
ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார் சத்யா (சிபிராஜ்). நீண்ட நாட்களுக்குப்
பிறகு அவரது முன்னாள் காதலியான ஸ்வேதவிடம் (ரம்யா நம்பீசன்) இருந்து உதவி
கேட்டு போன் வருகிறது. இதற்காகச் சென்னைத் திரும்புகிறார் சிபிராஜ். ‘தன்
குழந்தை காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன,
அதை உன்னால்தான் கண்டுபிடித்துத் தர முடியும்’ என்று கதறுகிறார் ரம்யா
நம்பீசன். அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிராஜ்
இறங்குபோது, அடுக்கடுக்கான அதிர்ச்சிகளும் புதிர்களும் சிபிராஜுக்குக்
காத்திருக்கின்றன. அந்தப் புதிர்களுக்குள் ஒளிந்துள்ள சிக்கலான
முடிச்சுகளை சிபிராஜ் எப்படி அவிழ்க்கிறார் என்பதுதான் ‘சத்யா’ படத்தின்
ஒட்டுமொத்த கதையும்.
தெலுங்கில் வந்து வெற்றிபெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் இது. அந்தப்
படத்தைப் பிசிறு தட்டாமல் அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். படம்
தொடங்கியது முதலே விறுவிறுப்பும் த்ரிலிங்கும் படம் பார்ப்பவர்களை
ஆக்கிரமித்துவிடுகின்றன. அதைக் கடைசிவரை அப்படியே கொண்டு சென்றிருக்கும்
இயக்குநர் பிரதீப் கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து. படத்தின் பிரதான
புதிர்களே, காணாமல் போனதாக சொல்லப்படும் குழந்தை உண்மையில் இருந்ததா,
இல்லையா என்பதுதான். அப்படி ஒரு குழந்தை இருந்ததைக் கண்டுபிடித்தால்தான்
அதை யார், எதற்காகக் கடத்தியிருப்பார்கள் என்ற விடையை அடுத்து
கண்டுபிடிக்க முடியும்.
குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில்
கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றிநிற்கும். ஆனால், அதற்கு இடம்
தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் கச்சிதம்.
இடையிடையே சில கேள்விகள் மனதில் எழுந்தாலும், அதற்கான விடை எங்கும்
மிஸ்ஸிங் ஆகாமல் படத்தை நிறைவு செய்ததில் ‘சத்யா’ கெத்து காட்டுகிறது.
‘வலையோசை கலகலவென..’ பழைய சத்யா படத்தின் பாடல் வானொலியில் கேட்பதுபோல
எதேச்சையாகக் காட்டுவதில் தொடங்கி குட்டிக் குட்டி காட்சிகளில்கூட
இயக்குநர் கவனம் காட்டியிருக்கிறார்.
ஆனால், படத்தின் அடிநாதமாகக் குழந்தையைப் பற்றிய விஷயத்தை மறைக்க
ரம்யா நம்பீசனின் கணவர் எடுக்கும் முயற்சிகளில் புதுமை ஏதும் இல்லை. அந்தக்
காட்சிகள் வழக்கமான சினிமாத்தனம்.
படத்தில் அடுத்தடுத்து வரும் சில திருப்பங்களும் திரைக்கதைக்கு
நியாயம் சேர்க்கும் வகையில் புகுத்தப்பட்டுள்ளதுபோலவே தெரிகிறது.
உதாரணமாகக் போலீஸ் அதிகாரியாக வரும் அணுயாத்தான் (வரலட்சுமி சரத்குமார்)
இத்தனை நாளாக குழந்தையை வைத்திருந்தார் என்பதற்காகச் சொல்லப்படும்
காட்சிகள், தமிழ் சினிமாவின் புளித்துப்போன சென்டிமென்ட் ரகம். ஒரு போலீஸ்
அதிகாரி, போதை மருந்துக் கடத்தல்காரர்களுடன் ஏன் தொடர்புகொண்டிருக்கிறார்
என்பதற்கான வலுவான காரணங்களும் படத்தில் இல்லை.
காதலித்து, திருமணம்வரை வந்து தன் அப்பாவுக்காக வேறொருவரைத் திருமணம்
செய்யப்போவதாக சிபிராஜிடம் சொல்லி, பிரியும் தருணத்தில் காதலருடன்
உறவுகொண்டு அந்தக் குழந்தையை பெற்றெடுத்தார் என்று சொல்லப்படும்
ஃபிளாஷ்பேக் காட்சியில் எந்த லாஜிக்குமே இல்லை. இப்படி தமிழ்ப்
படங்களுக்கே உரிய சில மசாலாத்தனங்கள் ஆங்காங்கே படத்தில் தென்பட்டாலும்,
வேகமான திரைக்கதை காட்சிகள் அதை நேர் செய்துவிடுகின்றன.
தமிழ் சினிமாவில் நிலையான இடம் இல்லாமல் தவிக்கும் சிபிராஜுக்கு,
இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். தோற்றத்திலும் ரொம்பவே
மாறியிருக்கிறார். கதைக்கேற்ப நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை
வழங்கியிருக்கிறார். நாயகியாக வரும் ரம்யா நம்பீசன், சிபிராஜுடன்
காதல் காட்சிகளில் கலகலப்பான பேர்வழியாகவும், காணாமல் போன குழந்தையைக்
கண்டுபிடிக்க முடியாமல், ஆற்றாமையால் திரியும் அபலைப் பெண்ணாகவும்
பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சற்று நேரமே
வந்தாலும், கடைசியில் வில்லியாக அவதாரம் எடுக்கிறார் வரலட்சுமி
சரத்குமார்.
நல்ல போலீஸாக வரும் ஆனந்த்ராஜ் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார்.
காமெடியனாகவும் குணச்சித்திர பாத்திரத்திலும் வரும் சதிஷ் கவனம்
பெறுகிறார். சதீஷ் பாத்திரத்துக்கு இஸ்லாமியர் பெயரை வைத்தால், நம் ஊருக்கு
பொருந்தாத உடையில் அலையவிடலாமா? யோகி பாபுவின் வழக்கமான
நையாண்டி சிரிக்க வைக்கிறது. நாயகியின் அப்பாவான நிழல்கள் ரவி ‘இங்கிதம்’
பற்றி பாடம் எடுப்பவராக வருகிறார்.
கார்த்திக் கிருஷ்ணாவின் பஞ்ச், குசும்பு வசனங்கள் சிரிக்கவும்
சிந்திக்கவும் வைக்கின்றன. படத்துக்கு இசை சிமான் கே. சிங். ‘யவ்வனா...,
சாங்கு...’ பாடல்கள் கேட்கும்படி உள்ளன. த்ரில்லிங் படத்துக்கு ஏற்ப
பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். அரண்மனை பழனியின் ஒளிப்பதிவு
பளிச்சென இருக்கிறது. கவுதம் ரவிச்சந்திரனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்
சேர்க்கிறது.
வேகத்தடை இல்லாத விறுவிறுப்பான த்ரில்லிங் திரைக்கதையால் ‘சத்யா’ சீறிப்பாய்கிறான்.
மதிப்பெண்: 3 / 5
மதிப்பெண்: 3 / 5
No comments:
Post a Comment