12/02/2018

குயின் ஆஃப் காட்வே!

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மிகைப்படுத்தல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி இடைச்செருகல்கள் இல்லாமல் ஒரு பிரபலத்தின் உண்மைக் கதையை ஊருக்கு உரைத்திருக்கிறது ‘குயின் ஆஃப் காட்வே’ படம். வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் சோகமும் நோயும் ஒன்றாகச் சேர்ந்து மிரட்டும் உகாண்டா நாட்டுக் குடும்பத்தில் பிறந்து, இன்று செஸ் விளையாட்டில் கொடிக் கட்டிப் பறக்கும், பியோனா முட்டேசியின் வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை.
 

உகாண்டாவின் தலைநகர் கபாலாவில் உள்ள காட்வே நகரில் குடிசைகள் நிறைந்த பகுதியில் வாழ்கிறார் படத்தின் நாயகி மடினா நல்வாங்கா (பியோனா முட்டேசி). 3 வயதில் தந்தையையும், இரண்டு சகோதர்களையும் நோய்களுக்குப் பறிகொடுத்துவிட்டு மடினாவும் அவருடைய தாயாரும் ஒரு வேளைச் சோற்றுக்காக அல்லாடுகிறார்கள். படிக்கவும் வழியில்லாமல் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார் மடினா. கொஞ்சம் வளர்ந்த பிறகு தேவாலயம் ஒன்றில் செஸ் விளையாட்டு மடினாவுக்கு அறிமுகமாகிறது.
 

வறுமை சூழ்ந்த மடினாவின் வாழ்க்கையில், செஸ் விளையாட்டு மின்னல் கீற்றாக மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது. அழுக்கு உடையுடனும், பரட்டைத் தலையுடனும் செஸ் விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறாள். தோற்றத்தைக் கண்டு அவளுடன் விளையாட மறுக்கிறார்கள். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் புகழ்பெற்ற ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியில் சாம்பியான்கிறாள் மடினா. இடைப்பட்ட காலத்தில் செஸ் விளையாட்டுக்காக மடினா எதிர்கொள்ளும் போராட்டங்களை வலியுடன் பதிவுசெய்துள்ளது ‘குயின் ஆஃப் காட்வே’ படம்.
 

வறுமையும் நோயும் ஒட்டிப் பிறந்த உகாண்டாவின் காட்வே நகர வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகளுக்கு மத்தியில் வாழும் நாயகியின் காட்சிகளைக் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் காட்டியிருக்கிறது இந்தப் படம்.
 

- தி இந்து, 2016 செப்டம்பர்

No comments:

Post a Comment