30/01/2018

ஆசியாவின் ‘ஆசியான்’ கதை!

முன் எப்போதும் இல்லாத ஒரு சிறப்பு, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த குடியரசுத் தின விழாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒரே சமயத்தில் ‘ஆசியான்’ என்றழைக்கப்படும் தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பின் பத்து நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்ததுதான் அது. ‘ஆசியான்’ அமைப்புக்கும் இந்தியாவுக்குமான பேச்சுவார்த்தை உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆனதன் நிறைவு ஆண்டு இது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆண்டு குடியரசுத் தினவிழாவில் பத்து தலைவர்களும் பங்கேற்றார்கள். ஆசியான் அமைப்பு என்பது என்ன? அதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘சார்க்’ என்ற அமைப்பு ஒன்று இருக்கிறதல்லவா? இதைப் போலவே தென் கிழக்காசியாவில் உள்ள நாடுகள் சேர்த்து உருவாக்கிய அமைப்புதான் ‘ஆசியான்’. இதை தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) என்று அழைப்பார்கள்.  இந்த கூட்டமைப்பை இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி உருவாக்கின. பின்னர் புரூனே (1987), வியட்நாம் (1995), மியான்மர், லாவோஸ், (1997), கம்போடியா (1999) ஆகிய நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தன.

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், உறுப்பு நாடுகளிடையே சமூக மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணுதல், கிழக்காசிய பிராந்தியத்தில் அமைதியைப் பேணுதல், உறுப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வாய்ப்பை வழங்குதல் போன்றவை இந்தக் கூட்டமைப்பின் குறிக்கோள்களாக அறிவிக்கப்பட்டன. உலகின் பெரிய கூட்டமைப்பிகளில்  ஆசியான் அமைப்பும் ஒன்று. உலகின் எட்டாவது மிகப் பெரிய பொருளாதார அமைப்பு இது. கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் 4.46 மில்லியன் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றன. உலக மொத்த பரப்பளவில் இது 3 சதவீதம். இந்தப் பிராந்தியத்தின் மக்கள்தொகை சுமார் 60 கோடி.

இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்புக்கும் என்ன தொடர்பு? ஆசியான் அமைப்பு பத்து நாடுகளோடு தொடர்பை வைத்துக்கொள்ளவில்லை. வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் இணைந்து செயல்பட வசதியாக பிற நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டன. அந்தவகையில் ‘ஆசியான் பிளஸ் த்ரீ’ என்ற அந்தஸ்தை சீனா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளுக்கு ஆசியான் அமைப்பு வழங்கியது. பின்னர் இந்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் அந்த அந்தஸ்தைப் பெற்றன.  இதன்படி 1992-ம் ஆண்டிலிருந்து ஆசியான் அமைப்போடு இந்தியாவுக்கு உறவு இருந்து வருகிறது. அந்த உறவு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டிதான் இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றார்கள்.

விருந்தினர்களின் வந்தனம்


இந்தியா குடியரசாக மலர்ந்த 1950-ம் ஆண்டிலிருந்தே வெளி நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் நடைமுறை இருந்துவருகிறது. ஆனால், இந்த ஆண்டு குடியரசுத் தினத்தில்தான் 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருசேர பங்கேற்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

1950-ம் ஆண்டு குடியரசுத் தின விழாவில் முதன் முதலாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ.
1952, 1953, 1966 என இந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்காத நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒரே பாகிஸ்தான் தலைவர் என்ற சிறப்பு மாலிக் குலாம் முகமதுவுக்கு உண்டு. 1955-ம் ஆண்டு விழாவில் இவர் பங்கேற்றார். ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்ற முதல் வெளிநாட்டுத் தலைவரும் இவர்தான்.

1956 (ஜப்பான், பிரிட்டன்), 1968 (சோவியத் யூனியன், யூகோஸ்லேவேகியா),

1974 (இலங்கை, யுகோஸ்லேவேகியா) ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெளி நாட்டுத் தலைவர்கள் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒரே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இவர் 2015-ம் ஆண்டு பங்கேற்றார்.
1994-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்ற பிறகு, 1995-ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

- தி இந்து, 30/01/2018

No comments:

Post a Comment