைக்கப்பட்ட திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்காக அய்யலூர் வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெரிய மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இந்தப் பகுதி, மர அழிப்புக்குப் பிறகு உஷ்ணமான பகுதியாக மாறிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, இந்த வனப் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களிடமும் தேவாங்குகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. மாந்திரீகம் போன்றவற்றுக்காக தேவாங்குகள் பிடித்து செல்லப்படுவதும் உண்டு. இதை சிறுவர்கள் விளையாட்டு பொருளாக நினைத்து சீண்டுவதாலும் கொல்லப்படுகின்றன. மிக முக்கியமாக இன்னொரு பிரச்சினை இன்றைய நவீன் வேளாண்மை முறையும் ஒரு காரணம்.  பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளினாலும் தேவாங்குகள் மடிவதை தடுக்க முடியவில்லை.

வெளிநாடுகளுக்கு விற்பனை

தேவாங்குகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழக பேராசிரியர் ராமசுப்புவிடம் இதுபற்றி பேசினோம். “வெளிநாடுகளில் தேவாங்குகளை வீட்டு விலங்காக வளர்க்கிறார்கள். இதற்காக இங்கிருந்து தேவாங்குகள் பிடிக்கப்பட்டு வெறும் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கே பிடிக்கப்படும் தேவாங்குகள் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்திய வன விலங்கு பட்டியல் 2-ல் தேவாங்குகள் இருப்பதால், இப்படி கொண்டு செல்லப்படும் தேவாங்குகளை விட்டுவிடுகிறார்கள்.

அண்மையில் அய்யலூர் பகுதியில் உள்ள தேவாங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சதுர கிலோ மீட்டரில்  நான்காக இருந்த 4 தேவாங்குகள், இப்போது இரண்டாக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. அதாவது 50 சதவீத தேவாங்குகள் அழிந்துவிட்டன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதல்படி அருகி வரும் விலங்குகள் அபாயகரமான பட்டியலில் இடம் பிடிக்கும். ஆனால், தேவாங்குகள் பற்றி முறையான அறிக்கை இல்லாததால்   ‘கவலைகொள்ளத் தேவையில்லை’ என்று அறிவித்துவிட்டது. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.” என்று அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் ராமசுப்பு.

சரணாலய கோரிக்கை 

அய்யலூர் வனப்பகுதியில் தேவாங்கைப் பாதுகாக்க வனத்துறை சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. அய்யலூர் வனப் பகுதியில் தேவாங்குகள்  அழிந்து வரும் நிலையில், தற்போது அது பற்றிய அருமை பெருமைகள் பல இளைஞர்களை ஒன்று சேர்த்துள்ளது. அய்யலூர் வனப் பகுதியில் உள்ள இந்த விலங்கினத்தை காப்பாற்ற முதலாவதாக இந்த வனப் பகுதியை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை இளைஞர்களாலும், இயற்கை ஆர்வலர்களாலும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் படித்து உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து  முக நூலில் ‘தேவாங்குகள் சரணாலயம்’ எனும் பக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம்  தேவாங்குகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காகப் பெரும் முயற்சியில் இந்த இளைஞர்கள் குழு செயல்பட்டு வருகிறது.

காப்பாற்றும் இறுதி முயற்சி 

 சென்னையில் வசித்து வரும் அய்யலூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பாலமுருகனிடம் பேசியபோது இன்னும் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  “தேவாங்குகள் அழிந்துவிட்டால் உணவுச் சங்கிலியும் அறுந்துபோகும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைத்தான் தேவாங்குகள் அதிகம் சாப்பிடுகின்றன. ஒரு தேவாங்கு ஒரு நாளில் 150 கிராம் வரையிலான பூச்சிகளைச் சாப்பிடுகிறது. இயற்கையாகவே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் சூழல் தத்துவப்படி மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்லும் தேவாங்குகளைப் பாதுகாப்பது எல்லோருக்குமான கடமை என்பதை உணர வேண்டும்.

தமிழகத்தின் மிக முக்கிய வனப் பகுதியான  அய்யலூரில் தேவாங்கை சிறு வயது முதலே மிகவும் கவனித்து வருகிறேன். தற்போது முற்றிலும் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன. உணவுக்காக சாலையைக் கடந்து வரும்போது பல விலங்குகள் அடிப்பட்டு இறந்துபோகின்றன. இவற்றைப் பாதுகாக்க வனப்பகுதியைச் சுற்றிலும் பூச்சிகளைக் கவரக்கூடிய சீகை மரங்களை நடவு செய்து மரங்களின் அடர்த்தியைக் கூட்ட வேண்டும்.  இதன்மூலம் தேவாங்குகள் உணவுக்காக வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படும். முதல் விதையாக விரைவிலேயே மரக் கன்றுகளை நடவு செய்யும் பணி இளைஞர்களால் பூர்வீகமாகத் தொடங்க உள்ளது. எங்கள் குழந்தைகளைப் போல தேவாங்கையும் காப்பது எங்களின் கடமை” என்றார் பாலமுருகன்.
உலகில் இந்தியாவைத் தவிர எங்குமே காணக்கிடைக்காத  தேவாங்குகளை இந்தப் பூமி பந்து கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டால், பாடப் புத்தகத்திலே அலங்கார பொம்மையாக மட்டுமே காட்சியளிக்கும் நிலை தேவாங்குகளுக்கு வந்துவிடலாம். இயற்கையின் பேரன்பின் ஆயுதமாக இருக்கும் மரங்களைக் காத்தால் அய்யலூரில் விவசாயிகளைக் காக்கும் ஆயுதமாக தேவாங்குகள் நிச்சயமாக என்றும்  நிலைத்திருக்கும்!
(தி இந்து 2016 தீபாவளி மலர்)


28/10/2016

இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் நாயகர்கள்!


ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16 அன்று தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா?

அஜித் வடேகர்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம் ஆண்டு ஜூலை 13 அன்று இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இவரது தலைமையில் களமிறங்கியது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட  அந்தத் தொடருக்கு இவர் கேப்டனாக இருந்தார். இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதுஒரு புறம் இருக்க, அந்த இரண்டு போட்டிகளுடன் அஜித் வடேகர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். முதல் கேப்டன் என்ற வகையில் பிள்ளையார் சுழி இவர்தான்.

வெங்கட் ராகவன்

கிரிக்கெட்டில் அம்பயராக பலரும் அறிந்த வெங்கட் ராகவனுக்கும் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருக்கிறது. இந்தியா முதன்முதலாக ஒரு நாள் போட்டியை வென்ற அணிக்கு கேப்டனாக இருந்தவர் இவர்தான். 1975-ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிழக்கு ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் இந்தியா பெற்ற முதல் வெற்றி. முதல் உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த பெருமையும் வெங்கட் ராகவனையே சேரும். 1979-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கும் இவரே கேப்டனாக இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

கபில்தேவ்

1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த ஹீரோ. இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகி, சிறப்பான ஆட்டத்தையும் தலைமையையும் வெளிப்படுத்தி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கபில்தேவ். இந்த உலகக் கோப்பையில் டன்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் மளமளவென வீழ்ந்த விக்கெட்டுகளுக்கு மத்தியில், தனி ஒருவனாக 175 ரன்களை விளாசி, அணிக்கு வெற்றித் தேடித் தந்தார் கபில்தேவ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் ஒரு வீரர் செஞ்சுரி போட்டதும் இதுதான் முதல்முறை. அந்தச் சாதனையும் கபிலுக்கே சொந்தம்.

சேத்தன் சர்மா

மொத்தமே 65 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய சேட்டன் சர்மாவுக்கு இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்போதுமே தனி இடம் உண்டு. முதன்முதலாக ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்ந்திய இந்திய நாயகன் இவர். 1987-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் நாக்பூரில்  நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் கென் ரூதர்போர்ட், இயான் ஸ்மித், ஈவென் சேட்ஃபீல்ட் என மூன்று பேரையும் பவுல்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் சாதனையும் இதுதான்.

சச்சின் டெண்டுல்கர்

சாதனை நாயகன், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் படைக்காத சாதனைகளே இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தச் சாதனையை எட்டினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49 சதங்கள்), அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர் (463 போட்டிகள்), உலகக் கோப்பையில் அதிக சதங்கள் (6 சதங்கள்) விளாசியவர், முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வீரர், அதிக ஆட்ட நாயகன் விருது (62 விருது)பெற்றவர், அதிக முறை தொடர் நாயகன் (16 முறை) பெற்றவர் என சச்சினின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சவுரவ் கங்குலி

தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருது என்பது எந்தக் கிரிக்கெட் வீரருக்குமே சவாலான விஷயம். ஆனால், அந்தச் சாவலை சாத்தியமாக்கியவர் சவுரவ் கங்குலி. இரண்டுல்ல; மூன்றல்ல, தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டியில் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வாங்கி உலக அளவில் ஆச்சரியமூட்டினார் கங்குலி. 1997-ம் ஆண்டு கனடாவின் டொரண்டோ நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட சஹாரா கோப்பைத் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் நான்கு ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றார் சவுரங் கங்குலி. இந்நாள் வரை இது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

அனில் கும்ப்ளே

ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் ஐ.சி.சி. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் அனில் கும்ப்ளே. ஒரு நாள் போட்டியில் கும்ப்ளே எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 337. மொத்தம் 271போட்டிகளில் விளையா,டி இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போதைய நிலையில் ஐ.சி.சி.-யின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார் கும்ப்ளே.

ரோஹித் சர்மா

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிப்பது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ரோஹித் சர்மா இரண்டு முறை இரட்டைச் சதங்களை விளாசி பெரும் சாதனை புரிந்திருக்கிறார். உலக அளவில் இரண்டு முறை இரட்டை சதங்கள் விளாசியவர்கள் யாரும் கிடையாது. 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 16 சிக்ஸர்களுடன் 209 ரன்களும், 2014-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 33 பவுண்டரிகளுடன் 264 ரன்களும் குவித்து வியப்பூட்டினார் ரோஹித் சர்மா. உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னும் 264 ரன்கள்தான். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (16 சிக்ஸர்கள்), அதிக பவுண்டரிகள் (33 பவுண்டரிகள்) விளாசிய ஒரே வீரரும் இவரே.

மகேந்திர சிங் டோணி

இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே சூப்பர் மேன் மகேந்திர சிங் டோனி. இதுவரை எந்த இந்திய விக்கெட் கீப்பர்களும் செய்யாத சாதனைகளைப் படைத்திருக்கிறார் மகேந்திர சிங் டோனி. ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பின் மூலம் 355 பேரை அவுட் ஆக்கியிருக்கிறார் டோனி. 281 போட்டிகளில் இந்தச் சாதனையை எட்டியிருக்கிறார் இவர். உலக அளவில் அதிக பேரை அவுட் ஆக்கியதில் நான்காவது இடம். இதுவரை ஒரு நாள் போட்டியில் இந்தியா சார்பில் 24 விக்கெட் கீப்பர்கள் விளையாடியுள்ளனர். இவர்களில் அதிக போட்டிகளில் (281 போட்டிகள்) பங்கேற்றவரும், அதிக ரன்கள் (9058 ரன்) விளாசியவரும் டோனி மட்டுமே.

விராட் கோலி

ரன் குவிப்பதைப் போல சாதனைகளைக் குவிப்பதில் விராட் கோலிக்கு நிகர் அவரேதான். இந்தியாவில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் போட்டியில்  விரைவாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் கோலிக்குதான். 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி, 52 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் கோலி. இந்திய வீரர்களின் சார்பில் அதிரடியாக குறைந்த பந்தில் விளாசப்பட்ட சதம் இதுதான். அந்த வகையில் கோலி சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.

தி இந்து, 28/10/2016
  

26/08/2016

கடலை நடுங்கவைத்த கசிவு


உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள  ‘டீப்வாட்டர் ஹரிசோன்’ படமும் உலகெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் மனித தவறால் கடலில் ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கசிவு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

2010 ஏப்ரல் 20 அன்று மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் துரப்பன பணி நடக்கும் இடத்துக்கு  ஊழியர்கள் வேலைக்குப் போகிறார்கள். ஜாலியாக பேசிக்கொண்டும், குடும்பத்தினருடன் சாட்டிங் செய்தபடியும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென எண்ணெய் கசிவு ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் எண்ணெய் மிக வேகமாகப் பீய்ச்சி அடிக்கிறது. ஊழியர்கள் அதில் சிக்கி சின்னாபின்னாகிறார்கள். அதோடு தீயும் பற்றி நடுக்கடலில் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்தச் செய்தி வெளியே தெரிந்ததும் ஊழியர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கிறார்கள். ஒட்டுமொத்த எண்ணெய் துரப்பன கட்டமைப்பைத் தீ விழுங்கும் தருணத்தில், உயிர்ப் பிழைக்க நாயகனும் பிற ஊழியர்களும் செய்யும் பரப்பரப்பான முயற்சிகளை, விறுவிறுப்புடன் படமாகச் சொல்லும் கதைதான் ‘டீப்வாட்டார் ஹரிசோன்’.

இந்தப் படத்தை பீட்டர் பெர்க் இயக்கியிருக்கிறார். காட்சிகளைத் தத்ரூபமாக உருவாக்கியிருப்பதில் இயக்குநருக்கு நிச்சயம் பெயர் கிடைக்கும். நாயகனாக மார்க் வால்பெர்க் நடித்திருக்கிறார். மிகப் பெரிய விபத்தில் சிக்கிக்கொள்ளும்போது வலியுடன் நகரும் ஒவ்வொரு நிமிடத்தையும், அதிலிருந்து தப்பிக்க நாயகன் செய்யும் சாகசங்களையும் பிரமிப்பு ஏற்படும் வகையில்  நடித்திருக்கிறார். படத்துக்கு இசையின் மூலம் ஸ்டீவ் ஜப்லோன்ஸ்கை  உயிரூட்டியிருக்கிறார். ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்


பேய் படங்களின் பிடியில் இருந்து கோடம்பாக்கம் விலகாத நிலையில், காதல் கதையை சொல்ல வந்திருக்கிறது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம். இந்தப் படம் கோடம்பாக்கத்தைத் திரும்பவும் காதல் கதை ஃபார்முலாவுக்குள் கொண்டு செல்லுமா?

துடுக்குத்தனமும் சேட்டைகளுமாக உலா வரும் நாயகன் வால்டர் பிலிப்ஸ் (வினோத்), கல்லூரியில் படிக்கிறார். நண்பரின் திருமணத்தில் நாயகி இஷா தல்வாரைப் (ஆயிஷா) பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆயிஷாவின் குடும்பமோ மிகவும் கட்டுப்பாடான இஸ்லாமிய குடும்பம். கட்டுபாடுகளை மீறி  வினோத்தும் ஆயிஷாவும் காதலில் வெற்றிக்கொடி நாட்டினார்களா இல்லையா என்ற அரதப் பழசான கிளைமாக்ஸை சொல்லும் படம்தான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் என ரீமேக் படங்களை எடுத்த மித்ரன் ஜவஹர் மலையாளத்தில் வந்த ‘தட்டத்தின் மறயத்து’ என்ற படத்தை ரீமேக் செய்திருக்கிறார். மதங்களைத் தாண்டி இரு மனங்கள் கலக்கும் காதல் கதையைச் சொல்லும் ஒரு படத்தில் காதலுக்கான எதிர்ப்பையும் காதலின் வலியும் கொஞ்சமும் காட்டாமல் விட்டது படத்தில் பெருங்குறை.  ஆனால், ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமைகளைப் பற்றி பேசிய விதத்தில் படத்தைப் பாராட்டலாம். மதங்களைக் கடந்து சொல்லப்படும் காதல் கதைகளில் காட்டப்படும் வன்முறைச் சம்பவங்கள் வராமல் படத்தை  நகர்த்திய விதத்திலும் இயக்குநருக்குச் சபாஷ் போடலாம்.

 ‘கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளரும் பெண்களுக்கும் தனியாக ஆசை இருக்கும். நம் கவுரத்துக்காக அவர்களை பகடையாக்கக் கூடாது’ போன்ற வசனங்கள் சுளீரென்று இருக்கின்றன. ஒட்டுமொத்த கதையையும் கடைசியில் வரும் சில வசனங்கள்தான் காப்பாற்றுகின்றன.  சிறைக்கு சென்று வீட்டுக்கு வரும் நாயகனை அவரது அப்பா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அதன்பின்  நாயகன் வீட்டு பக்கமே வராமல் இருப்பது, அம்மாவைகூட பார்க்காமல் இருப்பது போன்ற பூ சுற்ற வைக்கும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. காவல் அதிகாரியாக வரும் மனோஜ் கே. ஜெயின், சிங்கமுத்து ஆகியோர் காதலைச் சேர்த்து வைக்க வரும் போலீஸாக மட்டுமே காட்டி, காவல் துறையை காமெடி துறையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கதைக்குக் கச்சிதமாகப் பொருத்தமான நாயகன்தான் வால்டப் பிலிப்ஸ். தைரியமாக போலீஸையே அடிப்பது, நண்பர்களுடன் சேட்டை செய்வது, காதலியின் பார்வையைப் பார்த்து உருகுவது, காதலைச் சொல்லிவிட்டு பரிதவிப்பது என  நாயகனுக்கு நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகளை ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே முக பாவனைகளுடன்  நாயகன் காட்டும் காட்சிகள் மனதில் ஒட்டாமலேயே போகின்றன. நாயகி இஷா தல்வார் படம் முழுவதும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறார். கட்டுப்பாடான குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அடக்க ஒடுக்கமாக எப்படி இருப்பார் என்பதை உள்வாங்கி நடித்திருப்பதில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 நாசர் கதையில் அவ்வப்போது வந்துபோகிறார். தலைவாசல் விஜய், வனிதா பாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். காமெடியனாக வரும் அர்ஜூன் நந்தகுமார் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ஒளிப்பதிவும், இசையும் படம் முழுவதும் கவனம் ஈர்க்க வைக்கிறது. சில பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போல இருந்தாலும் பின்னணி இசை  மூலம் படத்தை நிமிர செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான். விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலையைக் காட்டாமலேயே கன்னியாகுமரி மாவட்டத்தை தன் அழகான கேமிராவல் படம் பிடித்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா.

வலி நிறைந்த காவியமாக சொல்ல வேண்டிய ஒரு காதல் கதையை, பலவீனமான திரைக்கதை, காட்சி அமைப்பால் தடுமாறி நிற்கிறது மீண்டும் ஒரு காதல் கதை!

மதிப்பெண்: 2 / 5

15/07/2016

செரீனா வில்லியம்ஸ் - சீறி பாயும் புலி!



செரீனா வில்லியம்ஸ்... டென்னிஸ் உலகின் பாயும் புலி. சீறி அடிக்கும் சர்வீஸ்களில்  முன்னணி வீராங்கனைகளையே பந்தாடிப் புதிய உச்சம் தொட்டவர். தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸூடன் இணைந்து டென்னிஸ் உலகில் புதிய தடத்தைப் பதித்தவர் செரீனா. ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் மரியா ஷரபோவாவை சமன் செய்து புதிய மைலகல்லை எட்டியுள்ள செரீனா, தனது வயதுக்கு மீறிய வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் ஜெட் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ‘கறுப்பு மின்னல்’ என்று செல்லமாக அழைக்கப்படும் செரீனா, இன்றைய இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு ஆதர்ச சக்தியாக உருவெடுத்துள்ளார்.

