போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் ஆர்யன் (அருண் விஜய்). அவருடன் சத்தியா (பிரியா பவானிசங்கர்) உடன் பணிபுரிகிறார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனைப் பிடிக்க ஆர்வம் காட்டும் போலீஸ் உயரதிகாரியும் சமூக சேவகரும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்தக் கும்பலின் தலைவனைப் (பிரசன்னா) பிடிக்க காய் நகர்த்துக்கிறார் அருண் விஜய். அதில் போதைப் பொருளுடன் லாரியைப் பிடித்து வருகிறார் அருண் விஜய். பதிலுக்கு அருண் விஜயின் குடும்பத்தினரைப் பிடித்து வைத்து மிரட்டுகிறார் பிரசன்னா. இந்த சடுகுடு ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதுதான் ‘மாஃபியா’ படத்தின் கதை.
மாஃபியா என்ற தலைப்புக்கேற்ப போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இயக்குநர் கார்த்திக் நரேன் எடுத்திருக்கும் படம் இது. படத்தில் பிரதானமாக நான்கே கதாபாத்திரங்கள்தான். காதல் காட்சிகள் எதுவும் இல்லை. டூயட் பாடல்களும் இல்லை. காமெடி என்ற பெயரில் எந்தக் காட்சிகளும் இல்லை. இந்தக் காட்சிகள் இல்லாததால், படம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே பயணிக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்தை விறுவிறுப்பான, வேகத்தடை இல்லாத திரைக்கதையால் கட்டிப்போட முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதில் சறுக்கிவிடுகிறார்.
முதல் பாகம் முழுவதுமே நாடகத்தன்மையோடு படம் பயணிப்பது பெரும் குறை. குடியிருப்புகள் மத்தியில் வேர்ஹவுஸ், வீடு, ஆபிஸ், ஹோட்டல் என ரெடிமேடான காட்சி அமைப்புகளுடன் ‘மாபிஃயா’வுக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லாமல் திரைக்கதை நகர்வது சோர்வடைய வைத்துவிடுகிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கண்டுபிடிப்பின் பின்னணியிலும் எந்தப் புதுமையும் இல்லை. வில்லன் யார் தெரிந்த பிறகும் வில்லனுக்கும் நாயகனுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு மாறாக சென்டிமென்ட்டுக்குள் கதை புகுந்து சுவாரசியத்தை இன்னும் குறைத்துவிடுகிறது.
குடியிருப்புக்கு மத்தியில் போதைப் பொருள் வேர்ஹவுஸ். துப்பாக்கிச் சத்தம் கேட்டாலும் மக்கள் யாரும் வெளியே யாரும் வராமலேயே இருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளிடம் துப்பாக்கிகள் இல்லாமல் இருப்பது, ஒருவரை கடத்தி வைத்துக்கொண்டு வில்லன் தன் பெயரிலேயே ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருப்பது, சிம் கார்டை தூக்கிப் போடாமல் வைத்திருப்பது, வழக்கமாக போலீஸ் அதிகாரி உதவுவது சரடுகளும் லாஜிக் மீறல்களும் வந்து குவிந்துகிடக்கின்றன.
படமே ‘மாஃபியா - சாப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளதால், இரண்டாம்
அத்தியாத்துக்கான கதையின் தொடர்ச்சியைக் காட்டியிருப்பது மட்டுமே படத்தில் ஒரே புதுமை. ஆனால், இரண்டாம் அத்தியாத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முதல் அத்தியாயத்தில் சரடுகள் மட்டுமே எஞ்சியிருப்பது ‘மாஃபியா’வை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்திவிடுகிறது.
அத்தியாத்துக்கான கதையின் தொடர்ச்சியைக் காட்டியிருப்பது மட்டுமே படத்தில் ஒரே புதுமை. ஆனால், இரண்டாம் அத்தியாத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முதல் அத்தியாயத்தில் சரடுகள் மட்டுமே எஞ்சியிருப்பது ‘மாஃபியா’வை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்திவிடுகிறது.
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாக அரூண் விஜய். அவருடைய உடல்மொழியும் உடற்கட்டும் அதற்கு கச்சிதம். நடிப்பிலும் வெளுத்துவாங்கியிருக்கிறார். பிரியா பவானிசங்கர் அருண் விஜயின் உதவியாளராக வருகிறார். அருண் விஜய் சொல்வதைக் கேட்கும் கதாபாத்திரம். அருணுக்கு உதவியாக பிரியாவும் படத்தில் சுட்டுக்கொண்டேயிருக்கிறார். வில்லனாக பிரசன்னா. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று தெரியாத அளவுக்கு மில்லியனர் கெட்டப்பில் வருகிறார். ‘வைபர்’ என்ற புனைப் பெயரில் சாதுவாகப் பேசி கவர்கிறார். ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட துணைக் கதபாத்திரங்கள் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஜேக் பிஜாயின் இசையில் புதுமை இல்லை. இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.
முதல் அத்தியாத்திலேயே இரண்டாம் அத்தியாத்துக்கான கதைக் கருவை காட்ட வேண்டும் என்று யோசித்த இயக்குநர், அதற்காக முதல் அத்தியாத்துக்கு மெனக்கெட்டு உழைத்திருந்தால் ‘மாஃபியா’க்குரிய நம்பிக்கை காப்பாற்றப்பட்டிருக்கும்.
மதிப்பெண்- 2 / 5
No comments:
Post a Comment