25/02/2018

மயிலு ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் குமரியாகத் திரையுலகில் வலம்வந்து மலைக்க வைத்தவர் ஸ்ரீதேவி. 1970-களில் கதாநாயர்களைப் போலவே நாயகிகளின் இடத்திலும் ஒரு வெற்றிடம். 1960-களில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்தவர்கள் அம்மா, அக்கா வேடத்துக்கு மாறியபோது 1970-களில் இளமை பஞ்சம் ஏற்பட்டது. 1970-களில் மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுமித்ரா போன்ற நடிகைகள் புதிதாக அறிமுகமாகிக் கவனம் ஈர்த்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக மஞ்சுளாவும் லதாவும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்ததால், அவர்கள் சீனியர்களுக்கான ஜோடிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அப்போது   டீன்ஏஜ் பருவத்தில் சினிமாவில் காலடி வைத்த ஸ்ரீதேவியின் வருகை ரசிகர்கள் மனதில் இளமை அலை அடிக்க வைத்தது.

 ரஜினிக்கு மூன்று முடிச்சி படம் எப்படியோ அதுபோல ஸ்ரீதேவிக்கும் அந்தப் படம் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஈகோ பார்க்காமல் மூன்று முடிச்சி படத்தில் முதியவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. பதினாரு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நடித்தபோது அவருக்கு 14 வயதுதான். டீன்ஏஜ் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி காதலை அழகாக உள்வாங்கி நடித்து அந்தக் கால இளைஞர்களை ‘மயில்..மயில்..’ என்று சொல்ல வைத்துத் தூக்கத்தைக் கெடுத்தவர் ‘மயில் ஸ்ரீதேவி’. இந்தப் படத்தில் மயில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா உள்ளவரை  நிச்சயம் நிலைத்திருக்கும்.


ஸ்ரீதேவியின் அழகும், அவரது இயல்பான நடிப்பும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. குறுகிய காலத்திலேயே கனவுக்கன்னியாக வலம் வரத் தொடங்கினார் ஸ்ரீதேவி.  வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தில் இரட்டை வேடம். ரஜினி,  விஜயகுமார் என இருவருடனும் டூயட் பாடிய இரண்டு ஸ்ரீதேவிகளுமே கருப்பு வெள்ளையிலும் கலர்ஃபுல்லாக தெரிந்தார்கள்.  பாரதிராஜா, கமல் கூட்டணியில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் கதாநாயகி சாரதாவை எளிதில் மறந்துவிட முடியுமா?  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு பாட்டில் அந்தக் காலத்திலேயே பிகினி  உடையில் வந்த ரசிகர்களைக் கிறங்கடித்தார் ஸ்ரீதேவி.


ஸ்ரீதேவி-கமல் கூட்டணியில் வந்த ‘மீண்டும் கோகிலா’ ஒரு இதமான நகைச்சுவை இழையோடிய அழகு படம்.  ‘குரு’ ‘ தாயில்லாமல் நானில்லை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்று கமலுடன் அவர் ஜோடி சேர்ந்த ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து. கமல்-ஸ்ரீதேவி ஜோடி கனவு ஜோடியாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தது 1970-களின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது.  கமலுடன் ஸ்ரீதேவி நடித்ததைப் போலவே ரஜினியுடனும் 1970-களில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ப்ரியா, தர்மயுத்தம், தனிக்காட்டு ராஜா எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1970-களின் பிற்பகுதியும், 1980-களின் முற்பகுதியும் என 10 ஆண்டுகள் தமிழ் சினிமா என்றால் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று சொல்லுமளவுக்கு கொடிகட்டிப் பறந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு படங்களையும் சேர்த்துக் கமல்-ஸ்ரீதேவி ஜோடி 21 படங்களிலும் நடித்துள்ளது. அதேபோல ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி 22 படங்களில் நடித்துள்ளது. இதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி தமிழில் மட்டும் 15 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். ரஜினி-ஸ்ரீதேவி 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று பேரும் இரண்டு படங்களில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் முதன்முதலில் ஒன்றாகச்
சேர்த்தது ‘மூன்று முடிச்சி’ படம்தான்.
அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத்தான். ஸ்ரீதேவிக்குப் பிறகு அவரைப் போல ஒரு தமிழ் நடிகை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கவேயில்லை. கமல், ரஜினி என இருவருடன் சேர்ந்து நடித்தளவுக்கு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.

- தி இந்து தீபாவளி மலர், 2015

No comments:

Post a Comment