
ஒரு அப்பாவி சிகையலங்கரத் தொழிலாளிக்கும் அடே பாவி ரவுடிக்கும் ஒரு நாளில் நடக்கும் மோதலும், அதனால் நடக்கும் துரத்தல்களும் சம்பவங்களும்தான் ‘சவரக்கத்தி’ படத்தின் ஒருவரிக்
கதை.
சுவாரசியமான
பொய்களையும் நம்பும்படி அவிழ்த்துவிடும் குணாதியத்துடன் வாழ்க்கையை
ஓட்டிவருகிறார் சலூன் கடை வைத்திருக்கும் பிச்சை (ராம்). அவரது நிறைமாத கர்ப்பிணி
மனைவியின் (பூர்னா) தம்பிக்கு திருட்டுக் கல்யாணம்
செய்துவைக்க குடும்பத்துடன் கிளம்புகிறார்
ராம். இன்னொருபுறம் ஜெயிலிலிருந்து பரோலில் வெளியே வந்த ரவுடி மங்கா (மிஸ்கின்), அன்றைய தினம் மாலைக்குள் ஜெயிலுக்குத்
திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் தனது சகாக்களுடன்
காரில் சுற்றுகிறார்.
வழியில் ராமுக்கும் மிஸ்கினுக்கும் நடக்கும்
எதிர்பாராத மோதல், அன்றைய தினத்தை தலைகீழாக்குகிறது. ராமைக் கொல்ல மிஸ்கினும் அவரது சகாக்களும் துரத்துகின்றனர். மனைவியையும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ரவுடிகளிடமிருந்து தப்பிக்க ராம் தலைத்தெறிக்க
ஓடுகிறார். திருட்டுக் கல்யாணம்
செய்வதற்காக வெளியே வந்த வசதியான பெண்ணின் குடும்பத்தினரும் ராமைத் துரத்துகிறார்கள். இறுதியில் ராம் என்ன ஆனார், ரவுடிகளிடம் சிக்கும்
அவரது நிறைமாத கர்ப்பிணிக்கு
என்ன ஆனது, தன்னுடைய மச்சானுக்குத் திருமணம்
நடந்ததா என்பதுதான் ‘சவரக்கத்தி’ படத்தின் கதை.
எப்போதும்
சீரியஸான படங்களைத் தரும் மிஸ்கின் - ராம் ஆகியோரை வைத்து பிளாக் காமெடி படத்தைத் தந்திருக்கும்
இயக்குநர் ஆதித்யாவைப் பாராட்டலாம்.
வழக்கமாக ரன்னிங் - சேஸிங் படங்களில் காணப்படும் மசாலத்தனங்கள்
எதுவும் இல்லாமல் இயல்பாக படம் எடுத்தவிதத்திலும் இந்தப் படம் கவர்கிறது. ஒரு சாதாரண மோதல், உடன் இருப்போரால் எப்படித்
தவறாக வழிகாட்டப்பட்டு பெரிய சம்பவத்துக்கு வித்திடுகிறது என்பதையும்
படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வகையில் சற்று சென்சிட்டிவான கதை இது. ஆனால், அதை காமெடியாகவும்
உணர்வுப்பூர்வமாகவும் கையாண்டு திரைக்கதையை
விறுவிறுப்பாகப் பதிவு செய்திருப்பது
படத்துக்கு பலம்.
‘வாசல்ல ஒருவர் பிச்சையெடுத்திட்டிருப்பார், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிட்டு
வாங்க, உங்க கல்யாணத்தை
சுயமரியாதைத் திருமணமா பதிவு பண்ணிடலாம்’ என்று பதிவாளர்
சொல்லும் காட்சி; பொய்யாமொழி தேநீர் கடை, பரிசுத்தம் மிதிவண்டி நிலையம் என படத்தோடு பயணிக்கும் சிறு காட்சிகளும் மிஷ்கினுடைய அக்மார்க்
நிழலை இயக்குநர் படத்தில்
படரவிட்டிருக்கிறார். தந்தையை (ராம்) வெட்டுவதற்காக ரவுடியால்
வாங்கப்படும் கத்தி, கடைசியில் அவரது குழந்தையின்
தொப்புள்கொடியை வெட்டப் பயன்படுவது
போலக் காட்டப்படுவது சபாஷ் போடவைக்கிறது.
படத்தில்
குறைகள் இல்லாமல் இல்லை. நகைச்சுவை என்பதற்காக நிறைமாதக்
கர்ப்பிணி சுவர் ஏறி குதிப்பதெல்லாம் ரொம்ப ஓவர். கோபத்தில் இன்ஸ்பெக்டரின் மீசையை வலித்துவிட்டுசெல்வது எந்த ஊரில் நடக்கும்? திருட்டுக் கல்யாயணம் செய்யும்
பெண்ணின் குடும்பத்தினரின் திடீர் மனமாற்றம், துரத்தல்களில் நிகழும் சந்திப்புகள் கேலியாக மாறுவது, கணிக்கக்கூடிய விதத்தில் பல இடங்களில் காட்சிகளை வைத்திருப்பது
என நெகட்டிவ் காட்சிகளைக்
குறைத்திருக்கலாம்.
மங்கா என்ற ரவுடி பாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின்.
ஜெயிலுக்குப் போவதை எண்ணி விரக்தியாக இருப்பது; ராமைத் துரத்திப் பிடிக்க முடியாமல்
ஏமார்ந்துபோவது; கோபப்படும்போது தன் சகாக்களை அடிப்பது, சூப்பர் ஐடியா கொடுக்கும் சகாவுக்கு நகைகளைப்
பரிசாகக் கொடுப்பது என நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார். அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும்,
உடல்மொழியால் அதை நேர் செய்திருக்கிறார். ஆனால், ஒரேயடியாக மிஸ்கின் அடிக்கடி
கத்திக்கொண்டிருப்பது காது ஜவ்வை கிழித்துவிடுகிறது.
மிஸ்கின்
பாத்திரத்துக்கு அப்படியே நேர்எதிர்
பாத்திரம் ராமுக்கு. தன்னோட சவரக்கத்திப் பற்றியும்
தன்னைப் பற்றியும் பொய்மூட்டைகளை
அவிழ்த்துவிடுவது, வாய்ச்சவடால் பேசுவது, மனைவியோடு ஆற்றாமையால் மல்லுக்கட்டுவது, அப்பாவித்தனத்தின் மொத்த உருவாக இருப்பது, சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது கொதிப்பது என புதிய முகத்தைக் காட்டியிருக்கிறார் ராம்.
ராமுக்கும்
மிஸ்கினுக்கும் சற்றும் சளைக்காமல்
நடிப்பை வழங்கியிருக்கிறார் பூர்னா. காது கேளாதவராக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, நிறைமாதக் கர்ப்பிணியாக
என மூன்று அவதாரங்களில் அரிதாரம்
பூசி நிறைவாக நடித்திருக்கிறார். அதுவும் பழமொழி சொல்லி அவர் அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கின்றன. இன்னும் சிறுசிறு
பாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் தேவையறிந்து
நடித்திருக்கிறார்கள்.
அரோல் கொரேலியின் பின்னணி இசை படத்துக்கு பலம். திரைக்கதையோடு சேர்ந்து அழுத்தமாக
ஒலிக்கிறது இசை. வழக்கமான மிஸ்கின் படக் காட்சிகள்போல
இல்லாமல், காட்சிகள் பிரெஷ்ஷாகக்
காட்டியிருப்பதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக்
வெங்கட்ராமுக்கு பங்கு அதிகம்.
சென்சிட்டிவான
கதையை அழகியலாகவும் நகைச்சுவையோடும் படம் பிடித்தவிதத்தில், இது கூர்மையான ‘சவரக்கத்தி’.
மதிப்பெண்: 3 / 5
மதிப்பெண்: 3 / 5
No comments:
Post a Comment