தென்காசியில் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார் பசுபதி. எங்கேயாவது கபடி போட்டி என்றால், வேலையைக்கூட விட்டுவிட்டு அங்கே சென்றுவிடும் அளவுக்கு கபடி வெறியர். இந்த ஆர்வத்தால் அவருக்கு வேலை பறிபோகிறது. இதனால், பசுபதி மீது அவருடைய மகன் விக்ராந்த் கோபப்படுகிறார். பசுபதிக்கு கபடி மீது ஏன் இத்தனை ஆர்வம் என்பதை விக்ராந்துக்கு அவருடைய அம்மா ஃபிளாஸ்பேக்கில் சொல்கிறார். கபடி வீரரான பசுபதி, வீண் பழியால் சொந்தக் கிராமத்தை விட்டு தென்காசிக்கு வந்தக் கதையால் விக்ராந்த் மனம் மாறுகிறார். சென்னைக்கு செல்வதாக சொல்லிவிட்டு அப்பாவின் சொந்த ஊருக்கு வருகிறார் விக்ராந்த். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அங்கே ‘வெண்ணிலா கபடிக் குழு’வை மீண்டும் உருவாக்கி, கபடி வீரனாக முயற்சிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
2009-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் கதையோடு வேறொரு கதைக் களத்தை கோர்த்துவிட்டு இயக்குநர் செல்வசேகரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 1980-களின் இறுதியில் தென் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் கபடி விளையாட்டு எப்படி முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஊர் மரியாதையின் குறியீடாக கபடி வெற்றியை மக்கள் கொண்டாடியதைக் காட்சியப்படுத்தியதும் கச்சிதம்.
கபடியை மையப்படுத்திய கதை என்றபோதும், முதல் பாகத்துக்கும் கபடிக்கும் சம்பந்தம் இல்லாமலேயே காட்சிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மையக் கதைக்குள் வருவதற்குள் இடைவேளையே வந்துவிடுகிறது. முதல் பாகம் முழுவதும் விக்ராந்தின் காதல், மோதல் என வழக்கமான மசாலாவுக்குள் நுழைந்து விடுகிறது. சற்று ஆசுவாசமாகப் பசுபதியின் சென்டிமெண்டுகளும் அவருடைய நடிப்பு மட்டுமே ஈர்த்து, எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
தந்தையின் ஆசைக்காக கபடி வீரனாக விரும்பும் விக்ராந்த், ‘வெண்ணிலா கபடி குழு’வை கட்டமைக்கிறார். கபடி கதைக் களத்துக்குள் திரைக்கதை சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக காட்சிகள் நமத்துப் போய்விடுகின்றன. முதல் பாகத்தைப்
போலவே இந்தப் பாகத்திலும் ஒரு மரணத்துடன் கிளைமாக்ஸை நிறைவு செய்கிறார் இயக்குநர். ஆனால், அந்த கிளைமாக்ஸும் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறது. 1980-களில் பயணிக்கும் கதை என்பதால், அந்தக் காலகட்ட சங்கதிகளை இயக்குநர் அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்தக் கால இளைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்காமல் போவது கதையை அன்னியப்படுத்திவிடுகிறது.
போலவே இந்தப் பாகத்திலும் ஒரு மரணத்துடன் கிளைமாக்ஸை நிறைவு செய்கிறார் இயக்குநர். ஆனால், அந்த கிளைமாக்ஸும் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறது. 1980-களில் பயணிக்கும் கதை என்பதால், அந்தக் காலகட்ட சங்கதிகளை இயக்குநர் அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்தக் கால இளைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்காமல் போவது கதையை அன்னியப்படுத்திவிடுகிறது.
கதையின் நாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். அப்பாவை கடிந்துக்கொள்வது, கபடி வீரராக மாறுவது என நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், முந்தைய தலைமுறை இளைஞனின் சாயலை அவரால் கொண்டுவர முடியவில்லை. படம் முழுக்க பாவடை, தாவணியில் வரும் அர்த்தனா பினுவுக்கு வசனங்களும் குறைவு, நடிக்க வாய்ப்பும் குறைவு. படத்தின் நாயகனோ என்று சொல்லும் அளவுக்கு பசுபதியின் பார்த்திர வார்ப்பு அருமை. பாசக்கார குடும்பஸ்தராகவும் அப்பாவாகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகுதான் சூரி வருகிறார். வழக்கமான அவருடைய பாணியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கபடி பயிற்சியாளராக வரும் கிஷோர் வழக்கம் போல நிறைவாக நடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் ரவிமரியா காது ஜவ்வு கிழியும் அளவுக்கு கத்திக்கொண்டேயிருக்கிறார். கஞ்சா கருப்பு, அனுபமா குமார், அப்புக்குட்டி, சோனியா வெங்கட் என இன்னும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளன. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். தென்காசியையும் அதன் சுற்றியுள்ள கிராமங்களையும் உயிர்ப்போடு அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.
ஒரு மாஸ் கதையைச் சொன்ன முதல் பாகத்திலிருந்து விலகி, வழக்கமான சினிமா மசாலாத்தனங்களால் ‘வெண்ணிலா கபடி குழு 2’ கலகலகத்து நிற்கிறது.
மதிப்பெண் 2 / 5
No comments:
Post a Comment