 இன்று டென்னிஸ் உலகில் தனித்தன்மையுடன் உலாவிக்கொண்டிருக்கும்  செரீனா வில்லியம்ஸுக்குச் சின்ன வயதில் அவரது அம்மாதான் எல்லாமுமே. ஐந்தாவது பெண் குழந்தையாகப் பிறந்த செரீனா, மூன்று வயது முதலே டென்னிஸ் பேட்டை கைகளில் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.  டென்னிஸ் விளையாட்டை செரீனா மற்றும் வீனஸ் ஆகியோரின் மனதில் ஆழமாகப் பதிக்க வைத்தவரும் அவரது அம்மா ஓரெஸினி பிரைஸ்தான். இவரும் ஒரு டென்னிஸ் வீராங்கனைதான். செரீனாவுக்கும் வீனஸூக்கும் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து அதன் விதையை விதைத்தது இவர்தான். ஆனால், அடுத்தடுத்த பயிற்சிக்காக அமெரிக்காவின் கிராம்டன் நகரில் உள்ள டென்னிஸ் அகாடமியில் செரீனா சேர்ந்த பிறகுதான் அவரது திறமைகள் டென்னிஸ் உலகில் பளிச்சென வெளிப்பட்டன.

1991-ம் ஆண்டில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் நடத்திய ஜூனியர்களுக்கான போட்டியில் 10 வயது செரீனா வில்லியம்ஸ் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 43-3 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வென்று புதிய சாதனை படைத்ததோடு ஃபுளோரிடாவின் நம்பர் ஒன் குட்டி வீராங்கனையாகவும் உருவெடுத்தார்  செரீனா. தொழில்முறை வீராங்கனையாக அவர் களமிறங்கியது 1995-ல் தான். 

1996-ம் ஆண்டு செரீனாவுக்கு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டு  ‘அமெரிடெக் கோப்பை சிகாகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் தரவரிசை பட்டியலில் 304-வது இடத்தில் இருந்தார். இந்தத் தொடரில் 7-வது நிலையில் இருந்த வீராங்கனை மேரி பியர்ஸ், 4-வது நிலை வீராங்கனை மோனிகா செலஸ் ஆகியோருக்கெல்லாம் ‘தண்ணீ’ காட்டினார் செரீனா வில்லியம்ஸ். தரவரிசை பட்டியலில் பின் தங்கிய நிலையிலிருக்கும் ஒரு வீராங்கனை 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளைப் பந்தாடியது இதுதான் முதல் முறை என்ற சாதனை செரீனா வசமானது. அரையிறுதியில் 5-வது நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்டிடம் தோற்றாலும், செரீனாவின் தரவரிசை கிடுகிடுவென உயர்ந்தது. அந்த ஆண்டின் இறுதியில் தரவரிசை பட்டியலில் 304-வது இடத்திலிருந்து 99-வது இடத்துக்கு முன்னேறி ஆச்சரியமூட்டினார் அவர்.  இந்தத் தொடர் வருங்காலத்தில் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கப்போகும் ஒரு வீராங்கனையை அமெரிக்காவுக்கு அடையாளம் காட்டியது.

தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வந்த செரீனா வில்லியம்ஸ், 1998-ம் ஆண்டில்தான் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலடி எடுத்து வைத்தார். முதல் ஆண்டு 2, 3 சுற்றுகளிலேயே மூட்டையைக் கட்டியவர், 1999-ம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று அசத்தினார். இதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் செரீனாவின் கிராஃப் வேகவேகமாக உயர்ந்தது. இடையில் சில ஆண்டுகள் தவிர பெரும்பாலும் எல்லா ஆண்டுகளிலும் ஒரு கிராண்ஸ்லாம் பட்டமாவது அவர் வாங்காமல் இருந்ததில்லை.

ஓர் ஆண்டில் நடைபெறும் நான்கு கிராண்ஸ்லாம் போட்டிகளில் 2002 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தலா மூன்று பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருக்கிறார் செரீனா. அண்மையில் அவர் வென்ற விம்பிள்டன் பட்டம் 22-வது பட்டமாகும். 22-வது முறையாக பட்டம் வென்றதன் மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீராங்கனைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மரியா ஷரபோவாவின் சாதனையைச் சமன்செய்துள்ளார் செரீனா. ஆஸ்திரேலியாவின் மார்க்கெரட் கோர்ட் 24 பட்டங்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இன்னும் இந்தச் சாதனையை முறியடிக்க 3 பட்டங்களே தேவை.

வழக்கமாக 30 வயதைக் கடந்த டென்னிஸ் வீராங்கனைகள் கொஞ்சம் தடுமாற செய்வார்கள். ஆனால், தற்போது 35 வயதாதிவிட்டாலும் செரீனாவிடம் உள்ள ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையவில்லை. 2015-ம் ஆண்டில், 34 வயதான நிலையில், 3 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்று, வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை என்று ஏற்கெனவே நிரூபித்துகாட்டியிருக்கிறார் அவர். விம்பிள்டன் பட்டத்தை வென்றதும், “ எனக்குப் பசி இன்னும் கொஞ்சமும் அடங்கவில்லை. ஒவ்வொரு வருஷமும் ஒரு பட்டமாவது வெல்ல வேண்டும்” என்று பட்டங்கள் மீதான காதலை உரக்க சொன்னார் செரீனா வில்லியம்ஸ். இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டி இன்னும் பாக்கியிருக்கிறது. எனவே அடுத்த ஆண்டே ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக செரீனா வில்லியம்ஸ் ஆகலாம்.

செரீனா வில்லியம்ஸ் வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போதெல்லாம், ஆண் தன்மை கொண்டது போல அவரது உடலமைப்பு இருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களைக் காதில் கொஞ்சமும் வாங்கிக்கொள்ளாமல் வெற்றிகளை வசமாக்கி, கறுப்பு மின்னலாக டென்னிஸ் உலகில் மின்னிக்கொண்டிருக்கிறார் இந்த முடிசூடா ராணி!

சிங்கிள் சிங்கம்!

ஒற்றையர் பிரிவில் 22 பட்டங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் மட்டுமே சிங்கிளாக முன்னேறிகொண்டிருக்கிறார். அதிகப் பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் உள்ள 30 பேரில் 27 பேர் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்களே. எஞ்சியிருப்பது அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸூம் மரியா ஷரபோவாவும்தான். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 7 பட்டங்களும், மரியா ஷரபோவா 5 பட்டங்களுடன் பின் தங்கியுள்ளனர். இவர்களுக்கு முறையே 36, 30 வயதாகிவிட்டது. எனவே செரீனா வில்லியம்ஸ் முதலிடம் வந்தாலும், அவரது சாதனையை முறியடிக்க புதிதாக ஒரு வீராங்கனை வந்தால்தான் முடியும். 

- தி இந்து, 15-07-2016

17/06/2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்


ரஜினியின் மாஸ் வசனத்தைத் தலைப்பாகக் கொண்டு  சாம் ஆண்டன் இயக்கத்தில் வந்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

சென்னை ராயபுரத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறார் ராயபுரம்  நைனா (சரவணன்). அவருக்கு வயதாவதால் தன் மகள் ஹேமாவைக் (ஆனந்தி) தன்னை போல ஒரு தாதாவுக்குக் கட்டிக்கொடுத்து அவரை அடுத்த  நைனாவாக்க நினைக்கிறார். சரவணனின் அடியாட்கள் செய்யவேண்டிய ஒரு கொலையை ஜானி (ஜி.வி.பிரகாஷ்) செய்ததாக சரவணனிடம் அவரது அடியாட்கள் தப்பாகச் சொல்கிறார்கள்.  அடுத்த நைனாவாக அவர்தான் சரியான ஆள் என்றும் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஜி.வி.பிரகாஷோ ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வந்துவிடும் விசித்திர நோயாளி. போதாக்குறைக்கு சரவணனை விரட்டிவிட்டு வில்லன் ..... நைனாவாகிறார்.  வில்லனை டம்மி தாதா ஜி.வி.பி. வீழ்த்தி ராயபுரம் நைனாவானாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

காமெடி படமா, கேங்ஸ்டர் படமா என்று கணிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் ஒருசேர கலந்துக் கொடுத்திருப்பதில் இயக்குநர் சாம் ஆண்டன் பாஸாகிவிடுகிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் உல்டா போலவே இருந்தாலும், ஜி.வி.பிரகாஷின் தோற்றத்துக்கு ஏற்ற கதை. பாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஜி.வி.பி.யின் முந்தைய படங்களைவிட   நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். படத்தில் டான்ஸர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

நைனாவாக எடுத்த எடுப்பிலேயே மிரட்டுகிறார் சரவணன். ஆனால், அவரது கூட்டத்தில் சார்லி, கருணாஸ், யோகி பாபு என ஒவ்வொருவராக வர படம் காமெடி கியரில் பயணிக்கிறது. பாகுபலி படத்தில் வரும் காலகேயர்களின் பாசையில் பேசி கலகலப்பூட்டுகிறார் கருணாஸ். யோகி பாபுவும் கருணாஸுடன் சேர்ந்து காமெடியாட்டம் ஆடியிருக்கிறார். வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.

மசாலா படத்தின் தியரிப்படி நாயகி ஆனந்தி ஜிவிபியுடன் டூயட் பாடுகிறார்; ரொமான்ஸ் செய்கிறார்.  ‘பாகுபலி மகா’ என்ற கெட்டப்புடன் வரும் மொட்டை ராஜேந்திரன் பாத்திரம் புஷ்வானமாகிவிடுகிறது. ஜி.வி.பி.யின் அப்பாவாக வரும் வி.டி.வி. கணேஷ் போடும் திட்டங்கள் அரதப்பழசாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. வில்லனாக வரும் உடல்மொழியில் மிரட்டுகிறார்.
ரவுடியைத் தேர்வு செய்ய ரியாலிட்டி ஷோ நடத்துவது, ஜி.வி.பி.யின் சாகசங்களை டீஸராகக் காட்டுவது என சமகால டி.வி. ஷோக்களை கிண்டலடிக்கவும் செய்கிறார்கள். தெறி, வேதாளம், பாகுபலி, வெளிவரவிருக்கும் கபாலி படங்களின் இசை, வசனங்களை இயக்குநர் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் வரும் மன்சூரலிகான், பொன்னம்பலத்தையும்கூட 1990-களில்  நடித்த பாத்திரத்திலா காட்டுவது இயக்குநர்? சொந்த சரக்கில் இயக்குநருக்கு நம்பிக்கை இல்லையா? இரட்டை அர்த்த வசனங்களும் படத்தில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. ஜி.வி.பி. ஃபாதர் ஆவது போன்ற மத நம்பிக்கை சார்ந்த காட்சிகளில் காமெடியைப் புகுத்தியிருப்பது ரசிக்கவைக்கவில்லை.  காமெடி ட்ராக்கில் படம் வேகமாகப் பயணிக்கும்போது செண்டிமெண்ட்டுக்குள் புகுந்துவிடுகிறது. செண்டிமெண்டில் போகும்போது ஆக்‌ஷன், ஆக்‌ஷனுக்குள் போகும்போது காமெடி என மியூசிக்கல் சேர் போல கதை சுற்றிசுற்றி வருவது படத்துக்கு மைனஸ்.

