27/07/2019

‘அவதாரம்’ மூலம் அரிதாரம்!

 வில்லன், அரசியல்வாதி, குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் அற்புதமான கலைஞர் நடிகர் பாலா சிங். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்திலும் தன்னுடைய முத்திரை நடிப்பை வழங்கியிருந்தார். கெட்டப் மாற்றாமல், நடிப்பில் கெட்டிக்காரத்தனத்தைப் பின்பற்றிவரும் நடிகர் இவர்.

பாலா சிங்கின் சொந்தஊர் நாகர்கோவிலில் உள்ள அம்சிக்காகுழி என்ற குக்கிராமம். படிக்கிற காலத்திலிருந்தே நாடகங்கள் மீது பாலா சிங்குக்கு ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், சர்ச்சுகளில் நாடகங்கள் போடுவது என பாலா இருந்திருக்கிறார். கல்லூரி நாட்களிலும் நாடகங்கள் என்றால் அவருடைய உயிர். பிறகு ‘செயின்ட் சேவியர் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவில் பாலா சிங் இயங்கினார். அந்தக் குழுவின் மூலம் அவர் மேடை ஏறாத நாடகங்களே இல்லை. அப்படியே வெளியூர்களிலும் நாடகங்களுக்காகப் பயணமானார்.

அப்படித்தான் தலைநகர் சென்னைக்குள் 1980-களின் தொடக்கத்தில் வந்தார் பாலா. சென்னைக்கு வந்தவுடன் பரிக்‌ஷா நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் பங்கேற்றார். ஞானி, டாக்டர் ருத்ரன் என பலருடைய நாடகக் குழுக்களிலும் விழிப்புணர்வு நாடகங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவிலும் வாய்ப்புத் தேடினார்.

அந்தக் கால ஆதர்சன இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் தொடங்கி சினிமா வாய்ப்புத் தேடி ஏறி இறங்காத இயக்குநர்களின் வீடுகளே கிடையாது. ஆனால், ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மனம் தளரவில்லை. சென்னையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் ஆள் இல்லை; கைத்துக்கிவிடவும் ஆள் இல்லை என்ற நிலையில், சினிமாவுக்கு அலைந்து திரிந்து பாலாவின் உடலும் தளர்ந்துபோயிருந்தது.

 “சினிமாவுக்கு அழகு பார்த்த காலம் அது. பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தால்தான் வாய்ப்பே கிடைக்கும். அலைந்து, திரிந்து ஓடாகிபோனதில் இருந்த உடற் தோற்றமும் சீர்குலைந்து போயிருந்தது. பசிக்கும் கஷ்டத்துக்கும் நடுவே சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் இருந்தது.

நீண்ட தேடுதலுக்கு பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் முதன் முதலாக சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு ‘ஏழாவது மனிதன்’ படத்தில் ஒரு கம்யூனிவசாவதியாக நடித்தேன். தொடக்கக் காலத்தில் விழிப்புணர்வு குழுக்களில் நடித்துக்கொண்டிருந்ததால், கமர்சியலுக்கு தேரமாட்டேன் என்று என்னை முத்திரை குத்திவிட்டார்கள். அதன்பிறகும் தேடல்கள் தொடர்ந்தன.” என்று சினிமாவில் நுழைய எடுத்த முயற்சிகளை ஒரு கதையைப் போல சொல்கிறார் பாலா சிங்.

இதன்பிறகு யூகிசேதுவிடம் உதவி இயக்குநராகப் பணி, சினிமா புரொடக்‌ஷன் மேனஜர் என சினிமாவே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக்கொண்டுவிட்டார். “சினிமாவுக்குள் ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாதான், சாதிக்க முடியும் என்று அதிலேயே புழங்கிக்கொண்டிருந்தேன். இதனால், நட்பு வட்டம் பெருகியது. அப்போதுதான் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், தமிழில் தேடுதல்கள் நிற்கவில்லை. ஒரு வழியாக 1993-ல்  நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் பாலா சிங்குக்கு பெயரை மட்டும் பெற்று தரவில்லை. நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தையும்  பெற்றுக்கொடுத்தது. தனி கவனமும் கிடைத்தது” என்கிறார் பாலா சிங்.

 நடிகர் நாசர் எப்படி உங்களை எப்படி இந்தப் படத்துக்குள் கொண்டுவந்தார்? “டாக்டர் ருத்ரன் இயக்கத்தில் ‘அவுரங்கசீப்’ என்ற நாடகத்தில் நானும் நாசரும் நடிச்சோம். நாசர் அவுரங்கசீப்பாக நடித்தார். அவுரங்கசீப் தம்பி வேடத்தில் நான் நடிச்சேன். அப்போது முதல் நாசருடன் பழக்கம். நான் படம் எடுக்கும்போது வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லியிருந்தார். அதன்படியே வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் ‘அவதாரம்’ படத்துக்குள் வந்தேன். ’அவதாரம்’ படத்தைத் தொடர்ந்துதான் ‘ராசி’, ‘இந்தியன்’, ‘பொற்காலம்’, 'ஆனந்த பூங்காற்றே’ என நல்ல படங்கள் அமைந்தன.” என்கிறார் பாலா சிங்.

குணச்சித்திரம், வில்லன் என ஒரே நேரத்தில் இரட்டைச் சவாரி செய்துவருகிறார் பாலாசிங். ஆனால், வில்லனாக நடிக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார் பாலா. முழு வில்லனாக நடிப்பதைவிட வில்லனுக்கு சப்போர்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெயரெடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால், ஏராளமான படங்களில் சப்போர்டிவ் வில்லனாக நடித்து பெயரெடுத்தவர் பாலாசிங். அந்த வரிசையில் ‘புதுப்பேட்டை’, ‘சாமி’ உள்பட பல்வேறு படங்கள் அவருக்கு பெயர் பெற்றுக்கொடுத்தன. ஆனாலும், தமிழ் சினிமாவில் கமர்சியல் ரீதியாக வெற்றி பெறுபவர்களுக்கே மரியாதை கிடைக்கிறது என்று வருத்தப்படுகிறார் பாலா சிங்.

“தமிழ் சினிமாவில் என்னத்தான் பெர்ஃபார்மென்ஸ் செய்தாலும் மரியாதை கிடைத்துவிடாது. 100 நாள் படத்தில் யார் நடித்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பெயர் கிடைக்குது. ஓடாத படத்தில் மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் மறந்துவிடுவார்கள். நல்ல படம் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டுக்குக்கூட போகாது. ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற ஒரு படத்தில் நடித்தேன். தாத்தாவுக்கும் பேத்திக்குமான ஆழமான உறவைச் சொல்லும் ஓர் உணர்வுப்பூர்வமான படம். ஆனால், அந்தப் படம் சென்னையில் ரிலீஸானபோது தியேட்டருக்கு என்னை அழைத்தார்கள். அந்தப் படத்தை பார்க்க ஒரு ஆள்கூட வரல. இதுதான் தமிழ் சினிமாவின் யதார்த்தம்.” என்கிறார் பாலாசிங்.

 அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றால், அதில் பாலாவுக்கு எப்போதுமே ஓரிடம் இருக்கும். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்திலும்  அரசியல்வாதியாக பாலா சிங் அக்மார்க் நடிப்பை வழங்கியிருந்தார். நெகட்டிவ் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திவிடுவார். அரசியல்வாதி வேடம் தொடர்ந்து கிடைக்க என்ன காரணம்?

“அந்தக் கதாபாத்திர வாய்ப்பு கிடைக்க என்ன காரணம்ணு எனக்குத் தெரியல. அந்தக் கதாபாத்திரத்துல இயல்பா பொருந்துவது காரணமா இருக்கலாம்.  காலையிலிருந்து இரவுவரை அரசியல்வாதிகள் செய்யும் சேட்டைகளை டி.வி.யில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவையெல்லாம் மனத்தில் ஏறிகொண்டே இருக்குது. அதை உள்வாங்கி அப்படியே சினிமாவில் நடிப்பதும் காரணமா இருக்கலாம்” என்கிறார் பாலாசிங்.

சினிமாவுக்கு தன்னுடன் சேர்ந்து வாய்ப்பு தேடிய பலரும்  வாழ்க்கையை இழந்து, பிழைப்பை இழந்து அப்படியே போய்விட்டதாகக் கூறும் பாலா சிங், “சோறு இல்லாமல், கையில் காசு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் சினிமாவுல வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். அதை இப்போ வரைக்கும் தக்கவைச்சிருப்பது அதைவிட பெரிய விஷயம். இப்போதுவரை  சினிமாவில் இயங்கிக்கொண்டிருப்பது மனதுக்கு மன நிறைவைக் கொடுக்குது.” என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாலா சிங்.

கேள்வி - பதில்

செல்வராகவன்?

நாசருக்கு பிறகு என்னை செதுக்கிய இயக்குநர்.

ஆசை?

வாய்ப்பு கிடைக்கிற வரை நடிக்க வேண்டும்.

விருது?

கருணாநிதி கையால் வாங்கிய கலைமாமணி.

மறக்க முடியாத பாராட்டு?

‘தென்பாண்டி சிங்கம்’ பார்த்துவிட்டு கருணாநிதி அழைத்து பாராட்டியது.

அடுத்த படங்கள்?

சாந்தகுமார் இயக்கும் ‘மகாமுனி’, சமுத்திரகனியின் ‘சங்கத்தலைவன்’.

- இந்து தமிழ், 14/06/2019

23/07/2019

அதென்ன யுனெஸ்கோ பாரம்பரிய இடம்?

‘பிங்க் சிட்டி’, ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று பல்வேறு சிறப்பு பெயர்களில் அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரம் உலகப் பாரம்பரிய இடமாக ஜூலை 6 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை, அரண்மனை, தனித்துவமான கட்டிடங்கள், அந்நகரின் கலாச்சாரம், நகர மக்களின் விருந்தோம்பல் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. அந்த அடிப்படையில் ஜெய்ப்பூர் நகரம் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர்  நகரம் இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்நகரில் உள்ள கோட்டை, நினைவிடங்கள் ஆகியவற்றைச் சர்வதேசக் குழு கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்தது. அஜர்பைஜாந் நாட்டில் உள்ள பாகு நகரில்  நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் கமிட்டியின் 43-வது மாநாட்டில் இந்தப் பரிந்துரை பரிசீலனைக்குப் எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர் ஜெய்ப்பூரை உலகப் பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் சேர்த்தது யுனெஸ்கோ.

38-வது இடம்

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறுவது எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் கமிட்டியானது ஒரு முறையாவது கூடுவது வழக்கம். அப்படிக் கூடும்போது பட்டியலில் புதிய இடங்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பது, நீக்குவது, அல்லது மாற்றம் செய்வது ஆகியவற்றைச் செய்யும். இந்த முறை இந்தியாவிலிருந்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜெய்ப்பூர் நகரை பெரிய அளவில் விவாதமின்றிப் பட்டியலில் சேர்த்தது.

இந்தியாவில் யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்ந்த 38-வது இடம் ஜெய்ப்பூர். இதுவரை ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 1,121 இடங்களை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் அல்லது இடமாக அறிவித்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ்
ஆகிய நாடுகளில் உள்ள இடங்கள், நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோ பட்டியலில் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாகத்தான் இந்தியா இப்பட்டியலில் உள்ளது. இந்தியாவில் முதன் முறையாக 1983-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகள், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் ஆகிய 4 இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன. தற்போது 38-வது இடமாக ஜெய்ப்பூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ பிரிவுகள் 

உலகப் பாரம்பரியச் சின்னம் என்பது என்ன? யுனெஸ்கோவால் பட்டியலில் சேர்க்கப்படும் இடம் ‘உலகின் சிறந்த மதிப்பீடு’ என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. உலகப் பாரம்பரிய அமைப்பின் வழிகாட்டுதல்படி, உலகின் சிறந்த மதிப்பீடு என்பது கலாச்சாரம் / இயற்கை பின்னணி கொண்ட இடங்களைக் குறிக்கிறது. இதில் 3 பிரிவுகளை யுனெஸ்கோ வைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் உலகப் பாரம்பரிய இடங்கள் / சின்னங்களை அறிவிக்கிறது.  கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என 3 பிரிவுகளில் யுனெஸ்கோ இடங்களைத் தேர்வு செய்கிறது.

இதில் கலாச்சாரப் பாரம்பரியப் பிரிவில் வரலாறு, கலை, அறிவியல், நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், இயற்கையாகவும் மனிதர்களாலும் அமைந்த வேலைப்பாடுகள் ஆகியவை வருகின்றன. இதற்கு உதாரணமாகத் தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இயற்கைப் பாரம்பரியப் பிரிவில் அறிவியல், பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லது அழகிய இயற்கை  பகுதிகள் வருகின்றன. இதற்கு உதாரணமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் உயிர்க்கோள காப்பகம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம். தற்போது ஜெய்ப்பூர் நகரம் கலாச்சாரப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை

யுனெஸ்கோவால் உலகில் அறிவிக்கப்பட்ட 1,121 உலகப் பாரம்பரிய இடங்களில்  869 இடங்கள் கலாச்சாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 213 இயற்கை சார்ந்த இடங்கள், 39 இடங்கள் கலப்பு இடங்களாகவும் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட இடத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக எப்படி அறிவிக்கிறது? யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம் பிடிக்க ஒவ்வொரு நாடும் உத்தேசப் பட்டியலைத் தயார் செய்து அதற்கான ஆவணங்களை யுனெஸ்கோ கமிட்டிக்கு அனுப்புவார்கள். இந்த ஆவணங்களைக் கமிட்டி ஆய்வு செய்யும்.

இந்தியாவில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘யுனெஸ்கோ ஒத்துழைப்புக்கான இந்தியத் தேசிய ஆணையம்’ என்ற அமைப்பும் இந்தியத்  தொல்லியல் துறையும் இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு பல்வேறு நாடுகளிடமிருந்து பெறும் பரிந்துரைகளை  யுனெஸ்கோ கமிட்டியில் உள்ள 21 உறுப்பினர்கள் தீவிரமாகப் பரிசீலிப்பார்கள். கள ஆய்வு மேற்கொள்வார்கள். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே உலகப் பாரம்பரியச் சின்னமாக
அறிவிப்பார்கள்.

என்ன பயன்? 

அதெல்லாம் சரி, ஓரிடத்தை உலகப் பாரம்பரியச் சின்னம் / இடமாக அறிவிப்பதால் என்ன பயன்? யுனெஸ்கோ அறிவிக்கும் பாரம்பரிய இடங்கள் ‘மிகவும் விரும்பத்தக்க இடம்’ என்ற அந்தஸ்தைப் பெறும். இதனால், அந்தப் பகுதியில் சுற்றுலா பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளச் சம்பந்தப்பட்ட நாடுகள், அந்த இடங்களில் சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். யுனெஸ்கோ அந்த இடங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும். உலகப் பாரம்பரியச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, பராமரிக்காமல் விடப்பட்டிருந்தாலோ, பட்டியலிலிருந்து யுனெஸ்கோ நீக்கமும் செய்யலாம்.

இந்து தமிழ், 16/07/2019

19/07/2019

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

தென்காசியில் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார் பசுபதி. எங்கேயாவது கபடி போட்டி என்றால், வேலையைக்கூட விட்டுவிட்டு அங்கே சென்றுவிடும் அளவுக்கு கபடி வெறியர். இந்த ஆர்வத்தால் அவருக்கு வேலை பறிபோகிறது. இதனால், பசுபதி மீது அவருடைய மகன் விக்ராந்த் கோபப்படுகிறார்.  பசுபதிக்கு கபடி மீது ஏன் இத்தனை ஆர்வம் என்பதை விக்ராந்துக்கு அவருடைய அம்மா ஃபிளாஸ்பேக்கில் சொல்கிறார். கபடி வீரரான பசுபதி, வீண் பழியால் சொந்தக் கிராமத்தை விட்டு தென்காசிக்கு வந்தக் கதையால் விக்ராந்த் மனம் மாறுகிறார். சென்னைக்கு செல்வதாக சொல்லிவிட்டு அப்பாவின் சொந்த ஊருக்கு வருகிறார் விக்ராந்த். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அங்கே ‘வெண்ணிலா கபடிக் குழு’வை மீண்டும் உருவாக்கி, கபடி வீரனாக முயற்சிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

 2009-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் கதையோடு வேறொரு கதைக் களத்தை கோர்த்துவிட்டு இயக்குநர் செல்வசேகரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 1980-களின் இறுதியில் தென் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் கபடி விளையாட்டு எப்படி முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஊர் மரியாதையின் குறியீடாக கபடி வெற்றியை மக்கள் கொண்டாடியதைக் காட்சியப்படுத்தியதும் கச்சிதம். 

