எஸ்.வி. சேகர்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்த சமயத்தில்
1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் எஸ்.வி.சேகர் மயிலாப்பூர்
தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி
பெற்றார். சுயேட்சையாகப் போட்டியிட்ட எஸ்.வி.சேகர், சுமார் 650 வாக்குகளைப் பெற்றார்.
இதில் குறிப்பிடும்படி விஷயம் என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில் இடைக்கால முதல்வராகப்
பணியாற்றிய நாவலர் நெடுஞ்செழியனும் இதே தொகுதியில் அப்போது சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
அவரைவிட எஸ்.வி. சேகர் கூடுதல் ஓட்டுகள் பெற்றது அப்போது பரபரப்பு செய்தியானது.
டி. ராஜேந்தர்
1980-களில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்ட நடிகரும் இயக்குநருமான
டி. ராஜேந்தர், கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து வெளியேறி தாயக மறுமலர்ச்சிக்
கழகம் என்ற இயக்கத்தை நடந்தி வந்தார். 1991-ல் நடந்த சட்டப்பேர்வைத் தேர்தலில் அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் களம் இறங்கினார் டி. ராஜேந்தர்.
அவருக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்பட்டது.
பர்கூரில் ஜெயலலிதா 67,680 ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
டி.ராஜேந்தர் 30,465 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடாமல்,
டி. ராஜேந்தருக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது. இதேபோல 2006-ல் தனது சொந்த ஊரான மயிலாடுதுறையிலும்
டி.ராஜேந்தர் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
ரேவதி
சினிமாவில் யதார்த்தமான நடிப்பை வழங்கிக்கொண்டிருந்த நடிகை ரேவதி தேர்தல் களத்தில்
குதித்தது 1996-ல் நடந்தது. அப்போது தமிழகச்
சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. அன்றைய அதிமுக
அரசுக்கு எதிராக எதிர்ப்பலை வீசிய வேளையில் ஆளுங்கட்சியை மட்டுமல்லாமல் திமுகவையும்
எதிர்த்து தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார் ரேவதி.
அந்தத் தேர்தலில் 42, 906 வாக்குகள் பெற்று ரேவதி தோல்வியடைந்தார்.
மன்சூரலிகான்
அடிக்கடி அரசியல் கருத்துகளை கூறி அதிரடி காட்டும் வில்லன் நடிகர் மன்சூரலிகான்
2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேட்சையாகக் களம் கண்டார்.
‘எந்தக் கட்சியும் சரியில்லை’ என்ற கோஷத்தோடு களத்தில் குதித்த மன்சூரலிகான் 2531 வாக்குகளை
மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார். இதற்கு முன்பாக 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத்
தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு மன்சூரலிகான் 88 ஆயிரம் வாக்குகளைப்
பெற்றது தனிக்கதை.
கிட்டி
வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகராக பெரிய திரையில் வலம் வரும் நடிகர் கிட்டி என்ற கிருஷ்ணமூர்த்தி 2016-ம் ஆண்டு
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த கிட்டி இந்தப் பகுதி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக போட்டியிடுவதாகக்
கூறி சுயேட்சையாகக் களம் இறங்கினார். ஆனால், தேர்தலில் 2477 ஓட்டுகள் மட்டுமே பெற்று
கிட்டி தோல்வியடைந்தார். இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் வாகை சந்திரசேகர்தான்
இந்த தொகுதியின் வெற்றியாளர்.
- தி இந்து
No comments:
Post a Comment