காதலிக்க பெண் வேண்டும், அரட்டை அடிக்கவும் ஊர் சுற்றவும் தோழி வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பதினொறாம் வகுப்பு பிரஸ்ஸர் தினத்தில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள். பார்த்த மாத்திரத்தில் ரோஷனும் பிரியா வாரியரும் காதல் கொள்கிறார்கள். ஒரு சிறிய மனஸ்தாபத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது. காதலைச் சேர்த்து வைக்க களத்தில் குதிக்கும் நண்பர்கள், ரோஷனையும் பள்ளித் தோழியாக இருக்கிற நூரின் ஷெரீஃப்பையும் காதலிப்பதுபோல நடிக்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், பிரியா வாரியர் வழிக்கு வருவார் என்றும் யோசனை சொல்கிறார்கள். இதன்படி காதலிக்க நடிக்கத் தொடங்கும் இருவருமே ஒரு கட்டத்தில் நிஜமாகவே காதல் வயப்படுகிறார்கள். அதே நேரத்தில் பிரியா வாரியரும் திரும்பிவருகிறார். இறுதியில் யாருக்கு காதல் கைகூடியது என்பதுதான் ‘ஒரு அடார் லவ்’வின் கதை.
இளைஞர்களைக் கவரும் விதத்தில் படத்தை எடுக்க இயக்குநர் ஒமர் லுலு முயற்சித்திருக்கிறார். முதல் பாகம் முழுவதுமே மாணவர்கள் அடிக்கும் லூட்டிகளால் காட்சிகள் நகருகின்றன. ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் ஒரே மாதிரியாக வரும் காட்சிகள் திகட்ட வைத்துவிடுகின்றன. பள்ளிக்கூட கலகலப்பு, மாணவிகளைக் கவர மாணாவர்கள் போடும் மொக்கை உத்திகள், நாயகன் நாயகியின் காதல் விளையாட்டு, முரட்டு முகத்துடன் அவ்வப்போது வந்து ஜூனியர்களை மிரட்டும் சீனியர் மாணவர்கள் என முதல் பாகத்தில் கதைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திரைக்கதைப் பயணிக்கிறது.
விடலைப் பருவத்துக் காதல் கதைக்குள் இருக்கும் காமம், வன்மம், சோகம் என எல்லா பக்கங்களையும் தொட்டு செல்கிறார் இயக்குநர். ஆனால், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் அர்த்தம் தெரியாத பதின் பருவத்தினரைப் போல இயக்குநரும் குழம்பியிருப்பார் போலும். விளைவு, பள்ளிக் கூட மாணவர்களையும் மாணவிகளையும் காதல் பித்து பிடித்தவர்களாக படம் முழுக்க காட்டுகிறார். வகுப்பில் உள்ள மாணவர்கள் எல்லாருமே மாணவிகளுடன் ‘கமிட்’ ஆகத் துடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். எந்தப் பயமும் இன்றி பள்ளிக்கூடத்திலேயே நாயகனும் நாயகியும் முத்தத்தைப் பரிமாறிகொள்கிறார்கள். போதாக்குறைக்கு எந்த மாணவியும் கிடைக்காத மாணவன் ஒருவன், ஆசிரியைக்கே காதல் இம்சை கொடுக்கிறான்.
இப்படி ஒரு பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு பதின்பருவத்து காதல் நச்சுகளை படம் முழுவதும் இயக்குநர் படரவிட்டிருக்கிறார். எல்லோரையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் இயக்குநர் வைத்திருக்கும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஊகிக்கும் வகையில் இருப்பதால், மனதைத் தொடாமலேயே ஒரு காட்சியாகக் கடந்துவிடுகிறது. படத்தைத் திரைக்கதையாக்கிய வகையில் இயக்குநர் சொதப்பியிருந்தாலும் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
அறிமுக நாயகன் ரோஷன் அப்துல் ரஹூஃப் பதின்பருவத்து வயது கோளாறுகளை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ப அவரது உடல்மொழியும் கச்சிதம். படம் முழுவதுமே அவர் புருவத்தை உயர்த்திக்கொண்டே இருப்பது மட்டுமே ஒரே உறுத்தல். நாயகியாக வரும் பிரியா வாரியர் ஃபிரெஸ்ஸாக இருக்கிறார். முதல் பார்வையிலேயே கண்ணடித்து நாயகனை ஈர்ப்பதுபோல ரசிகர்களையும் ஈர்த்துவிடுகிறார். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடிக்கவும் செய்திருக்கிறார். தோழியாக வரும் நூரின் ஷெரீஃப் படம் முழுவதும் வருகிறார். அவரது கொள்ளை அழகும் ரசிக்க வைக்கும் அவரது முக பாவனைகளும் ஈர்க்கின்றன.
நண்பனாக வரும் ஷாஜஹான், ஆசிரியர்களாக வரும் ரோஷன் அன் ராய், அனீஸ் மேனன், சிவாஜி குருவாயூர், பிரதீப் கோட்டயம் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். சீனு சித்தார்த்தின் கேமரா காட்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளது.
விடலைப் பருவத்து காதல் கதையை அடர்த்தியோடு சொல்லியிருந்தால் ‘ஒரு அடார் லவ்’ இன்னும் அழகாக இருந்திருக்கும்.
மதிப்பெண் 2.5 / 5
No comments:
Post a Comment