தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இணை வேறு யாரும் இல்லை. வேட்பாளர்களை விரைவாக அறிவிப்பதில் தொடங்கி பிரச்சாரத்தை முடிப்பது வரை எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ள நிலையில் ஜெயலலிதாவிடம் வழக்கத்துக்கு மாறாக அமைதி மையம் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணிகள் அமைப்பதில் திமுக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் விஜயகாந்தின் தேமுதிகவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்புக்குக் காரணம் இருக்கிறது. இதுவரை தேர்தலில் கூட்டணி உண்டா, இல்லையா என்பதைக்கூட இதுவரை அறிவிக்காத ஜெயலலிதா யாருக்காகக் காத்திருக்கிறார்?
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமையும் தொண்டர்களும் புதிய பிரச்சார பாணியைத் தொடங்கினார்கள். புதுச்சேரி உள்பட நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக வென்றால் ஜெயலலிதாதான் பிரதமர் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். அந்தப் பிரசாரம் அதிமுகவுக்கு கைக்கொடுத்தது. திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக் கூட்டணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என ஐந்து முனைப் போட்டியால் பிரிந்த வாக்குகளும் அதிமுகவுக்கு அணுகூலமானது. விளைவு, நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும்கூட தமிழகத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்தது.
இந்தப் பிரம்மாண்ட வெற்றி அதிமுகவுக்கும் மட்டுமல்ல, அதிமுகவினர் எல்லோரையும் நிமிர வைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என எல்லோரையும் பேச வைத்து. தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி போதெல்லாம் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதிமுகவையும் வீழ்த்துவார்கள். 2014-ல் திமுக அதற்கு முயன்றது; அது முடியவில்லை. இப்போதும் முயன்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் அப்படி ஒரு கூட்டணி அமைக்கமுடியாமல் திமுக திணறிக்கொண்டிருக்கிறது. வாக்குகள் சிதறினால் ஜெயலலிதாவுக்கு லாபம் என்று எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்தாலும், அதற்காக திமுக பக்கம் சாய எந்தக் கட்சியும் இதுவரை தயாரகாமல் இருப்பதே அதிமுகவின் வெற்றியை அதிகப்படுத்தும் விஷயம்தான்.
அதுவும், எதிர்ப்பு ஓட்டுகளைச் சிதறடிக்க மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி என மேலும் சில கூட்டணிகள் இருப்பதால் அது அதிமுகவுக்கு சாதகமான விஷயமே. இப்படி பல விஷயங்கள் சாதகமாக இருப்பதால் குட்டிக் கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளை கொடுத்துவிட்டு அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிடுவார் என்றும் அக்கட்சியினர் ஆவலோடு இருந்தனர். மார்ச் தொடக்கத்தில் பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசை என நல்ல நாட்கள் தொடர்ந்து வந்ததால் வேட்பாளர்கள் அறிவிப்பு வரலாம் என்று காத்திருந்து அதிமுகவினர் ஏமாந்துதான் போனார்கள். எப்போது வேட்பாளர்களை அறிவிப்பார் என்று இப்போது யாராலும் யூகிக்கக்கூட முடியவில்லை.
வேட்பு மனுத்தாக்காலுக்கே இன்னும் 42 நாட்கள் இருப்பதால் ஜெயலலிதா அவசரம் காட்டாமல் இருப்பார் என்று கூறக்கூடும். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. நாட்கள் இருக்கின்றன; மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவர் அல்ல ஜெயலலிதா. கடந்த 2011-ம் ஆண்டில்கூட அதிமுக கூட்டணிக்கு வர தேமுதிக கொஞ்சம் போக்குக்காட்டியபோது, பேச வேண்டிய விதத்தில் பேசி கூட்டணி உடன்படிக்கையை முடித்து விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அப்படியானால் இப்போது காத்திருப்புக்கு என்ன காரணம்?
ஜெயலலிதாவின் காத்திருப்புக்கு முதல் காரணம் நிச்சயமாக விஜயகாந்துதான். அவர் எந்தக் கூட்டணிக்குச் செல்வார் என்பதை மற்ற கட்சிகளைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவதாக அறிவித்தால், அன்றைய தினமே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்துவிடுவார் என்பதுதான் உண்மை. மாறாக விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் சென்றால் கூட்டணி கணக்குகள் போட்டுதான் ஜெயலலிதாவால் முடிவுக்கு வர முடியும். ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிய ஜெயலலிதா இப்போது இல்லை.
அண்மைக் காலமாக வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி வருகின்றன. அது, அதிமுக - திமுக இடையே வாக்கு வித்தியாசம் 1 முதல் 2 சதவீதம் வரையே இருப்பதாகச் சொல்கின்றன. தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி, வட மாநில ஊடகங்களில் வரும் கருத்துக்கனிப்பும் இதையேதான் சொல்கின்றன. கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள்கூட, கருத்துக்கணிப்புகளை அப்படியே ஒதுக்கிவிடமாட்டார்கள். தேமுதிக திமுகவோடு சேர்ந்தால் இந்த வாக்கு வித்தியாசம் எளிதாக மாறவும் செய்யலாம். இதையெல்லாம் ஜெயலலிதா கணக்கில் கொள்ளாமல் இருக்கவே முடியாது.
அதுமட்டுமல்ல, எப்போதும் ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலைச் சந்திப்பது என்பது சிக்கலான விஷயம். தாங்கள் செய்த திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு தரப்பினரையும் கவர்ந்தால் மட்டுமே எளிதாக வாக்காளர்களை அணுகி ஆட்சியைத் தக்க வைக்க முடியும். ஆனால், தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதே யதார்த்தம். என்னதான் எதிர்க்கட்சிகள் சிதறிகிடந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வைக்கும் சில பல விஷயங்கள் வாக்காளர்களின் மன நிலையை மாற்றக்கூடும்.
உதாரணமாக, மதுவிலக்கை அதிமுக தவிர எல்லா கட்சிகளுமே ஆதரிக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும்போது, வாக்களார்கள் திருப்திப்படுத்தும் வகையில் மதுவிலக்கு ஏன் முடியாது என்பதை கூற வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு வந்துவிடும். இதுபோன்று வைக்கப்படும் பிரச்சாராங்கள் மூலம் வாக்குகள் இழக்க நேரிடும் என்று ஒரு தலைவர் கருதினால், அதைத் தவிர்க்க கூட்டணிக் கணக்கு என்ற எளிய லாஜிக்கிற்குள்தான் செல்ல முடியும்.
இங்கேதான் கடந்த டிசம்பரில் அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. ‘சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வேன்’ என்று அவர் கூறியதைக் கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. விஜயகாந்தின் நகர்வு, திமுக பக்கம் அவர் சாய்ந்தால் குறைந்தப்பட்சம் ஏற்படுத்த வேண்டிய கூட்டணி, அந்தக் கூட்டணியில் யாரை சேர்த்துக்கொள்ளலாம் போன்ற விஷயங்களை ஜெயலலிதா அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
‘தைரியமிருந்தால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதா தயாரா’ என காஞ்சிபுரம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பியது இதை மனதில் வைத்துதான். ஜெயலலிதாவின் காத்திருப்புக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை!
கட்டுரை எழுதிய நாள் - 10-03-2016
No comments:
Post a Comment