காமெடி படம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதிப்படி லாஜிக்கே இல்லாமல் கதை பயணிக்கிறது. வில்லன் அடியாளின் எதிர்வீட்டிலேயே சரவணன் ஒளிந்துகொண்டிருப்பதுகூட வில்லனுக்கு தெரியாமல் இருப்பது, ரத்தத்தைக் கண்டாலே பயப்படும் ஜி.வி.பி. ஆஜானுபாகுவாக இருக்கும் வில்லனை கிளைமாக்ஸில் திடீரென புரட்டி எடுப்பது போன்ற காதில் பூச்சுற்றும் காட்சிகள் நிறைய உள்ளன.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார்.  ‘கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்...’ பாடாலை கானா வடிவில் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. இரட்டை சவாரி வேண்டாம் ஜிவிபி. கிருஷ்ணன் வின்செண்டின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். 

தாதா பாணியிலான ஒரு கதையை காமெடியாகக் காட்ட முடியும் என்ற  ரசணைக்குப் பெயர் கிடைக்கலாம்.

மதிப்பெண்: 2 / 5

29/05/2016

உறியடி விமர்சனம்

ஜாதிய தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுக்கொண்டிருக்கும் நுட்பமான அரசியலையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம்  ‘உறியடி’. ஏராளமான புதுமுகங்களைக் களத்தில் இறக்கி உறியடிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா?

இறந்துபோன ஒரு ஜாதிய தலைவருக்கு சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார்.  உடனே அரசியல் கட்சி தொடங்க திட்டமிடுகிறார்கள் சாதி சங்கத்தினர். ஜாதி சங்கத்தில் உள்ள மைம் கோபி, ஒரு பொறியியல் கல்லூரிக்கு எதிரே பார் கடையை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைப் பகடைக்காயாக்கி அரசியல் கட்சியைத் தொடங்க திட்டமிடுகிறார். இந்த நுட்பமான ஜாதி அரசியல் விளையாட்டில் சிக்கி மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார் விஜயகுமார். அவரோட மூன்று நண்பர்கள். நான்கு பேருமே கல்லூரி மாணவ பருவத்துக்குரிய துறுதுறுப்புடன் சுற்றுகிறார்கள். அவர்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 15 ஆயிரம் ஜாதி ஓட்டுகளை அரசியல் கட்சியாக மாற்ற  துடிக்கும் பாத்திரத்தில் மைம் கோபி ஸ்கோர் செய்கிறார். ஜாதி அரசியல்வாதிகளின் உண்மையான மனத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துகிறார். லாட்ஜ் ஓனராக வரும் சுருளி வஞ்சமே உருவானவ பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். பொது இடத்தில் அவமானபடுபவன் பழிவாங்கப் புழுங்குவதை கண் முன்னே கொண்டு  வந்து நிறுத்துகிறார். படத்தில்  நடித்துள்ள ஹெல்லா பென்னாவை நாயகி என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். தமிழ் படத்தில் வசனமே பேசாத நாயகி இவராகத்தான் இருப்பார். 

படம் முழுவதுமே மாணவர்கள் குடியும் கும்மாளமுமாகவே இருக்கிறார்கள். எப்போதும் பாரிலேயே விழுந்துக்கிடக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றாலும் முறுக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.  கொலை செய்யும் அளவுக்கு அடிதடியில் ஈடுபட்டாலும் திரும்பவும் கல்லூரியில் ஜாலியாகவே இருக்கிறார்கள்.  படத்தில் போலீஸே இல்லை. இப்படி காதில் நிறையவே பூமாலையைச் சுற்றுகிறார் இயக்குநர் விஜயகுமார்.

ஜாதி சங்கத் தலைவர் சிட்டிஸன் சிவக்குமார், பார் ஓனர் மைம் கோபி, சாதி வெறி கொண்ட ஆட்களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்க்கொள்ளும் காட்சிகள் திக்திக் ரகமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஜாதிய படமாக இருந்தாலும, எந்த ஜாதி என்றுகூட அனுமானிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக படம் பண்ணியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

மிகவும் அழுத்தமான கதைத்தான். ஓரிடத்தில் சறுக்கினாலும் மொத்த திரைக்கதையும் சீட்டுக் கட்டுப் போல சரியும் அபாயம் உள்ள படைப்புதான். ஆனால், படத்தில் அதுதான் நடந்திருக்கிறது. சாதி அரசியல் கதையும், மாணவர்கள் நான்கு பேரின் கதையும் தனியாகப் பயணிக்கிறது. ஆனால், இரண்டையும் ஒரு கோட்டில் ஒன்றாக இணைப்பதில் இயக்குநர் கோட்டை விடுகிறார். இதனால், பிரேக் இல்லாத வண்டி போல படம் இஷ்டத்துக்குப் பயணிக்கிறது.

படத்துக்கு பின்னணி இசையையும் விஜயகுமாரே செய்திருக்கிறார். ஆண்டனிதாசனின் இசை பாடலுக்கு வலு சேர்க்கவில்லை. பால் லிவிங்ஷ்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

உறியடி - குறியில்லாத அடி

மதிப்பெண் - 2.5 / 5

27/05/2016

வாக்களித்தார்களா செல்போன் சிங்கங்கள் ?


முன்பெல்லாம் அரசியல் சங்கதிகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருந்தன டீக்கடைகளும், முடி திருத்தும் நிலையங்களும். இன்றோ அது தலைகீழாக மாறிவிட்டது.

அரசியல் தொடர்பான விஷயங்களாக இருந்தாலும், அரசியல் விவாதங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில்தான் முதலில் எதிரொலிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் எடுத்துக்கொள்ளப்படும் விஷயங்களைப் பொறுத்து அரசியல் தலைவர்கள் தங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் களமாடும் பகுதியாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக தேர்தல் புதிய பிரசாரக் களமாக மாறிப்போனது. சமூக வலைத்தளங்களில் உலவும் இளைஞர்களின் வாக்கு யாருக்கு என்று சொல்லுமளவுக்குப் பட்டிமன்றங்களும் சூடுபிடித்தன.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சியும் பொறுப்பேற்றுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது என்று பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டாலும், அது பெரும் வளர்ச்சி கண்டது அண்மைக்காலத்தில்தான்.

அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரசாரம் செய்து ஒபாமா வெற்றி மாலையைச் சூடியபோது, பல நாடுகளின் அரசியல்வாதிகள் இதைப் புதிய பிரசார களமாகப் பார்த்தார்கள்.
குறிப்பாக இந்தியாவில் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. தன்னை தேசிய அளவில் நிலை நிறுத்திக்கொள்ள ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக வலைத்தளங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லா அரசியல்வாதிகளின் ஃபேஸ்புக் பக்கங்களும் மெருகூட்டப்பட்டன.

ஒவ்வொரு தலைவருக்கும் புதிய பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவை லைக்குகளையும் அள்ளின. மோடியின் சமூக வலைத்தள பிரச்சார உத்தி இளைஞர்களை ஈர்த்தது. சமூக வலைத்தளங்கள் மூலமாக வெற்றிகரமாகப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியும் என்று மோடி நிரூபித்த பிறகு பிற தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் குதித்தார்கள். 90 வயதைக் கடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி சிறு கட்சிகளின் தலைவர்கள்கூட சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை எடுத்துச் செல்லத் தொடங்கினர்.
அதுவும் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1.50 கோடி இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் என்ற அறிவிப்பு வெளியானவுடன், சமூக வலைத்தளங்கள் மீதான அரசியல் கட்சிகளின் ஈர்ப்பு கூடிக்கொண்டே போனது.

ஏனென்றால் இன்று சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லாத இளைஞர்களை இந்தச் சமூகம் வேற்றுக் கிரகவாசிபோல பார்க்கும் நிலை வந்துவிட்டது. அப்படி இளைஞர்களின் களமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக் கோடிக்கணக்கில் செலவு செய்யவும் கட்சிகள் தயங்கவில்லை.

இளைஞர்களும், புதிய ஒன்றரைக் கோடி வாக்காளர்களும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது. அதுவும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அவர்கள்தான் என்றும் கோடிட்டுக் காட்டப்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திய மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்குச் சமூக வலைத்தளங்களில் ஆதரவும் பெருகியது போன்ற ஒரு தோற்றம் உருவானது. ஆன்லைன் கருத்துக் கணிப்புகள் என்றால் இந்தக் கட்சிகள் முன்னணி வகித்தன.

