![]() |
ராம்குமார் |
புதிய ரசனை
ஒரு திரைப்பட இயக்குநர் வெளிப்படுத்தும் வெவ்வேறுவிதமான ரசனைகளின் சங்கமம்தான் சினிமா. அந்த ரசனைகள் மெருகேறி கதைக்கான கருவாக உருவாகி பிறக்கும்போது அழகிய திரைக்கதையுடன் கூடிய சினிமா கிடைக்கிறது. அப்படி ராம்குமாருக்குள் எழுந்த கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு ரசனையாக எடுக்கப்பட்ட இரு படங்கள்தான் ‘முண்டாசுப்பட்டி, ‘ராட்சசன்’. இரண்டு படங்களுக்கும் இரு துருவ வித்தியாசம். பாமர மக்களின் மனங்களில் காலங்காலமாகப் பசைபோட்டு ஒட்டியிருக்கும் ஒரு மூடநம்பிக்கையை எளிய கிராமிய பின்னணியில் முழு நீள நகைச்சுவை படமாகக் கொடுத்த ராம்குமார், அடுத்தப் படமாக ‘ராட்சச’னை கண் முன்னே கொண்டுவந்து பார்வையாளர்களை மிரட்டினார்.
ஒரு வரிக் கதைக்கு நேர்த்தியான திரைக்கதை, அதையொட்டி கிளைக் கதைகளை அச்சுபிசகாமல் அமைக்கும்போது நல்ல படம் நிச்சயம் கிடைத்துவிடும். ‘முண்டாசுப்பட்டி’ அப்படி கிடைத்த படம்தான். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட ராம்குமார், சினிமாவுக்கென இருக்கக்கூடிய வழக்கமான நடைமுறைகளைத் தகர்த்தெறிந்து இயக்குநரானவர். எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராகவோ அசோசியேட் இயக்குநராகவோ பணியாற்றாமல் நேரடியாக இயக்குநராகி, சினிமா களத்துக்கு வந்தவர். ‘நாளைய இயக்குநர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் அவர் சினிமாவுக்குள் நுழைவதற்கான முகவரி. அந்த நிகழ்ச்சியில் அவர் கட்டிய ‘முண்டாசுப்பட்டி’ எனும் குறும்படம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் ‘முண்டாசுப்பட்டி’யை சினிமாவாக எடுக்க அவருக்கு துணிச்சலைத் தந்தது.
வெவ்வேறு கதைக்களம்
எண்பதுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்களை நம்பி விஜயகாந்த் வாய்ப்பு தந்ததைபோல குறும்பட இயக்குநராக இருந்தாலும் நம்பிக்கையோடு வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர் சி.வி. குமார். ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்கு திரைக்கதை அமைக்கவே ஓராண்டு தேவைப்பட்டது என்கிறார் ராம்குமார்.
![]() |
முண்டாசுப்பட்டி |
‘முண்டாசுப்பட்டி’ எனும் வெற்றிப் படத்துக்குப் பிறகு ராம்குமாரை சினிமாவில் காணவேயில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து ‘ராட்சச’ அவதாரம் எடுத்து களத்துக்கு வந்தார். இந்த டிஜிட்டல் யுகத்தில் 60 நாட்களைக் கடந்து தியேட்டரில் ஓடியதே இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கான அத்தாட்சி. அண்மைக் காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் படம் என்ற பெயரையும் ‘ராட்சசன்’ எடுத்தது. ரஷ்யாவில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கதையை எழுதத் தொடங்கினார் ராம்குமார். தனது கனவுப் படமாக நினைத்த ராம்குமார், இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்குவதற்கு மட்டும் நான்கு ஆண்டுகளை செலவழித்திருக்கிறார்.
வாய்ப்புத் தேடி..
முதல் படத்துக்காக அலையாய் அலையும் இயக்குநர்கள் ஏராளம் உண்டு. ஆனால், பெரிய வெற்றிப் படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்காக புதுமுக இயக்குநரைப்போல அலைவதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கும் விசித்திரம். ராம்குமாருக்கு இப்படித்தான் நடந்தது. வெற்றிப் படமான ‘முண்டாசுப்பட்டி’யை எடுத்த ராம்குமார், தொடர்ச்சியாக கொலைகளை செய்யும் சைக்கோ பற்றிய கதைக்கான கருவுடன் ஒரு புதுமுக இயக்குநரைப் போல வாய்ப்புத் தேடி அலைந்தார். ‘ராட்சசன்’ படத்தில் நாயகன் விஷ்ணு இயக்குநராக வாய்ப்புத் தேடி அழையும் காட்சிகள் எல்லாமே ராம்குமாரின் அனுபவங்கள்தாம்.
இதுபற்றி இயக்குநர் ராம்குமார் இப்படிச் சொன்னார். “‘முண்டாசுப்பட்டி’யின் பிம்பம் என் மீது விழுந்ததால், ‘ராட்சசன்’ படத்தைத் தயாரிக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. ‘ராட்சசன்’ கதையை 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருப்பேன். பலருக்கும் நம்பிக்கையே வரவில்லை. நிராகரிக்கும்போதுதான் படைப்பின் மீது தீவிரமான காதல் உண்டாகும். எனக்கும் ‘ராட்சசன்’ படத்தின் மீதான காதல் தீவிரமானது அப்படித்தான். அதனால்தான் அந்தப் படம் எனது கனவுப் படமானது.” என்கிறார் ராம்குமார். அந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் எனும் அளவுக்கு ‘ராட்சசன்’ படம் ராம்குமாரின் லட்சியப்
![]() |
ராட்சசன் |
ராட்சசன் மேஜிக்
சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீளம் கொண்ட ‘ராட்சசன்’ படத்தை தொடக்கம் முதல் கடைசிவரை த்ரில்லிங் குறையாமல் பார்த்துகொண்டதில் இயக்குநர் ராம்குமார் ஜெயித்துகாட்டினார். உளவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால், அதற்கேற்ப வேகத்தடை இல்லாத திரைக்கதையை அமைத்ததும் படம் மிகப் பெரிய வெற்றியடைய காரணமானது. சிதைக்கப்படும் பொம்மை, காது கேளா கருவி, பியானோ இசை, மேஜிக் என விடை தெரியாமல் கிடைக்கும் தடயங்களை வைத்துகொண்டு கொலையாளியை நாயகன் அடையாளம் காணும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் ‘ராட்சசன்’ படத்தை ஹாலிவுட் அளவுக்கு உயர்த்தியது.
எப்போதுமே முதல் படத்தின் பாணியிலேயே தனது அடுத்தடுத்தப் படங்களை இயக்குவது இயக்குநர்களுக்கே உரித்தானது . சில இயக்குநர்கள்தாம் இரண்டாம் படத்திலேயே தனது டிராக்கை விட்டு இறங்கி அடுத்த ரசனைக்கு செல்வார்கள். ராம்குமாரும் அப்படி தமிழ் சினிமாவில் காலங்காலமாகத் தொடரும் அழுத்தங்களுக்குப் படியாமல் மாறி சென்றதால்தான் மாறுபட்ட ரசனைகளைக் கொண்ட இரு படங்களை அவரால் கொடுக்க முடிந்தது.
தரமான சினிமா லட்சியம்
ஒரு இயக்குநர் என்பவர் எதுவும் வராது என்று சொல்லக் கூடாது. எல்லாவற்றையும் செய்துகாட்ட வேண்டும். எப்போதும் சினிமா என்பதை மறந்து, அந்தக் கதைக்குள் பார்வையாளர்களை இழுத்து செல்லும்போதுதான் படைப்பாளிக்கு வெற்றி கிடைக்கிறது. இந்த உத்தி ராம்குமாருக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்குள் பார்வையாளர்களை இழுத்து சென்றுவிட்டதில் அவரது வேகமான, விறுவிறுப்பான திரைக்கதைக்கும் முக்கிய பங்குண்டு. பார்வையாளர்களை சினிமாவுக்குள் லயிக்க வைத்தால்தான் அது நல்ல திரைக்கதை. எல்லா உணர்வுகளையும் படத்துக்குள் கொண்டுவரும்போது பார்வையாளர்களை அது பரவசப்படுத்தும். ஆனால், அதற்கு மெனக்கெட வேண்டும். இந்த விஷயத்தில் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ என இரு படங்களுக்கும் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார் ராம்குமார்.
தரமான, ரசனையான படங்களுக்கு ரசிகர்கள் தார்மீக ஆதரவை எப்போதுமே தர தவறுவதில்லை. வெவ்வெறு கதை அம்சங்கள் உள்ள படங்களைத்தாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போதுவரும் புதிய இயக்குநர்கள் பலரும் அதை நன்றாகவும் உணர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் ராம்குமாரும் இதையே எதிரொலிக்கிறார். “தன்னுடைய காசை செலவு செய்து, இரண்டரை மணி நேரத்தையும் சினிமாவுக்காக ரசிகர்கள் தருகிறார்கள். அப்படி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அது மிகச் சிறந்த படைப்பாக வரும். நல்ல படைப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். குறைந்தபட்சம் நல்ல பொழுதுபோக்கை கொடுத்தால்தான், ரசிகர்கள் திருப்தி அடைவார்கள்.” என்கிறார் ராம்குமார்.
தொடரட்டும் மாற்று சிந்தனை
இன்றைய இயக்குநர்கள் பலரும் சமூகக் கருத்துடன் கூடிய சினிமாவை எடுக்க அதிக அக்கறை காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் ராம்குமார் சற்று மாற்று சிந்தனை உள்ளவராகவே இருக்கிறார். சினிமாவில் பொழுதுப்போக்கிற்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றே அவர் எப்போதும் வலியுறுத்துகிறார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் கேமராவில் படம் பிடித்தால் இறந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை ராம்குமார் சொல்லியிருந்தார். காலங்காலமாக எளிய கிராமத்து மக்களிடம் பரவியிருக்கும் மூட நம்பிக்கை அது. அதை அதிக மிகையில்லாமல் அந்தப் படத்தின் கதையோட்டத்தோடு ராம்குமார் சொல்லியிருப்பார். "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சமூகக் கருத்துகளை அளவாகச் சொன்னால் போதும்” என்பதுதான் ராம்குமாரின் தீர்க்கமான எண்ணம்.
இந்தத் தலைமுறை இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரித்துவிடலாம். வெளி நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பை உள்வாங்கி, அந்தக் கதையை நம்முடைய மண்ணுக்குப் தகுந்தார்போல உல்டாவாக்கி படத்தை இயக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அயல்நாட்டுக் கதைகளின் தாக்கம் இல்லாமல் மண் சார்ந்த கதைகளை ரசனையுடன் சொல்வோர் இரண்டாவது ரகம். இந்த இரண்டு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அது. இவர்களில் ராம்குமாரும் ஒருவர். மண்ணின் மனம் வீசும் கதையையும் சொல்கிறார். ஹாலிவுட் பாணியிலான கதையையும் சொல்கிறார். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனிபோடுகின்றன. தமிழ் சினிமாவுக்கு இது ஆரோக்கியமான, புதுமையான விஷயம். இது என்றும் தொடர வேண்டும்!
ராம்குமார் கேள்வி - பதில்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா விமர்சனத்தின் தரம் மேம்பட்டிருக்கிறதா தாழ்ந்திருக்கிறதா?
சினிமா விமர்சனம் என்பது எப்போதும் நிறை, குறைகளைப் பற்றி பேச வேண்டும். குறைகளை மட்டுமே சொல்வது என்பது இப்போது அதிகரித்துவிட்டது. குறைகளை மட்டும் அடுக்கி படத்தை மதிப்பீட்டு சொல்வது தவறு. அந்தவகையில் தரம் தாழ்ந்திருக்கிறது. ‘ராட்சசன்’ படத்தையும் இப்படி குறைகளை மட்டும் பட்டியலிட்டு விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்த விமர்சனத்துக்கு எதிராக ரசிகர்கள் கருத்து சொல்லி வாயை அடைத்தார்கள். எப்போதும் சினிமா விமர்சனம் நடுநிலையுடன் இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் உள்ளடக்கத்தில் என்ன மாறுதலைச் செய்ய வேண்டும்?
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை திரை மொழி மாறிகொண்டிருப்பதாக எனக்கு ஓர் எண்ணம். பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தும் விஷயம் மாறிக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அந்த மாற்றத்தை ஒவ்வொரு இயக்குநர்களும் கற்றுக்கொண்டால்தான் நிலைத்து நிற்க முடியும். திரை மொழியைக் கற்றுக்கொண்டால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அதில் எனக்கு விருப்பம் நிறைய இருக்கிறது. அப்படி மாற்றிக்கொண்டால், உலகப் படங்களுக்கு இணையாககத் தமிழ்ப் படங்களும் போட்டிப்போட முடியும்.
- இந்து தமிழ் பொங்கல் மலர், 2019
No comments:
Post a Comment