30/08/2019

பாதை மாறிய பயணம்!


சில நடிகர்கள் சினிமாவில் அடி மேல் அடி வைத்து முன்னேறுவார்கள். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் விவேக் பிரசன்னா. சினிமாவில் சிறுசிறு வேடங்களில் வாழ்க்கையைத் தொடங்கிய விவேக் பிரசன்னா, வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களைத் தாண்டி அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

விவேக் பிரசன்னாவின் சொந்த ஊர் சேலத்தில் உள்ள சின்னனூர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் விஷுவல் கம்யூனிகேசன் படிப்பைப் படித்தார். விஸ்காம் படித்தபோது நிறைய குறும்பட ப்ராஜெக்டுகள் செய்ய வேண்டியிருந்தது. இதனால், கல்லூரி நண்பர்களின் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது சினிமா கேமரமேன் ஆக வேண்டும் என்று விவேக் பிரசன்னாவுக்கு ஆசை.
இதனால், ஒளிப்பதிவாளர் சித்தார்த்திடம் உதவியாளராக சேர்ந்து 3 ஆண்டுகள் அவருடன் பயணித்தார். ‘அரவாண்’, ‘ஜெ.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட 3 படங்களில் விவேக் பிரசன்னா உதவி கேமராமேனாகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பிறகு தனியாக கேமராமேன் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.

அப்போதுதான் அவருடைய சக நண்பர் விஜய் கார்த்திக் மூலம் இயக்குநர் ரத்னகுமார் அறிமுகமாகியிருக்கிறார்.
ரத்னகுமாரும் அப்போது இயக்குநராக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு நல்ல புரொபைலை உருவாக்குவதற்காக ரத்னகுமார் ‘மது’ என்ற குறும்படத்தை இயக்கினார். அந்தக் குறும்படத்தில் நண்பர் என்ற அடிப்படையில்  விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார். அந்தக் குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூப்பில் வைரல் ஆனது. அதில் விநோத் என்ற கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிப்பும் பேசப்பட்டிருக்கிறது. பிறகு அந்தக் குறும்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தியேட்டரில் ரிலீஸ் செய்ததால், அந்தக்
குறும்படம் இன்னும் பேசப்பட்டது.

ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த விவேக் பிரசன்னாவுக்கு இந்தக் குறும்படம் இன்னொரு பாதையைத் திறந்துவிட்டது. “இந்தக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை விஜய் சேதுபதி அண்ணா பாராட்டினார். இந்தக் குறும்படத்துக்கு பிறகு நிறைய குறும்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. கேமராமேன் வேலையைத் தேடிகொண்டே 15 குறும்படங்கள்வரை நடித்துவிட்டேன். என்னை நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த பலரும் அறிவுரை சொன்னார்கள். நானும் ஊசலாட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில்தான் விஜய் சேதுபதி அண்ணா, இயக்குநர் ரத்னகுமாரிடம், ‘என்னை கேமராமேன் வேலையை விட்டுவிட்டு நடிக்க வரச்சொல்லுங்க’ என்று சொல்லியிருக்கிறார். சேது அண்ணா சொன்ன பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தேன்.” என்கிறார் விவேக் பிரசன்னா.

சினிமாவில் நடிக்க முடிவெடுத்த பிறகு விவேக் பிரசன்னாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு, ‘டார்லிங் 2’ படம். சின்ன வேடத்தில் நடித்த விவேக், பட வாய்ப்புகளைத் தேடி பலப் பட கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ‘இறைவி’, ’ஜில் ஜங் ஜக்’, ‘மாநகரம்’ போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வந்துபோயிருக்கிறார் விவேக் பிரசன்னா. திடீர் திருப்பமாக விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தில் நடிக்க இயக்குநர் அருண்குமார் அழைத்திருக்கிறார். விவேக் பிரசன்னாவின் குறும்படங்களைப் பார்த்துவிட்டு அருண்குமார் பார்த்துவிட்டு அழைத்து கொடுத்த வாய்ப்பு அது. விஜய் சேதுபதிக்கு எதிராக சற்று வயதான தோற்றத்தில் மதிவாணன் என்ற துணை வில்லன் கதாபாத்திரத்தில் விவேக் சேதுபதி நடித்தார். “இந்தப் படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது.” என்கிறார் விவேக் பிரசன்னா.

 ‘சேதுபதி’ படத்தில் விவேக்கின் நடிப்பு பிடித்துபோகவே, ‘விக்ரம்-வேதா’ படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அந்தப் படத்தில் முக்கிய வில்லனாக ‘லார்ட் ரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது விவேக் பிரசன்னாவுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் ரத்னகுமார் ‘மது’ குறும்படத்தை ‘மேயாதமான்’ என்ற பெயரில் வெள்ளித் திரையில் உருவாக்கினார். அந்தக் குறும்படத்தில் விநோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விவேக் பிரசன்னா, இந்தப்
படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

 “சின்ன வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துக்கொண்டிருந்த எனக்கு, முதன் முறையாக ‘மேயாதமான்’ படத்தில் ஜோடியும்  இருந்தது. குணச்சித்திர நடிகர் என்ற பெயரையும் இந்தப் படம் எனக்கு வாங்கிக்கொடுத்தது. காதல், செண்டிமெண்ட், ஃபிரெண்ஷிப், எமோஷன் என எல்லாவற்றையும் கலந்துகட்டி நடிக்க இந்தப் படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. படம் நல்ல ஹிட் ஆனது. நல்ல நடிகர் என்ற பெயரும் எனக்குக் கிடைத்தது” என்கிறார் விவேக் பிரசன்னா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ’பேட்ட’ படத்திலும் விவேக் பிரசன்னா நடித்திருந்தார். அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது பற்றியும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் ஒரு கனவை போல விவரிக்கிறார்.

“கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே, எப்போதுமே ஆடிஷன் இருக்கும். ‘பேட்ட’ படத்துக்கும் ஆடிஷன் டெஸ்ட் மூலம்தான்  கல்லூரி விரிவுரையாளர் வேடம் கிடைத்தது. சூப்பர் ஸ்டாரின் தொழில் பக்தியைப் பார்த்து நான் மிரண்டு போனேன். இப்போதும் ஒவ்வொரு ஷாட்டையும் ஒரு புதுமுகம்போலவே நினைத்து செய்கிறார். ரஜினி சாரோடு இணைந்து நடித்து, அவருடன் பாட்டு, நடனம் ஆட யாருக்காவது இனியும் வாய்ப்பு கிடைக்குமா? அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்”என்கிறார் விவேக் பிரசன்னா.

அண்மையில் வெளியான ‘சிந்துபாத்’ படத்திலும் விவேக் பிரசன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து மூன்றாவது முறையாக நடித்திருக்கிறார் விவேக். விஜய் சேதுபதி படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது எப்படி? “விஜய் சேதுபதி அண்ணா படத்தில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது எல்லாம் எதிர்பாராமல் நடப்பதுதான். எனக்கு மிகவும் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள்  சேது அண்ணாவை வைத்து படம் பண்ணும்போது எனக்கும் கிடைத்துவிடுகிறது என்பதுதான் உண்மை.” என்கிறார் விவேக் பிரசன்னா.

அடுத்த கதாநாயகன் அவதாரமா என்று கேட்டால் சிரிக்கிறார் விவேக் பிரசன்னா. “தற்போது 24 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். என் நடிப்பை வைத்து ஒரு பெரிய ப்ரொபைலை உருவாக்க வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் உள்ளது. சினிமா என்பதே நாயகனை வைத்துதான் வர்த்தகமே. எனக்கு எந்த அளவுக்கு மார்க்கெட் இருக்கிறது?, தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களா? இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைத்தது என்று நான் நடித்த பிறகு யாரும் கஷ்டப்பட்டுவிடக் கூடாது. தியேட்டர் கிடைக்காமல் போய்விடக் கூடாது. கலெக்‌ஷன் இல்லாமல் போய்விடக் கூடாது. கதைக்கான நாயகன் என்ற ரோல் கிடைக்கும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் நான் நடிப்பேன்.” என்று யதார்த்தமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசுகிறார் விவேக் பிரசன்னா.

கேள்வி - பதில்

மறக்க முடியாதவர்கள்?

இயக்குநர்கள் ரத்னகுமார், அருண்குமார், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் விஜய் சேதுபதி. இவர்கள் இல்லாவிட்டால் என் சினிமா வாழ்வே கிடையாது.

விருது?

‘மேயாதமான்’ படத்துக்காக விஜய் அவார்ட்ஸ் கிடைத்தது.

லட்சியம்?

எல்லோருக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். அவ்ளோதான்.

மிகவும் பிடித்த நடிகர்?

மறைந்த ரகுவரன்.

மனதுக்கு நெருக்கமான படங்கள்?

‘சேதுபதி’, ‘மாநகரம்’, ‘விக்ரம் - வேதா’, ‘மேயாதமான்’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’

ரஜினியுடனான அனுபவம்?

‘பேட்ட’ படத்தில் ‘சூப்பரா நடிச்சுருக்கீங்க’ என்று அவர் பாராட்டியது.

அடுத்த படங்கள்?

ஜீவா நடிப்பில் ‘கொரில்லா’, ரத்னகுமார் இயக்கத்தில் ‘ஆடை’, கதிர் நடிப்பில் ‘சர்பத்’, சூர்யாவுடன் ‘சூரரை போற்று’.

- இந்து தமிழ், 12-07-2019

25/08/2019

பக்ரீத் விமர்சனம்


அண்ணன் - தம்பி சொத்து தகராறில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்தினத்துக்கு (விக்ராந்துக்கு) அவனுடைய பாகம் கிடைக்கிறது. அதில் விவசாயம் செய்ய பணத்துக்காக ரத்தினம் அலைகிறான். அந்த முயற்சியில் பணத்தோடு சேர்ந்து ஓர் ஒட்டகமும் அவனுக்குக் கிடைக்கிறது. அந்த ஒட்டகத்தின் மீது அவனும் அவனுடைய குடும்பமும் அன்பு காட்டுகிறது. ஒட்டகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது அதைப் பூர்வீக இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிய மனம் இல்லாமல் அதைப் பூர்வீக இடத்துக்குக் கொண்டு செல்ல ரத்தினம் முடிவு செய்கிறான். அந்த ஒட்டகம் பூர்வீக இடத்துக்கு சென்றதா, இல்லையா என்பதை உணர்வுபூர்வமாகவும் பயண கதையாகவும் சொல்கிறது ‘பக்ரீத்’.

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஒட்டகத்தை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுபுவை பாராட்டலாம். பக்ரீத் பண்டிகைக்காக ஒரு பாய் வீட்டுக்கு வரும் குட்டி ஒட்டகம் ரத்தினத்தின் வீட்டுக்கு வந்த பிறகு, அது காட்சிப்பொருளாகிவிடுகிறது. அது என்ன சாப்பிடும் எனத் தெரியாமல் வைக்கோல் கொடுப்பது, இந்திக்காரரை அழைத்துவந்து புல் கொடுக்க முயற்சிப்பது என அசல் கிராமத்து மக்களின் பாமரதனத்தை யதார்த்தமாக இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். விலங்குகளும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது என்ற கருத்தையும் படம் சொல்ல முனைத்திருக்கிறது. மகள் விரும்பி கேட்கும் பேக்கிங் தின்பண்டத்தைக் கொடுக்காமல் திசை திருப்பும் காட்சி, கடலை மிட்டாய் வாங்கிக்கோமா என சொல்லும் இடத்திலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

ஒட்டகம் பிறந்து வளர்ந்த ஊரான ராஜஸ்தானில் கொண்டு போய்விட ரத்தினம் முடிவு செய்யும் கணத்திலிருந்து அதுவே படத்தின் பிராதனமாகிவிடுகிறது. அதற்கு முன்புவரை விவாசயம் செய்ய முடியாமல் நாயகன் தவிப்பது கிளை கதையாகிவிடுகிறது. பயணக் கதை என்றாலே எதிர்பார்ப்புகளும் திருப்பங்களும் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கப்படும். ஆனால், எந்தத் திருப்பமும் இன்றி சுவாரசியமும் இன்றி ஒட்டகத்துடன் நாயகன் பயணமாகிறான். இடையே லாரி ஓட்டிச் செல்லும் இந்திக்காரர்களின் காமெடியும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகவே செல்கின்றன. பசு காவலர்கள் ஒட்டகத்தை ஏன் சிறைபிடிக்கிறார்கள் என்பதற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.

ஒட்டகம் காணாமல் போவது, நாயகனுக்கு அமெரிக்கரின் உதவி,  என எதுவுமே மனதில் ஒட்டமலேயே செல்கிறது. ஒட்டகத்தால் ராணுவ வீரர்கள் தப்பித்தார்கள் என்ற காட்சியில் தெளிவு இல்லை. மகாராஷ்டிராவிலிருந்து ராஜஸ்தானுக்கு ஒட்டகத்துடன் நடந்தே சென்றுவிடுவதாக ஒரு காட்சியில் சொல்லிவிட்டு காதில் பூ சுற்ற வைத்துவிடுகிறார்கள். அதற்கு முன்பு வரையிலான காட்சிகள் அனைத்தும் கண்ணாமூச்சிகளாக நகர்ந்துவிடுகின்றன. ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டுவந்துவிட்டாலும் அது இறைச்சியாகிவிடும் என்று கிளாமாக்ஸில் நாயகன் உணரும் தருணம் பார்வையாளர்களை மகிழ செய்வதற்கு மாறாக, ஏமாற்றியதுபோன்ற உணர்வை தருகிறது.

அசல் கிராமத்தானாக ரத்தினம் கதாபாத்திரத்துக்கு பொருந்திவிடுகிறார் விக்ராந்த். விவசாயம் செய்ய பணத்துக்காக் அலைவது, எளிய குடும்பத் தலைவனாக, ஒட்டகத்தின் மீது அளவில்லா அன்பு காட்டுபவனாக அழகாக நடித்திருக்கிறார். அசல் கிராமத்து குடும்பத்து தலைவியாக ஸ்கோர் செய்திருக்கிறார் வசுந்தரா. அவருடைய கிராமத்து ஒப்பனை கண் முன்னே அசல் கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்துகிறது. குழந்தையாக ஷ்ருத்திகா மழலை மொழியில் பேசி ரசிக்க வைக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், விக்ராந்தின் நண்பனாக வரும் சுந்தரம், இரும்புக்கடை பாய், லாரி டிரைவர்கள் ஆகியோரும் கதையோட்டத்தோடப் பயணித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை இமான். ‘ஆலங்குருவிகளா’, ‘கரடு முரட்டு பூவே’ ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குநர் ஜெகதீசன் சுபுவே கவனித்திருக்கிறார். திருவள்ளூரின் கிராமத்தையும், மகாராஷ்டிராம், ராஜஸ்தானையும் அழகாக கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு விலங்கு மீது மனிதன் வைக்கும் விலங்குநேயத்தை உணர்வுபூர்வமாக அணுகியதில் குறையில்லை. அலுப்பூட்டும் பயண திரைக்கதையில் இயக்குநர் கவனம் செலுத்தியிருந்தால் ‘பக்ரீத்’த்தை எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள்.

மதிப்பெண் 2.5 / 5  

சவ்ரிமுத்து உருவாக்கிய சானடோரியம்

சென்னையில் தாம்பரம் சானடோரியத்தை ஒரு ரயில் நிலையமாகத்தான் பலரும் அடையாளப்படுத்துவார்கள். பல தசாப்தங்களுக்கு முன்னர் தாம்பரம் - குரோம்பேட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்ட மருத்துவமனையின் அடையாளம்தான் சானடோரியம். 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாம்பரம் சானடோரியம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னைக்கு எப்படி வந்தது? அதற்கு விதைப் போட்டது யார்?

 நூறாண்டுகளுக்கு முன்பு ‘டியூபர்குளோசிஸ்’ (டி.பி.) என்றழைக்கப்படும் காசநோய் மிகக் கடுமையான உயிர்க்கொல்லி நோயாகப் பார்க்கப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி எனும் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் கண்டுபிடிக்கும்வரை காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலாகவே இருந்தது. அதுபோன்ற சூழ்நிலையில் காசநோயால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவமனைகள் தேவைப்பட்டன.

பிரிட்டிஷ் நெஞ்சக மருத்துவரான ஜார்ஜ் பேடிங்டன் என்பவர் காசநோயாளிக்காக 1836-ல் பர்மிங்ஹாம் அருகே சானடோரியம் ஒன்றை நிறுவி சிகிச்சை அளித்தார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவ ரிசார்ட்டாகவே இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நோயாளிகளை நீண்டகாலம் தங்க வைத்து சிறப்பு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பிறகு ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளிலும் காசநோய் சிகிச்சைக்காக சானடோரியங்கள் உருவாயின.

ஐரோப்பாவில் உருவான சானடோரியங்களின் நீட்சியாகவே சென்னை தாம்பரத்திலும் சானடோரியம் வந்தது. தாம்பரத்தில் சானடோரியம் அமைந்ததற்கு முழு காரணமாக இருந்தவர் டாக்டர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவ்ரி முத்து என்ற மருத்துவரே. 1864-ல் பிறந்த சவ்ரி முத்துவைப் பற்றி ஆரம்பகால தகவல்கள் எதுவும் இல்லை. இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவர் இவர். பிரிட்டனில் இருந்தபோது நிறவெறியின் தாக்கத்தை எதிர்கொண்டவர். என்றபோதும் 1891-ல் மார்க்ரெட் ஃபோக்ஸ் என்ற பிரிட்டிஷ் பெண்ணை திருமணம்
மனைவியுடன் சவ்ரி முத்து
செய்துகொண்டார்.

காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக இருந்தார் சவ்ரி முத்து. சுற்றுப்புறத் தூய்மை, தூயக் காற்று சுவாசிப்பு போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்து வந்த சவ்ரிமுத்து, 1900-ல் இங்கில்வுட் சானடோரியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு 1910-ல் சோமர்செட் பகுதியில் உள்ள மெண்டிப் மலைப்பகுதியில் சானடோரியம் ஒன்றை விரிவாக்கி காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கிவந்தார் சவ்ரிமுத்து.

சவ்ரி முத்துவுக்கு மகாத்மா காந்தியுடன் அறிமுகம் இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரத் தொடங்கிய சவ்ரி முத்து, 1920-ம் ஆண்டுக்கு பிறகு அதிக காலம் இந்தியாவில் தங்கினார். அப்போது சென்னைக்கு வந்தவர், இந்தப் பகுதியில் காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சானடோரியம் ஒன்றை நிறுவ விரும்பினார். அதற்காக தாம்பரத்தில் பச்சைமலை அடிவாரத்தைத் தேர்வு செய்தார். 1928-ம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பில் அந்தப் பகுதியில் சானடோரியத்தை சவ்ரி முத்து அமைத்தார். 12 படுக்கைகளுடன் ரிசாட் குடில்கள் போல சானடோரியத்தை அமைத்து சிகிச்சையைத் தொடங்கினார்.

அதே காலகட்டத்தில் சவ்ரிமுத்துவின் மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே, 1930-ல் பிரிட்டனுக்குத் திரும்பினார். அப்போது சானடோரியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டுதான் சென்றார். அதை ஏற்று 1935-ல் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த மெட்ராஸ் மாகாண அரசு, தாம்பரம் சானடோரியத்தை ஏற்று நடத்தியது. இதன்பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திகொடுத்தது. அங்கே தங்கியிருந்த
சானடோரியம் ஆரம்ப கால தோற்றம்
நோயாளிகளுக்கு தொழிற் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976-ம் ஆண்டில் 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தை தமிழக அரசு விரிவுப்படுத்தியது. 1993-ல் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இரண்டு பேர் சிகிச்சை பெற்றனர். எய்ட்ஸ் நோயாளிகளுக்கென தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது அப்போதுதான்.

தற்போது ‘தாம்பரம் டிபி சானடோரியம்’ அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிக்களுக்கென பிரத்யேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய் மையமாகவும் தாம்பரம் சானடோரியம் செயல்பட்டுவருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென தனி சிகிச்சை பிரிவுகளும் இங்கே இயங்கிவருகின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம், இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்திருக்கிறது.

- இந்து தமிழ், 24-08-2019

24/08/2019

வாவ் போட வைக்கும் வட தமிழகம்!


செஞ்சிக்கோட்டை வாலிபன்!

செஞ்கிக்கோட்டை என்றது நம் நினைவுக்கு வருவது ராஜா தேசிங்கு. இத்தனைக்கும் ராஜா தேசிங்கு 18 வயது வரையே வாழ்ந்தார். முகலாய பேரரசின் படைத்தளபதியாக இருந்த ராஜபுத்திர வீரன் சொரூப்சிங் அந்தப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் துணைபுரிந்தார். இதனால் கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாயர்களின் வசம் இருந்த செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்ய அவர் தேர்வு செய்யப்பட்டார். சொரூப்சிங்கிற்கும் ராமாபாய்க்கும் மகனாகப் பிறந்தவரே ராஜா தேசிங்கு.
போர்க் கருவிகளைக் கொண்டு விளையாடுவதும், புலிகளுடன் சண்டையிடுவதுமே சிறுவயதில் தேசிங்கின் பொழுதுபோக்கு. டெல்லி அரசரிடம் இருந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கச் சென்ற ராஜா தேசிங்கின் தந்தை, அதை அடக்க முடியாமல் தோல்வியுற்றதால் சிறைப்படுத்தப்பட்டார். இதை  அறிந்த 15 வயது சிறுவனான தேசிங்கு, டெல்லி சென்று நீலவேணி என்ற குதிரையை அடக்கி தந்தையை சிறையிலிருந்து மீட்டது அவரது வீரத்துக்கு எடுத்துக்காட்டு.
யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கியதால் டெல்லி அரசர் நீலவேணி குதிரையை தேசிங்கிற்கு பரிசளித்ததோடு, தனது படைத்தலைவன் பீம்சிங்கின் மகளையும் திருமணம் செய்து வைத்தார். மகனால் சிறையிலிருந்து மீட்கப்பட்ட சொரூப்சிங் மீண்டும் செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆட்சியைத் தொடர்ந்தார்.
 சொரூப்சிங் இறந்ததும் டெல்லி அரசருக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்ட ராஜா தேசிங்கு மறுத்ததால் அவர் ராஜாவாக முடிசூட்டிக் கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தான். ஆனால்,  தேசிங்கு தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல், தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.
 இதனால், ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் போர் தர்மத்தை மீறி தொடுத்த ஒரு போரில் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார். அப்போது ராஜா தேசிங்கிற்கு வயது 18தான்.  கணவனின் பிரிவைத் தாங்கமுடியாமல் தேசிங்கின் மனைவியும் உயிர் துறந்தாள். தேசிங்குராஜன் மற்றும் அவரது படைத்தளபதி மகம்மதுகானின் சமாதி செஞ்சிக்கு அருகில் உள்ள நீலாம் பூண்டி கிராமத்தில் இன்றும் உள்ளது. இங்கு தேசிங்கின் நீலவேணி குதிரைக்கும் சமாதி உள்ளது.

கல்மர தரிசனம்!

பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தைப் பார்க்க வாய்ப்பு
கிடைக்குமா?  நிச்சயம் கிடைக்கும். அதற்கு பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் செல்ல வேண்டும். ஆனால், அந்தப் பழங்கால மரத்தை மர வடிவில் பார்க்க முடியாது. கல் மரமாகத்தான் பார்க்க முடியும்.  இந்த  கல் மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சாத்தனூரில் உள்ள கல்மரம் 18 மீட்டர் நீளமுள்ளது.  பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாத்து வருகிறது.  கல்மரம் உள்ள இடத்தில் தமிழக அரசு சார்பில்  அருங்காட்சியகமும் உள்ளது. இங்கு கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர், பெரம்பலூர் பகுதி முழுவதும் கடலாக இருந்தாம். இந்தப் பகுதி கடலாக இருந்த போது மிகப்பெரிய விண் கல் ஒன்று விழுந்து, கடல் நீர் வற்றி, உயிரினங்கள் அழிந்து, கடல் உள்வாங்கியதாக  கூறுகின்றனர் புவியியலாளர்கள். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின் முட்டை படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதி முழுவதும் சிறிது சிறிதாக மணல் குன்றுகள் போல் உள்ள சுண்ணாம்பு கல் படிமங்களைக் காண வித்தியாசமாக இருக்கும்.
 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூர் வழியாக சாத்தனூர் சென்றால் கல்மரத்தைத் தரிசிக்கலாம்.

திக் திக் பரிசல் பயணம்

தர்மபுரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தளம் என்றால் அது ஒகேனக்கல்தான். கர்நாடகாவில் இருந்து கரைபுரண்டு ஓடிவரும் காவிரி ஆறு,  புகையை விண்ணில் பாய்ச்சியப்படி நீர்வீழ்ச்சியாகக் கொட்டுவது இங்குதான். வார இறுதி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, வட மா நிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் பார்க்க முடியும்.
தர்மபுரியிலிருந்து பென்னாகரம் வரை நிலப்பகுதியிலும், பின்னர் மலைப்பள்ளத்தாக்கிலும் சாலை வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வழிகள் உள்ளன. நீர்விழ்ச்சியில், தொடர்ச்சியாக ஓடும் காவிரி ஆற்றின் மறுபுறத்திலுள்ள கண்கவர் எழில் காட்சிகளைப் பார்த்து ரசிக்க தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியைச் சுற்றி ஆயில் மசாஜ் செய்யும் தொழிலாளர்களை அதிகம் பார்க்க முடியும். மசாஜ் செய்து விட்டு கொட்டும் அருவியில் குளிப்பது மிகவும் அலாதியான ஆனந்தம் தரும். ஒகேனக்கல் என்றாலே பரிசல் பயணம் தனி அடையாளமாகி விட்டது. அருவிகளின் பிரம்மாண்டமான பாறைகளுக்கு இடையே பரிசல் பயணம் மேற்கொள்வது மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.  ஐந்து முதல் ஆறு நபர்கள் ஒரு பரிசலில் பயணிக்கலாம். வேகமாக ஓடும் நீரின் எதிர்திசையில் பரிசலை ஓட்டுவது திகில் கலந்த ஒன்றாகும்.

ஆழிப்பேரலையின் எதிரி

உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் பிரேசில்
நாட்டில்தான் உள்ளன். அதற்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பிச்சாவரம் காடுகள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பெருமைச் சேர்க்கும் இந்த அலையாத்திக் காடுகள் இயற்கை அளித்த பெரும் கொடை.
 கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர் வரை  மோட்டார் படகில் சென்று அலையாத்திக் காடுகளை கண்டு ரசிக்கலாம். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் வனச்சுற்றுலா மையமாக விளங்குகிறது. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இகாட்டில் 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளன.
இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருவது இதன் தனிச்சிறப்பு. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக் கொண்டு அலையாத்திக் காடுகள் வளர்கின்றன.
இயற்கை அள்ளி வழங்கிய அலையாத்திக்காடுகளை அலட்சியமாக நினைத்தவர்கள் கூட, இன்று இவற்றைப் போற்றுகின்றன. 2004ஆம் ஆண்டில் தமிழக கடற்கரை மாவட்டங்களை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலையையே அலையாத்திக்காடுகள் தடுத்தன என்றால் இதன் வீரியம் அவ்வளவு சக்தி வாய்ந்தது.

- தி இந்து, தீபாவளி மலர், 2013

16/08/2019

கோமாளி விமர்சனம்


தொண்ணூறுகளின் இறுதியில் கதைத் தொடங்குகிறது. 12-ம் வகுப்பு படிக்கும் ஜெயம் ரவி, உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். சம்யுக்தாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்றுவிடுகிறார். 16 ஆண்டுகள் கழித்து கோமாவிலிருந்து ரவி மீளும்போது உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது. அந்த மாற்றத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளவே தடுமாறும் ரவிக்கு சோதனையாக பணத் தேவையும் வந்துசேருகிறது. இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு ரவி வென்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


தமிழ்ப் படங்களில் ‘கோமா’ காட்சிகள் படத்தில் சிறுபகுதியாகவே வந்திருக்கின்றன. கோமாவிலிருந்து மீண்டு நவீன வளர்ச்சிக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள தடுமாறும் இளைஞன் பற்றிய மாறுபட்ட கதையை யோசித்ததற்கே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு நாயகன் மிரள்வதையும், அதை நகைச்சுவையாகப் படமாக்கிய விதத்திலும் குறையில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்கள் கோமாவுக்கு சென்றுவிட்டதையும், மனிதமும் எமோஷனலும் மட்டுமே மனிதனுக்குள் மாறவில்லை என்ற சமூக கருத்துகளையும் படத்தில் பேசியிருப்பது படத்துக்கு பலம். 

தலைமுறை மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் 90-களின் மனநிலையோடு நாயகன் பரிதவிக்கும் காட்சிகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிடுகின்றன. மாறிபோன ஒவ்வொரு விஷயத்தையும் ‘என்னடா இப்படி பண்ணி வைச்சுருக்கீங்க’ என்று ரவி சொல்லும் இடங்கள், பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் முகத்தைக்கூட பார்த்து பேச மறுக்கிறோம் என்று பேசும் இடங்களும் ரசிக்க வைக்கின்றன. சண்டை காட்சிகளற்ற எமஷனலோடு கிளைமாக்ஸை நிறைவு செய்ததும் ஈர்க்கின்றன.  

படத்தின் பிரதானமே தலைமுறை மாற்றத்தாலும் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சியாலும் நாயகன் பரிதவிப்பதுதான். ஆனால், அதிலிருந்து விலகி, திரைக்கதை இரண்டாம் பாகத்தில் வேறொரு தளத்தில் பயணிக்கிறது. இதனால் ‘கோமாளி’யாகப் பார்க்கப்படும் நாயகன் அதிலிருந்து எப்படி மீளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  இரண்டாம் பாகத்தில் வீணாகிவிடுகிறது. முதல் பாகத்தில் காட்டப்பட்ட அத்தனை காட்சிகளுக்குமான நியாயங்கள் திரைக்கதையின் மாற்றத்தால் அடிப்பட்டுபோய்விடுகின்றன. கே.எஸ். ரவிக்குமார் வீட்டில் சிலையைத் திருட ஜெயம் ரவி செல்வதிலும் புதுமையில்லை. பள்ளிக்காலத்து காதலியை ரவியும் யோகிபாபுவும் சந்திப்பதும் அங்கே பேசும் வசனங்களும் மலிவான கற்பனை.  
படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பள்ளி  மாணவனுக்குரிய கதாபாத்திரத்திக்கும் சமகால பாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து மிரட்சியாக இருப்பதில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். கிழிந்த பேண்டுடன் வரும் கஜோலை கலாய்ப்பது, பள்ளி மாணவியை ரொமாண்டிக் செய்ய முற்படுவது, ஃபேஸ்புக் இத்யாதி, அமேசான் டெலிவரிக்காகக் காத்திருப்பது என தலைமுறை மாற்றத்தால் தவிக்கும் உணர்வை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார். கஜோல் அகர்வாலுக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை. கஜோலைவிட சம்யுக்தாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

படம் முழுவதும் வரும் யோகிபாபு ஒருவரியில் பேசும் நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. ரவியோடு சேர்ந்து யோகிபாபு அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன.  அடாவடி அரசியல்வாதியாக வரும் கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் குறையில்லை. மருத்துவராக வரும் தியாகேஷ், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் வழக்கம் அவர்களுடையய பாணியில்  நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் பிரதீப் ராகவ்வின் படத்தொகுப்புக்கும் படத்துக்கு பலம்.

நல்ல சவால்களோடு பொழுதுபோக்குள்ள படமாக்க எல்லா அம்சங்களும் இருந்தும், வலுவில்லாத இரண்டாம் பாக திரைக்கதையால் ‘கோமாளி’ கலகலத்துவிடுகிறான்.

மதிப்பெண்  2.5 / 5

11/08/2019

யாருக்குத் தேவை நேர்கொண்ட பார்வை?


ந்தியர்களின் மனசாட்சியை ‘நிர்பயா’ பாலியல் கொடூரம் விதிவிலக்காக தட்டியெழுப்பியது. ஆனால், அதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடக்கும்போதெல்லாம் பொதுவெளியில் பெண்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கு எட்டிப் பார்ப்பது வாடிக்கை. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியைப் பற்றிப் பேசியிருக்கிறது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்.

குடும்பத்தைச் சார்ந்திராமல் சுயமாகவும் சுதந்திரமாகவும் தனியாக வீடெடுத்து, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்கள் இன்று அதிகம். இப்படித் தனித்து வாழும் பெண்கள் நாகரிகமாக உடை அணிவதையும் ஆண்களோடு இயல்பாகப் பழகுவதையும் இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்புவதையும் வைத்து அவர்கள் எல்லோரும் அனைத்துக்கும் இணங்குவார்கள் என்ற முன்முடிவோடு இந்தச் சமூகம் அணுகும் விதம் இந்தப் படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கதையோட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், படத்தில் பெண்களைப் பழிவாங்கத் துடிக்கும் ஆண்கள், அவர்களைப் பாலியல் தொழிலாளர்களாக முத்திரை குத்த முயல்கிறார்கள். ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றால், அவளுடைய நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி அதன்மூலம் அவளை நிர்மூலமாக்க முடியும் என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்படியான செயல்கள்.

பெண்ணின் விருப்பம் என்ன?

வார இறுதி என்பது கார்ப்பரேட் உலகில் குதூகலமான கொண்டாட்டமாகிவிட்டது. ரிசார்ட்டுகளில் பாலின பேதமின்றி ஆடிப் பாடி பொழுதைக் கழிப்பதும் அவற்றில் ஒன்று. அப்படி ரிசார்ட்டுக்கு வரும் பெண்கள், ஆண்களோடு ஒரே அறையில் தங்க நேர்ந்தால் ‘அவர்கள் தவறு செய்திருப்பார்கள்’ என்றே இந்தச் சமூகம் நம்புகிறது. பாலியல்ரீதியாகப் பெண்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்’ என்று அரதப்பழசாகிப் போன வசனத்தையே இந்த நூற்றாண்டிலும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

காலங்காலமாகப் பேசப்படும் இந்த வக்கிரமான சொற்றொடருக்கு இந்தப் படத்தில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஊசிக்குள் நூலை நுழைக்க முயற்சி பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த நூல் சரியானதா என்று நாம பார்ப்பதே இல்லை’ என்று ஆணைக் கேள்வி கேட்கிறது. ஆண்கள் குடிக்கலாம்; ஜாலியாக இருக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், பெண்கள் குடித்தால், அவளுடைய குணநலன்களை சேர்த்துக் கொலைசெய்வதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
பொதுவான ஒரு செயல்பாட்டை வைத்துப் பெண்களின் நடத்தையை மதிப்பிடும் போக்கு எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பதையும் இந்தப் படம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணை ‘அப்பாவி’ அபலைப் பெண்ணாகச் சித்தரிக்காததே படத்தின் சிறப்புகளில் ஒன்று. பெருநகரில் வசிக்கும் இளம் பெண், அங்கு கிடைக்கும் கட்டட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்ணாகவும் ஆண்களோடு டேட்டிங் செல்லும் பெண்ணாகவுமே காட்டப்பட்டிருக்கிறார். ஆனால், பாலியல் உறவு என்று வரும்போது, அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம்; அதை ஒருதலைபட்சமாக யாரும் தாங்களாகவே எடுத்துக்கொள்ளவோ, ரிசார்ட்டுக்குத் தனியாக அவள் வருகிறாள் என்பதால் எல்லாவற்றுக்கும் அவள் தயாராக வந்திருப்பாள் என்று முடிவெடுத்துக்கொள்ளவோ முடியாது.

அதைச் சொல்லும்விதமாகத்தான் கிளைமாக்ஸ் காட்சியில், “ஒரு பெண் ‘நோ’ என்று சொன்னால் ‘நோ’தான். அது ஒரு சொல் அல்ல, ஒரு வரி. அதற்கு மேற்கொண்டு விளக்கம் சொல்ல முடியாது. தோழி, காதலி, பாலியல் தொழிலாளி, மனைவி என யாராக இருந்தாலும் ‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து ஓர் ஆண் பேசுவது முக்கியமான தருணம்.

ஆணுக்கு விடுக்கும் அழைப்பா?

வேலைக்குச் சென்று இரவு 11 மணிக்குத் திரும்பும் பெண்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் சாலையில் செல்வோரும் எப்படிப் பார்க்கிறார்கள்? இரவு 11 மணிக்குச் சாலையில் ஒரு பெண்ணைப் பார்த்தால், வேகமாகச் செல்லும் வாகனம் ஏன் மெதுவாகிறது? ஏன் கார் கண்ணாடி கீழே இறங்குகிறது? பகலில் இது நடப்பதில்லையே என்று இந்தப் படத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சமூகத்திடம் நிச்சயம் பதில் இருக்காது. ஆடைக் கட்டுப்பாடு பற்றிப் பெண்களுக்கு இன்று அதிகமாகவே கற்பிக்கப்படுகிறது. ஆண்கள் சலனப்படும் வகையில் உடை உடுத்தக் கூடாது என்று பெண்களுக்கே இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்ற சரியான கேள்வியையும் எழுப்புகிறது இப்படம்..

ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நிலைதான் தற்போது உள்ளது என்று ஒரு ஆண் மூலமே ஆண்களுக்கு அறிவுறுத்து்கிறது படம். நவீன ஆடைகளை அணிபவளின் நடத்தை சரியாக இருக்காது, தாமதமாக வீட்டுக்கு வருபவள் நல்லவள் அல்ல, சிரித்துப் பேசினால் எதற்கும் சம்மதிப்பாள், இரவில் தனியாக ஒரு ஆணை நம்பி வந்தாலோ அவனுடன் மது அருந்தினாலோ அவள் தவறானவள், அதற்கும் மேலே இவையெல்லாம் பாலியல்ரீதியாக அணுக ஓர் ஆணுக்குப் பெண்கள் தரும் சமிக்ஞை என்று நினைக்கும் ஆண்களின் பொதுப்புத்தி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது.

யாரையும் சாராமல் தற்சார்புடன் வாழும் பெண்களைப் பார்க்கும்போது அவர்களை முன்முடிவுகளோடு அணுகும் சமூகத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ சொல்லும் பதில் இதுதான்: 

உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.


- இந்து தமிழ், 11-08-2019 

05/08/2019

தொரட்டி விமர்சனம்

விவசாய நிலங்களில் ஆடு கிடை போடும் தொழில் (கீதாரிகள்) செய்துவருகிறார் அழகு. ராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க தேவக்கோட்டைக்குக் குடும்பத்தோடு வருகிறார். ஒரு தலையாரியின் நிலத்தில் ஆடு கிடை போட்ட பிறகு, அவர் பணம் தர மறுக்கிறார். அந்த ஆத்திரத்தில் அவருடைய நிலத்தை மலடாக்க ஒரு சடங்கு செய்கிறார் அழகு. இது தெரிந்ததும் அந்த  தலையாரி அழகையும் அவருடைய மகன் மாயனையும் (மித்ரு) அடித்து மாட்டு கொட்டகையில் கட்டிவைக்கிறார். அந்த வீட்டுக்கு திருட வரும் 3 திருடர்கள், இருவரையும் தப்பிக்க வைக்கிறார்கள். இதனால், அந்தத் திருடர்களோடு மித்ருவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. 

கெட்ட சகவாசத்தால்  குடிக்கு ஆளாகி, தன் திருட்டு நண்பர்களுக்காக வீட்டில் உள்ள ஆடுகளை வெட்டி அடிக்கடி கறி விருந்து வைக்கிறார். இதற்கிடையே ஒரு பெரிய திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் 3 திருடர்களையும் செம்பொண்ணு (சத்யகலா) காட்டிகொடுக்கிறார். இதனால், மூவரும் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. சிறைக்கு செல்ல காரணமான சத்யகலாவைக் கொல்ல மூவரும் சிறையில் முடிவு செய்கிறார்கள். சிறையிலிருந்து அவர்கள் வரும்போது சத்யகலா தன் நண்பன் மித்ருவின் மனைவியாக இருக்கிறார். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தொரட்டி’யின் கதை.
  
1980-களில் நடக்கும் ஒரு கதையைக் கிராமிய அழகியலோடும், விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்விலோடும் வலுவான காட்சி அமைப்புகளோடு தந்திருக்கும் இயக்குநர் மாரிமுத்துவுக்கு பூங்கொத்து. இந்தத் தலைமுறையினர் கொஞ்சமும் அறிந்திராத கீதாரிகளின் வாழ்க்கையைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். எளிமையான கதையும் அழுத்தமான திரைக்கதையும் இயல்பான கிராமிய உணர்வை பிரதிபலித்த புதுமுகங்களின்  நடிப்பும் நம்மை பாரதிராஜா காலத்துக்கே கூட்டிச் செல்கிறது. தவறான சேர்க்கை ஒரு மனிதனை என்னவாக்குகிறது என்பதையும் பாடமாகச் சொல்கிறது படம். தென் மாவட்டத்தின் வட்டார வழக்கையும் அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியிருப்பது படத்துக்கு பலம்.

முதல் பாகத்தில் ஒரு கீதாரி குடும்பத்தின் சூழல், உழைப்பு,  நட்பு, காதல் என அனைத்தும் கலகலப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் திருமணம், துரோகம், வஞ்சகம் எனக் காட்சிகள் இறுக்கமாகிவிடுகின்றன. இரண்டுக்கும் இடையே சலிப்பு வராமல் மண் சார்ந்த காட்சிகள் பார்த்துக்கொள்கின்றன. என்றாலும், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இல்லாததால், சற்று அயர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்பதை படத்தின் பாதியிலேயே ஊகிக்க முடிவதால் வஞ்சகமா, நட்பா என்ற பெரும் கேள்வி இல்லாமலேயே படம் முடிவது மைனஸ். யதார்த்தமாக இருந்திருக்க வேண்டிய கிளைமாக்ஸும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளால் தள்ளாடிவிடுகிறது.

படத்தின் நாயகன் ஷமன் மித்ருதான் படத்தின் தயாரிப்பாளரும். மாயன் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பாசக்கார பிள்ளையாக, களவாணிகளின் நண்பனாக, மனைவியைச் சுற்றிவரும் இனிய காதலனாக, ஆக்ரோஷம் காட்டும் கணவனாக கவர்கிறார். உடல்மொழியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் மிளிரலாம். படத்தின் பலமே கதாநாயகி சத்யகலாதான். தமிழில் இப்படி ஒரு நடிகையா என வியக்க வைத்திருக்கிறார். அசல் கிராமத்து பெண்ணாக அவருடைய துடுக்குத்தனம் ரசிக்க வைக்கிறது. காதல், ஊடல், கூடல், மோதல் என ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் சத்யகலா.  நீண்ட காலமாக சினிமாவில் இருக்கும் அழகுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல். பாசம் காட்டும் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். 3 திருடர்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக வாய்ப் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முக்கிய வில்லன், உடல் மொழியாலேயே மிரட்டியிருக்கிறார்.
  
வேத் ஷங்கரின் இசையில் ‘சவுக்காரம்’, ‘குள்ள நரிக்கூட்டம்’ ஆகிய பாடல்கள் வருடுகின்றன. தேவக்கோட்டையின் பொட்டல் கிராமத்தையும் உயிர்ப்போடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் குமார். 

கூடா நட்பு என்ன செய்யும் என்பதை மண் மணக்கும் கிராமிய களத்தோடும் எளிய மனிதர்களின் வாழ்வியோடு பேசும் ‘தொரட்டி’  நேர்த்தி.

மதிப்பெண்- 3 / 5