28/02/2020

பாட்மிண்டன் உலகின் ராணி!

புத்தாயிரத்துக்கு முன்புவரை வெளிநாட்டு வீராங்கனைகள் கோலோச்சும் விளையாட்டில் ஒன்றாகத்தான் இருந்தது பாட்மிண்டன். அந்த விளையாட்டில் இந்திய வீராங்கனைகளும் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சாய்னா நேவால். உலக பாட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை;  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய  வீராங்கனை; உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என பாட்மிண்டனில் சாய்னா பதித்தத் தடங்கள் அழுத்தமானவை.

முதல் முயற்சி

சாய்னா பிறந்தது ஹரியாணா என்றாலும், வளர்ந்து ஆளானது எல்லாம் ஹைதராபாத்தில்தான். சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங்கும் அம்மா உஷா ராணியும் பாட்மிண்டன் விளையாட்டில் மாநில அளவில் விளையாடியவர்கள். தங்களது மகள் சாய்னாவை பாட்மிண்டன் விளையாட்டில் தேசிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஹதராபாத்துக்கு வந்த பிறகு அங்கே சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடுவதில் சாய்னாவுக்கு மொழி தடையாக இருந்தது. சாய்னாவுக்கு அவரது அம்மாதான் பாட்மிண்டன் விளையாட்டைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், முறையான பயிற்சி இருந்தால்தான் பெரிய இலக்கை அடைய முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அப்போது ஹைதராபாத்தில் நானி பிரசாத், கோவர்தன் ரெட்டி ஆகியோர் நடத்தும் பாட்மிண்டன் பயிற்சியில் சாய்னாவை சேர்க்க அவருடைய பெற்றோர் விரும்பினார்கள். பயிற்சி முகாமில் ஆட்கள் சேர்க்கை முடிந்த நிலையில் சாய்னா வந்ததால், அவரைப் பயிற்சியில் சேர்க்க பயிற்சியாளர்கள் மறுத்துவிட்டார்கள். நீண்ட கோரிக்கைக்குப் பிறகு சாய்னாவை சேர்க்கப் பயிற்சியாளர்கள் சம்மதித்தார்கள். ஆனால், அதற்கு முன்பு பாட்மிண்டன் விளையாட்டை விளையாடி காட்ட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். அதற்கு முன்புவரை பாட்மிண்டன் விளையாட்டை ஆத்மார்த்தமாக சாய்னா விளையாடியதில்லை. இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ராக்கெட்டைப் பிடித்து விளையாடினார் சாய்னா. பாட்மிண்டன் விளையாட்டை அவர் இயல்பாக விளையாடியவிதம் பயிற்சியாளர்களுக்குப் பிடித்துபோனது.

உழைப்போ உழைப்பு

ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பாட்மிண்டன் விளையாட்டு
பயிற்சி என சாய்னாவுக்கு சுமை கூடியது. அதிகாலையில் எழுந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும்; பயிற்சியை முடித்த பிறகு பள்ளிக்கு செல்ல வேண்டும்; வீட்டுக்கு வந்த பிறகு பெற்றோருடன் பாட்மிண்டன் விளையாட்டு எனத் தினமும் ஓர் இயந்திரம்போல உழைக்கத் தொடங்கினார் சாய்னா. அந்த வயதில் பாட்மிண்டன் விளையாட்டில் அவர் காட்டிய ஈடுபாடு, உழைப்பு, விடாமுயற்சி போன்றவைதான் சாய்னாவை பின்னாளில் உலகம் போற்றும் பாட்மிண்டன் வீராங்கனையாக்கியது.

குறுகிய காலத்திலேயே பாட்மிண்டன் வீராங்கனையாக உருவெடுத்த சாய்னா தேசிய அளவில் காலடி எடுத்து வைத்தது 2002-ம் ஆண்டில். 13 வயதுக்குட்பட்ட தேசிய சப் ஜூனியர் பாட்மிண்டன் விளையாட்டில் முதன் முறையாக பட்டம் வென்றார். அப்போது அவருக்கு 12 வயது. பின்னர் 16 வயது, 19 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் எல்லாம் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்திய சாய்னா, தேசிய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக உருவெடுத்தார். இதன் பிறகு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2006-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 4 ஸ்டார் கோப்பைக்கான போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேச தொடர். அந்தப் போட்டியில் 16 வயதான சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற ஆசியாவின் இளம் பெண் என்ற சாதனையை சாய்னா படைத்தார்.

