07/02/2018

படைவீரன் விமர்சனம்

‘என் சாதிக்கு ஒண்ணுன்னா, என்னோட அம்மாவைக்கூட கருவறுப்பேன்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். ‘படைவீரன்’ படம் சொல்லும் சங்கதியும் அதுதான்.

தேனிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் திரிகிறான் நாயகன் முனீஸ்வரன் (விஜய் யேசுதாஸ்). போலீஸானால், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்ற ஆசையால் தன்னுடைய மாமா பாரதிராஜா உதவியுடன் போலீஸ் வேலைக்குத் தேர்வாகிறான். அதே ஊரில் ஒரு மேல்சாதி பெண் கைக்குழந்தையுடன் விதவையாக வாழ்ந்துவருகிறார். அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள கீழ்சாதி இளைஞர் ஒருவர் விரும்புகிறார்.

இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்தவுடன் அந்த இளைஞரை மேல் சாதியினர் கொலை செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஊருக்குள் கலவரம் ஏற்படுகிறது. கலவரத்தை அடக்க வரும் போலீஸ் படையில் ஒருவராக விஜய் யேசுதாஸும் சொந்த ஊ
ர் வருகிறார். தன்னுடைய சாதி பாசத்தைத் தாண்டி, மனித நேயத்தை ஊருக்குள் விதைக்க விரும்புகிறார். அதற்குப் பரிசாக அவருக்கு என்னக் கிடைக்கிறது என்பதுதான் ‘படைவீரன்’ படத்தின் கதை.

வழக்கமான சாதிப் படங்களிலிருந்து விலகி, சாதி வெறி தன் சொந்த சாதிக்காரனையும் எப்படி சாய்க்கிறது என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தனா. சாதியப் படங்களில் ஒப்பாரி வைக்க மட்டுமே இதுவரைப் பயன்படுத்தப்பட்டு பெண் பாத்திரங்கள், தீவிர சாதி வெறியர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் மிரள வைக்கிறது.

விதவைப் பெண் விஷம் அருந்தியவுடன், அவரைக் காப்பாற்ற முயலாமல் பெண்கள் எல்லோரும் சேர்ந்து வாயைப் பொத்தி சாகடிக்கும் காட்சியும், சொந்த சாதிக்காரனையே கைது செய்யும் விஜய் யேசுதாஸை உறவுக்காரப் பெண்கள் கூடிக் காட்டும் வெறுப்பும், உச்சக்கட்டமாக தன் சொந்த சாதிக்காரர்களால் அவருக்கு நேரும் கதியும் உறவு, மனிதம் அனைத்தையும் தாண்டி சாதி வெறியின் உச்சபச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போலீஸ் அதிகாரி சமரசம் பேசும்போது, அந்த அதிகாரியின் சாதியைச் சொல்லி அவரை தன் சாதிக்கு எதிரானவராகச் சித்திரிப்பதில் தொடங்கி, சாதி தலைவனின் ஒவ்வொரு அனுவிலும் சாதிய சிந்தனை எப்படி வெளிப்படுகிறது என்பதையும் இயக்குநர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களையும் கலவரக்காரர்களாகச் சித்திரித்ததில் இயக்குநர் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம். தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் வித்தியாசம் இருப்பதை இயக்குநர் மறந்துவிட்டார் போலும்.

இரண்டாம் பாகத்தில்தான் கதைக்கு ஒட்டுமொத்தமாக வேலையை வைத்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாகத்தில் காட்டப்படும் விபரீத காட்சிகளுக்கும் பரபரப்பான திருப்பங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் முதல் பாகம் நகர்கிறது. நாயகனின் கிண்டல் கேலி, நாயகி அம்ரிதாவுடனான மோதல், பின்னர் காதல், போலீஸ் பயிற்சியில் விஜய் யேசுதாஸின் சிரிக்க வைக்காத நகைச்சுவை எனக் காட்சி நீள்கிறது. இது படம் பார்ப்பவர்களைச் சோர்வடைய செய்துவிடுகிறது. தன்னோடு வந்துவிடும்படி மேல்சாதி விதவைப் பெண்ணிடம் கேட்கிறார் கீழ்சாதி இளைஞர். அப்படி வராவிட்டால் விஷம் அருந்தி உயிர்விடப்போவதாகவும் சொல்கிறார். அதன்பிறகும் அவரை வெட்டி வீழ்த்துவது போன்ற லாஜிக் இல்லா காட்சிகளும் படத்துக்கு வேகத்தடையாக இருக்கிறது.

விஜய் யேசுதாஸுக்கு ஏற்ற பாத்திரம் இது. பாத்திரத்தின் தேவையறிந்து நடித்திருக்கிறார். ஆனால் காதல் காட்சி முதல் கலவரக் காட்சிவரை ஒரே முகபாவனையுடன் இருப்பதும் அந்தக் காட்சிகளில் அவரது உடல்மொழியும் பொருந்தாமல் போவது மைனஸ். நாயகியாக வரும் அம்ரிதா துடுக்குத்தனமான பெண்ணாக வந்து கவர்கிறார்.

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவராக வரும் பாரதிராஜா, மேல் சாதியினரின் சாதிய துவேஷங்களை எதிர்க்கிறார். ‘ஆண்ட பரம்பரைன்னு சொல்றீங்க, அப்போ வெள்ளைக்காரன் 200 வருஷம் ஆண்டிருக்கானே’; ‘தலைவன் நல்லவனா இருந்தா, அவன் பின்னால் வருபவர்களும் நல்லவங்களாக இருப்பான்’ என்று நறுக் வசனங்களைப் பேசி கவர்கிறார். மேல் சாதி தலைவராக வரும் கவிதா பாரதி, உணர்ச்சிபிழம்பாக வெடிக்காமல் நாசூக்காக சாதிய வன்மத்தைக் கட்டவிழ்த்துவிடுவதில் அபாரமாக நடித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. ஆனால், பாடல்கள் தாளம்போட வைக்க மறுக்கின்றன. தேனி மாவட்டத்தின் கிராமங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜவேல் மோகன்.  

சாதிக்குள் ஒளிந்திருக்கும் குரூர மனித உணர்வுகளை சொல்லிய விதத்தில் சில குறைகளைத் தவிர்த்திருந்தால், படைவீரன் இன்னும் மிடுக்காக இருந்திருப்பான்.

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment