‘டூலெட்’ படம் பார்த்தவர்கள் கறாரான வீட்டு ஓனர் அம்மா கதாபாத்திரத்தை மறந்திருக்கமாட்டார்கள். கெடுபிடி காட்டும் வீட்டு ஓனர் தோரணையைக் கண்முன்னே கொண்டுவந்துகாட்டிய அவர், ‘தியேட்டர் ஆர்டிஸ்ட்’ என்று பெயரெடுத்த ஆதிரா பாண்டிலெட்சுமி. கோடம்பாக்கத்தின் அண்மைக்கால ஸ்வீட் அம்மாக்கள் கதாபாத்திர பட்டியலில் ஆதிராவுக்குத்தான் முதலிடம். அம்மா கதாபாத்திரங்களைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்துவருகிறார்.
ஆதிராவுக்கு மதுரைதான் சொந்த ஊர். பதின் பருவத்திலேயே கல்யாணத்தைச் செய்துகொண்டு துபாயில் செட்டிலாகிவிட்டார். அங்கே அழகுக் கலை நிபுணராக இருந்தார். 15 ஆண்டுகள் கழித்து அம்மா, அப்பாவோடு வசிக்க வேண்டும் என்ற கனவோடு 2007-ல் குடும்பத்துடன் சென்னைக்குத் திரும்பினார். ஆனால், அந்த ஆண்டே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவருடைய அம்மா இறந்துபோனார். அந்தப் பிரிவு அவருக்கு பெரும் மன வலியைத் தந்தது. அதிலிருந்து மீள முடியாமல் துடித்தார். ஒரு கட்டத்தில் கவனத்தை திசை திருப்ப கிராமிய கலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கூத்துப் பட்டறையில் போய் சேர்ந்தார். அங்கே ஆறு ஆண்டுகள் இருந்து அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டார் ஆதிரா.
பின்னர் அங்கிருந்தபடியே தெருக்கூத்து கலையிலும் ஈடுபட்டார். இயல், இசை, நாடகம் என மூன்று துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். நாடகக் கலையை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதற்காக 2014-ல் சொந்தமாக நவீன கூத்துப்பட்டறையைத் தொடங்கினார் ஆதிரா. அங்கே இளம் கலைஞர்களுக்கு நடிக்கக் கற்றுக்கொடுத்துவருகிறார். மேடையில் மட்டுமே நடித்துவந்த ஆதிரா, சினிமாவில் தான் நடிக்க நேர்ந்தது ஏன் என்பது குறித்து என்ன சொல்கிறார்?
![]() | |
ஒரு குப்பைக் கதை |
“நாடகத் துறையில் இருந்தாலும், சினிமாவை இயக்க வேண்டும் என்ற என்ணம் மட்டுமே எனக்கு இருந்துச்சு. சினிமாவில் நடிக்கணும்னு நினைச்சிக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிக்கணும்னு நிறைய பேரு என்னிடம் கற்றுக்கொள்ள வந்தாங்க. அவுங்களுக்கு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்குற பொறுப்பும் எனக்கு வந்துச்சு. அதுக்கு நான் சினிமாவில் நடித்திருக்கணுமே என்ற எண்ணம் அப்போதான் வந்துச்சு. அதே தருணத்துல 2016-ல் ‘கணிதன்’ என்ற படத்தில் அதர்வாவின் அம்மாவாக நடிக்கவும் அழைப்பு வந்துச்சு. என்னுடைய நாடகத்தை யூடியூபில் பார்த்துட்டு என்னை நடிக்க அழைச்சாங்க. அதனால், அந்த வாய்ப்பை மறுக்காம ஏற்றுக்கிட்டேன்” என்கிறார் ஆதிரா.
‘கணிதன்’ படத்தில் நகைச்சுவை கலந்த அம்மா வேடத்தில் இவர் காட்டிய குறும்பு, ஆதிராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. தொடர்ந்து ‘பாம்புச் சட்டை’, ‘மருது’, ‘ஒரு குப்பைக் கதை’, ‘திமிருபுடிச் சவன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘டூலெட்’ என டஜன் படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். ‘பாம்புச் சட்டை’, ‘மருது’வில் அப்பாவி அம்மா, ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மா, ‘சர்வம் தாளமய’த்தில் யதார்த்தமான அம்மா, ‘டூலெட்’டில் கறாரான வீட்டுக்காரம்மா என நடித்துள்ள எல்லா படங்களில் வெரைட்டிக் காட்டியிருக்கிறார் ஆதிரா. தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களே என்று கேட்டால், அவரசமாக மறுக்கிறார்.
“அம்மா கதாபாத்திரத்துல் மட்டுமே நடிக்கணும்னு யோசித்து செய்யுறதில்ல. யாரிடமும் இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுங்க என்றும் கேட்பதில்லை. இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆதிரா நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையில கேட்குறவங்க கதையிலதான் நடிக்கிறேன். அம்மா கதாபாத்திரம் மட்டுமல்ல, ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் ஹீரோவுக்கு ஜோடியா நடித்திருந்தேன். தொடர்ந்து வித்தியாசமா நடிக்கணும்னு என்பதே என் ஆசை” என்கிறார் ஆதிரா.
‘டூலெட்’ படத்தில் கறாரான வீட்டு ஓனர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்திகைப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு, “அந்தக் கதாபாத்திரத்தின் உத்வேகத்துக்கு நாங்க பழநியில குடியிருந்த வீட்டோ ஓனரும், சென்னையில் என்னுடைய வீட்டில் குடியிருந்த ஒருவரோடு ஏற்பட்ட அனுபவமும் ஒரு காரணம். இந்த இரண்டு கேரக்டர்களை மனதில்கொண்டுதான் இந்தப் படத்தில் நடிச்சேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு” என்கிறார் ஆதிரா. ‘ஒரு குப்பைக் கதை’யில் அக்மார்க் மீன்காரம்மாவாக நடித்து
![]() | |
சர்வம் தாளமயம் |
நாடகத் துறையிலிருந்து வருபவர்களுக்கு மிகையான நடிப்பை வழங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால், நாடகத் துறையிலிருந்து வந்திருந்தாலும் மிகை நடிப்பில்லாமல் யதார்த்தமாக நடிப்பதில் ஆதிரா தனி பானியைக் கடைபிடிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன் நிறைய ஒத்திகை பார்ப்பதாகவும் சொல்கிறார் ஆதிரா.
“ உண்மையில் நான் ஒரு ஹைஃபையான் ஆளு. எளிய மக்களின் கதாபாத்திரத்துல நடிக்குற அளவுக்கு அந்த மாதிரி வாழ்க்கையை முன்னபின்ன நான் பார்த்ததும் இல்லை. ஆனால், அதுபோன்ற கதாபாத்திரங்கள்ல நடிக்குறது நிறைய சவாலான விஷயம்தான். ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மாவாக நடிச்சேன். அதுக்காக மீன் விற்கும் பெண்களை பல பேர தொடர்ந்து கவனிச்சுவந்தேன். அவுங்களோட மேனரிஸம், பேசுறவிதம் என எல்லாத்தையும் கவனிச்சுதான் நடிச்சேன். ‘சர்வம்தாளமயம்’ படத்துலகூட ‘எப்ப பார்த்தாலும் கச்சேரிக்கு போனா, சோத்துக்கு இன்னா பண்றது’ என்று கேட்குற கதாபாத்திரம்கூட எளிய மக்களிடம் கவனித்த விஷயங்கள்தான்” என்கிறார் ஆதிரா.
சினிமாவில் நடிப்பதோடு நாடகங்களை இயக்கி நடிப்பதிலும் ஆதிரா தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார். இவருடைய நவீன கூத்துப்பட்டறையிலிருந்து பல சினிமா கலைஞர்கள் உருவாகி, சினிமாவுக்குள் வந்திருப்பதாகவும் பெருமையாகச் சொல்கிறார்.
“நவீன கூத்துப்பட்டறையில் நிறைய பேருக்கு நடிப்பு சொல்லித் தருகிறேன். ‘ஒரு குப்பைக் கதை’ வில்லன் சுஜூ இங்கிருந்து சினிமாவுக்கு போனவர்தான். சர்க்கஸ் மெஹந்தி பட நாயகன் இங்க பாடம் படிச்சவர்தான். ‘திமிரு புடிச்சவன்’ படத்துல வர்ற 3 பசங்களில் 2 பேர் எங்களிடம் பாடம் படிச்சவங்கதான். ‘கனா’ படத்துல கிரிக்கெட் விளையாடுற எல்லா பெண்களும் நாங்கதான் பயிற்சி கொடுத்தோம். ‘ஜடா’ படத்தில் 60 சதவீதம் பேர் எங்க பட்டறையச் சேர்ந்தவங்கதான் நடிச்சிருங்காங்க” என்று பெருமையாகச் சொல்கிறார் ஆதிரா.
தமிழ் சினிமாவில் ‘காப்பி பேஸ்ட்’ நடிப்பு பெருகிவருவதாக வருத்தப்படும் ஆதிரா, ‘டிக்டாக்’ மூலம் குறுக்கு வழியில் சினிமாவுக்குள் நுழைவதையும் எதிர்க்கிறார். “எதையாவது பார்த்து அதை அப்படியே ‘இமிடேட்’ செய்து நடிப்பது நடிப்பல்ல. இது தமிழ் சினிமாவில் பெருகிக்கொண்டு வருகிறது. அதை மாற்றிவிட்டு வித்தியாசனான நடிப்பு களாத்தை இங்கே கொண்டுவர வேண்டும். அதன் மூலமாக வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்றும் உறுதியாகச் சொல்கிறார் ஆதிரா.
கேள்வி - பதில்
அம்மா கதாபாத்திரம் மட்டும் போதுமா?
உலகத்தின் பார்வையில் ஒளிந்துகிடக்கிற எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்கவும் ஆசை.
லட்சியம்?
பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
கனவு?
சினிமாவை இயக்க வேண்டும்.
இலக்கு?
வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும்.
மறக்க முடியாத நிகழ்வு?
‘டூலெட்’ படத்துக்காக சிறந்த சப்போர்டிங் ஆர்டிஸ்ட் விருது கிடைத்தது.
அடுத்த படங்கள்?
இயக்குநர் அமீரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’; கலையரசன் நடிக்கும் ‘குதிரை வால்’; கதிர் நடிக்கும் ‘ஜடா’; பெயரிடாத சிவகார்த்திகேயன் படம்.
- இந்து தமிழ், 17-05-2019
No comments:
Post a Comment