
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் தலைமையில் அணி அமைக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்குத் தூபம் போட்டுவருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்ருமான சந்திரசேகர ராவ். ஓரிடத்தில் அரசியல் படித்து, வளர்ந்த இவர்கள், தற்போது ‘கிங் மேக்க’ராகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு, என்.டி.ராமாராவ் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இளம் வயதில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். 1982-ல் ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த பிறகு தெலுங்குதேசத்தில் இணைந்தார். அப்போது என்.டி.ராமாராவின் மருமகன் என்ற கூடுதல் தகுதியும் அவருக்கு இருந்ததால், அடுத்த சில ஆண்டுகளில் என்.டி.ராமாராவின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவைப் போலவே தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பிறகு என்.டி. ராமாராவிடம் அரசியல் பாடம் படித்து, பின்னாளில் தெலங்கானா பகுதியில் ஹீரோவானவர் சந்திரசேகர ராவ். என்.டி.ராமாராவ் அமைச்சரவையில் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடு அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர் சந்திரசேகர ராவ். ஒன்றுபட்ட ஆந்திராவில் தெற்கே சந்திராபு நாயுடு என்றால், வடக்கே சந்திரசேகர ராவ். இது எல்லாமே சந்திரசேகர ராவ் 2001-ல் தனிகட்சி தொடங்கும் வரை இருந்த நிலை.
தெலங்கானா மாநிலம் கோரி தெலுங்கு தேசத்திலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை சந்திரசேகர ராவ் தொடங்கிய பிறகு இருவரும் எதிரும் புதிருமாக மாறினார்கள். 2014-ம் ஆண்டில் ஆந்திரா பிரிந்த பிறகு இவர்களுக்கு இடையேயான ஈகோ யுத்தம் பங்காளிச் சண்டையாகவே மாறிபோனது. இடையே 2009-ல் மட்டுமே இருவரும் ஒரே அணியில் இருந்தனர். காங்கிரஸை வீழ்த்தவும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியத்தால் வாக்குகள் சிதறாமல் இருக்கவும் இருவரும் கூட்டணி சேர்ந்தார்கள்.
அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாகவே சந்திரபாபுவும் சந்திரசேகர ராவும் துருவ அரசியலையே நடத்திவருகிறார்கள். தெலங்கானா பகுதியில் தெலுங்கு தேசம் என்ற கட்சியே இல்லாத அளவுக்கு அதன் ஆதரவு வாக்குகளை மொத்தமாகவே கபளீகரம் செய்துவிட்டார் சந்திரசேகர ராவ். அப்போது முதலே சந்திரபாபுவும் சந்திரசேகருக்கும் ஏழாம் பொருத்தம்தான். இருவருமே அரசியலில் பரஸ்பரம் எதிரியாகிவிட்டார்கள். சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணியில் சந்திரசேகர ராவ் இருக்கமாட்டார். சந்திரசேகர ராவ் இடம் பெறும் கூட்டணியை விட்டு சந்திரபாபு எப்போதும் தள்ளியே இருப்பார். தற்போதுவரை இவர்களுடைய அரசியல் சதுரங்கம் இதுதான்.
தெலங்கானாவிலும் ஆந்திராவில் மட்டுமே நீடித்துக்கொண்டிருந்த இவர்களுடைய பனிப்போர், இப்போது தேசிய அளவிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அதன் தாக்கம், 35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்துவந்த சந்திரபாபுவை, தற்போது காலம் அவரை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது. தெலங்கானாவில் தெலுங்குதேசத்துக்கிருந்த செல்வாக்கை சந்திரசேகர ராவ் சீர்குலைத்ததுபோல தற்போது ஆந்திராவில் காங்கிரஸை தாண்டி ஜெகன் மோகன் ரெட்டி பெரும் போட்டியாளராகிவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுக்கு ஆபத்பாந்தவனாக மாறிபோய்விட்டது. கூடவே பாஜக எதிர்ப்பு கோஷமும் அவருக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
ஆனால், சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பாகவே காங்கிரஸ், பாஜக அல்லாத ‘ஃபெடரல் அணி’யை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய தலைவர்களைச் சந்தித்துவந்தார் சந்திரசேகர ராவ். ஆனால், திடீரென தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சந்திரசேகர ராவ் தயாரானபோது, தேசிய அரசியலை மூட்டைக் கட்டிவைத்தார். இந்த இடைவெளியில்தான் உள்ளே நுழைந்தார் சந்திரபாபு நாயுடு. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் அணியை கட்டமைக்க பணிகளை முன்னெடுத்தார். சந்திரசேகர ராவை போலவே சந்திர பாபுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்துவந்தார்.