அரசியல் களத்தில் கட்சிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், பிரசாரங்களில் செய்யப்படும் தவறுகள், அந்தர்பல்டிகள், உளறல்கள் போன்றவற்றைச் சமூக வலைத்தளங்களில் உள்ள இளைஞர்கள் மீம்ஸ்களாகப் பதிவு செய்து உலவவிட்டு ஹிட் அடிக்கவும் செய்தார்கள்.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தை உணர்ந்துதான் வைகோ போன்ற தலைவர்கள் தொடக்கம் முதலே, “சமூக வலைத்தளங்களில் எங்கள் கூட்டணியைக் கொண்டாடுகிறார்கள்” என்று கூறி வந்தார்கள். பிற தலைவர்கள் எல்லாம் தங்கள் பிரச்சாரத்தின் பேச்சு, ஒளிப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பிரசாரம் செய்தார்கள்.
ஆனால், வைகோ போன்ற தலைவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை நேரிடையாகவே விளித்து பிரசாரம் செய்யும் காட்சியும் அரங்கேறியது. “செல்போன் சிங்கங்களே, அலைபேசிப் புரட்சியாளர்களே’ என்று விளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்கள். ஆனால், சமூக வலைத்தளத்தில் புழங்கும் இளைஞர்கள் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்டதற்கு மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

இளைஞர்களை முன்னிறுத்தி மாற்றத்தை எதிர்நோக்கியவர்கள் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார்கள். வயது வாரியாக வாக்களித்தவர்களின் புள்ளிவிவரங்கள் கிடைக்காது என்றாலும் சுமார் ஒன்றரைக்கோடி புதிய வாக்காளர்களும், இளைஞர்களும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. நோட்டாவுக்குக்கூட சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் மட்டுமே மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளன. இது இளைஞர்கள் அளித்த வாக்குகளாக இருக்கலாம் என்றாலும் அந்த எண்ணிக்கையும் குறைவுதான்.

தமிழகத்திலேயே வாக்குப் பதிவு மிகவும் குறைவாகப் பதிவானது சென்னையில்தான். 60.9 சதவீதம் வாக்குகளே இங்கே பதிவாயின. இதேபோல தமிழகத்தில் சுமார் ஒரு கோடிப் பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் சுமார் 52 லட்சம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 48 லட்சம் பேர் தமிழகத்தின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் கிடையாது. ஆனால், 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இதில் மிக அதிகம். தமிழகத்திலே சென்னையில் வாக்குப் பதிவு குறைவு என்றால் சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கும் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
வழக்கமாக வாக்களித்துவிட்டு செல்ஃபி எடுத்து பதிவிடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்த முறை குறைவாகவே இருந்தது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது.

கொஞ்சம் உற்று நோக்கினால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள் குறைவாகவே வாக்களித்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதற்கு சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களைத் தொடர்ந்து திங்கள்கிழமை தேர்தலை வைத்தால் தொடர்ச்சியாக வந்த விடுமுறையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உற்பத்தி செய்து, லைக்குகளைப் பெறுவதில் காட்டும் ஆர்வம், விரல் நுனியில் வைக்கப்படும் மையின் மீது இன்னும் வரவில்லையோ என்னவோ!

- தி இந்து, 27-5-2016 (தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எழுதியது)

01/04/2016

கோலி: பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல!

பிரான்ஸில் ஒரு கதை உண்டு. பிரெஞ்சு போர் வெற்றிக்குப் பிறகு, போரைத் தலைமையேற்று நடத்திய பிரெஞ்சு ஜெனரலிடம் ஒரு கேள்வி கேட்டாராம். “இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் படையின் துணைத் தளபதிதானே?” என்ற கேள்விதான் அது. இருபது ஓவர் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போர்களில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் யார் என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் கேட்டால், துணை கேப்டன் விராட் கோலியை நிச்சயம் கைகாட்டுவார்.
பொறுமை காக்க வேண்டிய நேரத்தில் பொறுமை, வேகம் கூட்ட வேண்டிய நேரத்தில் வேகம், விவேகம் காட்ட வேண்டிய சூழ்நிலையில் விவேகம் என மிளிர்கிறார் விராட் கோலி. “சச்சின் டெண்டுல்கர்தான் என்னுடைய ரோல் மாடல்” என்று எப்போதும் சொல்லும் விராட் கோலி, இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மாறிக்கொண்டிருக்கிறார்!

நிதானம், நேர்த்தி

இருபது ஓவர் என்பது கிரிக்கெட்டில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம். தொடக்கம் முதலே ஆவேசம், முரட்டுத்தனமான விளாசல், எல்லைக்கோட்டைத் தாண்டிக்கொண்டே இருக்கும் பந்து என அதிரடியான விளையாட்டைக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கிரிக்கெட்டின்  மரபார்ந்த அழகுக்கெல்லாம் இங்கே வேலையே இல்லை. இருபது ஓவர் விளையாட்டில் சூறாவளிகளாக இருக்கும் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற ஆட்டக்காரர்கள் இப்படியான அதிரடி வீரர்கள்தான். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வீரர் விராட் கோலி. நிதானமும் நேர்த்தியும்தான்

விராட் கோலியின் உத்தி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர், இருபது ஓவர் ஆசியக் கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் என எல்லா தொடர்களிலும் விராட் கோலியின் இந்த உத்தியைப் பார்த்திருக்கலாம். பெரிய ஷாட்களை அடிக்க முயலாமல் பெரும்பாலும் ஓரிரு ரன்கள் சேர்ப்பதிலேயே கோலியின் கவனம் இருந்ததைப் பார்த்திருக்கலாம். அதே சமயம் வாய்ப்பு கிடைக்கும்போது நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்புவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
பதற்றம் இல்லா ஆட்டம்

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இரு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. இது, ஆட்டம் முழுவதும் விராட் கோலியின் மீது சுமையாக மாறியது. ஆனால், மனிதர் பதற்றம் அடையவே இல்லை. பந்துகளை வீணடிக்காமல் ஓரிரு ரன்களாகச் சேர்த்தார். முதலில் ஆட்டத்தை நிலைப்படுத்திக்கொண்டார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் யுவராஜ் சிங்கால் ஓட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கோலி அலட்டிக்கொள்ளவே இல்லை. யுவராஜ் சிங் களத்தில் இருந்தவரை ரன் ஓடுவதில் அவசரம் காட்டாமல் அவரை ஆசுவாசப்படுத்தினார். ஆனால், தோனி களத்துக்கு வந்த பிறகு ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் எல்லாம் இரண்டு ரன்கள் ஓடி எதிரணிக்குத் திகிலூட்டினார்.

இளைஞர்கள் கற்க வேண்டியது

தோனியிடமிருந்து தலைமைப் பண்பைக் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் அலட்டிக்கொள்ளாமல் இருத்தல், சரியான திட்டமிடல், சமயோசிதமான புத்தி, வித்தியாசமான சிந்தனை ஆகியவை தோனியின் தலைமைப் பண்பில் வெளிப்படும். கோலி என்றாலே ஆக்ரோஷம்தான். ஆக்ரோஷம் எப்போதும் வெற்றி தராது என்று சொல்வார்கள். ஆனால், கோலியின் ஆக்ரோஷம் கண்மூடித்தனமான ஆக்ரோஷமல்ல. ஆக்ரோஷத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றியை வசப்படுத்த முடியும் என்பதற்கு கோலி சிறந்த உதாரணம். கோலியிடம் ஆக்ரோஷம் மட்டுமல்ல, கூடவே பொறுமை, வேகம், விவேகம் ஆகியவையும் நிறைந்தே இருக்கிறது. இவை அனைத்தையும் ஒருசேர நிர்வகிப்பதில் விராட் கோலி தொடர்ந்து செஞ்சுரி அடித்துக்கொண்டிருக்கிறார்.

பாணி மாறாத ஆட்டம்

இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம்தான் மூலதனம். ஆனால், கோலி அந்த நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளவில்லை. அவருடைய பாணியியைப் பின்பற்றினார். அதாவது முதலில் பொறுமை, பிறகு அதிரடி என்ற பாணியை அவர் பின்பற்றினார். அதிரடியும் கண்மூடித்தனமான அதிரடி அல்ல. இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாமல் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். டிவில்லியர்ஸ், கெயில் போன்றோர் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பந்துகளை பறக்கவிட்டாலும், க்ளாஸிக் ஷாட்டுகளின் மூலமாகவே ஆதிக்கம் செலுத்தி, தனது ஆட்டத்தில் ஏ கிளாஸ் அந்தஸ்தைக் கூட்டுகிறார் கோலி.

வெளிப்பட்ட தலைமைப் பண்பு

இருபது ஓவர், ஒருநாள், டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், அவருடைய பணியைச் சிறப்பாகவும், தொடர்ந்தும் செய்வதையும் பார்க்கலாம். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமணன் என சீனியர்கள் இருந்த காலத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் விராட் கோலி. இந்த அனுபவசாலிகள் முன்னிலையிலேயே தன்னிடம் இருந்த தலைமைப் பண்பை வெளிப்படுத்த கோலி தவறியதில்லை. சீனியர்கள் இருக்கிறார்கள் என்று ஒதுங்கிக்கொள்ளாமல், களம் இறங்கி அதகளப்படுத்துவது கோலியின் பாணியே. இதுவும் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம்தான்.

அணியில் ஆதிக்க வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி விராட் கோலி பற்றி இப்படிக் கூறினார்: “நான்கு வருடங்களாக கோலியின் ஆட்டத்தை எதிர்முனையில் நின்று அதிகம் ரசித்திருக்கிறேன். இந்திய அணியில் கடந்த ஒரு வருடமாக கோலியின் பங்களிப்பு அதிகம். இந்திய அணி கோலியை 65 சதவீதம் நம்பியுள்ளது” என்று தோனி குறிப்பிட்டார்.

அணிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பொறுப்பைத் தன் தோள் மீது சுமந்துகொள்ளும் கோலி, அந்த நெருக்கடி தன் ஆட்டத்தைப் பாதிக்கவிடுவதில்லை. தீவிரமும் கவனமும் அபாரமான திறமையும் பொருந்திய ஆட்டத்தால் இந்தியா வெற்றிகள் குவிக்க உதவுகிறார். அதனால்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும் ஜொலிக்கிறார்!

- தி இந்து, 1/4/2016

10/03/2016

யாருக்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா?



தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இணை வேறு யாரும் இல்லை. வேட்பாளர்களை விரைவாக அறிவிப்பதில் தொடங்கி பிரச்சாரத்தை முடிப்பது வரை எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ள நிலையில் ஜெயலலிதாவிடம் வழக்கத்துக்கு மாறாக அமைதி மையம் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணிகள் அமைப்பதில் திமுக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் விஜயகாந்தின் தேமுதிகவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்புக்குக் காரணம் இருக்கிறது. இதுவரை தேர்தலில் கூட்டணி உண்டா, இல்லையா என்பதைக்கூட இதுவரை அறிவிக்காத ஜெயலலிதா யாருக்காகக் காத்திருக்கிறார்?

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமையும் தொண்டர்களும் புதிய பிரச்சார பாணியைத் தொடங்கினார்கள்.  புதுச்சேரி உள்பட நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக வென்றால் ஜெயலலிதாதான் பிரதமர் என்பதுதான் அந்தப் பிரச்சாரம்.  அந்தப் பிரசாரம் அதிமுகவுக்கு கைக்கொடுத்தது. திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக் கூட்டணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என ஐந்து முனைப் போட்டியால் பிரிந்த வாக்குகளும் அதிமுகவுக்கு அணுகூலமானது. விளைவு,  நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும்கூட தமிழகத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்தது.

இந்தப் பிரம்மாண்ட வெற்றி அதிமுகவுக்கும் மட்டுமல்ல, அதிமுகவினர் எல்லோரையும் நிமிர வைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என எல்லோரையும் பேச வைத்து. தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி  போதெல்லாம் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதிமுகவையும் வீழ்த்துவார்கள். 2014-ல் திமுக அதற்கு முயன்றது; அது முடியவில்லை. இப்போதும் முயன்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் அப்படி ஒரு கூட்டணி அமைக்கமுடியாமல் திமுக திணறிக்கொண்டிருக்கிறது. வாக்குகள் சிதறினால் ஜெயலலிதாவுக்கு லாபம் என்று எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்தாலும், அதற்காக திமுக பக்கம் சாய எந்தக் கட்சியும் இதுவரை தயாரகாமல் இருப்பதே அதிமுகவின் வெற்றியை அதிகப்படுத்தும் விஷயம்தான்.

அதுவும், எதிர்ப்பு ஓட்டுகளைச் சிதறடிக்க மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி என மேலும் சில கூட்டணிகள் இருப்பதால் அது அதிமுகவுக்கு சாதகமான விஷயமே. இப்படி பல விஷயங்கள் சாதகமாக இருப்பதால் குட்டிக் கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளை கொடுத்துவிட்டு அதிமுக  பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிடுவார் என்றும் அக்கட்சியினர் ஆவலோடு இருந்தனர். மார்ச் தொடக்கத்தில் பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசை என நல்ல நாட்கள் தொடர்ந்து வந்ததால் வேட்பாளர்கள் அறிவிப்பு வரலாம் என்று காத்திருந்து அதிமுகவினர் ஏமாந்துதான் போனார்கள். எப்போது வேட்பாளர்களை அறிவிப்பார் என்று இப்போது யாராலும் யூகிக்கக்கூட முடியவில்லை.

வேட்பு மனுத்தாக்காலுக்கே இன்னும் 42 நாட்கள் இருப்பதால் ஜெயலலிதா அவசரம் காட்டாமல் இருப்பார் என்று கூறக்கூடும். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. நாட்கள் இருக்கின்றன; மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவர் அல்ல ஜெயலலிதா. கடந்த 2011-ம் ஆண்டில்கூட அதிமுக கூட்டணிக்கு வர தேமுதிக கொஞ்சம் போக்குக்காட்டியபோது, பேச வேண்டிய விதத்தில் பேசி கூட்டணி உடன்படிக்கையை முடித்து விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அப்படியானால் இப்போது காத்திருப்புக்கு என்ன காரணம்?

ஜெயலலிதாவின் காத்திருப்புக்கு முதல் காரணம்  நிச்சயமாக விஜயகாந்துதான். அவர் எந்தக் கூட்டணிக்குச் செல்வார் என்பதை மற்ற கட்சிகளைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவதாக அறிவித்தால், அன்றைய தினமே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்துவிடுவார் என்பதுதான் உண்மை.  மாறாக விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் சென்றால் கூட்டணி கணக்குகள் போட்டுதான் ஜெயலலிதாவால் முடிவுக்கு வர முடியும். ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிய ஜெயலலிதா இப்போது இல்லை. 

அண்மைக் காலமாக வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி வருகின்றன. அது, அதிமுக - திமுக இடையே வாக்கு வித்தியாசம் 1 முதல் 2 சதவீதம் வரையே இருப்பதாகச் சொல்கின்றன. தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி, வட மாநில ஊடகங்களில் வரும் கருத்துக்கனிப்பும் இதையேதான் சொல்கின்றன. கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள்கூட, கருத்துக்கணிப்புகளை அப்படியே ஒதுக்கிவிடமாட்டார்கள். தேமுதிக திமுகவோடு சேர்ந்தால் இந்த  வாக்கு வித்தியாசம் எளிதாக மாறவும் செய்யலாம். இதையெல்லாம் ஜெயலலிதா கணக்கில் கொள்ளாமல் இருக்கவே முடியாது. 

அதுமட்டுமல்ல, எப்போதும் ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலைச் சந்திப்பது என்பது சிக்கலான விஷயம். தாங்கள் செய்த திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு தரப்பினரையும் கவர்ந்தால் மட்டுமே எளிதாக  வாக்காளர்களை அணுகி ஆட்சியைத் தக்க வைக்க முடியும். ஆனால், தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதே யதார்த்தம். என்னதான் எதிர்க்கட்சிகள் சிதறிகிடந்தாலும், தேர்தல்  பிரச்சாரத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வைக்கும் சில பல விஷயங்கள் வாக்காளர்களின் மன நிலையை மாற்றக்கூடும். 

உதாரணமாக, மதுவிலக்கை அதிமுக தவிர எல்லா கட்சிகளுமே ஆதரிக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும்போது, வாக்களார்கள் திருப்திப்படுத்தும் வகையில் மதுவிலக்கு ஏன் முடியாது என்பதை கூற வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு வந்துவிடும். இதுபோன்று வைக்கப்படும் பிரச்சாராங்கள் மூலம் வாக்குகள் இழக்க நேரிடும் என்று ஒரு தலைவர் கருதினால், அதைத் தவிர்க்க கூட்டணிக் கணக்கு என்ற எளிய லாஜிக்கிற்குள்தான் செல்ல முடியும்.  

இங்கேதான் கடந்த டிசம்பரில் அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. ‘சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வேன்’ என்று அவர் கூறியதைக் கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. விஜயகாந்தின் நகர்வு, திமுக பக்கம் அவர் சாய்ந்தால் குறைந்தப்பட்சம் ஏற்படுத்த வேண்டிய கூட்டணி, அந்தக் கூட்டணியில் யாரை சேர்த்துக்கொள்ளலாம் போன்ற விஷயங்களை ஜெயலலிதா அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். 

 ‘தைரியமிருந்தால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதா தயாரா’ என காஞ்சிபுரம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பியது இதை மனதில் வைத்துதான். ஜெயலலிதாவின் காத்திருப்புக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை!

கட்டுரை எழுதிய நாள் - 10-03-2016

26/02/2016

கணிதன் விமர்சனம்


போலி சான்றிதழ்கள் புழக்கம், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார வர்க்கத்தினரின் கூட்டு பற்றி ஒரு செய்தியாகப் பார்த்து  கடந்தப் போகும் கிரிமினல் சதியையும், அதன் உள்ளார்ந்த நுண் அரசியலையும் அக்கு வேறாக ஆனி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் கணிதன்.

அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் நாயகன் கவுதம் (அதர்வா). புகழ்பெற்ற பிபிசி சேனலில் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கனவு, லட்சியம் எல்லாம். எதிர்பார்த்தபடியே பிபிசி சேனலில் வேலை கிடைக்கிறது. அந்த நேரத்தில், போலி சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்கிறது. பெருத்த அவமானத்துடன் ஜாமினில் வெளியே வரும் அதர்வா, செய்தியாளருக்குரிய புலனாய்வு மூளையை வைத்து என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

 போலி கல்விச் சான்றிதழ் சமூகத்தில் எப்படி வேரூன்றியிருக்கிறது, அதனால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், திறமையே இல்லாதவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்புகளை எப்படியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை துணிந்து கதையாக சொன்ன விதத்தில் இயக்குநர் டி.என். சந்தோஷ்க்கு சபாஷ் போடலாம்.

போலி சான்றிதழ் கும்பலின் நெட்வொர்க்கில் சாதாரண பெட்டிக் கடைக்காரர் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை எப்படியெல்லாம் பிணைந்திருக்கிறார்கள் என்பதை காட்சிகளில் சொல்லும்போது கண்கள் விரிகின்றன. அந்தக் கும்பல் எல்லா இடங்களிலும் எப்படி வியாபித்திருக்கிறது, கன்சல்டன்சி நிறுவனத்தில் பெறப்படும் இளைஞர்களின் சான்றிதழ்கள் எப்படி கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எப்படி போலியாகத தயாரிக்கப்படுகின்றன என்பதை நுணுக்கமாகச் சொல்லி ரசிகர்களைப் பீதியூட்டுகிறார்  இயக்குநர்.
ஆனால், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அசிஸ்டெண்ட் என்பதை  சந்தோஷ் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். பல சிக்கலான கண்டுபிடிப்பு முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், வில்லனை சந்திக்கும்போதும் ரமணா, துப்பாக்கி படங்கள் ஞாபகத்துக்கு வந்துபோகின்றன.

 அதர்வாவை போலீஸ் கைது செய்வதோடு சரி, அதன்பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். போலி சான்றிதழ் கும்பல் பற்றி போலீஸ் பெயரில் போலி செய்திகளை அதர்வா செய்தி சேனல்களில் ஒளிபரப்ப செய்ய வைக்கிறார். அதைப் பற்றியும்கூட போலீஸூக்கு எதுவுமே தெரியாமல் இருப்பது மிகப் பெரிய ஓட்டை. போலி சான்றிதழ் பற்றி தொடர்ந்து மீடியாவில் செய்தி வரும்போதும் அந்தக் கும்பல் விடாமல் அந்த வேலையைத் தொடர்ந்து செய்வது, உருட்டி மிரட்டும் வில்லன் இடத்துக்கு ஆபிஸ் பையன் ஒருவர் சென்று கம்ப்யூட்டரில் உள்ள எல்லா தகவல்களைச்  சுட்டுக் கொண்டு வருவது எல்லாம் காதில் பூ சுற்ற வைக்கிறது.

