அரசனூர் கிராமத்தில் வேலை, வெட்டி எதுவும் இல்லாமல் நண்பன் விக்னேஷ்காந்துடன் சேர்ந்துகொண்டு களவாணித்தனம் செய்துகொண்டு திரிகிறார் நாயகன் விமல். ஊரில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவது போல பாவ்லா செய்து, பணக்கார வேட்பாளர்களிடம் பணத்தைக் கறக்க திட்டம்போடுகிறார் விமல். இதற்காகத் தனது பணக்கார மாமாவை எதிர்த்து வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ஆனால், பணமும் கிடைக்காமல் மாமாவிடம் அவமானமடைகிறார் விமல். இதனால் தேர்தலில் ஜெயித்துக்காட்டுகிறேன்; தோற்றுவிட்டால் ஊரைவிட்டு சென்றுவிடுகிறேன் என்று தனது மாமாவிடம் சவால்விடுகிறார். இதன் பிறகு தேர்தலில் வெற்றி பெற விமல் என்னென்ன ‘களவாணி’த்தனம் செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
2010-ல் வெளியான ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், புதியக் கதைக் களத்துடன் ‘களவாணி 2’வை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். கிராமத்து மண்வாசனை, எளிய மனிதர்கள், ஊர்ப்புறங்களில் நிகழும் நகைச்சுவை நையாண்டியுடன் காட்சிகளை கட்டமைத்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தல் ஒரு திருவிழாவைபோலவும் ஈகோவுடனும் நடைபெறுவதையும் பிசிறு இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பழைய ‘களவானி’யின் சட்டகத்தில் உள்ள நாயகனின் ‘களவாணி’த்தனத்தை மட்டும் கதைக்கு எடுத்துக்கொண்டு திரைக்கதையை முழுமையாக நகர்த்தியிருப்பது படத்துக்கு மைனஸ். தொடக்கத்தில் அப்பாவி முகத்துடன் விமல் செய்யும் களவாணித்தனங்கள் சற்று ரசிக்க வைக்கின்றன. ஆனால், அதே பாணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஊகிக்க முடிந்துவிடுவதால், நகைச்சுவைக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது.
கிராமத்து எளிய மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதையும் ஓட்டுகளைப் பெற வேட்பாளர்கள் போடும் செண்டிமென்ட் அலப்பறைகளும் ரசிக்க வைப்பதற்கு மாறாக
எரிச்சலூட்டிவிடுகின்றன. படத்தின் பெரும்பாலான பகுதி தேர்தலைக் கொண்டே காட்சிகளை இயக்குநர் ஒப்பேற்றிவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா சரண்யா பொன்வண்ணன் - தந்தை இளவரசு ஆகியோர் இடையேயான முக்கோண சென்டிமெண்ட் காட்சிகளும் ஓவியாவுடனான காதல் காட்சிகளும் ஊறுகாய்போல மாறிவிடுகின்றன.
எரிச்சலூட்டிவிடுகின்றன. படத்தின் பெரும்பாலான பகுதி தேர்தலைக் கொண்டே காட்சிகளை இயக்குநர் ஒப்பேற்றிவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா சரண்யா பொன்வண்ணன் - தந்தை இளவரசு ஆகியோர் இடையேயான முக்கோண சென்டிமெண்ட் காட்சிகளும் ஓவியாவுடனான காதல் காட்சிகளும் ஊறுகாய்போல மாறிவிடுகின்றன.
பஞ்சாயத்து தலைவரின் மகள் ஓவியாவை காதலித்துவிட்டு, அவரை விட்டு விலக ஓட்டு டீல் போடுவது ரசிக்க வைக்கிறது. ஆனால், விமல் செய்யும் களவாணித்தனங்களால் ஊரே அவரை வெறுக்கிறது. ஊரே ஒதுக்கும் அவருக்கு மக்கள் ஓட்டுபோடுவதாகக் காட்டும் சென்டிமெண்ட் காட்சிகள் வழக்கமான பூச்சுற்றல்.
வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் பந்தா பேர்வழியாகவும் களவாணியாகவும் வருகிறார் விமல். அந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார். களவாணித்தனம் செய்வது, ஓவியாவைக் கலாய்ப்பது, தேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு திட்டமாகப் போடுவது என விமல் நடிப்பில் குறையில்லை. ஆனால், ஒரே மாதிரியான காட்சி அமைப்பாலும் உடல்மொழியாலும் ஒரு கட்டத்தில் விமல் திகட்டவைத்துவிடுகிறார். கிராமத்து கதைக்களத்தில் வரும் நாயகிக்கு உரிய ஒப்பனைகளுடன் அல்லாமல் வரும் ஓவியா கதையோட்டத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கிறார்.
விமலுடன் சுற்றித் திரியும் காமெடியனாக விஜெ விக்னேஷ்காந்த் நன்றாக நடித்திருக்கிறார். விமலுடனும் விக்னேஷ்காந்துடனும் ஒவ்வொரு முறையும் வாண்டடாக வந்து பணத்தை இழப்பதும் புலம்புவதுமான வருகிறார் கஞ்சா கருப்பு. விமல் செய்யும் களவாணித்தனத்தையும் தாண்டி பாசமுள்ள தாயாக வந்து நகைச்சுவை செய்கிறார் சரண்யா பொன்வண்ணன். விமலின் பந்தா தாங்கமுடியாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் பாத்திரத்தில் இளவரசுவும் இயல்பாக நடித்திருக்கிறார். கிராமத்து அழகை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் மாசாணி. படத்தில் வரும் 3 பாடல்களும் காட்சிகளோடு ஒன்றாமலேயே போய்விடுகின்றன. பாடல்களும் மனதில் நிற்கவில்லை.
எளிய கிராமத்து கதைக் களத்தில் அரசியலில் வெற்றி பெற ஓர் இளைஞன் செய்யும் ‘களவாணி’த்தனங்கள் ஓவர் டோஸாகிவிடுவதால் நம் மனதை ‘களவா’டாமல் போய்விடுகிறது.
மதிப்பெண் 2 / 5
மதிப்பெண் 2 / 5
No comments:
Post a Comment