அப்போதுதான் சனந்த் ரெட்டிக்கும் ரஜினிக்கும் உள்ள மறைமுகமான நெருக்கம் தெரியவருகிறது. சனந்த் ரெட்டியை வட இந்திய கும்பல் ஏன் கொல்ல நினைக்கிறது என ரஜினி ஆராய்கிறார். இன்னொரு புறம் அந்தக் கொலையைத் தடுத்தது யார் என்று அந்தக் கும்பலும் ஆராய்கிறது. அந்தக் கும்பலுக்கும் சனந்த் ரெட்டிக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு, ரஜினி ஏன் வார்டனாக வந்தார், அந்தக் கும்பலை ரஜினி என்ன செய்தார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘பேட்ட’.
முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் விரும்பும் ஒரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை எப்படியெல்லாம் காட்டினால், அவரது ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதையெல்லாம் யோசித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட படம் முழுவதுமே நீக்கமற நிறைந்திருக்கிறார் ரஜினி. வார்டனாக வரும் காளி ரஜினியின் ஸ்டைலும் மேனரிசமும் கவர்கிறது. மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் களைவது, அவ்வப்போது சிம்ரனுடன் ரொமான்ஸ் செய்வது, மூனிஸ்காந்தை கலாய்ப்பது, வில்லன் வீட்டுக்கே சென்று அவரை கூலாக எதிர்கொள்வது என முதல் பாதியில் ரஜினி ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்கிறார்.
தன் ரசிகர்கள் விரும்பும் வகையில் சில சமகால அரசியல் வசனங்களையும் தொட்டு பேசுகிறார் ரஜினி. இதேபோல காதலர் தினம் கொண்டாடுவோரை உதைப்பது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது போன்ற சில சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவூட்டுவது ரசிக்க வைக்கிறது. முதல் பாதி ரகளையும் சேட்டையுமாகப் போகிறது. அதற்கு ரஜினியின் கலகலப்பும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.
ரஜினி ரசிகர்கள் விரும்பும் ‘பாட்ஷா’ படம் போல எடுக்கப்பட்ட படம்தான் இது. அதற்காக ‘பாட்ஷா’வையே உல்டா செய்வது? அந்தப் படத்திலிருந்த பாத்திர வார்ப்புகளை பட்டி, டிங்கரிங் செய்து இந்தப் படத்தில் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். முதல் பாதியின் முடிவில் எழும் திருப்பங்களுக்கு இரண்டாம் பாதி திரைக்கதையில் தரமான, சிறப்பான சம்பவங்கள் எதுவும் இல்லாமல் போவது படத்துக்கு பலவீனமாகிறது. பழிவாங்கலுக்காகக் காட்டப்படும் காட்சிகள் எல்லாமே போகிற போக்கிலேயே சொல்லப்படுகின்றன. படத்தில் காட்டப்படும் நடப்பு காட்சிகளுக்கும் ஃபிளாஸ்பேக் காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி என்ன செய்கிறார் என்று எழும் கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை.
மதுரையில் ரஜினியைப் பார்த்தாலே பயப்படும் வில்லன் நவாஸுதீன் சித்திக்கை உத்தரப்பிரதேசத்தில் பெரிய அரசியல் பின்னணி உள்ள வில்லனாகக் காட்டுகிறார்கள். அவர் பெரிய வில்லனாக காட்டுவதற்கான ஒருசில நியாயமான காட்சிகளைப் படத்தில் வைத்திருக்கலாம். இறந்துகிடக்கும் தன் மனைவியையும் மகனையும் அம்போவென விட்டுவிட்டு நண்பனின் மனைவியை ரஜினி காப்பற்றுவது என மனதில் ஒட்டாத காட்சிகளும் படத்தில் வந்துசெல்கின்றன. ரஜினி - சசிகுமார் நட்பின் பின்னணியிலும் சுவாரசியம் இல்லை. எல்லோரும் ஊகிக்கக்கூடிய ஒரு திருப்பத்தைப் படத்தில் வைத்துவிட்டு, அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பத்தை கிளைமாக்ஸில் காட்டுவது ஆச்சரியம் மூட்டினாலும், அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் கொஞ்சமும் வலுவில்லை.
வில்லனின் மகனாக வரும் விஜய் சேதுபதி கச்சிதமாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் நவாஸுத்தின் சித்திக் அடாவடி காட்டாமல் அமைதியாக நடித்திருக்கிறார். படத்தில் சிம்ரனும் த்ரிஷாவும் இருக்கிறார்கள். இருவரையுமே சரியாகப் படத்தில் பயன்படுத்தவில்லை. கெட்ட மாணவனாக வந்து பின்னர் திருந்துபவராக வருகிறார் பாபி சிம்ஹா. இயக்குநர் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மேகா ஆகாஷ், முனீஸ்காந்த், குரு சோமசுந்தரம் எனப் பலருக்கும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை அனிருத். ‘வரணும்.. மாசு வரணும்..’ பாடல் ரசிக்க வைக்கிறது. திருவின் கேமரா மலைக்காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.
ரஜினியை மாஸாகக் காட்ட இயக்குநர் மெனக்கெட்டதை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் ‘பேட்ட’ ரசிகர்களுக்கு ‘வேட்ட’யாக இருந்திருக்கும்.
மதிப்பெண்: 2.5 / 5
No comments:
Post a Comment