19/01/2018

சாகசங்களின் சாட்சி


சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் பறந்துபறந்து செல்லும் பின்னணியில் நவீன தொழில்நுட்பங்களும் கிராஃபிக்ஸ்களின் உபயமும் நிறையவே இருக்கும். ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று சொல்லுமளவுக்கு  பிரம்மாண்ட மலைகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களின் உச்சியிலிருந்தும் குதிக்கும் ரியல் ஹீரோக்களின் பின்னணியில் ஒப்பனையும் இல்லை; எந்தத் தொழில்நுட்பமும் இல்லை.  இதுபோன்ற ரியல் ஹீரோக்களை மையப்படுத்தி ஓர் ஆவணப்படம்  அமெரிக்காவில் 2015, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் பெயர்சன்சைன் சூப்பர்மேன்’.
கிராபிக்ஸ் உதவியுடன் கற்பனை மனிதர்கள் செய்யும் சாகசங்கள் எல்லாம் யதார்த்துக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட காட்சிகளே பல நேரங்களில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், ரத்தமும் சதையும் கலந்த மனிதர்கள் செய்யும் இந்தச் சாகசங்கள் திகில் ரகம். அதுவும் தலையில் கேமராக்களைக் கட்டிக் கொண்டு அந்தரத்தில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தபடி, மலையிலிருந்து நேரடியாக குதிக்கும் காட்சிகள் திக்திக்கென இருக்கும்.  பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்யும் இதுபோன்ற சாகசங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மார்க் ஸ்டார்க்.
உலக புகழ்பெற்ற பேஸ் ஜம்பிங் வீரர் கார்ல் பொயினிஸின் அனுபவம்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. இவர்  ‘பேஸ் ஜம்பிங் இயக்கத்தின் தந்தைஎன்றழைக்கப்படுபவர். இவரது மனைவியும் இதேபோல ஒரு பேஸ் ஜம்பிங் வீராங்கனைதான். இருவரும் சாகச சாதனைகளை செய்யும்போதே இதயத்தையும் பரிமாறிக் கொண்டவர்கள்.  நார்வேயில் உள்ள ட்ரோல் வால் மலையில் 1984-ல் மலை உச்சியிலிருந்து கார்ல் குதித்து கின்னஸ் சாதனை செய்தார். இந்தச் சாதனையைத் தொடர்ந்து அங்கு எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. இப்படி கார்லின் அனுபவத்தை  கதையாக்கி, அதில் காதலையும் குலைத்து, பேஸ் ஜம்பிங் வீரர்களின் சாகசங்களையும் சொல்லியிருக்கிறார்  இயக்குநர்.
 நம் ஊரில் ஆவணப் படங்களை அங்கீகரிப்பதுக்கூட கிடையாது. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. ஆவணப்படத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவார்கள். மக்களும் அந்தப் படத்தை அங்கீகரிக்கும் வகையில், காசு கொடுத்து படம் பாப்பார்கள். இந்தப் படம்  சாசகசங்களின் சாட்சியாக எப்போதும் இருக்கும் என்று  நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment