பேய் படங்களின் பிடியில் இருந்து கோடம்பாக்கம் விலகாத நிலையில், காதல் கதையை சொல்ல வந்திருக்கிறது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம். இந்தப் படம் கோடம்பாக்கத்தைத் திரும்பவும் காதல் கதை ஃபார்முலாவுக்குள் கொண்டு செல்லுமா?
துடுக்குத்தனமும் சேட்டைகளுமாக உலா வரும் நாயகன் வால்டர் பிலிப்ஸ் (வினோத்), கல்லூரியில் படிக்கிறார். நண்பரின் திருமணத்தில் நாயகி இஷா தல்வாரைப் (ஆயிஷா) பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆயிஷாவின் குடும்பமோ மிகவும் கட்டுப்பாடான இஸ்லாமிய குடும்பம். கட்டுபாடுகளை மீறி வினோத்தும் ஆயிஷாவும் காதலில் வெற்றிக்கொடி நாட்டினார்களா இல்லையா என்ற அரதப் பழசான கிளைமாக்ஸை சொல்லும் படம்தான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் என ரீமேக் படங்களை எடுத்த மித்ரன் ஜவஹர் மலையாளத்தில் வந்த ‘தட்டத்தின் மறயத்து’ என்ற படத்தை ரீமேக் செய்திருக்கிறார். மதங்களைத் தாண்டி இரு மனங்கள் கலக்கும் காதல் கதையைச் சொல்லும் ஒரு படத்தில் காதலுக்கான எதிர்ப்பையும் காதலின் வலியும் கொஞ்சமும் காட்டாமல் விட்டது படத்தில் பெருங்குறை. ஆனால், ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமைகளைப் பற்றி பேசிய விதத்தில் படத்தைப் பாராட்டலாம். மதங்களைக் கடந்து சொல்லப்படும் காதல் கதைகளில் காட்டப்படும் வன்முறைச் சம்பவங்கள் வராமல் படத்தை நகர்த்திய விதத்திலும் இயக்குநருக்குச் சபாஷ் போடலாம்.
‘கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளரும் பெண்களுக்கும் தனியாக ஆசை இருக்கும். நம் கவுரத்துக்காக அவர்களை பகடையாக்கக் கூடாது’ போன்ற வசனங்கள் சுளீரென்று இருக்கின்றன. ஒட்டுமொத்த கதையையும் கடைசியில் வரும் சில வசனங்கள்தான் காப்பாற்றுகின்றன. சிறைக்கு சென்று வீட்டுக்கு வரும் நாயகனை அவரது அப்பா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அதன்பின் நாயகன் வீட்டு பக்கமே வராமல் இருப்பது, அம்மாவைகூட பார்க்காமல் இருப்பது போன்ற பூ சுற்ற வைக்கும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. காவல் அதிகாரியாக வரும் மனோஜ் கே. ஜெயின், சிங்கமுத்து ஆகியோர் காதலைச் சேர்த்து வைக்க வரும் போலீஸாக மட்டுமே காட்டி, காவல் துறையை காமெடி துறையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கதைக்குக் கச்சிதமாகப் பொருத்தமான நாயகன்தான் வால்டப் பிலிப்ஸ். தைரியமாக போலீஸையே அடிப்பது, நண்பர்களுடன் சேட்டை செய்வது, காதலியின் பார்வையைப் பார்த்து உருகுவது, காதலைச் சொல்லிவிட்டு பரிதவிப்பது என நாயகனுக்கு நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகளை ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே முக பாவனைகளுடன் நாயகன் காட்டும் காட்சிகள் மனதில் ஒட்டாமலேயே போகின்றன. நாயகி இஷா தல்வார் படம் முழுவதும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறார். கட்டுப்பாடான குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அடக்க ஒடுக்கமாக எப்படி இருப்பார் என்பதை உள்வாங்கி நடித்திருப்பதில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாசர் கதையில் அவ்வப்போது வந்துபோகிறார். தலைவாசல் விஜய், வனிதா பாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். காமெடியனாக வரும் அர்ஜூன் நந்தகுமார் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ஒளிப்பதிவும், இசையும் படம் முழுவதும் கவனம் ஈர்க்க வைக்கிறது. சில பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போல இருந்தாலும் பின்னணி இசை மூலம் படத்தை நிமிர செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான். விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலையைக் காட்டாமலேயே கன்னியாகுமரி மாவட்டத்தை தன் அழகான கேமிராவல் படம் பிடித்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா.
வலி நிறைந்த காவியமாக சொல்ல வேண்டிய ஒரு காதல் கதையை, பலவீனமான திரைக்கதை, காட்சி அமைப்பால் தடுமாறி நிற்கிறது மீண்டும் ஒரு காதல் கதை!
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment