24/01/2018

உலகை விழுங்கும் சாட்டிலைட்



ஹாலிவுட் அறிவியல் புனைவுக் கதைகள் என்றாலே முதுகைத் தண்டை ஜில்லிட வைக்கும். அப்படியான ஒரு திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது. ‘மூன் 44’,  இண்டிபென்டன்ஸ் டே’, ‘காட்ஷிலாபோன்ற அறிவியல் புனைவுப் படங்களை இயக்கி புகழ்பெற்ற டீன் டேவ் இயக்கியஜியோஸ்ட்ராம்படம்தான் அது. த்ரிலிங்கிற்கும் விறுவிறுப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் பஞ்சமே இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் டீன் டேவ்.
பூமியை இயக்கும் சாட்டிலைட்டுகளால் எதிர்காலத்தில் உலகுக்கு என்ன ஆபத்து வருகிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. பருவநிலையைக் கட்டுப்படுத்தும் ஒரு சேட்டிலைட்டில் திடீரென கோளாறு ஏற்படுகிறது. இதன்பிறகு அந்த சாட்டிலைட்டிலிருந்து புறப்படும் துண்டுகள் பூமியின் மீது விழுந்து இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அந்த சேட்டிலைட்டின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் உத்தரவிடுகிறார். விண்வெளி வீரராக வரும் நாயகன் ஜெரார்ட் பட்லரும் அவரது டீமும் இதற்காகக் களமிறங்குகிறது. விண்வெளிக்குப் பறக்கும் அவர்களும் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டு, உலகைக் காப்பாற்ற என்ன செய்கிறார்கள் என்பதை விறுவிறுப்பு குறையாமல் படு சுவாரஸ்யமாக தயாரித்திருக்கிறார்கள்.
இயற்கைப் பேரழிவு காட்சிகளில் கலக்கலான கிராஃபிக்ஸைக் கலந்து பிரம்மாண்டமாகவே படமாக்கப்பட்டுள்ளது. வானுயர கட்டிடங்களை சுனாமி விழுங்கும் டீஸர் காட்சிகள் கண்களை அகல விரிக்க வைக்கின்றன. ராபர்ட்டோ சாஃபெரின் ஒளிப்பதிவும், லோர்னெ பால்ஃபியின் இசையும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கும். அமெரிக்காவில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால், படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு காத்திருக்கிறது.
- தி இந்து (டாக்கீஸ்)க்கா 2017 செப்டம்பரில் எழுதியது.

No comments:

Post a Comment