கபடியை மையப்படுத்திய கதை என்றபோதும், முதல் பாகத்துக்கும் கபடிக்கும் சம்பந்தம் இல்லாமலேயே காட்சிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மையக் கதைக்குள் வருவதற்குள் இடைவேளையே வந்துவிடுகிறது. முதல் பாகம் முழுவதும் விக்ராந்தின் காதல், மோதல் என வழக்கமான மசாலாவுக்குள் நுழைந்து விடுகிறது. சற்று ஆசுவாசமாகப் பசுபதியின் சென்டிமெண்டுகளும் அவருடைய நடிப்பு மட்டுமே ஈர்த்து, எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

தந்தையின் ஆசைக்காக கபடி வீரனாக விரும்பும் விக்ராந்த்,     ‘வெண்ணிலா கபடி குழு’வை கட்டமைக்கிறார். கபடி கதைக் களத்துக்குள் திரைக்கதை சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக காட்சிகள் நமத்துப் போய்விடுகின்றன. முதல் பாகத்தைப்
போலவே இந்தப் பாகத்திலும் ஒரு மரணத்துடன் கிளைமாக்ஸை நிறைவு செய்கிறார் இயக்குநர். ஆனால், அந்த கிளைமாக்ஸும் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறது. 1980-களில் பயணிக்கும் கதை என்பதால், அந்தக் காலகட்ட சங்கதிகளை இயக்குநர் அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்தக் கால இளைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்காமல் போவது கதையை அன்னியப்படுத்திவிடுகிறது.

கதையின் நாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். அப்பாவை கடிந்துக்கொள்வது, கபடி வீரராக மாறுவது என நன்றாகவே நடித்திருக்கிறார்.  ஆனால், முந்தைய தலைமுறை இளைஞனின் சாயலை அவரால் கொண்டுவர முடியவில்லை. படம் முழுக்க பாவடை, தாவணியில் வரும் அர்த்தனா பினுவுக்கு வசனங்களும் குறைவு, நடிக்க வாய்ப்பும் குறைவு. படத்தின் நாயகனோ என்று சொல்லும் அளவுக்கு பசுபதியின் பார்த்திர வார்ப்பு அருமை. பாசக்கார குடும்பஸ்தராகவும் அப்பாவாகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகுதான் சூரி வருகிறார்.  வழக்கமான அவருடைய பாணியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கபடி பயிற்சியாளராக வரும் கிஷோர் வழக்கம் போல நிறைவாக நடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் ரவிமரியா காது ஜவ்வு கிழியும் அளவுக்கு கத்திக்கொண்டேயிருக்கிறார். கஞ்சா கருப்பு, அனுபமா குமார், அப்புக்குட்டி, சோனியா வெங்கட் என இன்னும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளன. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். தென்காசியையும் அதன் சுற்றியுள்ள கிராமங்களையும் உயிர்ப்போடு அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.
  
ஒரு மாஸ் கதையைச் சொன்ன முதல் பாகத்திலிருந்து விலகி, வழக்கமான சினிமா மசாலாத்தனங்களால் ‘வெண்ணிலா கபடி குழு 2’ கலகலகத்து நிற்கிறது.

மதிப்பெண் 2 / 5 

17/07/2019

‘சோக்கர்ஸ்’ ஆகிறதா இந்திய அணி?

கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை ‘சோக்கர்ஸ்’ என்று கேலியாக அழைப்பதுண்டு. மிக முக்கியமான தருணத்திலோ போட்டியில் ஏற்படும் திடீர் நெருக்கடியையோ அழுத்தத்தையோ சமாளிக்க முடியாமல் தோல்வி அடைபவர்களை ஆங்கிலத்தில் இதுபோல கிண்டலாக அழைப்பார்கள்.

இந்த அவப்பெயரை பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கே சொந்தமாக இருந்துவருகிறது. இப்போது அந்த அவப் பெயர் இந்திய கிரிக்கெட் அணியையும் சூழந்துவிட்டதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய 6 பெரிய தொடர்களில் மிக முக்கியமான தருணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியதே இதற்குக் காரணம்.

1992-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, வழக்கமாக காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தாங்கள் ‘சோக்கர்ஸ்’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டு செல்வார்கள். இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்திலேயே ‘சோக்கர்ஸ்’ ஆகி அந்த அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணியாக தொடக்கம் முதல் கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று இந்தியா.

அதற்கேற்ப லீக் போட்டிகளில் அதகளப்படுத்தியது இந்திய கிரிக்கெட் அணி. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடித்து அசத்தியது. ஆனால், மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் சொதப்பி, மிகப் பரிதாபகரமாக உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிட்டது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பையில்தான் இந்திய கிரிக்கெட் அணி மிக முக்கியமான தருணத்தில் வெளியேறிவிட்டதாக நினைக்க வேண்டாம். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய அணி ஜொலித்திருக்கிறது. 6 முறை மிக முக்கியமான தருணங்களில் மோசமாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணி வெளியேறுவதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.

கடைசியாக ஐ.சி.சி. நடத்திய தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது, 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபியில்தான். தோல்வியடையும் நிலையிலிருந்து மீண்டு, இறுதி கட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று அப்போது கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி ஐ.சி.சி. நடத்திய தொடர்களில் எல்லாம் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மண்ணைக் கவ்வியே வந்துகொண்டிருக்கிறது.

2014-ல் பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி என எல்லாப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் மிக மோசமாக விளையாடி இலங்கையிடம் தோல்வியடைந்து, கோப்பையைக் கோட்டைவிட்டது. அதற்கு அடுத்தப்படியாக 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுப் போட்டிகளில் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி, காலிறுதியில் பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றது. ஆனால், அரையிறுதியில் கொஞ்சம்கூட போராட்டக் குணத்தை வெளிப்படுத்தாமல் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய அணி.

இதேபோல 2016 இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆரவாரமாக விளையாடி அரையிறுதிவரை முன்னேறியது இந்திய அணி. டி20 உலகக் கோப்பையே இந்தியாவுக்குதான் என்று ரசிகர்கள் எண்ணிய வேளையில், அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதற்கு அடுத்ததாக, 2017-ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் கெத்தாக இறுதி போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிக மோசமாக விளையாடி கோப்பையை இழந்தது.

அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் பட்டியலில் முதலிடம் பிடித்தும், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டது. மிகப் பெரிய தொடர்களில் லீக் போட்டிகளில் அதகளமாக விளையாடும் இந்திய அணி, நாக் -அவுட் போட்டிகளில் வெளியேறிவிடுவது இன்று விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. நாக் - அவுட் போட்டிகள் என்றாலே எல்லா அணிகளுக்குமே ஓர் அழுத்தம் உருவாவது இயல்புதான். ஆனால், எத்தகைய நெருக்கடிகளையும் அனுபவ ஆட்டம் மூலம் கையாள முடியும். ஆனால், அதையும் தாண்டி நெருக்கடியையோ, அழுத்தத்தையோ சமாளிக்க முடியாமல் போகும்போதுதான் தோல்வி நேர்கிறது.

கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள், ஆல்ரவுண்டர்கள், நேர்த்தியான வீரர்கள் என எல்லோரும் இருந்தாலும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அந்தப் பாணியில் விளையாடிதான் ‘சோக்கர்ஸ்’ என்ற கேலி, கிண்டலுக்கு ஆளானது. அந்த அணியைப் போலவே ஜாம்பவான்கள், ஆல்ரவுண்டர்கள் என எல்லோரும் இருந்து அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியும் சேர்ந்துவிட்டதா என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் தென் ஆப்பிரிக்காவைபோல இந்தியா ‘சோக்கர்ஸ்’ ஆகாமல் இருக்க வேண்டுமானால்,  நாக் - அவுட் போட்டிகளில் சோபிக்க வேண்டும். அதற்கு இந்திய அணி எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு மாற வேண்டும். மாறும் என்று நம்புவோம்!

- இந்து தமிழ், 16/07/2019

12/07/2019

களவாணி 2 விமர்சனம்

அரசனூர் கிராமத்தில் வேலை, வெட்டி எதுவும் இல்லாமல் நண்பன் விக்னேஷ்காந்துடன் சேர்ந்துகொண்டு களவாணித்தனம் செய்துகொண்டு திரிகிறார் நாயகன் விமல். ஊரில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவது போல பாவ்லா செய்து, பணக்கார வேட்பாளர்களிடம் பணத்தைக் கறக்க திட்டம்போடுகிறார் விமல். இதற்காகத் தனது பணக்கார மாமாவை எதிர்த்து வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ஆனால், பணமும் கிடைக்காமல் மாமாவிடம் அவமானமடைகிறார் விமல். இதனால் தேர்தலில் ஜெயித்துக்காட்டுகிறேன்; தோற்றுவிட்டால் ஊரைவிட்டு சென்றுவிடுகிறேன் என்று தனது மாமாவிடம் சவால்விடுகிறார். இதன் பிறகு தேர்தலில் வெற்றி பெற விமல் என்னென்ன  ‘களவாணி’த்தனம் செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

2010-ல் வெளியான ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், புதியக் கதைக் களத்துடன் ‘களவாணி 2’வை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். கிராமத்து மண்வாசனை, எளிய மனிதர்கள், ஊர்ப்புறங்களில் நிகழும் நகைச்சுவை நையாண்டியுடன் காட்சிகளை கட்டமைத்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தல் ஒரு திருவிழாவைபோலவும் ஈகோவுடனும் நடைபெறுவதையும் பிசிறு இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 

 பழைய ‘களவானி’யின் சட்டகத்தில் உள்ள நாயகனின் ‘களவாணி’த்தனத்தை மட்டும் கதைக்கு எடுத்துக்கொண்டு திரைக்கதையை முழுமையாக நகர்த்தியிருப்பது படத்துக்கு மைனஸ். தொடக்கத்தில் அப்பாவி முகத்துடன் விமல் செய்யும் களவாணித்தனங்கள் சற்று ரசிக்க வைக்கின்றன. ஆனால், அதே பாணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஊகிக்க முடிந்துவிடுவதால்,  நகைச்சுவைக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது.

கிராமத்து எளிய மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதையும் ஓட்டுகளைப் பெற வேட்பாளர்கள் போடும் செண்டிமென்ட் அலப்பறைகளும் ரசிக்க வைப்பதற்கு மாறாக
எரிச்சலூட்டிவிடுகின்றன. படத்தின் பெரும்பாலான பகுதி தேர்தலைக் கொண்டே காட்சிகளை இயக்குநர் ஒப்பேற்றிவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா சரண்யா பொன்வண்ணன் - தந்தை இளவரசு ஆகியோர் இடையேயான முக்கோண சென்டிமெண்ட் காட்சிகளும் ஓவியாவுடனான காதல் காட்சிகளும் ஊறுகாய்போல மாறிவிடுகின்றன. 

பஞ்சாயத்து தலைவரின் மகள் ஓவியாவை காதலித்துவிட்டு, அவரை விட்டு விலக ஓட்டு டீல் போடுவது ரசிக்க வைக்கிறது. ஆனால், விமல் செய்யும் களவாணித்தனங்களால் ஊரே அவரை வெறுக்கிறது. ஊரே ஒதுக்கும் அவருக்கு மக்கள் ஓட்டுபோடுவதாகக் காட்டும் சென்டிமெண்ட் காட்சிகள் வழக்கமான பூச்சுற்றல்.
வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் பந்தா பேர்வழியாகவும் களவாணியாகவும் வருகிறார் விமல். அந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார். களவாணித்தனம் செய்வது, ஓவியாவைக் கலாய்ப்பது, தேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு திட்டமாகப் போடுவது என விமல் நடிப்பில் குறையில்லை. ஆனால், ஒரே மாதிரியான காட்சி அமைப்பாலும் உடல்மொழியாலும் ஒரு கட்டத்தில் விமல் திகட்டவைத்துவிடுகிறார். கிராமத்து கதைக்களத்தில் வரும் நாயகிக்கு உரிய ஒப்பனைகளுடன் அல்லாமல் வரும் ஓவியா கதையோட்டத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கிறார். 

விமலுடன் சுற்றித் திரியும் காமெடியனாக விஜெ விக்னேஷ்காந்த் நன்றாக நடித்திருக்கிறார். விமலுடனும் விக்னேஷ்காந்துடனும் ஒவ்வொரு முறையும் வாண்டடாக வந்து  பணத்தை இழப்பதும் புலம்புவதுமான வருகிறார் கஞ்சா கருப்பு. விமல் செய்யும் களவாணித்தனத்தையும் தாண்டி பாசமுள்ள தாயாக வந்து நகைச்சுவை செய்கிறார் சரண்யா பொன்வண்ணன். விமலின் பந்தா தாங்கமுடியாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் பாத்திரத்தில் இளவரசுவும் இயல்பாக நடித்திருக்கிறார். கிராமத்து அழகை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் மாசாணி. படத்தில் வரும் 3 பாடல்களும் காட்சிகளோடு ஒன்றாமலேயே போய்விடுகின்றன. பாடல்களும் மனதில் நிற்கவில்லை. 

எளிய கிராமத்து கதைக் களத்தில் அரசியலில் வெற்றி பெற ஓர் இளைஞன் செய்யும் ‘களவாணி’த்தனங்கள் ஓவர் டோஸாகிவிடுவதால் நம் மனதை ‘களவா’டாமல் போய்விடுகிறது.

மதிப்பெண் 2 / 5

08/07/2019

15 வயதில் 32 அடி பாய்ந்த கோரி

சிறுவன் தாவூது கோலியாத்தை வீழ்த்திய கதை பலருக்கும் தெரிந்ததுதான். ஜூலை 1 அன்று அந்தக் கதையை நினைவுபடுத்தியது விம்பிள்டன் போட்டியில் கிடைத்த முடிவு. ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்ற 39 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சக நாட்டு வீராங்கனையான 15 வயதே நிரம்பிய சிறுமி கோரி காஃப் வீழ்த்தி, புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.

வீனஸ் வில்லியம்ஸ் முதல் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றபோது கோரி காஃப் பிறக்கவே இல்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கோரி காஃபின் ரோல் மாடல் வீனஸ் வில்லியம்ஸ்தான். என்றாவது ஒருநாள் அவரைப் போலவே வர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு விளையாடத் தொடங்கியிருக்கும் கோரி காஃப், அவரையே வீழ்த்தித் தனது பயணத்தைத் தொடங்கி யிருப்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாத ஓர் அரிய வாய்ப்பு.

ஈடு இணையில்லா வெற்றி

கோரி காஃபின் செல்லப் பெயர் ‘கோகோ’. புகழ்பெற்ற டென்னிஸ் ஓபன் தொடரான விம்பிள்டன் தொடரில் விளையாட 15 வயதில் தகுதிபெற்ற முதல் வீராங்கனை இவர். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் போட்டிக்கு ‘வைல்ட் கார்டு’ மூலம் சிறப்புத் தகுதி பெற்றுப் பங்கேற்றார்.

விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டும் என்ற பல நாட்களாகவே காத்திருந்தார் காஃப். முதல் போட்டியே வீனஸ் வில்லியம்ஸுடன் என்ற அறிவிப்பு வெளியானபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி.

