01/02/2019

ஒரு ‘பேச்சுலர்’ தவளையின் காதல் கதை

திருமணத்துக்காக மாப்பிள்ளை, பெண் தேடுவதைப் போல ஒரு ஆண் தவளையின் ஜோடிக்காக பொலிவியாவில் 10 ஆண்டுகாலமாக நடந்து வந்த பெண் தவளைத் தேடும் படலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ரோமியோ என்ற அந்த ஆண் தவளைக்காக நடந்த தேடுதல் வேட்டையில் ஜூலியட் என்ற பெண் தவளை கிடைத்துவிட்டது. ரோமியோவோடு அந்த இனமே அழிய இருந்த நிலையில், ஜூலியட் மூலம் அந்தத் தவளை இனம் பெருக வழிகிடைத்திருப்பதால் ஆய்வாளர்கள் ஆனந்த கூத்தாடிவருகிறார்கள்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில்  10 ஆண்டுகளுக்கு முன்பு செஹியூன்காஸ் (Sehuencas) என்ற தவளையை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். நீர்த் தவளை இனத்தைச் சேர்ந்த இந்தத் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்ததில், இது அபூர்வமான வகையைச் சேர்ந்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த இனத்தைச் சேர்ந்த தவளைகள் வேறு எங்குமே இல்லை என்பதால், மிகவும் அரிய வகை தவளை பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. ‘ரோமியோ’ என பெயர் சூட்டப்பட்ட இந்தத் தவளையை பொலிவியாவில் கோச்சபாம்பா நகரில் உள்ள நீர்வாழ் உயிரின காட்சியகத்தில் வைத்து பராமரித்துவந்தனர்.

பிற தவளைகளோடு சேர்த்து வைக்காமல், தனித்து இந்தத் தவளையைப் பராமரித்தனர். செஹியூன்காஸ் தவளையின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகாலம் என்பதால், ரோமியோவோடு இந்தத் தவளை இனம் அழிந்துவிடும் அபாயம் இருந்துவந்தது. இந்த அபாயத்தைப் போக்கி ரோமியோவின் சந்ததிகளை உருவாக்க விலங்கியல் ஆய்வாளர்கள் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்கள். இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளை தேடும் முயற்சியில் ஆய்வாளர்கள் குதித்தார்கள். இதற்காக பொலியாவில் காடு, மலை என வெவ்வேறு இடங்களுக்கு ஆய்வாளர்கள் குழு சென்றது.
இதன் காரணமாக ஒரு பக்கம் செலவும் எகிறியது. ரோமியோவுக்கு பெண் தவளை தேடும் முயற்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவானது.

 இதன் காரணமாக   ‘ரோமியோ டேட்டிங்’கிற்காக அது பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இணைய செய்தியால் ரோமியோ தவளை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டைத் தேடுவதற்காக நிதி உதவியும் குவிந்தது. கோச்சபாம்பா நகர கண்காட்சியக நீர், நில வாழ்வன, ஊர்வன குறித்த படிப்பான ஹெர்படாலஜி துறையின் தலைவர் தெரீசா கமாச்சோ படானி தலைமையில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக ரோமியோவுக்கு பெண் தவளையைத் தேடிவந்திருந்தாலும், கடந்த ஆண்டு முதல்தான் தேடுதல் வேட்டை தீவிரமானது. பொலிவியாவின் மழைக் காட்டில் பயணம் மேற்கொண்ட ஆய்வாளர் குழு, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஓர் ஓடையில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டை ஒரு வழியாகக் கண்டுபிடித்தனர். அந்த ஓடையில் 5 செஹியூன்காஸ் தவளைகளைப் பிடித்து கொண்டுவந்தது ஆய்வாளர் குழு. பிடித்து வரப்பட்ட ஐந்து தவளைகளில் மூன்று ஆண் தவளைகள்,  இரண்டு பெண் தவளைகள் இருந்தன.

ஏற்கனவே இதே பகுதியில் விலங்கியல் ஆய்வாளர்கள் தேடியபோது கிடைக்காத செஹியூன்காஸ் தவளைகள், இப்போது கிடைத்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது ஆய்வாளர் குழு. தற்போது 10 வயதான ரோமியோ, இன்னும் 5 ஆண்டுகள்வரை வாழக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள். இதுவரை ‘பேச்சுல’ராகவே இருந்துவிட்ட ரோமியோவுக்கு இப்போதுதான் ஜூலியட் கிடைத்திருக்கிறது. ரோமியோவோடு செஹியூன்காஸ் தவளைகள் முடிவுக்கு வந்துவிடும் என்ற கவலையில் இருந்த ஆய்வாளர்கள், ஜூலியட் கிடைத்ததால் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது.
கிடைத்த இரண்டு பெண் தவளைகளில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள்.  நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜூலியட்டை தனியாக வைத்து பராமரித்துவருகிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான சிகிச்சையும் ஜூலியட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது. சிகிச்சை முடிந்த பிறகு ரோமியோவும் ஜூலியட்டும் சந்திக்க உள்ளன.

ரோமியோவும் ஜூலியட்டும் ஜோடி சேரும் நாளுக்காக ஒட்டுமொத்த விலங்கியல் ஆய்வாளர்கள் குழுவும் காத்திருக்கிறது!

 - இந்து தமிழ், 26/01/2019

No comments:

Post a Comment