வளம் தரும் கொடிவேரி அணை
தமிழகத்தில் மிகப்பெரிய அணைக்கட்டுகளில் ஒன்று கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது இந்த அணைக்கட்டு. 17ஆம் நூற்றாண்டில் இந்த அணையைக் கட்டினார் மைசூர் மகாராஜா. மிகப்பெரிய பரப்பில் அழகுற விரிந்திருக்கும் இந்த அணைதான் இப்பகுதி முழுவதுமே வளமாக இருக்க முக்கியக் காரணம்.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு பிரித்து விடப்படுகிறது. மீதமுள்ள தண்ணீரே கொடிவேரி அணை வழியாக அருவியாகக் கொட்டுகிறது. கொடிவேரி அணையில் கொட்டும் தண்ணீர் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்த தவறுவதேயில்லை.
ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று.பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணையில் கொட்டும் தண்ணீரைப் பார்த்தாலே குளிக்கும் எண்ணம் வந்துவிடும். தமிழ் சினிமாவையும் கொடிவேரி அணையையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இங்கு ஏராளமான சினிமா சூட்டிங்குகள் நடைபெற்றுள்ளன.
புகழ்ப்பெற்ற இந்த கொடிவேரி அணை ஈரோடு நகரலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆகாய கங்கையும் அறப்பளீஸ்வரரும்
நாமக்கல் என்றதும் நினைவுக்கு வரும் சுற்றலாத்தளம் கொல்லிமலை. அற்புத மூலிகைகள் நிறைந்த மலை இது. மலைவாசஸ்தளங்களுக்குரிய நீர்வீழ்ச்சி, வியூ பாயிண்ட், படகு சவாரி என கொல்லிமலையில் சொல்லும் அளவுக்கு நிறைய இடங்கள் இருந்தாலும், கொல்லிமலைக்கு சிறப்பு சேர்ப்பது அறப்பளீஸ்வரர் கோயில்.
கருவறையில் மூலவரான அறப்பளீஸ்வரர், லிங்க வடிவில் அருள் புரிகிறார். இவருக்கு மகாலிங்க நாதர், தர்மகோனீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. தர்ம கோடீஸ்வரி, தாயம்மன் ஆகிய பெயர்களுடன் தனிச் சந்நிதியில் அம்பிகை காட்சித் தருகிறாள்.
கருவறை அருகே பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் ஆகியோர் எழிலோடு வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஈசனை வைத்து கரிகாலன் வழிபட்டதாகவும் அவனைத் தொடர்ந்து ஒரு மன்னனும், மகேந்திரவர்மனும் வழிபட்டதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கோவில் அருகே ஓடும் ஐந்தாறின் முடிவில் 350 அடி உயரத்திலிருந்து ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகக் கொட்கிறது.
அறப்பளீஸ்வரர் ஆலயத்திலில் இதுவரை 20 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சோழ மன்னர்கள் பரகேரிவர்மன், ராஜகேசரிவர்மன், பராந்தக சோழன் ஆகியோர் காலத்தில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் மூலக்கருவறை விமானம், சோழப் பேரரசி செம்பியன் மாதேவி (10ஆம் நூற்றாண்டு) காலத்தில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டுதோறும் ஆடி பதினெட்டு அன்று நடைபெறும் வல்வில் விழா தனிச்சிறப்பு பெற்றது.
கஞ்சமலை சித்தர்
சேலத்தில் சிறப்பு வாய்ந்தப் பகுதிகள் எத்தனையோ இருந்தாலும், சித்தர் கோயிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. சேலம் நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் கஞ்சமலையில் இருக்கிறது இக்கோயில்.
காலங்கிநாதர் என்ற சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள திருக்கோயிலாகும். இக்கோயிலில் உள்ள கல் கட்டடம் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ஆனால், கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மலைக்குச் சென்று இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இக்கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என இன்னொரு பெயரும் உண்டு.
கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத்தக்கது. கஞ்சம் என்றால் தங்கம், இரும்பு, தாமரை என மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம். மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.
திருமூர்த்தி கொடை!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை குறிப்பிட்டத்தக்க சுற்றுலாத் தளமாகும். உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ
தூரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இந்த இடத்தில் திருமூர்த்தி அணை, திருமூர்த்தி அருவி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்துப் படைக்கும் பகுதிகளாகும்.
திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியுள்ள கோயில் இது. இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மலையடிவாரத்தில் இருந்து மலையில் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று திருமூர்த்தி அணையைத் தரிசிக்கலாம்.
அருகில் உள்ள திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. அணையின் கரையில் வண்ண மீன் காட்சியகம் ஒன்றும் உள்ளது. அரிய வகை மீன்கள் உள்ளன. அடுத்து நீச்சல் குளம் உள்ளது. மிகப்பெரிய சிவன் சிலையில் இருக்கும் ஐந்து தலை நாகத்தின் வாயிலிருந்து குளத்தில் தண்ணீர் கொட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி மலையில் வாழ்ந்த அத்தரி மஹரிஷியும், ரிஷி பத்தினியான அனுசூயா தேவியும் மும்மூர்த்திகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றதால், இம்மலை, மும்மூர்த்திகளின் பெயரிலேயே அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.
சிலிர்ப்பூட்டும் சிறுமுகைப் பட்டு
பட்டுப் புடவைகள் என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, திருபுவனம், கும்பகோணம் ஆகிய ஊர்கள்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். இப்போது சிறுமுகையும் அந்த ஊர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது. சிறுமுகைப் பட்டு தமிழகம் தாண்டி இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வனப்பகுதியையொட்டிய சிறிய ஊர்தான் இந்தச் சிறுமுகை. இங்கு காலங்காலமாக நெசவாளர்கள் உள்ளார்கள். பல ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் இந்தப் பகுதி நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தாலும் சிறுமுகைப் புடவைக்கு பெயர் கிடைத்தது என்னவோ 40 ஆண்டுகளுக்கு முன்புதான். 1970-களில் இங்கு முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட காட்டன் புடவைகள் தமிழகத்தில் பிரசித்திப் பெற்றது.
பல நெசவாளர்கள் வறுமையில் வாடியதால் பெங்களூரு, காஞ்சிபுரம் ஊர்களுக்கு சிறுமுகை நெசவாளர்கள் வேலைக்குப் போனார்கள். பட்டுப் புடவைகளை நுணுக்கமாகத் தயாரிக்க கற்றுக்கொண்டார்கள். அப்படிப் போனவர்கள் 1977-ம் ஆண்டில் சிறுமுகை திரும்பி முதன்முதலாகப் பட்டுச் சேலை தயாரிப்பை அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் சிறுமுகையில் இருந்த நெசவாளர்கள் கொஞ்சம்கொஞ்சமாக பட்டுப் புடவை நெய்யக் கற்றுக் கொண்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில்தான் கோராப்பட்டு சிறுமுகையில் அறிமுகமானது. பட்டும் காட்டனும் இணைந்து தயாரிக்கப்பட்டதே இந்தக் கோராப்பட்டு. பெரிய பெரிய டிசைன் பட்டுப் புடவைகள் கோராப்பட்டில் தயாரிக்கப்பட்டன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிறுமுகை பட்டு உற்பத்தியில் முன்னேறியது. இதைத்தொடர்ந்து ஏராளமான கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு பட்டுப் புடவைகளும், கோராசேலைகளும் தயாரிக்கப்பட்டன.
காலத்துக்கு ஏற்ப புதிய நுட்பங்களில் சிறுமுகை பட்டுப் புடவைகள் வந்தவண்ணம் உள்ளன. கணினி மூலம் புதுப்புது டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. மயில் தோகைப் பட்டு, திருக்குறள் பட்டு, காந்திப் பட்டு என புதிய பட்டுப்புடவைகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கின்றன. இந்தப் பட்டுப் புடவை தயாரிப்புகள் தேசிய விருதுகள் பெற்று சிறுமுகைப் பட்டுக்கு நற்பெயரையும் கொடுத்திருக்கின்றன. இதன்மூமல் தற்போது சிறுமுகைப் பட்டுக்கென்றே தனி மறியாதை கிடைத்துள்ளது.
பட்டுப்புடவை மட்டுமல்ல, சாப்ட் சில்க், சில்க் காட்டன், ப்ரைடல் சில்க் என தினந்தோறும் புதுப்புது ரக புடவைகள் சிறுமுகையில் அறிமுகமாகி வருகின்றன.
மிடுக்கான காங்கேய காளைகள்
தமிழகத்தின் பழமையான அடையாளங்களில் ஒன்று காங்கேயம்
காளை. சாதாரண மாடுகளைவிட காங்கேயம் காளைகளின் முகத்தோற்றம், கொம்பு, கால், திமில், பல், தாடை, எலும்பு, தொப்புள், வால் மிடுக்காக இருக்கும். தோற்றத்தில் காங்கேயம் காளைகள் மிரள வைக்கும். உலகிலேயே அச்சமூட்டும் திமில் உள்ள ஒரே இனத்துக்கு சொந்தமும் இந்த காங்கேயம் காளைகள்தான். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் காளைகள் என்ற பெருமையும் காங்கேய காளைகளுக்கு உண்டு.
தமிகத்தில் காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட இந்தக் காளைகளுக்கு இன்னொரு புகழும் உண்டு. உலகில் ஏராளமான காளை வகைகள் இருந்தாலும் காங்கேய காளைகளுக்கு மட்டுமே உருண்டு திரண்டு காணப்படும் திமில்கள் உள்ளன. சிந்து சமவெளியில் ஏறுதழுவல் என்ற ஜல்லிக்கட்டு நடத்திய முல்லை நில ஆயர்கள், அங்கிருந்து இந்தக் காளையைத் தமிழகத்துக்கு அழைத்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காங்கேய காளைகள் கடும் வெயிலிலும்கூட பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் திறன் பெற்றது. உழவு வேலையாக இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் வண்டியாக இருந்தாலும் சரி களைப்பில்லாமல் வேலை செய்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டியில் 4 டன் எடை உள்ள பொருள்களைகூட நீருள்ள பாதையில் இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை.
காங்கேய வகைகளில் பால் தரும் வகைகளும் உள்ளன. ஆனால், பசு, எருமை மாட்டைப் போல அதிகளவு பால் தராது. எனவே உழவு வேலைகளுக்கே காங்கேய காளைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஒரு ஜோடி காங்கேய எருதுகள் 1.75 லட்சம் ரூபாய்க்கும், காங்கேய காளையின் ஒரு பிரிவான பூச்சி காளை 60 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகின்றன.
விற்பனையின் போது ‘சுளி சுத்தம்' பார்க்கப்படும். காளை மற்றும் பசுமாட்டின் உடலில் இருக்க வேண்டிய இடங்களில் ‘சுளி' இருந்தால் அது சுளி சுத்தம். நல்ல விலை கிடைக்கும். கொம்பு நேராக, கூர்மையாக இருக்க வேண்டும். தலையும் வாலும் நீளமாக இருக்க வேண்டும். இவற்றையும்கூட விற்பனையின்போது பார்க்கப்படும். காங்கேயம் காளைகளின் வாழ்நாள் 20 ஆண்டுகள். பராமரிப்பைப் பொறுத்து வாழ்நாள் 10 ஆண்டுகள்வரை அதிகரிக்கலாம்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள ‘கண்ணபுரம் காங்கேயம் காளை சந்தை' பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இந்தச் சந்தை நடைபெறுகிறது.
- இந்து தமிழ் தீபாவளி மலர், 2013