வெற்றிக் காற்று

சர்வதேச அளவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவந்த சாய்னா, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதிவரை முன்னேறிய சாய்னா தோல்வியடைந்தாலும், ஒலிம்பிக்கில் அந்த நிலைவரை முன்னெறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் படைத்தார்.  ஆனால், ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பிறகு சாய்னாவின் பக்கம் வெற்றிக் காற்று வீச ஆரம்பித்தது. சீன தைபே ஓபன், இந்தோனேஷியா ஓபன் ஆகிய தொடர்களில் பட்டம் வென்று அசத்திய சாய்னா, 2009-ம் ஆண்டில் பி.டபுள்யு.எஃப். சூப்பர் சீரிஸில் பட்டம் வென்று வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டார். இந்த சூப்பர் சீரிஸை வென்ற முதல் இந்திய பெண் என்ற அழியா தடத்தைப் பதித்தார் சாய்னா.

 2010-ம் ஆண்டு முழுவதும் பாட்மிண்டன் விளையாட்டில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார். இந்த ஆண்டில் மட்டும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன், சிங்கப்பூர் ஓபன், பி.டபுள்யு.எஃப் சூப்பர் சீரிஸ், உலக பி.டபுள்யு.எஃப். சீரிஸ் என அடைமழையாகக் கொட்டியது வெற்றி. 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது.

ஒலிம்பிக் முத்திரை

 ஆசியாவில் சீனா, மலேசியா போன்ற வீராங்கனைகள் மட்டுமே ஜொலித்த  இந்த விளையாட்டில் சாய்னாவும் ஜொலிக்கத் தொடங்கினார். உச்சகட்டமாக இந்தக் காலகட்டத்தில் உலக
தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். 2011-ல் வெற்றி மாலையைக் கோத்த சாய்னா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அரையிறுதிவரை முன்னேறிய சாய்னா, எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவரால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

 பாட்மிண்டன் விளையாடத் தொடங்கியதிலிருந்தே சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது சாய்னாவின் தனியாத தாகம். இந்த லட்சியம் 2015-ம் ஆண்டில் கைகூடியது. அந்த ஆண்டு ‘ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரை எடுத்த சாய்னா, பட்டத்தையும் வென்று பெரும் புகழை ஈட்டினார். அதே ஆண்டு இந்திய ஓபன் பட்டத்தையும் சாய்னா வென்ற பிறகு, சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சதனையையும் படைத்தார்.

வழிகாட்டி வீராங்கனை

ஒலிம்பிக் (ஒரு பதக்கம்), காமன்வெல்த் (5 பதக்கம்), ஆசிய விளையாட்டுப் போட்டி (2 பதக்கம்), ஆசிய சாம்பியன்ஷிப் (3 பதக்கம்), உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (2 பதக்கம்) என எல்லாப் பெரிய தொடர்களிலும் சாய்னா ஜொலித்திருக்கிறார். பாட்மிண்டன் விளையாட்டில் சாய்னா செய்த சாதனைகளைப் பாராட்டி 2009-ல் ஆண்டில் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2010-ல் பத்மஸ்ரீ விருதும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் அறிவிக்கப்பட்ட அவர், 2016-ம் ஆண்டில் பத்மபூஷண் விருதையும் பெற்றார். 2008-ம் ஆண்டில்  நம்பிக்கைக்குரிய வீராங்கனை என  விருதை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வழங்கியது அவரது பாட்மிண்டன் பயணத்தில் முத்தாய்ப்பானது.

சாய்னா நேவால் பாட்மிண்டன் துறையில் ஜொலிக்கத் தொடங்கிய பிறகுதான் இந்திய பாட்மிண்டன் மீதும் புகழின் வெளிச்சம் பரவத் தொடங்கியது. சாய்னாவின் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பார்த்து  ஏராளமான இந்திய இளம் பெண்களும் குழந்தைகளும் பாட்மிண்டன் விளையாட்டில் காலடி எடுத்தவைத்தவண்ணம் உள்ளனர். சாய்னா இந்த விளையாட்டில் குறைந்தபட்சம் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று மட்டுமே சாய்னாவின் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், அதையும் தாண்டி சர்வதேச அளவில் தன் பெயரை உச்சரிக்க வைத்த சாய்னாவின் வெற்றியின் மந்திரமாக இருந்தது, அவருடைய அர்ப்பணிப்பும் மன உறுதியும்தான்.

Hindu tamil, 23/12/2018

23/02/2020

மாஃபியா சாப்டர் 1 விமர்சனம்

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் ஆர்யன் (அருண் விஜய்). அவருடன் சத்தியா (பிரியா பவானிசங்கர்) உடன் பணிபுரிகிறார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனைப் பிடிக்க ஆர்வம் காட்டும் போலீஸ் உயரதிகாரியும் சமூக சேவகரும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்தக் கும்பலின் தலைவனைப் (பிரசன்னா) பிடிக்க காய் நகர்த்துக்கிறார் அருண் விஜய். அதில் போதைப் பொருளுடன் லாரியைப் பிடித்து வருகிறார் அருண் விஜய். பதிலுக்கு அருண் விஜயின் குடும்பத்தினரைப் பிடித்து வைத்து மிரட்டுகிறார் பிரசன்னா. இந்த சடுகுடு ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதுதான் ‘மாஃபியா’ படத்தின் கதை.  

மாஃபியா என்ற தலைப்புக்கேற்ப போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து  இயக்குநர் கார்த்திக் நரேன் எடுத்திருக்கும் படம் இது. படத்தில் பிரதானமாக நான்கே கதாபாத்திரங்கள்தான். காதல் காட்சிகள் எதுவும் இல்லை. டூயட் பாடல்களும் இல்லை. காமெடி என்ற பெயரில் எந்தக் காட்சிகளும் இல்லை. இந்தக் காட்சிகள் இல்லாததால், படம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே பயணிக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்தை விறுவிறுப்பான, வேகத்தடை இல்லாத திரைக்கதையால் கட்டிப்போட முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதில் சறுக்கிவிடுகிறார்.

முதல் பாகம் முழுவதுமே நாடகத்தன்மையோடு படம் பயணிப்பது பெரும் குறை. குடியிருப்புகள் மத்தியில் வேர்ஹவுஸ், வீடு, ஆபிஸ், ஹோட்டல் என ரெடிமேடான காட்சி அமைப்புகளுடன் ‘மாபிஃயா’வுக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லாமல் திரைக்கதை நகர்வது சோர்வடைய வைத்துவிடுகிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கண்டுபிடிப்பின் பின்னணியிலும் எந்தப் புதுமையும் இல்லை. வில்லன் யார் தெரிந்த பிறகும் வில்லனுக்கும் நாயகனுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு மாறாக சென்டிமென்ட்டுக்குள் கதை புகுந்து சுவாரசியத்தை இன்னும் குறைத்துவிடுகிறது.  

குடியிருப்புக்கு மத்தியில் போதைப் பொருள் வேர்ஹவுஸ். துப்பாக்கிச் சத்தம் கேட்டாலும் மக்கள் யாரும் வெளியே யாரும் வராமலேயே இருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளிடம் துப்பாக்கிகள் இல்லாமல் இருப்பது, ஒருவரை கடத்தி வைத்துக்கொண்டு வில்லன் தன் பெயரிலேயே ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருப்பது, சிம் கார்டை தூக்கிப் போடாமல் வைத்திருப்பது, வழக்கமாக போலீஸ் அதிகாரி உதவுவது சரடுகளும் லாஜிக் மீறல்களும் வந்து குவிந்துகிடக்கின்றன. 

படமே ‘மாஃபியா - சாப்டர் 1’ என்று  பெயரிட்டுள்ளதால், இரண்டாம்
அத்தியாத்துக்கான கதையின் தொடர்ச்சியைக் காட்டியிருப்பது மட்டுமே படத்தில் ஒரே புதுமை. ஆனால், இரண்டாம் அத்தியாத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முதல் அத்தியாயத்தில் சரடுகள் மட்டுமே எஞ்சியிருப்பது ‘மாஃபியா’வை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்திவிடுகிறது.