ஆனால், தன்னுடைய ஆதர்சன வீராங்கனையை எதிர்த்து விளையாடப் போகிறோம் என்ற பதற்றம் அவரிடம் துளிக்கூட இல்லை. போட்டி தொடங்கியபோது விரைவில் முடிந்துவிடும் என நினைத்து ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால், போட்டியில் தரவரிசையில் 44-வது இடத்திலிருக்கும் வீனஸை, 313-வது இடத்திலிருக்கும் கோரி காஃப் அநாயசமாக எதிர்கொண்டார். வீனஸின் சர்வீஸ்களை அதே வேகத்தில் திருப்பி வீனஸுக்கு நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை 6 - 4 என்ற கணக்கில் 39 நிமிடங்களிலேயே வீனஸை வீழ்த்தி காஃப் முன்னிலை பெற்றபோது ஒட்டுமொத்த விம்பிள் டன் அரங்கமும் அதிர்ச்சியில் உறைந்துபோனது.

பயமறியா இளங்கன்று

முதல் செட்டை 35 நிமிடங்களில் வென்றுகாட்டிய காஃப்புக்குத் தனது அனுபவம் மூலம் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுப்பார் வீனஸ் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் காஃபின் வெற்றியை வீனஸ் வில்லியம்ஸால் தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. ஒரு மணி நேரம் நீடித்த இரண்டாவது செட்டில், வீனஸ் வில்லியம்ஸின் பிரம்மாண்ட அனுபவத்தை எளிதாக எதிர்கொண்டு ‘இளங்கன்று பயமறியாது’ என்பதை காஃப் நிரூபித்தார். இரண்டாவது செட்டையும் 6 - 4 என்ற கணக்கில் காஃப் வென்று விம்பிள்டன் வரலாற்றில் வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டார்.

நம்பிக்கை நட்சத்திரம்

வீனஸ் வில்லியம்ஸை நேர் செட்களில் தோற்கடித்தவுடன் ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி கோரி காஃபின் சாதனையை அங்கீகரித்தபோது, காஃப் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தேம்பியழத் தொடங்கினார். தன்னுடைய ரோல் மாடலைத் தோற்கடித்ததை நம்ப முடியாமலும் விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் வென்றதை நினைத்தும் அவர் அழுதார். அது மகிழ்ச்சியால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்.

அதே நேரத்தில் காஃப் வெற்றி பெற்றதும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் ஒரு மகளுக்குத் தாய் வாழ்த்து சொல்வதைப் போல வீனஸ் வில்லியம்ஸ் வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனதும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம்தான்!

“வழக்கமாகப் போட்டி யில் தோற்று விட்டால் நான் அழுது விடுவேன். முதன்முறையாக வெற்றி பெற்றதற் காக அழுதிருக்கிறேன். இந்த வெற்றியை எப்படி வெளிப் படுத்துவது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் வாழ்த்து மழையில் என்னை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள். விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கோர்ட்டில் என்னுடைய ரோல் மாடலைத் தோற்கடித்தது கனவுபோல இருக்கிறது” என்று சொன்னார் காஃப்.

வீனஸ் வில்லியம்ஸும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 17 வயதில்தான் அறிமுகமானார். பின்னர் மிகக் குறைந்த காலத்திலேயே கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டங்களை வென்று முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார். அவரைப் போலவே 15 வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் கோரி காஃபும் வீனஸ் வில்லியம்ஸைப் போலவே உருவெடுப்பார் என்று டென்னிஸ் உலகம் நம்புகிறது. வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்து முன்னுரை எழுதியிருக்கும் கோரி காஃப் அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார்!

முதல் வீராங்கனை

காஃப் 2004, மார்ச் 13 அன்று ஜார்ஜியாவில் பிறந்தார். அவருடைய தந்தை கொரே, கூடைப்பந்து வீரர். அம்மா காண்டி, தடகள வீராங்கனை. சிறு வயதில் அவருடைய தந்தை கொரேதான் காஃப்புக்குப் பயிற்சி அளித்தார்.
தற்போது பிரான்ஸில் செரீனா வில்லியம்ஸ் பயிற்சிபெற்ற இடத்தில் காஃபும் பயிற்சி பெற்றுவருகிறார். செரீனாவுக்குப் பயிற்சி அளித்த பேட்ரிக் மோட்ராடோகோலோ என்ற பயிற்சியாளர்தான் காஃபுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
விம்பிள்டன் போட்டியில் விளையாடிய 12-வது இளம் வீராங்கனை காஃப். ஆனால், ஒற்றையர் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் காஃப். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை காஃப் வென்றார்.
ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்ற முதல் இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். முதன்முறையாக விம்பிள்டன் வரலாற்றில் ஒற்றையர் போட்டியில் வெற்றிபெற்ற இளம் வீராங்கனை என்ற அழுத்தமான சாதனையை கோரி காஃப் தற்போது தன் வசமாக்கியிருக்கிறார்.

- இந்து தமிழ்,  07-07-2019

02/07/2019

ஜீவி விமர்சனம்

கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறான் நாயகன் வெற்றி. பெரிதாகப் படிக்காவிட்டாலும் எதையும் அறிந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். வீட்டு கஷ்டத்தால் சென்னை வருகிறான். சென்னையில் நண்பர் கருகாரணுடன் சேர்ந்து டீக்கடையில் வேலை செய்கிறான். என்ன வேலை சம்பாதித்தாலும் காசு இல்லாமல் திரிகிறான். காசு இல்லாததைக் காரணம் காட்டி காதலியும் கழன்றுகொள்கிறாள். விரக்தியில் இருக்கும் வெற்றிக்கு தான் வசிக்கும் வீட்டுக்கரம்மா ரோஹினி வீட்டில் 50 சவரன் நகையைத் திருட வாய்ப்பு கிடைக்கிறது.