அதர்வாவுக்கு ஏற்ற சரியான வேடம்.   போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை பிடிக்க சிபிஐ ரேஞ்சுக்கு திட்டம் போடும்போது துறுதுறுவென மாறிவிடுகிறார். வில்லன்களிடம் மோதும்போது ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து தெறிக்க விடுகிறார். காதலி கேதரீன் தெரசாவிடம் உருகும்போது பியூஷ் போன பல்பாக மாறி அவுட் ஆகிவிடுகிறார். இவை எல்லாவற்றிலும் கச்சிதமாகப் பொருந்துகிறார் அதர்வா.

இதுவரை பக்கத்துவீட்டுப் பெண் சாயலில் ரசிகர்களை கொள்ளைக் கொண்ட கேத்ரீன் தெரசா, இந்தப் படத்தில் கவர்ச்சிக் குண்டை வீசி கிறங்கடித்திருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகள், அதர்வாவுக்கு உதவுவது என கேத்ரீன் வந்துப் போகிறார். செய்தி வாசிப்பவராக வரும் அதர்வாவின் அப்பா  ‘ஆடுகளம்’ நரேஷ், அதர்வாவவுக்கு உதவும் போலீஸாக பாக்கியராஜ், வழக்கறிஞராக கருணாகரன், டி.வி. சேனல் அதிகாரியாக மனோ பாலா என அவர்கள் பாத்திரத்துக்கு ஏற்ப செய்திருக்கிறார்கள். போலி சான்றிதழ் அச்சடிக்கும் கும்பலின் தலைவனாக தருண் அரோரா நடித்திருக்கிறார். பார்வையிலும் உடல் மொழியிலும் மிரட்டுகிறார்.  தமிழுக்கு இன்னொரு நல்ல வில்லன்.

படத்துக்கு இசை டிரம்ஸ் சிவமணி. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை வாய்ப்பை மட்டும் வேறொருவருக்கு வழங்கிவிட்டார்கள். முதல் பாதியிலேயே படத்தின் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடுகிறது. அதனால் இரண்டாம் பாதியை இழுவையாக இழுத்திருப்பது சோர்வடைய செய்கிறது.

வழக்கமான ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மீடியா பார்வையில் படமாக்கியிருப்பதன் மூலம்  ‘கணிதன்’ கவனிக்க வைக்கிறான்!

மதிப்பெண்: 2.5 / 5

04/01/2016

கவர்ச்சி அஸ்திரம்! 1990-களில் தமிழ் நடிகைகள்

 
தென்னக நடிகைகள் மட்டுமே மையம் கொண்டிருந்த கோலிவுட், வட இந்திய நடிகைகளுக்கு வாசலைத் திறந்துவிட்டது தொண்ணூறுகள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக தொடர்ச்சியாக மும்பை வரவுகள் அறிமுகமான தருணம் அது. 1980-கள் வரை இலைமறை காயாக இருந்த கவர்ச்சி அஸ்திரம், விஸ்வரூபமெடுத்ததும் இந்தப் பத்தாண்டுகளில்தான்.  அழகு, நடிப்பைத் தாண்டி வெள்ளைத் தோலும் கவர்ச்சியும் பிரதானமானதும் அப்போதுதான். வெள்ளைத் தோல் ஈர்ப்பு, கவர்ச்சியைத் தாண்டி ஒரு சில நடிகைகள் தங்களுக்கே உரிய ஸ்டைலில் முத்திரைப் பதிக்கவும் செய்தனர்!

அழகான நாயகிகள், நடிப்புத் திறமை என இரண்டும் கலந்த கலவைகளாக 1980-கள் வரை தமிழில் நடிகைகள்  ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். 1980-களிலும்கூட ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, சரிதா, ராதிகா, மாதவி, ராதா, அம்பிகா, ரேவதி, நதியா உள்ளிட்ட என சில தென்னிந்திய நடிகைகளின் பிடியிலேயே கோலிவுட் பத்திரமாக இருந்தது. இந்த நடிகைகளோடு 1980-களின் பிற்பகுதியில் அறிமுகமான குஷ்பு, ரூபிணி, கவுதமி போன்ற நாயகிகள் 1990-களின் தொடக்கத்திலும்கூட தங்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும்விட தமிழ் சினிமாவில் அப்போது தன் ஆதிக்கத்தை விஸ்தரித்தவர் மும்பை வரவான நடிகை குஷ்பு மட்டுமே.



தென்னிந்திய நடிகைகளைவிட சுண்டியிழுக்கும் வெள்ளைத் தோலும், வசீகரமான தோற்றமும் தொடக்கக் காலத்தில் குஷ்புக்கு தமிழ் சினிமாவில் சிவப்புக் கம்பளம் விரிக்க உதவியது. 1991-ம் ஆண்டில் வெளியாகி அந்தக் கால கட்டத்தில் உச்சம் தொட்ட  ‘சின்னத்தம்பி’ படம் குஷ்புக்குக் கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களை வெறியர்களாக மாற்றியது.  அழகுப்பதுமையாக வந்து ரசிகர்களைக் கிறங்கடித்த குஷ்பு, அந்தப் படத்துக்குப் பிறகு கனவுகன்னியாக ரசிகர்களின் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஒல்லிபெல்லி  நடிகைகளின் மீது மோகம் கொண்ட தமிழ் ரசிகர்கள், குஷ்புவின் எடுப்பான பூசினார்போன்ற தேகத்தையும் ஆரவாரமாக ரசித்தார்கள்.  அவரை ‘குஷ்பு இட்லி’ என செல்லமாக அழைத்து, இட்லிக்கு திருநாமம் சூட்டும் அளவுக்கு அவரது கவர்ச்சிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

முன்னணி நாயகர்களின் படங்களில் நவநாகரீக பெண்ணாகவும், கவர்ச்சிப் பொம்மையாகவும் வெற்றிக்கொடி கட்டிய வேளையிலும்  ‘நாட்டாமை’,  ‘புருச லட்சணம்’,  ‘ஜாதி மல்லி’,  ‘கேப்டன் மகள்’,  ‘எட்டுப்பட்டி ராசா’ போன்ற படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி, தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் குஷ்பு.   ‘புருச லட்சணம்’ படத்தில் ‘கோலவிழி அம்மா, ராஜா காளியம்மா..’ எனத் தாலி வரம் கேட்டு குஷ்பு வாயசைத்த பாட்டு தாய்மார்களை உருக்கியது.  தொண்ணூறுகளின் இறுதி வரை குஷ்புவின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் தொடர அவரது அழகு மட்டுமல்ல நடிப்புத் திறமையும் ஒரு காரணமாக அமைந்தது.

ரஜினி, கமல், விஜயாந்த் போன்ற முன்னணி நாயகர்களுக்கு மத்தியில் விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்களும் தங்கள் சினிமா பயணத்தை அந்தக் காலகட்டத்தில்தான்  தொடங்கினார்கள். இவர்களுக்குத் தொடக்கக் காலத்தில் பெரும்பாலும்  சங்கவி, சுவாதி, யுவராணி, சிவரஞ்சனி, மதுபாலா  போன்ற நடிகைகளே ஜோடிகளாக வாய்த்தார்கள். இவர்கள் கொஞ்சம் நடிப்புக்கும், கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்து ரசிகர்களை வளைக்க ஆரம்பித்தார்கள்.  ‘சின்ன குஷ்பு’ என்று சொல்லுமளவுக்கு பூனைக்கண்ணழகி  சிவரஞ்சனி பெயர் பெற்றார். ஆனால், அப்போதைய இளம் நாயகர்களுடன் இவர்கள் மூட்டைக் கட்ட வேண்டிய நிலை  ஏற்பட்டது துரதிர்ஷ்டம்.

 இவர்களும், அப்போது முன்னணியில் இருந்த  நடிகைகளும் நாயகர்களுடனான காதல் காட்சியில் நெருக்கத்தையும், பாடல் காட்சிகளில் படுகவர்ச்சி என்ற அஸ்திரத்தால் ரசிகர்களின் மனங்களைத் துளைத்தார்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை நாயகியை மோப்பம் பிடிப்பது போன்ற காட்சிகளைக் கண்டு ரசிகர்கள் ஏக்க பெருமூச்சி விட்டார்கள் அப்போது.  நாயகிகளின் நெஞ்சில்  நாயகர்கள் தலை வைக்காத காட்சிகளே வராத படங்களே இல்லை என்று அப்போது சொல்லலாம். அந்த அளவுக்கு நாயகிகள் தாராளம் காட்டினார்கள். கவர்ச்சிப் பாடல்களுக்கென தனியாக இருந்த நடிகைகளின் வேலையையும் நாயகிகளே பறித்துக்கொண்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். அரைகுறை ஆடையுடன் மிட் நைட் மசாலா பாடல்களில் நாயகர்களுடன் ஆடி பாடி  ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தார்கள்.

வட இந்திய நடிகைகளின் வரவுகள் அதிகரிப்புக்கு 1993-ம் ஆண்டில் ஜெண்டில்மேன் படம் மூலம் அறிமுகமான பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் ஒரு காரணம். முதல் படத்தில் மதுபாலாவை நடிக்க வைத்த பிறகு அவரது பார்வை மும்பையை நோக்கி பதிந்தது. நக்மா (காதலன்), மனிஷா கொய்ராலா, ஊர்மிளா (இந்தியன்), ஐஸ்வர்யாராய் (ஜீன்ஸ்), மனிஷா கொய்ராலா (முதல்வன்) என வட இந்திய நாயகிகளை வளைத்து வளைத்து நடிக்க வைத்தார் ஷங்கர். இவர்களில் மதுபாலா(ரோஜா), மனீஷா கொய்ராலா(பம்பாய்), ஐஸ்வர்யா ராய் (இருவர்) ஆகியோரை தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம். இந்த நடிகைகள் எல்லாம் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தடத்தைப் பதிக்கவும் தவறவில்லை.