ஆனால், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, மீண்டும் தேசிய அரசியல் பாதைக்கு திரும்பினார் சந்திரசேகர ராவ். சந்திரபாபு நாயுடுவுக்கு போட்டியாகவும் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாகவும் மூன்றாவது அணி என்ற கோஷத்தை கடந்த ஜனவரியிலிருந்தே ஒலிக்கத் தொடங்கினார் சந்திரசேகர ராவ். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், மாயாவதி, அகிலேஷ், குமாரசாமி எனப் பலரையும் சந்தித்து ஆதரவுகோரினார் சந்திரசேகர ராவ்.
சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கை சந்திரபாபு நாயுடுவுக்கு எட்டிக்காயாக கசத்தது. தேசிய அரசியலில் தான் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்த சந்திரசேகர ராவ் செயல்படுவதாக நினைக்கத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கட்சிகளைத் திரட்ட சந்திரபாபு விரும்பியதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை கட்டமைக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பதைக் கண்டு சீறினார் சந்திரபாபு நாயுடு. சந்திரசேகர ராவ் ஏற்படுத்த நினைக்கும் அணி என்பது பாஜகவின் ‘பி’ டீம் என்று வெளிப்படையாக விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு.
கடந்த பிப்ரவரியில் மம்தா பானர்ஜியையும் நவீன் பட்நாயக்கையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசிய பிறகு டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இந்த இரு விஷயத்தையும் இணைத்து சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு. “தெலங்கானா மாநில நலனுக்காக பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்தித்தாரா அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவதைப் பற்றி மோடியிடம் விளக்கினாரா?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு. பதிலுக்கு சந்திரசேகர ராவ், “பல ஆண்டுகளாக பாஜகவுக்கு கூஜா தூக்கிக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, வெட்கமே இல்லாமல் தற்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்” எனப் பதிலடி தந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட இந்த இரு தலைவர்களுமே தனித்தனியாக தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால், இந்த இரு தலைவர்களின் முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இரு தலைவர்களுமே தத்தமது மாநில தேர்தல் பிரசாரங்களில் களமிறங்கிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மே 23-ம் தேதிக்காக எல்லா அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன. தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என கட்சிகள் பதற்றத்தில் இருக்கின்றன. ஆனால், சந்திரபாபு நாயுடுவும் சந்திரசேகர ராவும் மீண்டும் தேசிய அளவில் அணி சேர்க்கைக்காகப் புறப்பட்டுவிட்டார்கள்.
ராகுல், மம்தா என அடுத்தடுத்து அரசியல் கட்சிகளைத் தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறார். சந்திரசேகர ராவும் கேரள முதல்வர் பினராயி விஜயனில் தொடங்கி தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இருவருமே ‘தேசிய அரசியலில் ஒரு மாற்றம்’ என்ற அடிப்படையிலேயே எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துவருகிறார்கள். இருவருமே தேசிய அரசியலில் ‘கிங்மேக்கர்’கள் ஆவதற்கு முயற்சிகளை செய்துவருகிறார்கள். இதன் பின்னணியில் அவர்களுக்கு இடையே உள்ள ‘ஈகோ’வும் ஒரு காரணம்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் தெலங்கானா பகுதியில் போட்டியிட முடியும் என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் சுத்தமாக துடைத்து எறியப்பட்டுவிட்டது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதால், தெலங்கானா பகுதியில் இந்த முறை தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை. 37 ஆண்டுகால தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுக்கும் சூழலூக்கு சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். இதற்கு மூலக் காரணம் சந்திரசேகர ராவ். இதனால், இயல்பாகவே சந்திரசேகர ராவ் மீது சந்திரபாபு நாயுடுவுக்கு தீராக் கோபம். இந்த மையப் புள்ளிதான் தேசிய அரசியலிலும் அவர்களைத் தனித்தனி ஆவர்த்தணங்களை செய்ய வைத்திருக்கிறது.
கடந்த காலங்களில் ஒன்றுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் தேசிய அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள். 1988-ல் தேசிய முன்னணியின் அமைப்பாளராக என்.டி.ராமாராவ் இருந்தார். 1996-ல் ஐக்கிய முன்னணி உருவானதில் சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்டமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளைக் கொண்டுவரும் பொறுப்பை காங்கிரஸ் கட்சியே மேற்கொள்ளவில்லை. மாறாக சந்திரபாபு நாயுடு அதற்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.
இதுவரை சந்திராபு நாயுடு மட்டுமே செய்துவந்த ‘கிங் மேக்கர்’ பணியைப் பங்குபோட தற்போது சந்திரசேகர ராவும் வந்துவிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இருவரில் ‘கிங்மேக்கர்’ போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தேர்தல் முடிவுதான் நிர்ணய செய்யும். தேர்தலில் பாஜக கூட்டனி 200-க்கும் குறைவான தொகுதிகளைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையிலேயே ‘கிங் மேக்கர்’ போட்டியில் இவர்கள் நீடித்துவருகிறார்கள். எதிர்ப்பார்ப்பதுபோல நடந்தால், ‘கிங் மேக்கர்’ போட்டி இன்னும் சுவாரசியமாகும்.
No comments:
Post a Comment