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாக அரூண் விஜய். அவருடைய உடல்மொழியும் உடற்கட்டும் அதற்கு கச்சிதம். நடிப்பிலும் வெளுத்துவாங்கியிருக்கிறார். பிரியா பவானிசங்கர் அருண் விஜயின் உதவியாளராக வருகிறார். அருண் விஜய் சொல்வதைக் கேட்கும் கதாபாத்திரம். அருணுக்கு உதவியாக பிரியாவும் படத்தில் சுட்டுக்கொண்டேயிருக்கிறார். வில்லனாக பிரசன்னா. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று தெரியாத அளவுக்கு மில்லியனர் கெட்டப்பில் வருகிறார். ‘வைபர்’ என்ற புனைப் பெயரில் சாதுவாகப் பேசி கவர்கிறார். ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட துணைக் கதபாத்திரங்கள் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஜேக் பிஜாயின் இசையில் புதுமை இல்லை. இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.

முதல் அத்தியாத்திலேயே இரண்டாம் அத்தியாத்துக்கான கதைக் கருவை காட்ட வேண்டும் என்று யோசித்த இயக்குநர், அதற்காக முதல் அத்தியாத்துக்கு மெனக்கெட்டு உழைத்திருந்தால் ‘மாஃபியா’க்குரிய நம்பிக்கை காப்பாற்றப்பட்டிருக்கும்.

மதிப்பெண்- 2 / 5

11/02/2020

வானம் கொட்டட்டும் விமர்சனம்


தேனியில் தன் அண்ணனை (பாலாஜி சக்திவேல்) கொலை செய்ய முயற்சிக்கும் கூட்டத்தில் இருவரைக் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் சுபாஷ் (சரத்குமார்). இதனால், தன்னுடைய இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறார் சரத்குமாரின் மனைவி ராதிகா. அவர்கள் கஷ்டப்பட்டு வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மகன் செல்வா (விக்ரம் பிரபு) வாழைக்காய் பிசினஸ் செய்கிறார். மகள் மங்கை (ஐஸ்வர்யா ராஜேஷ்) வழக்கறிஞருக்குப் படிக்கிறார்.
16 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து சரத்குமார் வீட்டுக்கு வருகிறார். ஆனால், பிள்ளைகள் இருவரும் அவரிடம் ஒட்டாமல் ஒதுங்குகிறார்கள். அதே வேளையில் சரத்குமார் செய்த கொலைக்கு பழிவாங்க காத்திருக்கிறார் நந்தா. இதில் சரத்குமாருக்கு என்ன ஆனது? பிள்ளைகள் சரத்குமாரை ஏற்றார்களா, இல்லையா என்பதுதான் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் கதை.

இயக்குநர் மணிரத்னம் தயாரித்துள்ள படம் இது. குடும்பக் கதைகள் அருகிவரும் காலத்தில், தைரியமாக ஒரு குடும்பத்தை வைத்து கூட்டாஞ்சோறு செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் தனசேகரனைப் பாராட்டலாம். கணவன் - மனைவி பாசம், அம்மா-பிள்ளைகள் பாசம், பிள்ளைகளின் காதல், குடும்பம், பழிக்குப் பழி, சென்டிமெண்ட் என ஒரு குடும்பக் கதைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் படத்தில் அளவாக வைத்திருக்கிறார் இயக்குநர். படம் தொடங்கி முடியும் வரை கிராமம், நகரம் என கதைக் களம் சுற்றிவருவதும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறது. படம் தொடங்கியதுமே அங்கே இங்கே எனச் சுற்றாமல் நேரடியாகக் கதைக்குள் வந்துவிடுகிறது திரைக்கதை.

ஆத்திரத்தில் ஒருவன் செய்யும் செயல், அவன் குடும்பத்தை எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும், மனைவியும் பிள்ளைகளின் நிலையும் என்னவாகும் என்பதையும் படம் சொல்ல முயன்றிருக்கிறது. பழிக்குப் பழி கூடாது என்ற கருத்தையும் படத்தின் போக்கோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஒரு குடும்பக் கதையை அழகியலாகச் சொல்ல பல விஷயங்கள் இருந்தபோதும், அவை எல்லாமே மேம்போக்காகக் காட்சிப்படுத்தியிருப்பது படம் நம் மனதைத் தொடாமலேயே செல்வது பெருங்குறை. சரத்குமாருடன் பிள்ளைகள் ஏன் ஒட்ட மறுக்கிறார்கள் என்பதற்கு படத்தில் வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. படத்தில் இயல்பாகவே காட்டப்பட்டிருக்கும் விக்ரம் பிரவுவை, சிறு வயதில் அடாவடி செய்பவனாக ஏன் காட்டினார்கள் என்பதற்கும் விடை இல்லை.