அழகாகத் திட்டம்போட்டு கருகாரணுடன் சேர்ந்து நகையைத் திருடிவிடுகிறான்.  மாட்டிக்கொள்ளாமல் இருக்க போலீஸையும் குழப்புகிறான். இதற்கிடையே தன் வீட்டிலும் வீட்டுகாரம்மா ரோஹினி வீட்டிலும் நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள் அவன் மனதைத் துளைத்தெடுக்கிறது. அதன்பின்னர் நாயகன் என்ன செய்தான்? திருடிய நகை என்ன ஆனது? போலீஸ் அவனை என்ன செய்தது என்று எழும் கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவி’. 
சுடோகு போல மூளைக்கு மட்டுமே வேலை தரக்கூடிய ஒரு அறிவுபூர்வமான திரைக்கதையை எடுத்துக்கொண்டு அதை பிசிறு இல்லாமல் இயக்கிய அறிமுக இயக்குநர் விஜெ கோபிநாத்துக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. ஒரு திருட்டு சம்பவத்தையும் அதனோடு குடும்பம் சார்ந்த உளவியலையும் கலந்து ஊகிக்க முடியாத கதைக்கு திரைக்கதை எழுதியவிதமும் நேர்த்தி. பார்வையாளார்களுக்கு எளிதில் புரியும் வகையில் முக்கோண தொடர்பு மூலம் காட்சிகளைப் படமாகப் பிடித்த வகையிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

திரில்லர் குறிய அம்சங்கள் கொண்ட படம் இது. ஆனால், திரில்லர் படங்களுக்கே உரிய திகில் காட்சிகளாக இல்லாமல் கதையோட்டத்தை விறுவிறுப்பாகப் படமாக்கியிருப்பது படத்துக்கு பெரும் பலம். காட்சிகளில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நண்பன் கருணாகரனுக்கு நாயகன் விளக்கும் காட்சிகள் கதையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் வராமல் இயக்குநர் பார்த்துக்கொள்கிறார். படத்தை எப்படி நிறைவு செய்யப்போகிறார்கள் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படும்போது ஒரு திருப்பத்துடன் படத்தை முடித்திருப்பதில் ‘ஜீவி’ கெத்து காட்டுகிறது.

திருட்டு வழக்குகளில் விளிம்பு நிலை மக்களை போலீஸ் குறி வைப்பதையும் காட்சிகளில் உணர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. எப்போது விழுமோ என தெரியாத அளவுக்கு ஒரு பழைய ஃபேனையும் படத்தில் ஒரு பாத்திரம்போல காட்டி பயமுறுத்தியிருப்பது அழகு. ஒரு வீட்டின் அறைக்குள்ளே காட்சிகளை அலுப்பூட்டாமல் கடத்தியிருக்கும் விதமும் அருமை.

மிகவும் உரிமையோடு பழகும் வீட்டுக்காரம்மா ரோஹினி, தன் பார்வையற்ற மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருக்கும் நகைகளை நாயகன் திருட வேண்டும் என்ற முடிவு செய்வதற்கு வலுவான காரணங்களை இயக்குநர் படத்தில் இன்னும் சொல்லியிருக்கலாம். போலீஸின் விசாரணை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு திருடும் முயற்சியில் இறங்குகிறான் நாயகன். ஆனால், போலீஸைவிட புத்திசாலித்தனமாக நாயகனைக் காட்டியிருப்பது நெருடல். பயந்த சுபாவம் கொண்ட கருணாகரனை வைத்துக்கொண்டு நாயகன் திருட்டு ரகசியத்தைக் காப்பாற்றுவதாகக் காட்டும் காட்சிகள் பூச்சுற்றல். கதையோட்டத்துக்காகவே காதல் காட்சியையும் நாயகியையும் வைத்திருக்கிறார்கள்.

நாயகன் வெற்றி இந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வேலை வெட்டி இல்லாமல் சண்டியர்த்தனம் செய்வது, சென்னையில் வேலை இல்லாமல் அலைவது, திருட பிளான் போடுவது, மாட்டிக்கொள்ளாமல் இருக்க தகிடுத்தத்தங்கள் செய்வது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். ஆனால், உடல்மொழி ஒத்துழைக்க மறுக்கிறது. நண்பனாக வரும் காமெடி நடிகர் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். திருதிருவென முழித்துக்கொண்டு சந்தேகப் பார்வையோடு அணுகும் அவரது பாத்திர வார்ப்பு ரசிக்க வைக்கிறது. ரோஹினி, மைம் கோபி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

காட்சிக்கேற்ற பாபு தமிழின் வசனங்கள் கூர்மையாக விழுகின்றன. ஒளிப்பதிவில் பிரவீன் குமார் பலம் என்றால் படத்தொகுப்பில் கே.எல். பிரவீன் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். மிக எளிமையான முக்கோண தொடர்பியலை காட்சிகளாகப் படமாக்கியிருக்கும் விதத்தில் இருவரும் ஜொலிக்கிறார்கள். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

காலங்காலமாகக் காட்டப்படும் திரில்லர் படங்களிலிருந்து விலகி அறிவுபூர்வமான திரைக்கதையால் உயர்ந்து நிற்கிறது ‘ஜீவி’.

மதிப்பெண் 3 / 5