
கனடாவில் பிறந்து, வளர்ந்து கிறிஸ்தவ மத போதகராகத் தமிழகத்துக்கு வந்தவர் ஜி.யு. போப். 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்த ஜி.யு. போப், தன்னுடைய கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்’ என்று பெருமிதத்துடன் எழுதச் சொன்னவர். அவருடைய காலத்திலேயே தொடங்கிய தமிழ்நாட்டுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு, இன்றைக்கு உச்சத்துக்குச் சென்றுள்ளது.
ஆனால், மிகப் பெரிய அளவில் தமிழர்களுக்கும் கனடாவுக்கும் நெருக்கம் அதிகரித்தது 1980-ம் ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஈழத் தமிழர்கள் கனடாவில் அகதிகளாகக் குடியேறிய பிறகுதான் கனடாவில் தமிழர்களின் நவீனகால வரலாறு தொடங்கியது.

தமிழ்ப் பாரம்பரிய மாதம்
உலகில் இதுவரை எந்த நாடும் யோசிக்காத, வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பைக் கனடா வாழ் தமிழர்களுக்காக கனடா அரசு இந்த ஆண்டு மேற்கொண்டது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வோடு ஒன்றிய பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தை (ஜனவரி 2017) மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்ததே அந்த முன்னெடுப்பு. தமிழுக்குக் கனடாவில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.
பொங்கல் திருநாள் அன்று கனடா வாழ் தமிழர்களுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல; அங்கே உள்ள மாகாண முதல்வர்கள், மேயர்கள் ஆகியோரும் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துச் சொல்லத் தவறுவதில்லை.
இந்தியாவில் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடும் அதே வேளையில், வட இந்தியாவில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது வழக்கம். கனடாவில் வட இந்தியர்கள் அதிகம் வசித்தாலும், பொங்கல் திருநாள் வாழ்த்து சொல்லும்போது மகர சங்கராந்தியைச் சேர்த்துகூடச் சொல்வதில்லை. தமிழர் திருநாளுக்கும் தமிழர்களுக்கும் கனடாவில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
பிரதமரின் ஆர்வம்
ஒட்டுமொத்தமாக, கனடாவின் வளர்ச்சிக்குத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழர்களின் எண்ணங்கள், செயல்களுக்கு கனடா அரசு முக்கியத்துவம் தருகிறது. அந்த வகையில்தான் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘தமிழ்ப் பாரம்பரிய மாதம்’ அறிவிப்பு வெளியானது. கனடா பிரதமர் ட்ரூடோ தமிழ் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதைப் பல தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை ட்ரூடோ சுழற்றியது, சமூக ஊடங்களில் மிகப் பெரிய வைரலானது. இதேபோல கனடியத் தமிழ்ச் சங்கம் செப்டம்பரில் நடத்தும் ‘தமிழர் திருநாள்’ விழாவில் பங்கேற்பதிலும் ட்ரூடோ எப்போதும் ஆர்வம் காட்டுவார்.
பொங்கல் கொண்டாட்டம்
கனடாவில் இயல்பாகவே தமிழுக்கு முக்கியத்துவம் இருப்பதால், அந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு பொங்கல் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் சுமார் 12 மணி நேரம் வித்தியாசம். நாம் இங்கே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டு, மாலை வேளையில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்போம்.
கனடாவில் அப்போதுதான் பண்டிகைக் கொண்டாட்டமே தொடங்கும். பொங்கல் திருநாளை மெகா கோலங்களுடன் நம்மூரில் தொடங்குவோம். கனடாவில் இப்படிக் கோலம் போட வேண்டுமென்றால், முன்கூட்டியே அருகில் உள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார் கனடாவின் டொரண்டோ நகரில் சில காலம் வாழ்ந்த தாம்பரத்தைச் சேர்ந்த ஜீவிதா.
“கனடாவில் தமிழர் சார்ந்த எந்தத் திருநாளாக இருந்தாலும், கோலம் மூலம் அந்தப் பண்டிகையைப் பற்றி கனடியர்களுக்கு விளக்குவதைப் பார்க்க முடியும். பொங்கல் திருநாளையும் கோலம் போட்டு விளக்குவார்கள். அதன் மூலம் தமிழ்ப் பண்டிகையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் கனடியர்கள் உணர்ந்துகொள்வார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் நடக்கும்.
ஆனால், தமிழர்கள் ஆசையாகச் சமைத்து எடுத்துவரும் பொங்கலை கனடியர்கள் வாங்கிச் சுவைக்க மாட்டார்கள். சுகாதாரம் கெட்டுவிடும் என்று மறுத்துவிடுவார்கள். கனடாவில் இந்தியர்கள் நடத்தும் மளிகைக் கடைகளில் பொங்கல் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். மஞ்சள் கிழங்குகூடக் கிடைக்கும். தமிழர்கள் பூங்காக்களில்கூடி பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதும் உண்டு. அப்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று உற்சாகம் கரைபுரளும்” என்கிறார் ஜீவிதா.
தமிழுக்குச் சிறப்பு
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்த உடனே, இந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்திலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பொங்கல் திருநாளைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். கனடாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு இனத்தினர் வசித்தாலும், இது தமிழுக்குக் கிடைத்த மரியாதை என்கிறார் கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் வசிக்கும் முருகானந்தம்.
“அக்கம்பக்கத்தில் உள்ள கனடியர்களை அழைத்து தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். நாம் வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்து, அவர்களும் வேட்டியைக் கேட்டு வாங்கி அணிந்துகொள்வர்கள். தமிழர்கள் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளுக்கும் அங்குள்ள கோயில்களுக்குச் செல்வதையும் தவறாமல் கடைப்பிடிப்பார்கள். கோயில்களிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும். ஆனால், டொரண்டோ நகரில் கிடைப்பதுபோல மற்ற பகுதிகளில் பொங்கல் பொருட்கள் கிடைக்காது. எனவே, கிடைக்கும் பொருட்களை வைத்து பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்” என்ற முருகன், “கனடாவில் கோயில் கட்டுவதற்கான இடத்தை இலவசமாக வழங்குவது மட்டுமல்லாமல், அதைக் கட்டி முடிக்கவும் கனடா அரசு நிதி உதவி வழங்குகிறது” என்ற கூடுதல் தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

கனடியர் தமிழ்ச் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு கனடாவில் செயல்பட்டுவருகிறது. இதேபோல ஒவ்வொரு நகரிலும் தனித் தனித் தமிழ்ச் சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பொங்கல் திருநாள், தீபாவளி உள்ளிட்ட மற்ற பண்டிகைகள் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வசதியான சங்கங்கள், தமிழகத்தில் உள்ள பிரபலங்களை அழைத்து விழாக்களைக் கொண்டாடுவதும் உண்டு. ஆனால், தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர்களின் ஒன்றுகூடல் நிச்சயம் நடக்கும். இந்த விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக கனடிய மக்கள் பிரதிநிதிகளையும் தமிழர்கள் அழைப்பார்கள்.கனடாவிலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தமிழர்கள், தங்கள் குழந்தைகள் தமிழ்ப் பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெடுகிறார்கள். தமிழ்க் கற்றுக் கொடுப்பதற்காகக் குழந்தைகளைத் தமிழ் தனிப்பயிற்சி வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதற்காகவே தமிழ் கற்றுத் தருவோர் டொரண்டோவில் அதிகம் வசிக்கிறார்கள் என்கிறார் ஜீவிதா. “சிறுசிறு தமிழ்ப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்கூட கனடாவில் வேரூன்றியுள்ளன. தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன. கனடாவில் தமிழ்ச் சமூகத்தின் இருப்பும் தமிழர்களின் வீடுகளில் தமிழ்க் கலாச்சாரமும் சுதந்திரமாகவே இருக்கிறது” என்று பெருமையாகச் சொல்கிறார் ஜீவிதா.
பொங்கள் திருநாளைக் கொண்டாடுவதில் மட்டுமல்ல; தமிழ் பாரம்பரியமும் தமிழர்களும் ஆராதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் என்னவோ, தமிழர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகளின் பட்டியலில் கனடா எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது!
- தி இந்து பொங்கல் மலர், 2018
No comments:
Post a Comment