மடோனா செபாஸ்டின் குடும்பக் காட்சிகள் எதுவும் பிரதான கதைக்குக் கொஞ்சமும் உதவாத வகையிலே உருவாக்கப்பட்டிருக்கிறது. கடன் வாங்கி பிசினஸ் செய்யும் விக்ரம் பிரபு, 2 கோடிக்கு ரூபாய்க்கு அஸ்யூரன்ஸ் கொடுப்பது, புத்தி சுவாதீனம் இல்லாதவன் கொலைக் செய்யக் காத்திருப்பதாகக் காட்டுவது, அவன் கொலை செய்தால், சிறைக்கு சென்றுவிடுவான் என்று பேசுவது என டன் கணக்கில் பூச்சுற்றல்கள் உள்ளன. பழி வாங்க 16 ஆண்டுகள் காத்திருந்தவன், ஒரு நிமிட வசனத்தில் மனம் மாறுவது வழக்கமான அரைத்த மாவு.

 சிறிய இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் தமிழில் நடித்திருக்கும் படம் இது. சுபாஷ் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு செல்வது, சிறையில் மருகுவது, மனைவி மீது அன்பை பொழிவது, பிள்ளைகளின் பாசத்துக்காக ஏங்குவது எனக் கச்சிதமாக நடித்தியிருக்கிறார். மனைவியாக ராதிகா சரத்குமார். சரத்குமார் கொலை செய்ததைக் கேட்டவுன் ராதிகாவின் பதற்றம், பிள்ளைகளுடனான பாசம், நேசம், கோபம், இயலாமை என ஒரு சராசரி குடும்பப் பெண்ணின் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

சரத்குமார் - ராதிகாவின் மகனாக வரும் விக்ரம் பிரபுக்கு நீண்ட நாள் கழித்து நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அதை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். எந்த வேடத்திலும் பொருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாவும், தங்கையாகவும் நெகிழ்ச்சியாகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சாந்தணுவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. மடோனா செபாஸ்டின், நந்தா, பாலாஜி சக்திவேல், அமிதாஷ் என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளன. படத்துக்கு இசை கே மற்றும் ஷித் ராம். படத்தில் அவ்வப்போது இரண்டு வரிகளாகப் பாடல்கள் வருகின்றன. ஆனால், அவை எதுவும் மனதில் ஒட்டவில்லை. பிரீத்தா ஜெயராமனின் கேமரா சென்னை, தேனியை அழகாகப் படம் பிடித்துள்ளது.
  
வானம் கொட்டட்டும் - நனைய வைக்காத சிறு தூறல்!

மதிப்பெண் - 2.5 / 5

03/02/2020

கோடம்பாக்கத்தின் ஸ்வீட் மம்மி!

தமிழ் சினிமாவில் ‘ஸ்வீட் மம்மி’கள் என்றால், ஒரு சிலரே சட்டென நினைவுக்கு வருவார்கள். அவர்களில் அனுபமா குமாருக்கும் எப்போதும் இடமுண்டு. அண்மையில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு 2’ படத்திலும் விக்ராந்துக்கு வெள்ளந்தியான அம்மாவாக நடித்திருந்தார் அனுபமா. நாற்பத்தைந்து வயதாகும் அனுபமாவுக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர், மாடல், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர் எனப் பல முகங்கள் உண்டு.

பச்சைத் தமிழச்சியான அனுபமாவின் சொந்த ஊர் கோவை. அவருடைய அப்பா ராணுவத்தில் இருந்ததால், சண்டிகர், அஸ்ஸாம், டெல்லி என வடஇந்தியாவில்தான் வாசம். படிப்பெல்லாம் டெல்லியில்தான். ஆங்கில இலக்கியத்தை ஆர்வமாகப் படித்தவருக்கு யு.ஜி.சி.யில் மாணவ ஆங்கராகப் பணியாற்றியதிலிருந்து மீடியா மீது மோகம். குறிப்பாக, நடிப்பில் நாட்டம். ஆனால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் நடிக்க தடைப் போட்டுவிட்டார்கள். பிறகு போனால் போகட்டும் என்று சினிமா தவிர்த்த மீடியாவில் சேர்ந்துகொள்ள அனுமதி கொடுத்தார்கள். படித்த முடித்தவுடன் தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்தார் அனுபமா. அங்கேதான் நிகழ்ச்சி தயாரிப்பு, படத்தொகுப்பு எனப் பல்வேறு தளங்களில் பணியாற்றியிருக்கிறார்.

ஊடகம் மீதும் அனுபமாவுக்கு விருப்பம் ஏற்படவே, டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றினார். அங்கே  செய்தியாளர், ஆங்கராகவும் பணியாற்றிவந்த அனுபமாவுக்கு விளம்பரப் படங்களின் மீது ஆசை துளிர்த்தது. விளம்பரப் படங்களில் தலைகாட்டத் தொடங்கினார். மும்பையில் இருந்தபடி 400 முதல் 500 விளம்பர படங்களில் நடித்த அனுபமாவுக்கு சினிமாவில் நடிக்கவும்  வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், சினிமாவில் நுழைய வீட்டில் முட்டுக்கட்டை விழவே, மீண்டும் அந்த ஆசையை மூட்டைக் கட்டி வைத்தார் அனுபமா.

பொதுவாக திருமணம் பலருக்கு வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிடும். ஆனால், அனுபமாவுக்கு திருமணம்தான் சினிமாவுக்கான வாசலை அகல திறந்துவிட்டது.  ராணுவ கமாண்டரை மணந்த அனுபமாவுக்கு, கணவரிடமிருந்துதான் சினிமாவில் நடிக்க கிரீன் சிக்னல் கிடைத்தது. ‘சினிமா ஆசை இருந்தால் நடி’ என்று ஊக்கமூட்டினார். அந்த ஊக்கம் அனுபமாவுக்கு தித்தித்தது. அந்த சூட்டோடு ‘இஷ்கியா’ என்ற இந்திப் படத்தில் அறிமுகமனார். இந்தியில் தொடங்கிய அவருடைய சினிமா வாழ்க்கை தமிழுக்கு எப்படி மாறியது?

“தமிழில் 2009-ல் வெளியான ‘பொக்கிஷம்’தான் என்னுடைய முதல் படம். இந்தப் பட வாய்ப்பு கிடைத்ததில் ஒரு சுவையான கதை இருக்கு. அப்போ சென்னையில் ஒரு விளம்பர படத்துக்காக வந்திருந்தேன். செய்தித்தாள் ஒன்றை படித்தபோது இயக்குநர் சேரன், ஒரு கதாபாத்திரத்துக்காக 50 பேரை ஆடிஷன் செய்தும் யாரும் தேர்வாகவில்லை என்ற செய்தியைப் படித்தேன். அந்தக் கதபாத்திரத்துக்கு நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. சேரனை தொலைபேசியில் அழைத்து விருப்பத்தைத் தெரிவித்தேன். போனில் என் குரலை கேட்டுவிட்டே வேண்டாம் என்றார். ரொம்ப பிடிவாதமாகக் கேட்டதால், ஆடிஷனுக்கு வரச் சொன்னார். ஆடிஷனில் எப்படியோ என்னை ஓ.கே. செய்தார். அந்தப் படத்தில் 65 வயதுகிழவி வேடத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 35 வயதுதான்.  நடிக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் நடித்த கதாபாத்திரம் இது” என்று தமிழில் அறிமுகமான கதையைச் சொல்கிறார் அனுபமா.

தமிழில் முதல் படமே 65 வயது கிழவியாக நடித்த பிறகு அனுபமாவுக்கு அதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய தேடிவரத் தொடங்கின. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது சிலருக்கு சலித்துவிடும். அனுபமாவுக்கு அப்படித்தான். ஒரே மாதிரியான அழைப்புகள் வந்தாலும், அதிலிருந்து சற்று மாறுபட்ட முக்கியத்தும் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க அனுபமா முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

“குணச்சித்திரம் கதாபாத்திரம் என்றாலும் எப்போதும் கதை கேட்காமல் நடிக்கவே மாட்டேன். பிடித்திருந்தால் மட்டுமே செய்வேன். அம்மா, அக்கா என எந்தக் கதாபாத்திரமாக் இருந்தாலும் தோற்றத்தில் மாற்றம் காட்ட விரும்பினேன். என்னுடைய படங்களிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் தெரிந்திருக்கும். 25 வயது கர்ப்பிணி கதாபாத்திரம் தொடங்கி குடுகுடு கிழவிவரை எல்லா கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்துவிட்டேன்” என்கிறார் அனுபமா குமார்.

சேரனின் ‘பொக்கிஷ’த்துக்கு பிறகு ‘அய்யனார்’, ‘ஆடுபுலி’, ‘வம்சம்’, ‘துப்பாக்கி’, ‘மீகாமன்’ , ‘நீர்ப்பறவை’, ‘மூடர்கூடம்’, ‘ நீதானே என் பொன் வசந்தம்’ எனத் தொடங்கி இந்த ஆண்டு ‘காஞ்சனா 3’, ‘வெண்ணிலா கபடி குழு 2’ என அனுபமாவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. எல்லாமே அம்மா வேடங்கள்தான். உங்களைவிட வயது அதிகமுள்ளவர்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டால், வெடித்து சிரிக்கிறார்.

“என்னைவிட அதிக வயதுள்ள நாயகன்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது சிரிச்சுக்குவேன். படப்பிடிப்பிலேயே கூட நடிக்குறவங்க கலாய்ப்பாங்க. ஆனால், இது எல்லாமே இயக்குநர், “ஸாட் ரெடி” என்று சொல்லும்வரைதான். நடிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் கதாபாத்திரமாக மாறிவிடுவேன். எதிரே நடிப்பவர் என் மகன் என்ற நினைப்பு வந்துவிடும். உடல்மொழியும் மாறிவிடும்.” என்று யதார்த்தமாகப் பேசுகிறார் அனுபமா.

அம்மா போன்ற குணச்சித்திர கதாபடங்களில் பெரிய வித்தியாசம் காட்ட வாய்ப்பிருக்காது. ஆனால், ‘வம்சம்’ படத்தில் இரண்டு மாறுபட்ட வயதுகளில் தோன்றி நடிப்பில் பெயர் எடுத்தவர் அனுபமா.  “அந்தப் படத்தில் 25 வயசுல ஒரு கதாபாத்திரம். 45 வயசுல ஒரு கதாபாத்திரம். ஒரு கதாபாத்திரத்துக்கு ஒல்லியாக வேண்டியிருந்தது. இன்னொரு கதாபாத்திரத்துக்கு குண்டாக வேண்டியிருந்தது. குண்டாக நிறைய சாப்பிட்டேன். ஒல்லியாக ஒரு மாசம் அவகாசம் கொடுத்தார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்தேன். டயட்டை பின்பற்றினேன். மேக்கப்பிலும் மெனக்கெட வேண்டியிருந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் சவாலாக அமைந்த படம் ‘வம்சம்’தான்” என்கிறார் அனுபமா.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அனுபமா, ஆண்டுக்கு ஓரிறு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தன்னுடைய 14 வயது மகனுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. தற்போது சினிமாவைத் தாண்டி ‘வெப்’ தொடர் ஒன்றிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். “அடுத்து என்ன செய்வோம் என்பது நம் கைகளில் இல்லை” என்பதை அடித்துக்கூறு அனுபமாவுக்கு இயக்குநராகும் ஆசையும் உள்ளது. “எதிர்காலத்தில் அதையும் பார்ப்பீர்கள்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அனுபமா.

கேள்வி - பதில்

ரோல் மாடல்?


ஸ்ரீவித்யா. அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரை மனதில் வைத்து நடிப்பேன்.

 நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

‘பாபநாசம்’ படத்தில்  நடித்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் போல நடிக்க வேண்டும்.

அம்மா நடிகைகளில் போட்டி?

சிவரஞ்சனி. ரொம்ப அழகானவர். பிரமாதமாக நடிக்கக்கூடியவர். அவரே என் போட்டியாளர்.

‘மை சன் இஸ் கே’?

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற படம். பட ரிலீஸூக்காகக் காத்திருக்கிறேன்.

அடுத்த படங்கள்?

4 படங்கள் வர இருக்கின்றன. இதில் நானும் கிஷோரும் இணைந்து தயாரித்த ‘கதவு’ என்ற படமும் அடக்கம்.

- இந்து தமிழ், 30-07-2019