 ஆனால், விதிவிலக்காக நக்மா ஓரிறு ஆண்டுகள் தமிழ் சினிமாவின் மையமானார். செக்கச்செவேர் நிறத்திலும், கொளுகொளு உடலமைப்பையும், தாரளமான கவர்ச்சியையும் தவிர நடிப்பு என்பதெல்லம் நக்மாவுக்கு இரண்டாபட்சம்தான்.  ‘காதலன்’ படத்தில் நடித்த கையோடு ரஜினியின்  ‘பாட்ஷா’ படத்தில் டூயட் பாடி திடீர் கனவுக்கன்னியாக உயர்ந்தார் நக்மா. ஆனால்,  ‘லவ் பேர்ட்’,  ‘வில்லாதி வில்லன்’,  ‘மேட்டுக்குடி’,  ‘பிஸ்தா’ என சில படங்களுடன் நக்மா தமிழிலிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு இந்தி, போஜ்புரி, தெலுங்கு பக்கம் செட்டிலானார்.

இப்படி வட இந்திய நடிகைகளைச் சுற்றி தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருந்த வேளையில் கோலிவுட், டோலிவுட் நடிகைகளும் அவர்களுக்குப் போட்டியாக தங்கள் திறமைகளைக் காட்டவும் தவறவில்லை. வட இந்திய நடிகைகளின் கவர்ச்சிக்குப் போட்டியாக நடிகை ரோஜாவும் கோதாவில் குதித்து தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தினார். 1991-ல்  ‘செம்பருத்தி’யில் அறிமுகமாகி 1992-ல்  ‘சூரியன்’ படத்தில் உச்சம் தொட்டு, 1993-94-களில் முறையே ரஜினியுடன்  ‘உழைப்பாளி’,  ‘வீரா’ படங்களில் ஜோடி போட்டு அப்போதைய முன்னணி நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். கவர்ச்சியைத் தாண்டி  ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ போன்ற சில படங்கள் ரோஜாவின் நடிப்புக்கு தீனிப்போட்டது.

இதே காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக முத்திரைப் பதித்த நடிகை மீனாவும் அப்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ரஜினியுடன்  ‘எஜமான்’,  ‘வீரா’,  ‘முத்து’, கமலுடன்  ‘அவ்வை சண்முகி’ என முன்னணி நாயகர்களுடன் ஜோடிப் போட்டு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். கவர்ச்சிக்குப் பொருந்தாத உடலமைப்பைத் தாண்டி பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம் மீனாவுக்கு தனியாக ரசிகர்களைச் சம்பாதித்துக்கொடுத்தது.  ‘எஜமான்’,  ‘பொற்காலம்’,  ‘பாரதி கண்ணம்மா’,  ‘ஆனந்த பூங்காற்றே’ போன்ற படங்கள் மீனா முத்திரைப் பதித்தப் படங்கள். வட இந்திய நடிகைகள் போல இல்லாமல் ரோஜாவும், மீனாவும் தொண்ணூறுகள் முழுவதும் முழுமையாக தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 

ரேவதிக்குப் பிறகு எல்லாமே கவர்ச்சி பொம்மைகளாகவே இருக்கிறார்கள் என்று அலுத்துக்கொண்டோர் மத்தியில் சுகன்யா, தேவயாணி, சுவலட்சுமி, கவுசல்யா போன்ற நடிகைகள் குடும்ப குத்துவிளக்குகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்கள்.   இவர்களையும் கவர்ச்சி என்ற பந்து தாக்கியபோதும், அதிலிருந்து கொஞ்சம் விலகி  நடிப்பு என்ற எல்லைக்குள் சிக்ஸர் அடித்தனர். குறிப்பாக தேவயாணி தன் நடிப்பால் எழுப்பிய  ‘காதல் கோட்டை’ தமிழ் சினிமாவில் தனி முத்திரைப் பதித்தது. இவர்களுக்கிடையே தெலுங்கு,

கன்னடத்திலிருந்து வந்த ரம்பாவும், சவுந்தர்யாவும் தமிழில் கொஞ்சம் கலைச்சேவை செய்துவிட்டுப் போனார்கள்.  ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் மூலம்  ‘தொடையழகி’ என்ற பட்டத்தைத் தாங்கிப்பித்துக்கொண்டார் ரம்பா.
1980-களில் குட்டிப் பெண்ணாக வந்து தமிழ் சினிமாவில் சுட்டித்தனம் செய்த பேபி ஷாலினி, 1997-ல் ‘காதலுக்கு மரியாதை’ மூலம்  நாயகியாக அறிமுகமாகி வந்தணம் செய்தார்.  கவர்ச்சி எல்லைக்குள் சிக்காமல் நாகரீகப் பெண்ணாக கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துவிட்டு, அஜித் வீட்டில் குடும்ப குத்துவிளக்காக மாறிபோனார். இந்தக் காலகட்டத்தில் குடும்பப் பாத்திரங்களுக்கு சங்கீதா, கவர்ச்சி விருந்துக்கு மந்த்ரா என தரம் பிரித்து சில நடிகைகள் நடித்ததும் உண்டு. நடிப்புத் திறமையுடன் தமிழில்  ‘உன்னைத் தேடி’ மூலம் அறிமுகமான மாளவிகா, விலாங்கு மீனாகி கவர்ச்சி வலையில் சிக்கியது தனிக்கதை. 

வட இந்திய நடிகைகளின் மீதான மோகம் 1990-களின் தொடக்கத்தில் தொடங்கி இறுதி வரையிலும் தொடர்ந்து. தொண்ணூறுகளில் தொடக்கத்தில் குஷ்பு நீண்ட கால கனவு கன்னியாகவும், தொண்ணூறுகளின் மத்தியில் நக்மா குறுகிய கால கனவுக் கன்னியாக வலம் வந்த பிறகு அந்த இடத்தை யாரும் பிடிக்கவில்லையே என்று எண்ணிய வேளையில், இன்னொரு மும்பை வரவான சிம்ரன் 1997-ல் ‘ஒன்ஸ்மோர்’ மூலம் அறிமுகமானார். அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாத நடிகைகளில் சிம்ரனும் ஒருவர்.  தமிழ் சினிமாவில் நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என சிலிர்ப்பூட்டும் அங்கங்களைக் கொண்டவர். தமிழ் சினிமா நாயகிகளில் இடையழகி என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்கு, கைகளை மேலே தூக்கி இடையை வெடுக்கென ஆட்டி ரசிகர்களைத் தூண்டிலில் விழ வைத்தவர் நடிகை சிம்ரன் மட்டும்தான்.

இவரும் குஷ்புவைப் போலவே கவர்ச்சி பொம்மையாக மட்டுமில்லாமல் நடிப்பிலும் முத்திரை பதிக்க முடியும் என்று நிரூபித்தார். கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் இடையிலான மெல்லியக் கோட்டை உள்வாங்கி இரண்டிலும் ஒரு சேர சவாரி செய்து அப்ளாஷ் வாங்கினார். அவரது நடிப்புத் திறமைக்குத் தீனிப்போட முதல் படம் வாலி. இப்பவும் பல நடிகைகள் நடிக்க விரும்பும் பாத்திரம் அது. வாலியைத் தொடர்ந்து  ‘துள்ளாத மனமும் துள்ளும்’,  ‘ப்ரியமானவள்’,  ‘நட்புக்காக’,  ‘கண்ணெதிரே தோன்றினாள்’,  ‘பஞ்ச தந்திரம்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ போன்ற பல படங்களில் நடித்து தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கனவுக் கண்ணியாக வலம் வந்தார் சிம்ரன்.

தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்ற சூறாவளி தமிழ் திரையுலகில் வீசிக்கொண்டிருந்தபோது 1999-ம் ஆண்டில், அந்தச் சூறாவளியுடன் சேர்ந்து  ‘வாலி’ படத்தில் சோனாவாக அறிமுகமானவர் ஜோதிகா. முதல் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது விழிகளும், உடல் மொழியும் தமிழர்களின் மனதில் பசைப் போட்டு ஒட்டிக்கொண்டது. தனது கொடியிடையான இடையழகால் சிம்ரன் ரசிகர்களை மிரட்டியவேளையில், விழி அழகாலும், குண்டான உடலும் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் ஜோதிகா. இவர் நடித்து வெளிவந்த முதல் படம்  ‘வாலி’யாக இருந்தாலும் அறிமுகமான படம்  ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’. அதில் சுடிதார் அணிந்த சொர்க்கமாக மாறி, சூர்யாவின் தூக்கத்தை மட்டுமல்ல, ரசிகர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுத்தார். கவர்ச்சி சுனாமிகளுக்கு மத்தியில் தமிழ்சினிமாவில் தென்றலாக வீசியவர் ஜோதிகா. இப்போது கோலிவுட்டில் தொடர்ச்சியாக வரும் பேய் படங்களுக்கு வழிகாட்டியும் இவர்தான்.  ‘சந்திரமுகி’யாக ரஜினியுடன் சேர்ந்து நடிப்பில் பயம் காட்டிய ஜோதிகாவை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா என்ன?

தமிழ் சினிமாவில் எப்போதுமே டிரெண்டு செட்டராக  நாயகர்களே இருப்பார்கள். ஆனால், ஆண்களுக்கு இணையாக  நாயகிகளும் டிரெண்டு செட்டராக உருவெடுத்தது தொண்ணூறுகளில்தான். அதற்குக் கவர்ச்சி அஸ்திரமும் ஒரு பாதையை ஏற்படுத்திக்கொடுத்தது.  இந்த டிரெண்டு செட்டிங்கில்  நடிகைகள் ஏற்ற பாத்திரங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்போது சொல்லுங்கள், தொண்ணூறுகளில் உங்களுக்குப் பிடித்த ட்ரெண்ட் செட்டிங் கனவுக்கன்னி யார்?

- ‘தி இந்து’ 2016 பொங்கல் மலர்